ஐசிஐசிஐ – நவீன முரட்டுத்தனம்!

சொந்தக் கதையை எழுதக்கூடாது என்று எப்போதுமே நினைத்துக்கொள்வேன். இந்த முறையும் முடியவில்லை. ஐசிஐசிஐ வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனத்தின் பொறுப்பற்ற தன்மை என்னை மிகுந்த மனவேதனைக்கு உள்ளாக்கிவிட்டது.

சென்னை மாநகரில் ஃப்ளாட் வாங்க ஆசைப்படும் லட்சோபலட்சம் மத்தியமர்களின் நானும் ஒருவன். 2001 திருவல்லிக்கேணியில் ஒரு ஃப்ளாட் வாங்கினேன். முதலில், கடன் வாங்கியது எல்.ஐ.சி.யின் வீட்டுக்கடன் நிறுவனத்தில். 13 சதவிகிதம் வட்டி அப்போது. வட்டி விகிதம் மிக அதிகமாக இருந்த சமயம் அது. பின்னர் 2002ல் வட்டி விகிதங்கள் குறையத் தொடங்கின. ஐசிஐசிஐ வங்கி 9.5 சதவிகிதத்துக்கு கடன் வழங்கத் தொடங்கியது.

உடனே என் கடனை ஐசிஐசிஐ வீட்டுக்கடன் நிறுவனத்துக்கு 2002ல் மாற்றினேன். தொடர்ந்து வட்டிவிகிதம் குறைந்துகொண்டே வர, ஒரு கட்டத்தில், ஐசிஐசிஐயிலேயே வீட்டுக்கடனை, ஃப்ளோட்டிங் ரேட்டில் இருந்து ஃபிக்சட் ரேட்டுக்கு மாற்றினேன். அதற்கு மொத்தத் தொகையில் 1.75 சதவிகிதமோ என்னவோ கட்டிய ஞாபகம்.

2005 என்று நினைவு. வீடு சம்பந்தமாக ஏதோ ஒன்றைத் தேடும்போது, வீட்டுப் பத்திரங்களின் பிரதியும், தாய்ப்பத்திரங்களின் பிரதிகளும் தேவைப்பட்டன. ஐசிஐசிஐ போய், பிரதிகள் வேண்டி விண்ணப்பித்து, அதற்கான கட்டணமாக ரூ. 500 கட்டிவிட்டு வந்தேன். பதிலே இல்லை. இரண்டு மூன்று முறை போய் கேட்டபோது, இதோ வந்துவிடும், அதோ வந்துவிடும் என்று சொன்னார்கள். இது நடுவே, வேறு வேலைகள் முந்திக்கொள்ள, பத்திரங்களின் பிரதிகளை வாங்கவேண்டிய அவசியம் ஏனோ மறைந்துவிட்டது. நானும் பின் தொடராமல் விட்டுவிட்டேன்.

2010 அக்டோபரோடு கடன் முடிந்தது. என்னுடைய சேல் டீட், சேல் அக்ரிமெண்ட், இதர தாய்ப்பத்திரங்கள் வேண்டி, ஐசிஐசிஐ வீட்டுக்கடன் நிறுவனத்திடம் போய் விசாரித்தேன். இன்னும் 21 நாள்களில் வந்துவிடும். வந்து பெற்றுக்கொள்ளலாம் என்றார்கள். 22 ஆம் நாள் போய் நிற்க, ஒரு சின்ன கவர் வருகிறது. உள்ளே கடனை கட்டிவிட்டதற்கான நோ அப்ஜெக்‌ஷன் சர்ட்டிபிகேட், டாக்குமெண்ட்ஸ் லிஸ்ட் மட்டுமே அதில் இருக்கிறது. அந்த லிஸ்டில், ஒரு பத்திரமும் அவர்களிடம் இருந்ததற்கான முகாந்தரமே இல்லை.

கதைகளில், “தூக்கி வாரிப் போட்டது” என்று எழுதுவார்களே, அதுதான் என் அப்போதைய உணர்வு. 2002ல் எல்.ஐ.சி.யில் இருந்து கடனை ஐசிஐசிஐக்கு மாற்றியபோது, ஐசிஐசிஐக்கான ஜெனரல் சேல்ஸ் ஏஜென்சிகள் இருந்தன. அவர்கள்தான் கடன் வாங்க உதவியவர்கள். பின்னர், ஜி.எஸ்.ஏ.க்களை எல்லாம் ஐசிஐசிஐ நிறுத்திவிட்டு, தாமே எல்லா செயல்பாடுகளை ஏற்றுக்கொண்டன. அந்தச் சமயத்தில்தான் நான் கடன் வாங்கினேன். எனக்கு உதவிய ஜி.எஸ்.ஏ. தாமே எல்லா பத்திரங்களையும் எல்.ஐ.சி.யில் இருந்து ஐசிஐசிஐக்கு மாற்றிக்கொள்வதாகவும், அதற்கு அனுமதி தரும் விதமான 150 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் அத்தாட்சிப் பத்திரமும் எழுதி வாங்கிக்கொண்டார்கள்.

இதையெல்லாம் இப்போது ஐசிஐசிஐ வீட்டுக்கடன் நிறுவன ஊழியர்களிடம் விளக்க, பத்திரம் உங்களிடம்தான் வந்திருக்க வேண்டும், உடனே தேடிப் பார்க்கச் சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டேன். ஐசிஐசிஐ வீட்டுக்கடன், மந்தைவெளி அலுவலகத்தில் இது நடந்தது. வழக்கம்போல், சிரித்த முகத்தோடு என்னைக் கையாளத் தொடங்கிய அலுவலருக்கு கொஞ்ச நாளிலேயே நான் இம்சையாகிப் போனேன். என் அழைப்பை எடுக்க மாட்டார். நேரே போய் பேசும்போது, மேலும் மேலும் காரணங்களும், தேடுவதற்கான புதிய இடங்களும் அகப்பட்டுக்கொண்டே இருந்தன. ஒரு கட்டத்தில், பத்திரங்களை வைக்கும் மைய அலுவலக ஊழியரின் செல்பேசி எண்ணைக் கொடுக்க, அவர் பின்னால் லோ லோ என்று மூன்று நான்கு மாதங்கள் அலைந்திருப்பேன். அவர் மும்பை என்பார், சென்னை அடையாறு என்பார்… ஆனால், பத்திரம் போன இடம் தெரியவில்லை. ஒரு கட்டத்தில் இந்த நபரும் என் அழைப்பைத் தவிர்க்கத் தொடங்கிவிட்டார்.

இந்த இக்கட்டு ஏற்படுத்தியிருக்கும் மன உளைச்சல் கொஞ்சம் நஞ்சம் அல்ல. மொத்த பணத்தையும் கட்டியாகிவிட்டது; ஆனால் கையில் பத்திரமில்லை. எங்கு இருக்கிறது என்றும் தெரியவில்லை. என் மனைவி அமைதி மெல்ல மெல்ல குறையத் தொடங்கிவிட்டது. ஒரு கட்டத்தில் இருவரும் வீட்டுப் பத்திரம் சம்பந்தமாக பேசிக்கொள்ளவே கூடாது என்று சபதமெடுக்கும் அளவுக்கு மனவேதனை. சட்ட ரீதியாக என்ன செய்யவேண்டும், அப்படியே செய்தாலும், காணாமல் போன பத்திரத்தை வைத்துக்கொண்டு என்ன வேண்டுமானாலும் நடக்கலாமே. என்னென்ன விதமான இடர்களைச் சந்திக்கப் போகிறோமோ என்ற பதற்றம் ஒருபக்கம். ஐசிஐசிஐயின் விட்டேற்றித்தனம் மற்றொரு பக்கம்.

முகம் நிறைய புன்னகையும், அலுவலகப் பொலிவும், நிதானமும் நவீன வங்கியியலின் அடையாளங்களாக இருந்தாலும் உள்ளே இருக்கும் பொறுப்பற்றதன்மை எல்லா இடங்களிலும் ஒன்றாகவே இருப்பது மெல்ல மெல்ல புரியத் தொடங்கியது.

ஒரு நாள், நேரே எல்.ஐ.சி. வீட்டுக்கடன் நிறுவனத்தையே போய் கேட்டால் என்ன என்று எண்ணம் தோன்ற, பழைய வீட்டுக்கடன் எண்ணைத் தேடி எடுத்துக்கொண்டு, சைதாப்பேட்டையில் இருக்கும் அலுவலகத்துக்குப் போனேன். அங்கே இருந்த அதிகாரி, அப்போதுதான் ஓர் உண்மையை எனக்குச் சொன்னார். எல்.ஐ.சி.யில் வீட்டுக்கடன் அடைக்கப்பட்டாலும் வேறு வங்கிகளுக்கு மாற்றப்பட்டாலும், உரிமையாளர்களிடம்தான் மூலப் பத்திரங்கள் திருப்பி அளிக்கப்படும், வேறு வங்கிகளுக்கோ, நிதி நிறுவனங்களுக்கோ கொடுக்கப்படாது என்றார்.

மேலும், இது பத்தாண்டுகளுக்கு மேலான விஷயம், கோரிக்கை கடிதம் கொடுத்துவிட்டுச் செல்லுங்கள், எங்களால் முடிந்ததைச் செய்கிறோம் என்றார். கடிதம் கொடுத்துவிட்டு, கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் காத்திருந்தேன்.

மூன்றாவது வாரம் அந்த எல்.ஐ.சி. வீட்டுக்கடன் நிறுவனப் பெண் அலுவலரைப் போய் பார்க்க,  ஒரு மணி நேரம் காத்திருக்கச் சொன்னார். இரண்டு மணி நேரங்கள் கழித்து கூப்பிட்டவர் மேஜையில், நான் கொடுத்திருந்த பத்திரங்கள் அத்தனையும் சீலிடப்பட்ட உறையில் இருப்பது தெரிந்தது. என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அந்தம்மா எல்லா நலன்களும் வளங்களும் பெற வாழ்த்திவிட்டு, கையில் இருந்த இதழ்களைப் பரிசாக கொடுத்துவிட்டு, என் பத்திரங்களை வாங்கி வந்தேன்.

என் பத்திரங்களை பத்திரமாக வைத்துக்கொண்டு இருக்கவேண்டும் என்று எல்.ஐ.சி.க்கு தலையெழுத்தா என்ன? ஆனால் வைத்திருந்து பத்திரமாகத் திருப்பிக் கொடுத்தார்கள். எல்.ஐ.சி.மேல் இருந்த மரியாதை ஒரு சில படிகள் உயர்ந்தது உண்மை.

மீண்டும் ஐசிஐசிஐ. புதிய அலுவலர். புதிய முகங்கள். நான் இரண்டு மூன்று கேள்விகள்தான் கேட்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டு சென்றேன்.

பத்தாண்டுகளாக கடனுக்கு ஈடான பத்திரமே இல்லாமல் எப்படி நீங்கள் கடன் கொடுத்தீர்கள்? பத்திரங்கள் இல்லை என்று தெரியவந்ததும், என்னை எப்படிக் கேட்காமல் போனீர்கள்? அப்படியானால், உங்களுக்குப் பத்திரங்கள் முக்கியமில்லை. கடனை அடைத்துவிட்டால் போதும். அவ்வளவுதானே.

நவீன மோஸ்தரில் மயங்கி, சிஸ்டம்ஸ் அண்ட் பிராசஸஸில் மயங்கி, அழகிய புன்னகையில் மயங்கி, மேம்பட்ட சேவை என்ற ஹம்பக்கில் மயங்கி, இத்தனைஆண்டுகளாக, பத்திரங்கள் ஐசிஐசிஐயில் பத்திரமாக இருக்கின்றன என்ற என் எண்ணம் எவ்வளவு பைத்தியக்காரத்தனமானது?

அங்கு இருந்த அலுவலரின் உடல் மொழி எனக்கு ஒன்றைத்தான் திருப்பித் திருப்பிச் சொன்னது. பல லட்சம் நபர்களில் நீயும் இன்னொரு கஸ்டமர். நான் தொழில் செய்ய வந்திருக்கிறேன். உனக்கு பத்திரம் கிடைத்துவிட்டது அல்லவா? வாயை மூடிக்கொண்டு அடுத்த வேலையைப் பார்.

நடந்தது ஒரு தவறு என்றோ, ஒரு வாடிக்கையாளரின் மனவேதனைக்கு மன உளைச்சலுக்கு தாம் காரணமாக இருந்தோம் என்றோ துளிகூட நெக்குருகும் மனம் அங்கே இல்லை. புரொபஷனலிசம். பிளாஸ்டிக் புன்னகை. நவீன முரட்டுத்தனம். வருத்தம் தெரிவிக்கும் பக்குவம் தொலைத்த கார்ப்பரேட் கலாசாரம்.

என்.ஓ.சி.ஐ மட்டும் வாங்கிக்கொண்ட பின்னர், என் மனைவி கேட்டார், “பத்திரம் கிடைக்கலன்னா என்ன செஞ்சிருப்பீங்க?”

“மூணு மாசம் பார்த்துட்டு, போலீஸ்ல எஃப்.ஐ.ஆர். கொடுத்திருப்போம். அப்புறம், டூப்ளிக்கேட் காப்பி வாங்கியிருப்போம்…”

எல்லாவற்றுக்கும் துணிந்துதான் இருக்கிறார்கள். என்னைப் போல் எத்தனை ஏமாளிகளைப் பார்த்திருக்கிறார்களோ? முதல் முறையாக, நவீன வங்கியியலின் மேல் இருந்த மதிப்பு என்வரையில் சரியத் தொடங்கியது.

11 thoughts on “ஐசிஐசிஐ – நவீன முரட்டுத்தனம்!

  1. சில வருடம் முன்பு கார் லோன் வாங்கிய ஒருவரை, தவணை கட்டவில்லை என்று ஐஸிஐசிஐ ஆள் வைத்து அடித்தது – கோர்ட்டில் இருபது லட்சம் அபராதம் விதித்தனர்.

    நேரம் கிடைத்தால் The International படம் பாருங்கள். கார்பரேட் நிறுவனங்களுடன் சாதாரணர்கள் மோதுவது இயலாத காரியம்.

  2. நல்லவேளையாக நோ அப்ஜெக்‌ஷன் சர்ட்டிபிகேட், டாக்குமெண்ட்ஸ் லிஸ்ட் இதாவது கொடுத்தார்களே 🙂

    நல்லபடியாக முடிந்தமைக்கு பாராட்டுகள். மோசமான சேவைகளுக்கு பெயர்பெற்றது ஐசிஐசிஐதான்.,மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.,

  3. வெங்கடேஷ், 1990லியே இதுபோன்றதொரு பிரச்சனையை என் அப்பா அனுபவித்தார். (கூட்டுறவு வங்கி) சம்பந்தப்பட்ட வங்கியில் பணத்தை முழுவதும் செலுத்தியும், கிளை மேலாளர் (பலரிடம்) செய்த பண மோசடி காரணமாக எங்களை அலைக்கழித்தார்கள். அதன் பிறகு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும், நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தும் போராடிப் பெற்றோம்.

    சிட்டி பாங்க் ஆரம்பத்தில் நேரடி சேவை மையங்கள் வழியாக மேற்கொண்ட பரிவர்த்தனைகளில் இப்படியான பிரச்சனைகளை சந்தித்து கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டது. அவசரத்துக்கு தங்கள் காரியம் ஆனால் போதும் என்று பன்னாட்டு வங்கிகள் செயல்படுவதன் காரணமாகத்தான், இந்தக் குளறுபடிகள் அரங்கேறுகிறது. கடன் கொடுப்பது, வசூலிப்பது, என எல்லாவற்றிலும் மூன்றாவது நபர்கள் செய்கிறவற்றை சரிபார்க்காமல் அவர்களை தன்னிச்சையாக செயல்பட விட்டு விட்டு பிறகு வாடிக்கையாளர்களை அலைக்கழிக்கும் இத்தகைய வங்கிகளின் செயல் தும்பை விட்டு வாலை பிடிப்பதற்கு ஒப்பானது. நீங்களாவது தொடர் முயற்சி செய்து முடிவு கண்டீர்கள். இதற்கும் வாய்ப்பற்றவர்களின் நிலையை யோசித்தால் கொடுமையாக இருக்கிறது.

    – பொன்.வாசுதேவன் –

  4. பேரன்புடையீர்!

    தங்கள் பக்கம் நியாயம் இருக்கையில் – யாருமே உம்மைப்போலப போராடிவேள்ளவேண்டும் என எல்லோருக்கும் உணர்த்தும் வண்ணம் நடந்துகொண்டுள்ளீர்! வாழ்த்துக்கள்!

    இந்த விதமான ஆட்டிட்யூட் எல்லா அலுவலகங்களிலும் உண்டு. எனலாம்.

    தன பக்கம் நியாயமிருப்பதை உணர்ந்து தொனதொனப்பவர்களை நாம் பெரும்பாலும் “தொலைபேசியை தொல்லைபேசி ஆக்கும் பிரகுஅச்பதிகள்” என ஒதுக்கப் பயன்படுத்தும் ஒரே முறை – மொபைல் இக்னோர்!

    பிறகு எப்போதாவது சம்பந்தப்பட்டவர் தென்பட்டால் – ஒரு பெரிய சாரி அல்லது – அன்று எதிர்வீட்டுக்காரர் இறந்திருந்தார், பல் பிடுங்கப்பட்டிருன்தது, வாய்ப்புண், காலில் அடி, பேரனின் ஸ்கூல் விழா என நாம் எல்லோரும் சால்ஜாப்புக்கூறித் தப்பித்துக் கொள்கிறோம்.

    ஒரு தனியார் வங்கி – அதே தவறை – நமது சொத்த்க்களை வைத்துக்கொண்டு செய்யும்போது இயல்பாக நமக்கெல்லாம் கோபம் வருகிறது.

    இந்த விஷயத்தில் நம்மில் யாரும் விதிவிலக்கல்ல.

    ஆனால் – ஒரு நடுத்தர வர்க்கப் பத்திரிக்கையாளருக்கு – அதுவும் பதவியில் இருக்கையிலேயே இது நடந்துள்ளது – வன்மையாகக் கண்டிக்கத்தக்க விஷயம்.

    நம்மில் பலர் – பல சிறு நிகழ்வுகளின்போது – ஏதோ ஒரு நோன்டிச்சாக்கைச் சொல்லி – நமது பொறுப்பிலிருந்து நழுவுகிறோம்.

    ஒரு நிருபரை ஏதேனும் அதிகாரி தாக்கினால் – அன்று எனது மாமனாருக்கு சிரார்த்தம். ஹோமத்தில் கண்சிவந்து மதியத்திற்குப் பிறகு ஓய்வெடுத்தேன் என இனி ஏதேனும் பத்திரிக்கையாளன் சொல்லும்போது வெங்கடேசுக்கு நடந்த அநியாயத்தை நினைத்துப் பார்ப்பது நல்லது.

    அடுத்த முறை தொலைபேசி ஆசாஹிப்பை அவைத் செய்யும் முன்பு சற்றே யோசிக்கவும்.

    எரிச்சல் எல்லோருக்கும் பொதுவானது.

    பொறுப்பின்மை – அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி – பிறரைப் படுத்தும் எல்லா பதவியிலிருப்பவர்களுக்கும் பொதுவான குணம்!

  5. அரசு நிறுவனங்கள் (LIC, BSNL, IRCTC, SETC, etc.,.) மெத்தனமாக செயல்பட்டாலும் அவை நம்மிடம் இருந்து கொள்ளையடிப்பதில்லை. மேலும் தனியாரைவிட அவை நம்பகமானவை என்பதற்கு இந்தக் கட்டுரை இன்னுமோர் எடுத்துக்காட்டு. பதிவுக்கு நன்றி. முதலில் இதைப் பதிவு செய்ய வேண்டுமென்று தோன்றியதே பாராட்டத்தக்கது !

  6. அமெரிக்க கார்பரேட் வங்கிகளிடமிருந்து நாம் வேண்டதவற்றை மற்றுமே கற்றுக்கொள்கிறோம் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.

    சமீபத்தில் ஒரு பத்து பைசாகூட கடனாக வாங்காமல் நானும் ஒரு சாதாரண இந்திய வங்கியிடம் மாட்டிக்கொண்ட அநியாய அவஸ்தைகளை ஒரு நாள் விவரிக்கிறேன்.

    இவர்களை நாமெல்லாம் சும்மா விடக்கூடாது. பதில் புகட்டியே ஆகவேண்டும். அடுத்த இந்திய விஜயத்தில் இதுபற்றி வக்கீலிடம் ஆலோசனை செய்வேன்.

    லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

  7. “நடந்தது ஒரு தவறு என்றோ, ஒரு வாடிக்கையாளரின் மனவேதனைக்கு மன உளைச்சலுக்கு தாம் காரணமாக இருந்தோம் என்றோ துளிகூட நெக்குருகும் மனம் அங்கே இல்லை. புரொபஷனலிசம். பிளாஸ்டிக் புன்னகை. நவீன முரட்டுத்தனம். வருத்தம் தெரிவிக்கும் பக்குவம் தொலைத்த கார்ப்பரேட் கலாசாரம்.” உண்மையான வார்த்தைகள்.

Aganazhigai Pon Vasudevan -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி