வாடகை நூல் நிலையம்

ப்ளாஹர் வலைதளத்தைப் படித்துக்கொண்டு இருந்தேன். புக்ஸ்விம் என்ற வலைதளத்தைப் பற்றி ஒரு வலைப்பதிவைப் படிக்க முடிந்தது. நான் ரொம்ப நாளாய் யோசித்துக்கொண்டு இருந்த விஷயம் இது. ஆன்லைனில் ஒரு வாடகை நூலகத்தை நடத்தினால் எப்படி இருக்கும் என்று யோசித்திருக்கிறேன்.

புக்ஸ்விம் அதைத்தான் அமெரிக்காவில் செய்திருக்கிறது. இதில் ஒரு விசேஷம் என்னவென்றால், புத்தகங்கள் அனுப்பவும் திரும்பப் பெறவும் ஆகும் அஞ்சல் செலவு இந்த நிறுவனத்துடையதே. மாதச் சந்தா 23.99 டாலரில் இருந்து 35.99 டாலர் வரை, வாடகை புத்தக எண்ணிக்கையைப் பொறுத்து அமைந்திருக்கிறது. ஒரு குறிப்பிட்ட புத்தகம் உங்களுக்குப் பிடித்துவிட்டால், அதை நீங்கள் அப்படியே வைத்துக்கொண்டு அதற்குரிய பணத்தை மட்டும் கட்டிவிட்டால் போதுமாம்.

அதேபோல், புத்தகத்தைப் படித்தவுடன் திருப்பித் தர வேண்டும் என்று அவசரப்பட வேண்டாமாம். லேட் ஃபீஸும் கிடையாது. இந்த பிசினஸ் மாடல் ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது. வாடகை நூல் நிலையங்களில் முதலில் கட்டும் பதிவுக் கட்டணம் அதிகமாக இருக்கும். இதுபோல் தாமதப்படுத்துவோர், புத்தகத்தைத் திருப்பித் தராமலேயே இருந்துவிடுவோர் ஏற்படுத்தும் நஷ்டத்தைத் தாங்கவே கூடுதலான பதிவுக் கட்டணம்.

எனக்குத் தெரிந்த தனியார் வாடகை நூல் நிலையங்களில், படாத பாடு படுகிறார்கள். புத்தகத்தைத் திருப்பித் தராதவர்களுக்கு போன் மேல் போன் போட்டு கூப்பிட்டு ஞாபகப்படுத்துவார்கள். அதையும் மீறி, வராமல் இருந்துவிடுவோர் அதிகம். அத்தகையவர்களின் வீடுகளுக்கு அலுவலக ஆள்களையே அனுப்பி வைத்து, புத்தகத்தைத் திரும்ப வாங்கி வரச் செய்வார்கள்.

எந்த ஒரு தலைப்பிலும் குறைந்தபட்சம் ஐந்து படிகளாவது இத்தகைய நூல் நிலையங்களில் வாங்கி வைக்கப்படுகின்றன. ஆனால், ஆண்டு இறுதிக்குள், சில படிகள் காணாமல் போய்விடும். சில கசங்கி, கிழிந்து பயனற்றுப் போய்விடும். அடுத்த ஆண்டு, மீண்டும் புதிய படிகள் வாங்கி வைக்க வேண்டும்.

வாடகை நூல் நிலையங்களில் அனுராதா ரமணன், ரமணி சந்திரன், வித்யா சுப்பிரமணியன் போன்ற பெண் எழுத்தாளர்களின் நாவல்களுக்கு நல்ல மெளசு இருக்கிறது. தேவிபாலா, இன்றும் பெண் வாசகிகளிடையே உள்ள ஃபேவரைட் ஆண் எழுத்தாளர்.

கதை படிக்கும் பழக்கமே குறைந்துவிட்டது என்று யாராவது சொன்னால், நான் அவ்வளவாய் நம்புவதில்லை. வாடகை நூல் நிலையங்களில் இன்றும் லக்ஷ்மியின் கதைகள் கிடுகிடுவென போய்க்கொண்டு இருக்கின்றன. அதுவும் அது ஓவியங்களோடு வந்த பத்திரிகை கட்டிங்குகளின் பைண்டட் வால்யூம் என்றால் இன்னும் புகழ் அதிகம்.

புக்ஸ்விம் ஆஃப்லைனில் இருப்பது போல் தெரியவில்லை. ஈஸ்வரி நூல் நிலையம் போன்ற கடை வைத்து வாடகை நூல் நிலையம் நடத்துபவர்கள், ஆன்லைனிலும் இந்தச் சேவையைத் தரலாம். ஆனால், ஓடிப்போகிறவர்களை எப்படி கட்டுப்படுத்துவது என்று மட்டும் கண்டுபிடித்துவிட்டால் போதும். புக்ஸ்விம் மாதிரி வாசகர்களின் நேர்மையில் அதீத நம்பிக்கை வைத்து ஒரு வாடகை நூலகம் நடத்துவது நம்ம ஊரில் சாத்தியமா என்று தெரியவில்லை.