தேவதையை முன்வைத்து…

தேவதையை முன்வைத்து…
சென்ற செவ்வாய்கிழமை அன்று (14.07.09) சென்னையில் இரண்டு புதிய இதழ்களின் வெளியீடு நடைபெற்றது. கிரிகுஜாம்பாள் பப்ளிகேஷன்ஸ் பெண்களுக்காக தேவதை என்ற இதழையும் ஆன்மிகத்துக்காக திரிசக்தி என்ற இதழையும் வெளியிட்டு இருக்கிறது. இதழ் விலை ரூ.15. தேவதைக்கு ஆசிரியர் தயாமலர். இவர் அவள் விகடன் இதழின் முன்னாள் பொறுப்பாசிரியர். திரிசக்திக்கு பி.சுவாமிநாதன் ஆசிரியர். இவர் சக்தி விகடனின் முன்னாள் பொறுப்பாசிரியர்.
எனக்கு புதிய இதழ்கள், புதிய மீடியா முயற்சிகள் மீது எப்போதும் ஒருவித மோகம் உண்டு. ஓர் இதழியல் மாணவனாக, வெளிவரும் ஒவ்வொரு புதிய இதழையும் வாங்கி, அதன் உள்ளடக்கத்தைப் பார்த்து, அதன் தன்மைகளைப் புரிந்துகொள்வதில் எனக்கு பெரும் ஆர்வம் உண்டு.
நான் பல ஆண்டுகளாக எல்லாவிதமான பெண்கள் இதழ்களையும் வாங்கியிருக்கின்றேன். ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை பெண்கள் இதழ்களின் பக்கங்களை நான் அப்படியே தள்ளிக்கொண்டு போன காலம் உண்டு. எனக்கு அதில் படிக்க ஒன்றுமில்லை என்ற எண்ணம் மிகுந்திருந்தது. ஆனால் ஒவ்வொரு பெண்கள் இதழும் தனக்கான வெற்றியைப் பெற்று வந்திருக்கின்றன. படிக்க ஒன்றுமில்லாமல் எப்படி ஒரு பத்திரிகை விற்பனையில் வெற்றி பெற முடியும் என்ற கேள்வி என்னைக் குடைந்துகொண்டே இருக்கும்.
நான் பெண்கள் இதழின் வாசகன் இல்லை என்ற உண்மை புரிய கொஞ்சம் காலம் ஆயிற்று. ஆனாலும் பெண்கள் இதழ்களை நான் தொடர்ந்து பின்பற்றி வந்திருக்கிறேன். வணிக ரீதியாக இந்த இதழ்கள் ஒரு முக்கிய விஷயத்தைச் செய்கின்றன. வாசகர்களின் பரப்பை ஒவ்வொரு புதிய இதழும் விரிவாக்குகின்றன. இல்லை, இருக்கும் வாசகர் பரப்பைத்தான் ஒவ்வொரு புதிய இதழும் பங்குபோட்டுக்கொள்கின்றன என்ற கருத்தும் உண்டு. மார்க்கெட்டிங் ரிசர்ச் துறையில், ஒவ்வொரு புதிய பிராடக்டும் பழைய பிராட்கட் ஒன்றின் இடத்தை பிடிக்கவே வருகிறது என்று சொல்லுவார்கள். பத்திரிகை விற்பனையிலும் இப்படி நடப்பதாக ஆய்வுகள் சொல்வதுண்டு. இதுவும் சரியாக இருக்கலாம். ஆனால், ஒவ்வொரு இதழும் குறைந்தபட்சம் ஒரு புதிய வாசகர் குழுவை நோக்கி பேசுவதாக நான் நினைக்கிறேன். இந்த எண்ணிக்கை குறைவாக இருக்கலாம்.
தேவதை இதழை முன்வைத்து என் எண்ணங்களைப் பதிவு செய்யவே இக்கட்டுரையை எழுத ஆரம்பித்தேன். தேவதைக்கு ஓர் முன்னோடி உண்டு. அது அவள் விகடன். அவள் விகடனின் இன்னொரு அச்சுப் பிரதி, மல்லிகை மகள் என்ற இதழ். இதற்கு ஆசிரியர் ம.கா.சிவஞானம். இவரும் முன்பு அவள் விகடனின் நிர்வாக ஆசிரியராக இருந்தவர். ம.கா.சிவஞானம், தயாமலர் ஆகியோர் அவள் விகடனின் உள்ளடக்க வடிவத்தை (Content Mix) உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்திருக்க வேண்டும். அந்த வடிவம், வியாபார ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவே, அதை அப்படியே பின்பற்றி தம் இதழ்களை உருவாக்கி இருக்கிறார்கள். சினிமா போல், சக்ஸஸ் ஃபார்முலாவை அப்படியே மறுமுறை பயன்படுத்திப் பார்க்கிறார்கள். ஒரு இடத்தில் வெற்றி பெற்றது மற்றொரு இடத்திலும் வெற்றி பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நியாயம்தானே?
இந்த வெற்றி ஃபார்முலா என்ன? இதற்கு முன்பு பெண்கள் இதழ்களுக்கான வேறு வெற்றி ஃபார்முலா இருந்ததுண்டா? அதற்கு ஏதும் வழித்தோன்றல்கள் உண்டா? இந்த குறிப்பிட்ட ஃபார்முலா மட்டும் சட்டென ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது?
அவள் விகடனுக்கு முன்பு உருவாக்கப்பட்ட வெற்றி ஃபார்முலா என்றால் அது மங்கையர் மலர் ஃபார்முலா தான். அப்போது அதன் ஆசிரியராக இருந்த மஞ்சுளா ரமேஷ் இந்த வெற்றி ஃபார்முலாவை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்திருக்க வேண்டும். ஒரு கட்டத்தில், அவர் மங்கையர் மலரை விட்டு வெளியேறி சினேகிதி (குமுதம் சிநேகிதி வேறு) என்ற இதழைத் தொடங்கி நடத்தி வருகிறார். சினேகிதி இதழில் மங்கையர் மலரின் தாக்கம் அதிகம் இருக்கும். அதன் உள்ளடக்கம், வடிவமைப்பு, எழுதும் முறை என்று அனைத்திலும் இந்தத் தாக்கத்தைப் பார்க்க முடியும்.
சொல்லப்போனால், இந்த மங்கையர் மலர் வெற்றி ஃபார்முலாதான் பல ஆண்டுகள் சந்தையில் கோலோச்சிக்கொண்டு இருந்தது. இன்னும் இருக்கிறது. எந்த வீட்டுக்குப் போனாலும் நிச்சயம் அங்கே மங்கையர் மலரைப் பார்த்திருக்கிறேன். அதைப் பொக்கிஷம் போல் பல ஆண்டுகள் பாதுகாத்து வைத்து வரும் குடும்பங்களும் உண்டு. இதற்கு மாற்றாக அல்லது இணையாகவேனும் மற்றொரு வெற்றி ஃபார்முலா கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது. அவள் விகடன் கடந்த பத்து ஆண்டுகளாக உருவாக்கி, திருத்தி, செம்மைப்படுத்தி, மேம்படுத்தி மற்றொரு வெற்றி ஃபார்முலாவை உருவாக்கியது. இன்று பல வீடுகளில் இரண்டு இதழ்களும் வாங்கப்படுகின்றன.
மேலும் பல பெண்கள் இதழ்கள் சந்தையில் கிடைக்கின்றன. லேடீஸ் ஸ்பெஷல், குமுதம் சிநேகிதி, தங்க மங்கை என்றில்லாமல், தினசரிகளும் பெண்கள் இணைப்பிதழ்களும் வெளியிடுகின்றன. இணைப்பிதழ்கள் பெரிய அளவில் பெண்களிடையே கவனம் பெறுவதில்லை. அதன் உள்ளடக்கம் சிரத்தையாக உருவாக்கப்படாமையே இதற்குக் காரணம்.
தமிழ் பெண்கள் இதழ்களைப் பொறுத்தவரை இரண்டு முக்கிய பள்ளிகள் இருக்கின்றன: ஒன்று மங்கையர் மலர் வழி, இன்னொன்று அவள் விகடன் வழி.
இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள்தான் சுவாரசியமானது.
அடிப்படையில், அவள் விகடன் 28 – 35 வயதுடைய அலுவலகம் போகும் பெண்களை முன்னிலைப்படுத்தி பேச, மங்கையர் மலர் 40+ பெண்களுக்கான விஷயங்களைப் பேசுகிறது. இரண்டிலும் தாய்மைக்கான அம்சங்கள் இருந்தாலும், மங்கையர் மலரில் அதன் அளவு கொஞ்சம் அதிகமாக இருக்கும்.
மங்கையர் மலர் முன்னிலைப்படுத்தும் பெண்ணை வர்ணிக்கச் சொன்னால் இப்படித்தான் ஒருவரால் வர்ணிக்க முடியும்: வழக்கமான குடும்பத் தலைவி. படித்தவர், விவரங்கள் தெரிந்தவர், ஆனால் வேலைக்குப் போகாதவர். குறைந்தபட்சம் 15 வயதில் ஒரு பெண்ணோ பையனோ இருக்கக்கூடியவர். பழமையில் நம்பிக்கை மிகுந்தவர், நெற்றித் திலகத்துடன் புடைவை கட்டுபவர், அழகை செய்துகொள்வதில் கொஞ்சம் அக்கறை குறைவானவர்.
அவள் விகடன் பெண் எப்படி இருப்பாள்? படித்து முடித்து வேலைக்குப் போக ஆரம்பித்து இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகியிருக்கலாம், திருமணம் ஆகி மனதளவில் புதுக்கருக்கு கலையாமல் இருக்கலாம், சமையலை இப்போதுதான் கற்றுக்கொள்ள ஆரம்பித்து இருக்கலாம், நவீன டெக்னாலஜி சார்ந்த கருவிகளை லாவகமாக உபயோகிக்கத் தெரிந்தவர், சுடிதாரோ பிற நவீன உடைகளோ அணிவதில் ஆர்வமுள்ளவர், தன்னை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது கவனம் உண்டு, பழைய கருத்துகள் அதிகம் தெரியாது, கணவர், குழந்தை என்று ஓர் அழகிய இல்லத்தை உருவாக்குவதில் நாட்டமுள்ளவர்.
இரண்டு மேஜர் கேட்டகரி பெண்களை இந்த இரண்டு பத்திரிகைகளும் தமதாக்கிக்கொண்டு இருக்கின்றன. இந்தப் பெண்களை மனத்தில் வைத்துக்கொண்டு இவ்விரு இதழ்களையும் நீங்கள் பார்த்தால், அவர்களுக்குத் தேவைப்படும் அத்தனை அம்சங்களையும் இப்பத்திரிகைகள் வழங்குவதை புரிந்துகொள்ள முடியும்.
இதனால்தான் மங்கையர் மலரில் ஆன்மிகம் சற்று தூக்கலாக இருக்கும். வரன் தேடும் விளம்பரப் பகுதி தனியாக இருக்கும். அதில் வரக்கூடிய பெண்கள் புகைப்படங்கள் எல்லாம் 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களின் புகைப்படங்களாக இருக்கும். இல்லை, நிறைய கோட்டோவியங்களைப் பயன்படுத்தியிருப்பார்கள்.
இதே காரணத்தினால்தான், அவள் விகடன் வாசகி, 32 பக்க சமையல் இணைப்பிதழை முக்கியமானதாகக் கருதுகிறார். ஃபேஷன் ஜுவல்லரிக்கென்றே தனி பக்கங்கள் உண்டு. மேலும் உலக நடப்புகளைத் தெரிந்துகொள்ள ஏதுவாக செய்திகளைத் திரட்டி இரண்டு பக்கங்கள் தந்திருப்பார்கள், பெண்கள் ஜெயித்த வெற்றிக் கதைகளை ஒவ்வொரு இதழிலும் கவர் ஸ்டோரியாக ஆக்கியிருப்பார்கள். ஒவ்வொரு இதழிலும் தன் தனிப்பட்ட சோகக் கதையை ஒரு பெண் எழுத, அதற்குப் பிற பெண்கள் வழிகாட்டும் பகுதியான வாசகி டைரி இதில் மிகவும் பிரபலம்.
இவ்விரு இதழ்களையும் தொடர்ந்து பார்த்து வந்தால், தமிழ் பெண்களின் ஓர் குறுக்குவெட்டுத் தோற்றம் கிடைத்துவிடும். வெகுஜன கலாச்சாரம் உருவாக்கியிருக்கும் தமிழ் பெண்ணின் பிம்பம் இவ்விரு இதழ்களிலும் முழுமையாக வெளிப்பட்டு இருக்கிறது.
இருபத்தெட்டு வயதுக்கு கீழே உள்ள பெண்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தால், ஒன்று அவர்கள் இன்னும் பெண்கள் பத்திரிகையைப் படிக்க ஆரம்பிக்கவில்லை. கல்லூரிப் படிப்பு, வேலையில் நிலைபெறுபவது, காதலிப்பது, திருமணம் செய்துகொள்வது போன்ற வாழ்வின் முதற்தேவைகள் அங்கே கவனம் பெற்றிருக்கின்றன. அவர்கள் படிக்க ஆரம்பிக்கும்போது, முதலில் அவர்களுக்கு அணுக்கமாக இருப்பது அவள் விகடன் தான்.
அதேபோல் 33 – 35 வயதைக் கடந்த பெண்கள், மெல்ல மங்கையர் மலரை நோக்கி முன்னேறத் தொடங்குகிறார்கள். திடீரென்று, அவர்களுக்கு அவள் விகடன் போதாமல் போய்விடுகிறது. படிக்க ஒன்றுமே இல்லை என்ற எண்ணம் தோன்றிவிடுகிறது. 40க்குப் பின் 60 – 70 வயது வரை உள்ள பெண்களுக்கு மங்கையர் மலர் முக்கியமான இதழாக தெரிகிறது. குடும்ப மதிப்பீடுகள், பண்பாடு, கலாச்சாரம் போன்ற பிடிப்புகளின் மேல் அவர்களின் கவனம் குவியத் தொடங்க, மங்கையர் மலர் அந்த எண்ணத்தை எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்து வருகிறது.
இந்த வயது வித்தியாசமே, இருபத்திரிகைகளின் எழுதும் முறையையும் வித்தியாசப்படுத்திக் காட்டுகின்றன. மங்கையர் மலர் எழுதும்முறை ஒருவித அமரிக்கையான, நிதானமான தொனியோடு இருக்க, அவள் விகடன் மொழியோ இன்னும் இளமையாக இருக்கும். துணுக்கின் தன்மை அதிகம் இருக்கும். நீண்ட பத்திகளாக இல்லாமல், சின்ன சின்ன வாக்கியங்களில் அவளில் கட்டுரை எழுதுவார்கள்.
இரண்டு பத்திரிகைகளுமே தங்கள் உள்ளடக்கங்களை பெருமளவு நேர்த்தி செய்துவிட்டன. அதில் புதிதாக சேர்க்க்க என்று ஒன்றை இனிமேல் தான் கண்டுபிடிக்க வேண்டும். அந்த அளவுக்கு நியர் பர்பெக்‌ஷனுக்கு இவ்விரு இதழ்களும் வந்துவிட்டன.
இந்த நிலையில், அவள் மாதிரியே இன்னும் இரண்டு இதழ்கள் – மல்லிகை மகள், தேவதை – சந்தைக்கு வந்திருப்பதைப் பார்க்கும்போது கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது. அவள் வாங்கும் வீடுகளில் அவள் மாதிரியே இருக்கும் இன்னொரு இதழை வாங்க மாட்டார்கள். அதே சமயத்தில் அவள் விகடனை ரீபிளேஸ் செய்யவும் தயங்குவார்கள். ரீபிளேஸ் செய்ய முடியாது என்று இல்லை. ஆனால், புதிய இதழ்களின் உள்ளடக்கம் அவ்வளவு ஈர்க்கக்கூடியதாக இருக்கவேண்டியது அவசியம்.
இன்னொரு வகையில் சொல்வதனால், இப்போது போட்டி உள்ளடக்கத்தில் இல்லை. மார்க்கெட்டிங்கில் இருக்கிறது. மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் இருக்கிறது. மங்கையர் மலரை ஒட்டியே உருவாக்கப்பட்ட சினேகிதி, அதன் மூல இதழ் அளவுக்கு விற்பனை ஆகவில்லை. உள்ளடக்கம் மட்டும் இருந்தால் போதும், பெரிய வாசகர் கூட்டத்தை அது தானாகவே கொண்டு வந்துவிடும் என்ற நம்பிக்கை தவறானது. சினேகிதி விஷயத்தில் நடந்தது அதுதான். மார்க்கெட்டிங் முனைப்பு போதவில்லை. மல்லிகை மகள் விஷயத்தில் நடந்தது அதுதான். மார்க்கெட்டிங் பலம் போதவில்லை.
இதெல்லாம் பாடங்கள். இதழியல் மாணவனாக எனக்குள் சேமித்துக்கொண்ட விஷயங்கள். உள்ளடக்கம், மார்க்கெட்டிங் மாதிரி சுவாரசியான விஷயங்கள் எனக்குத் தெரிந்து வேறு இல்லை.