அண்ணா ஹசாரேவை ஏன் ஆதரிக்கவேண்டும்?

அண்ணா ஹசாரே மீது காங்கிரஸ் கட்சி கடும் குற்றச்சாட்டுக்களை வீசத் தொடங்கிவிட்டது. இதுநாள் வரை கொஞ்சம் மிதமாக போனவர்கள், உண்ணாவிரதப் போரை நடத்த அவர் காட்டும் உறுதியைக் கண்டு, அவரைக் கீழ்த்தரமாக பேச ஆரம்பித்து இருக்கிறார்கள். காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி, ஒரு படி மேலே போய், அண்ணாவையும் அவரது குழுவினரையும்  “armchair fascists, over-ground Maoists, closet anarchists” என்று பேசியிருப்பது விஷமத்தனமானது. உள்நோக்கம் கொண்டது.

இந்த நிலையில், அண்ணாவை ஆதரிப்பது என் வரையில் முக்கியம் என்று கருதுகிறேன். அவநம்பிக்கைவாதிகளைப் போல் எல்லாவற்றையும் எல்லோரையும் இழித்தும் பழித்தும், குறை கண்டும் குற்றம் சொல்லிக்கொண்டும் இருப்பது சுலபம். அண்ணா, தமது டிரஸ்டுக்கு வந்த பணத்தில் பிறந்த நாள் விழா கொண்டாடினார், அது தவறு என்று நீதிபதி சாவந்த் கருத்து சொல்லியிருக்கிறார்.

ஆனால், இதையெல்லாம் மீறியது அண்ணாவின் இயக்கமும் அதன் தேவையும்.

1. இன்று அண்ணா மிடில் கிளாஸ் இளைஞர்களின் கோபத்தின் முகமாக உருவாகி இருக்கிறார். தம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லையே, நாட்டின் ஊழல் கேடுகளுக்கு வழி தேட முடியவில்லையே என்று குமுறும் மிடில் கிளாஸ், தம் குரலை, அண்ணாவிடம் இனம் காணுகிறது. அண்ணா இந்த நம்பிக்கையைத் தோளில் சுமப்பதற்கு முழுவதும் தகுதியானவர் என்று மத்தியமர்கள் நம்புகிறார்கள். எத்தனை குட்டையைக் குழப்பினால், அவரது செயல்களுக்கு உள்ளர்த்தம் கற்பித்தாலும், மேன்மேலும், அவரது புகழ் உயரவே செய்கிறது. செய்யும். அதுதான் நம்பிக்கையின் பலம்!

2. ஊழல் சீர்கேடுகளுக்கு, முகம் கொடுக்க மத்திய அரசு தயங்குகிறது என்பது வெளிப்படை. லோக்பால் வரைவு மசோதா பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டு, சட்டமாக்கப்படலாம். அதனால், எந்தப் பயனும் விளைந்துவிடாது என்பதில் அக்கறை உடைய மத்யமர்கள் கவலைகொள்ளுகிறார்கள். பல்லைப் பிடுங்கிவிட்டுப் பாம்பு என்றால், யாரேனும் அச்சப்படுவார்களா என்ன? மக்கள் எழுச்சியை ஓரளவுக்குத் திருப்தி செய்து, கவனத்தைத் திசை திருப்பவேண்டும் என்பதே காங்கிரஸின் எண்ணமாக இருக்கிறது.

3. அண்ணா, லஞ்ச ஊழலை, நவீன முழக்கமாக புதுப்பித்து இருக்கிறார். மக்கள் மனத்தின் தேவை அது. அவர் அதற்கு உடனடியாக தீர்வு கண்டுவிடுவார் என்று நான் நினைக்கவில்லை. ஆழப் புரையோடிய புண்ணை மருந்திட்டு குணமாக்கிவிட முடியுமா என்ன? ஆனால், லஞ்ச ஊழல் ஓர் நோய், அதைக் குணமாக்கவேண்டும் என்ற பதற்றத்தை, அண்ணா விதைத்து வருகிறார். ஏற்கெனவே விதை ஊன்றிய மனங்களில் அதை வளர்த்தெடுக்கிறார். இந்த அவேர்னஸ் பில்டிங், மிக முக்கியமான பணி. இதை நான் இப்படிப் பார்க்கிறேன் : காங்கிரஸ் கட்சியை காந்தி தலைமையேற்று நடத்த வருவதற்கு முன்பு, அவரை ஏற்பதற்கான பண்பட்ட மனங்கள் தயாராக இருந்தன. கோகலே உள்ளிட்டோர் அதற்கு முன்பு செய்தது இப்படிப்பட்ட பண்படுத்துதலைத்தான். இப்போதும் அப்படிப்பட்ட பண்படுத்துதல் அவசியம். அண்ணா ஹசாரே இயக்கத்தினரின் முயற்சி இத்தகையதே.

4. நண்பர் ஒருவரோடு பேசிக்கொண்டு இருந்தபோது, இந்தச் செய்தியைச் சொன்னார்: ஷீர்டி பாபாவிடம், கோபாலகிருஷ்ண கோகலே, தனக்குப் பின்னர் காங்கிரஸ் பேரியக்கம் என்னாகும், யார் தலைமை ஏற்பார்கள் என்று கவலையோடு கேட்டாராம். அதற்கு பாபா, “வந்துகொண்டே இருக்கிறார், நீ உன் வழியில் போ” என்றாராம்.  அண்ணா ஹசாரே வழிநடத்தும் இயக்கம் அதுபோல் ஒரு எதிர்காலத் தலைவரின் வரவுக்கானஆரம்பமோ என்னவோ?

5. அரசையும் ஆளுபவர்களையும் கொஞ்சமேனும் பயத்தோடும் கட்டுப்பாடுடனும் நடந்துகொள்ள வைக்க, அண்ணாவின் இயக்கம் நிச்சயம் துணை செய்யும். மக்கள் கண்கொத்திப் பாம்பாக இருக்கிறார்கள் என்று புரிய வைக்க இந்த இயக்கம் மிக முக்கியம்.

6. தகவல் அறியும் சட்டத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தும் ஓர் நண்பரிடம் பேசும்போது, அவர் சொன்ன செய்தி சுவாரஸ்யமானது. குஜராத்தில், திட்டங்கள் லஞ்சம் ஊழல் இல்லாமல் செயல்படுத்தப்படுவதற்கும், உரிய பலன்கள் ஏழை எளியவர்களிடம் போய் சேருவதற்கும் காரணமாக இருப்பது தகவல் அறியும் சட்டம்தானாம். நரேந்திர மோடி, அரசு நிர்வாகத்தை ஒழுங்காக செயல்பட வைக்க, இந்த வசதியை நன்கு பயன்படுத்துகிறாராம். எல்லாவற்றுக்கும் பதில் சொல்லவேண்டுமே, சொல்லவில்லை என்றால், மேலே இருக்கும் முதல்வர் கவனத்துக்கு தவறுகள் சென்றுவிடுமே என்ற அச்சம், அங்கே நிர்வாகத்துறையில் பரவி இருக்கிறது. இதுதான் அரசு நிர்வாகத்தின் அக்கவுண்டபிளிட்டிக்கும் பொறுப்புமிக்கத்தன்மைக்கும் உதாரணம். சட்டங்களை முறையாகப் பயன்படுத்துதல்.

காங்கிரஸ் அண்ணாவைக் கண்டு, அவரது இயக்கம் கண்டு பதற்றம் கொள்ளத் தொடங்கியுள்ளது. நாளை நடக்கவிருக்கும் போராட்டத்துக்கு அனுமதி அளிக்க 22 நிபந்தனைகள் போடுவது, அனுமதி மறுப்பு என்றெல்லாம் செய்திகள் வருகின்றன.  நல்ல ஆரம்பம்!  இப்படியே முன்னேறுவது நல்லதே செய்யும்!