உள்ளாட்சித் தேர்தல் கணக்குகள்!

தமிழக உள்ளாட்சித் தேர்தல் களைகட்டத் தொடங்கிவிட்டது. அ.தி.மு.க., தி.மு.க. தனித்து நிற்க முடிவு செய்தவுடன், மற்ற கட்சிகள் அனைத்தும் தனித்தே களம் காண வேண்டிய நிர்ப்பந்ததுக்குத் தள்ளப்பட்டு இருக்கின்றன. தே.மு.தி.க., மார்க்சிஸ்டோடு கூட்டு அமைத்து இருக்கிறது.

இந்த நிலையை மனத்தில் வைத்துக்கொண்டு என்ன கார்ட்டூன் போடலாம் என்று யோசித்தபோது, உதித்த சில ஐடியாக்கள் இவை:

1. அம்மாவும் அய்யாவும் மிட்டாய் டப்பாவை காலி என்பது போல் தட்டி மூடிக்கொண்டே தத்தமது வீடுகளுக்குள் நுழைய, காத்திருக்கும் கட்சிகள் அனைத்தும் ஏக்கம் பீடிக்க நிற்க வேண்டும். “அடுத்த பண்டிகைக்குப் பார்த்துக்கலாம், இப்போ ஒண்ணுமில்லை… போயிட்டு வாங்க!” என்று கமெண்ட் வைக்கலாம்.

2. எல்லா கட்சியினரும் தத்தமது கட்சிக் கொடிகளோடு முண்டியடுக்க, அய்யாவும் அம்மாவும், யாரையும் சீந்தாமல், தமது கட்சிக் கொடிகளை உயர்த்துவதில் முனைப்புடன் நிற்கவேண்டும். “முதல்ல எங்க கொடி ஏறட்டும். அப்புறம் பார்த்துக்கலாம்” – கமெண்ட் வைக்கலாம்.

மெனக்கெட்டால் இன்னும் சிறப்பான ஐடியாக்கள் வரலாம். ஆனால், இதெல்லாம் ஒரே செய்தியைத்தான் சொல்கின்றன. தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் தனித்தே உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க என்ன காரணம் இருக்க முடியும்? பல தியரிகள் உலவுகின்றன.

1. இரு பெரிய கட்சிகளுமே தத்தமது அடிமட்ட கட்சிக்காரர்களை எங்கேஜ் செய்யவும் வாய்ப்பளிக்கவும் உற்சாகமூட்டவும் இதைவிட வேறு சிறந்த வாய்ப்பு இல்லை. கூட்டணிக் கட்சிகளுக்கு சில இடங்களைப் பிரித்துக்கொடுக்கும்போது, பெரிய கட்சியின் உள்கட்டுமானத்தில் தேவையற்ற மனக்கசப்புகள் ஏற்படவும் பிளவுகள் ஏற்படவும் ஏதுவாகிவிடலாம். அதைத் தடுக்க, கூட்டணியைத் தவிர்த்துவிட்டு, தாமே அனைத்து இடங்களிலும் தம் கட்சிக்காரர்களை நிறுத்துவது சரியான அணுகுமுறை. இருகட்சிகளுமே அதைத்தான் செய்திருக்கின்றன.

2. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி தோல்வி, பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடப் போவதில்லை. மக்கள் மனத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டு இருந்தால், அது ஒரு சில இடங்களில் மட்டுமே பிரதிபலிக்க வாய்ப்புண்டு. மற்றபடி, ஆளுங்கட்சியினரே, உள்ளாட்சி அமைப்புகளிலும் வெற்றி பெறுவார்கள்; பெற்றிருக்கிறார்கள். மாற்றுக் கட்சிக்கு உள்ளாட்சி அமைப்புகளில் வாய்ப்பளித்தால், அவர்களால் பெரிதாக ஏதும் திட்டங்களைச் செயல்படுத்திவிட முடியாது; மாநில அரசைச் சார்ந்தே செயல்படுவது உகந்த வழி என்று மக்கள் ஒருவித தீர்மானத்தில்தான் வாக்களிக்கவே வருவார்கள். இந்தப் பின்னணியில் இருந்து பார்க்கும்போது, மற்றொரு வெற்றி வாய்ப்பை ஏன் இழக்க வேண்டும் என்று அ.தி.மு.க நினைக்கலாம். கடுமையாக மோதி, மக்களிடம் தம் செல்வாக்கு இன்னும் மிச்சமிருக்கிறது என்று காண்பிக்க இது ஒரு வாய்ப்பு என்று தி.மு.க. கருதலாம். கூட்டணி சேர்த்துக்கொண்டால், கூட்டணி பலத்தால்தான் வெற்றி கிடைத்தது என்ற அவப்பெயர் ஏற்பட வழியேற்பட்டுவிடலாம். அதைத் தவிர்க்கவே தி.மு.க. விரும்பி இருக்கக்கூடும்.

3. இன்னொரு கோணத்தில் இதையே புரிந்துகொள்ளலாம். சட்டமன்றத் தேர்தலில், தே.மு.தி.க.வின் ஆதரவில்தான் அ.தி.மு.க. வெற்றி பெற்றது என்ற கருத்து ஆழமாக இருக்கிறது. இதை உடைக்கவேண்டும்; தம் சொந்த செல்வாக்காலும், அ.தி.மு.க.வின் தீவிர தொண்டர்களாலுமே வெற்றி கிடைத்தது என்பதை நிரூபிக்க இதை ஒரு சரியான வாய்ப்பாக ஜெ. கருதியிருக்கலாம்.

4. இதற்கு இன்னொரு கோணமும் உண்டு: ஜெ. மெல்ல மெல்ல பா.ஜ.க. பக்கம் நகர்ந்துகொண்டு இருக்கிறார் என்றே தெரிகிறது. 2014ல் நரேந்திர மோதி பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. கம்யூனிஸ்டுகளோ, தே.மு.தி.க.வோ அப்போது தேவையற்ற சுமை. இப்போதே மெல்ல அவர்களைக் கழட்டி விட்டுவிடுவது உத்தமம் என்று ஜெ. கணக்கு போட்டு இருக்கலாம்.

5. தி.மு.க.வோடு கூட்டணி சேர்ந்ததால்தான், தோற்றுப் போனோம் என்ற கருத்து பல இடங்களில் காங்கிரஸ்காரர்களால் முன்வைக்கப்படுகிறது. தம் கட்சி ஆதரவு இல்லையெனில், காங்கிரஸ் பெற்றிருக்கும் குறைந்தபட்ச சீட்களைக் கூட பெற்றிருக்க முடியாது என்பதை நிரூபிக்க இது சரியான வாய்ப்பு என்று கலைஞர் நினைத்து இருக்கலாம். வருங்காலத்தில் தி.மு.க. கூட்டணியில் தொடர வேண்டிய தேவையை, காங்கிரசுக்கு வலியுறுத்த இதைவிட சிறப்பான சந்தர்ப்பம் அமையாது என்றும் அவர் கணக்கு போட்டு இருக்கலாம்.

6. மற்ற கட்சிகள் அனைத்துக்கும் இத்தேர்தல் ஓர் ரியாலிட்டி செக். ஆசிட் டெஸ்ட். தாம் அடிமட்ட தொண்டர்கள் வரை உண்மையிலேயே செல்வாக்கு பெற்றிருக்கிறோம் என்பதை பெரிய கட்சிகளுக்கு நிரூபிக்க வேண்டிய தேவை இப்போது ஏற்பட்டுவிட்டது. தே.மு.தி.க.வின் 10 சதவிகித, கம்யூனிஸ்ட்டுகளின் 3-4 சதவிகித வாக்குவங்கிகள் பத்திரமாக இருக்கின்றனவா; செல்வாக்கில் உயர்வா, சரிவா என்பதை இத்தேர்தல் அவர்களுக்குக் காண்பித்துவிடும். வாக்குகள் சேதாரம் இல்லாமல் இருந்தால்தான் அடுத்து வரும் தேர்தல்களில் பெரிய கட்சிகளுடன் பேரம் பேச முடியும்; இல்லையெனில், கட்சி வளர்ச்சிப் பணிகளில் இனி முனைந்து செயல்பட முயலவேண்டும்.

7. பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் வேகமாக வளர்ந்த கட்சிகள்; கூட்டணி ஆதரவிலேயே செல்வாக்கு பெற்றவை. ஆரம்ப காலத்தில் அக்கட்சித் தலைவர்களுக்கு அடிமட்ட தொண்டர்களோடு இருந்த அணுக்கம், கால ஓட்டத்தில் மெல்லக் குறைந்துவிட்டது. இப்போது, உண்மையில் தம் செல்வாக்கை அவர்கள் புரிந்துகொள்வார்கள். தம் அடிப்படை பலம் கைநழுவிப் போய்விட்டதா? வலுப்பெற்றிருக்கிறதா என்று தெரிந்துவிடும்.

8. உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றி பெற்று வந்தவர்கள் என்ன செய்தார்கள் என்று மக்களுக்கு தெரியவே தெரியாது என்பதுதான் உண்மை. மக்களின் தேவைகளுக்காக அவர்கள் குரல் கொடுத்தார்களா? மாமன்றக் கூட்டங்களில் அவர்களுடைய செயல்பாடுகள் எப்படி இருந்தன? என்ன புதிய திட்டங்களை அவர்கள் தம் வார்டுகளில் செயல்படுத்தினார்கள்? எம்.எல்.ஏ.க்கள் என்ன செய்தார்கள் என்று தேடினால், தெரிந்துகொண்டுவிடலாம். ஆனால், மாமன்ற, நகராட்சி உறுப்பினர்கள்? தம் வார்டுகளில் உள்ள மக்கள் பிரச்னைகளுக்கு மிக அருகிலேயே இருக்கும் இந்த உறுப்பினர்கள்தான், மிகவும் விலகி இருக்கிறார்கள் (விதிவிலக்குகள் உண்டு). மக்கள் சம்பந்தமான வேலைகளை விட, இந்த உறுப்பினர்கள், அவர்கள் சார்ந்த கட்சி வேலைகளிலேயே அதிகம் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி அவர்கள் முன்னேற வேண்டுமல்லவா 🙂

9. இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் கட்சி சார்ந்த உறுப்பினர்களுக்கு வாக்களிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எம்.எல்.ஏ. தேர்தல் என்றால், மக்கள் தொகை அதிகம். அக்கவுண்டபிளிட்டி குறைவு (அங்கும் அக்கவுண்டபிளிட்டி வேண்டும்; ஆனால் வலியுறுத்தும் வழிகள் குறைவு!). வார்டு என்பதோ, நகராட்சி, பஞ்சாயத்து என்பதோ, இன்னும் அருகில் இருக்கும் அலகுகள். அங்கே மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்களை சுலபமாக அடையாளம் காண முடியும். அவர்கள் இத்தேர்தலில் நின்றால், அவர்களுக்கு வாக்களிக்க முன்வாருங்கள்.

10. உள்ளாட்சி அமைப்புகளுக்கு, மத்திய மாநில அரசுகள், உலக வங்கி, இன்னபிற நிதியங்கள் ஏராளமாக பணம் ஒதுக்குகின்றன. அங்கே நல்லவர்கள், நேர்மையாளர்கள் உறுப்பினர்களாக இருந்தால், பலன் நிச்சயம் மக்களைப் போய்ச் சேரும். இன்றைக்கு இருக்கும் மோசமான அரசியல் சூழலில், நல்லவர்களால் என்ன செய்ய முடியும்? நேர்மையாளர்கள் என்பதெல்லாம் பம்மாத்து என்றெல்லாம் குரல்கள் ஒலிக்கின்றன. இருக்கலாம். அவர்களால் ஒன்றுமே செய்ய முடியாமல் கூட போகலாம். பரவாயில்லை. குறைந்தபட்சம், நமக்குத் தெரிந்த நல்லவருக்கு, நேர்மையாளருக்கு, மக்கள்நலப் பணியாளருக்கு வாக்களித்தோம் என்ற திருப்தியாவது இருக்கட்டுமே. முதல் செங்கல் நம்முடையதாக இருக்கட்டுமே.

இதைக்கூடச் செய்யாமல் விலகி இருப்பதில் அர்த்தமில்லை. மறக்காமல், வாக்கு அளியுங்கள்.