அட்டையின் கதை

தமிழில் புத்தக அட்டைகளில் பெரும் மாறுதலைக் கொண்டு வந்தது ழ வெளியீடுதான் என்று நினைக்கிறேன். அல்லது அதற்கு முன்பே இது ஆரம்பித்துவிட்டதோ, தெரியவில்லை. அதுவரை, புத்தக அட்டையோ, அல்லது புத்தக வடிவமைப்போ, ஒரு தேர்ந்த ஓவியரைக் கொண்டு செய்யப்பட்டதில்லை.

லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி நடத்திய புக்வென்சர் நிறுவன நூல்களில், கலாசாகரம் ராஜகோபால் என்றொரு ஓவியரின் பங்களிப்பு பெரிய அளவில் இருந்திருக்கிறது.  பின்னாளில் அவர் திருவண்ணாமலை சென்று ரமண மகரிஷியின் மார்பளவு சிலையைச் செய்துகொடுத்தார் என்று எஸ்.வைதீஸ்வரன் சொல்லியிருக்கிறார்.

 ழ வெளியீடுகளில்தான் ஓவியர் ஆதிமூலத்தின் கைவண்ணம் அதிகம் மிளிர்ந்தது. அவர் ழ வெளியீடுகளின் நூல்களுக்கு அட்டை ஓவியம் வரைந்து தந்ததோடு, அவரே அதன் ஆர்ட் டைரக்டராகவும் இருந்திருக்கிறார்.  ஆத்மாநாம், ஞானக்கூத்தன், ஆர்.ராஜகோபாலன் போன்றவர்களுக்கு நவீன ஓவியத்தையும் நவீன இலக்கியத்தையும் ஏதோ ஒரு புள்ளியில் இணைக்கவேண்டும் என்ற அவா இருந்திருக்கிறது.

சொல்லப்போனால, கசடதபற பத்திரிகையில்தான் இதற்கான ஆரம்பம் ஏற்பட்டது.  அதுநாள் வரை இருந்த புத்தக வெளியீடுகளில் ஒரு ஓவியம் அட்டைப் படத்தை அலங்கரிக்கும். அல்லது வெறும் எழுத்துகள் பளிச்சிடும். கட் கலர் அட்டைப் படங்கள்தான் பெரும்பாலும்.  அந்தக் காலத்தில் இன்று இருக்கும் வசதிகள் இல்லாததால், பிளாக் எடுத்து, ஒவ்வொரு கலராக ஓட்டி, புத்தக அட்டை தயார் செய்வார்கள்.

தொழில்நுட்பம் எல்லாவற்றையும் எளிமைப்படுத்தியிருப்பது உண்மை.

தொண்ணூறுகளில், ஆதிமூலத்தின் தொடர்ச்சியாக ஓவியர் மருது பெரிய அளவில் தமிழ் புத்தகங்களின், தலைப்பு எழுத்துகளின் தலையெழுத்தை நிர்ண்யித்தார். வித்தியாசம் என்ற பெயரில், எல்லா  நூல்களும் இந்தக் கோணல்மாணலான எழுத்துகளைத் தாங்கி வெளிவந்தன. அன்னம், அகரம் ஆகிய பதிப்பகத்தின் நூல்கள் இத்தகைய அட்டைகளைக் கொண்டு இருந்தன. நர்மதா பதிப்பகமும் தமது நாவல் புத்தகங்களுக்கு இத்தகைய ஓவியங்களைப் பயன்படுத்தின.

ஆனால், இந்தப் புதுமையை ஏற்காதவர்களும் நிறையவே தமிழ்ப் பதிப்புலகில் இருந்திருக்கிறார்கள். தீபாவளி, பொங்கல் வாழ்த்து அட்டை ஓவியங்கள், புகைப்படங்களையே அட்டைப் படஙக்ளாக வைத்தவர்கள் நிறைய பேர்.

முகப்பு அட்டை என்பது புத்தக உள்ளடக்கத்தை வெளிப்படுத்தும் ஒரு சாதனம். அட்டை, உள்ளடகக்கத்தின் தன்மையை ஓரளவாவது எடுத்து இயம்ப வேண்டும். அது அலங்காரமல்ல.  உடலுக்கு உள்ள் முகம் போன்றது அது.

என் நூலகளுக்கு இதுவரை எனக்குப் பிடித்தமான ஒரு அட்டை கிடைத்ததில்லை. ஒவ்வொரு முறையும் அந்த நேரத்து அவசரத்துக்கு ஏற்ப, மனநிலைக்கு ஏற்ப ஒரு அட்டையை தேர்வு செய்திருக்கிறேன்.  அட்டையில் உள்ள ஓவியம் அல்லது புகைப்படம் கொஞ்ச நாளிலேயே ரொம்ப அன்னியமாக ஆகிவிடுகின்றன. அல்லது குழந்தைத்தனமாக இருக்கின்றன. சாதாரண வண்ணத்தில் புத்தகத்தின் பெயரை மட்டும் வைத்துத் தந்தால் போதும் என்று தோன்றும்.

இது என் எண்ணம்.

ஆனால், புத்தகப் பதிப்பளர்கள், நல்ல அட்டையை உருவாக்க எப்படி முயற்சிக்கிறார்கள் என்பதை இங்கே படியுங்கள்.

வாடகை நூல் நிலையம்

ப்ளாஹர் வலைதளத்தைப் படித்துக்கொண்டு இருந்தேன். புக்ஸ்விம் என்ற வலைதளத்தைப் பற்றி ஒரு வலைப்பதிவைப் படிக்க முடிந்தது. நான் ரொம்ப நாளாய் யோசித்துக்கொண்டு இருந்த விஷயம் இது. ஆன்லைனில் ஒரு வாடகை நூலகத்தை நடத்தினால் எப்படி இருக்கும் என்று யோசித்திருக்கிறேன்.

புக்ஸ்விம் அதைத்தான் அமெரிக்காவில் செய்திருக்கிறது. இதில் ஒரு விசேஷம் என்னவென்றால், புத்தகங்கள் அனுப்பவும் திரும்பப் பெறவும் ஆகும் அஞ்சல் செலவு இந்த நிறுவனத்துடையதே. மாதச் சந்தா 23.99 டாலரில் இருந்து 35.99 டாலர் வரை, வாடகை புத்தக எண்ணிக்கையைப் பொறுத்து அமைந்திருக்கிறது. ஒரு குறிப்பிட்ட புத்தகம் உங்களுக்குப் பிடித்துவிட்டால், அதை நீங்கள் அப்படியே வைத்துக்கொண்டு அதற்குரிய பணத்தை மட்டும் கட்டிவிட்டால் போதுமாம்.

அதேபோல், புத்தகத்தைப் படித்தவுடன் திருப்பித் தர வேண்டும் என்று அவசரப்பட வேண்டாமாம். லேட் ஃபீஸும் கிடையாது. இந்த பிசினஸ் மாடல் ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது. வாடகை நூல் நிலையங்களில் முதலில் கட்டும் பதிவுக் கட்டணம் அதிகமாக இருக்கும். இதுபோல் தாமதப்படுத்துவோர், புத்தகத்தைத் திருப்பித் தராமலேயே இருந்துவிடுவோர் ஏற்படுத்தும் நஷ்டத்தைத் தாங்கவே கூடுதலான பதிவுக் கட்டணம்.

எனக்குத் தெரிந்த தனியார் வாடகை நூல் நிலையங்களில், படாத பாடு படுகிறார்கள். புத்தகத்தைத் திருப்பித் தராதவர்களுக்கு போன் மேல் போன் போட்டு கூப்பிட்டு ஞாபகப்படுத்துவார்கள். அதையும் மீறி, வராமல் இருந்துவிடுவோர் அதிகம். அத்தகையவர்களின் வீடுகளுக்கு அலுவலக ஆள்களையே அனுப்பி வைத்து, புத்தகத்தைத் திரும்ப வாங்கி வரச் செய்வார்கள்.

எந்த ஒரு தலைப்பிலும் குறைந்தபட்சம் ஐந்து படிகளாவது இத்தகைய நூல் நிலையங்களில் வாங்கி வைக்கப்படுகின்றன. ஆனால், ஆண்டு இறுதிக்குள், சில படிகள் காணாமல் போய்விடும். சில கசங்கி, கிழிந்து பயனற்றுப் போய்விடும். அடுத்த ஆண்டு, மீண்டும் புதிய படிகள் வாங்கி வைக்க வேண்டும்.

வாடகை நூல் நிலையங்களில் அனுராதா ரமணன், ரமணி சந்திரன், வித்யா சுப்பிரமணியன் போன்ற பெண் எழுத்தாளர்களின் நாவல்களுக்கு நல்ல மெளசு இருக்கிறது. தேவிபாலா, இன்றும் பெண் வாசகிகளிடையே உள்ள ஃபேவரைட் ஆண் எழுத்தாளர்.

கதை படிக்கும் பழக்கமே குறைந்துவிட்டது என்று யாராவது சொன்னால், நான் அவ்வளவாய் நம்புவதில்லை. வாடகை நூல் நிலையங்களில் இன்றும் லக்ஷ்மியின் கதைகள் கிடுகிடுவென போய்க்கொண்டு இருக்கின்றன. அதுவும் அது ஓவியங்களோடு வந்த பத்திரிகை கட்டிங்குகளின் பைண்டட் வால்யூம் என்றால் இன்னும் புகழ் அதிகம்.

புக்ஸ்விம் ஆஃப்லைனில் இருப்பது போல் தெரியவில்லை. ஈஸ்வரி நூல் நிலையம் போன்ற கடை வைத்து வாடகை நூல் நிலையம் நடத்துபவர்கள், ஆன்லைனிலும் இந்தச் சேவையைத் தரலாம். ஆனால், ஓடிப்போகிறவர்களை எப்படி கட்டுப்படுத்துவது என்று மட்டும் கண்டுபிடித்துவிட்டால் போதும். புக்ஸ்விம் மாதிரி வாசகர்களின் நேர்மையில் அதீத நம்பிக்கை வைத்து ஒரு வாடகை நூலகம் நடத்துவது நம்ம ஊரில் சாத்தியமா என்று தெரியவில்லை.

பதிப்பக பிபிஓ: புதுப் பொலிவு

பதிப்பக பிபிஓக்கள் (Publishing BPO) இப்போது பெரும் தொழில் வாய்ப்பை இந்தியாவுக்கு ஏற்படுத்தித் தந்திருக்கிறது. ஐசிஐசிஐ வங்கி போன்ற பெரிய முதலீட்டு நிறுவனங்கள் இத்தகைய பிபிஓக்களில் முதலீடு செய்திருக்கின்றன. இந்தியர்களுக்கு இருக்கும் ஆங்கில அறிவும், லாஜிக்கல் அப்ரோச்சும் இந்த வெற்றிக்கு முக்கியக் காரணமாகத் தோன்றுகிறது. பில்லிங் ரேட் குறைவாக இருப்பது என்ற இயல்பான காரணம் சொல்லப்பட்டாலும், இத்தகைய நிறுவனங்களுக்கு, தங்கள் கஸ்டமர்களைத் தக்கவைத்துக்கொள்ள அது மட்டுமே போதாது. அதற்கும் மேல் திறமை, ஈடுபாடு போன்ற அம்சங்கள் இருந்தால்தான், மார்ஜின் பிரஷர்களுக்கு மத்தியிலும் தங்களை அவர்களால் வளர்த்துக்கொள்ள முடியும்.

ரிசர்ச் அண்ட் மார்க்கெட் என்ற வலைதளத்தில் வேல்யுநோட்ஸ் வெளியிட்டு இருக்கும் Offshoring in the Publishing Vertical – An Update என்ற புது ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. முழு அறிக்கையைப் பணம்கொடுத்துத்தான் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

ஆனால், அந்த அறிக்கையின் ஒரு சில செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. 2006ல் 440 மில்லியன் டாலராக உள்ள இந்தியப் பணி வாய்ப்புகள், 2010ல் 1.46 பில்லியன் டாலர் வாய்ப்பாகப் பெருகும் என்கிறது இந்த அறிக்கை. அறிக்கையின் சுட்டி இது.

இதில் உள்ள சுவாரசியம் என்னவென்றால், தமிழ்நாட்டில் உள்ள நியூஜென், ஆபிஸ்டைகர், ஆல்டன் பிரிபிரஸ் போன்ற நிறுவனங்களின் செயல்பாடுகள் எடுத்துப் பேசப்பட்டுள்ளதே.

ஒரு காலத்தில் பி.ஏ (ஆங்கிலம்), எம்.ஏ (ஆங்கிலம்) எல்லாம் படித்தால் எங்காவது ஸ்கூல் வாத்தியார் வேலைக்குப் போகலாம் நிலை இருந்தது உண்டு. ஒரு கட்டத்துக்குப் பின், அதுவும் அவ்வளவு சுலபமாகக் கிடைப்பதாக இல்லை. மேலும் அந்த வேலையில் இருந்த கிளாமரும் குறைந்துவிட்டது. இன்றைக்கு பதிப்பக பிபிஓக்களில் போனீர்களானால், எண்ணற்ற பெண்கள்தான் இருக்கிறார்கள். பெரும்பாலானவர்கள், எத்திராஜிலோ, டபிள்யூ.சி.சி.யிலோ ஆங்கிலம் படித்தவர்களாக இருக்கிறார்கள்.

சட்டென இன்று பதிப்பகத் துறைக்கு வேறொரு முகம் கிடைத்திருப்பதைப் பார்க்க முடிகிறது. பழைய அழுக்குக் கட்டடங்கள் மாறி, தாத்தா காலத்து மேஜை நாற்காலிகள் மாறி, மேஜை எங்கும் காகிதங்கள் இறைந்துகிடந்த அலுவலகங்கள் மாறி, தலைக்கு மேலே தூசு படிந்த மின்விசிறிகள் மாறி, இன்று புதுப் பொலிவு தெரிகிறது.

பதிப்புத் தொழிலும் தொழில்நுட்பமும் கைகோர்த்ததின் பலன் இது. மரபான நமது அறிவும் நவீன உபகரணங்களும் ஏற்படுத்தும் மாயம் இது. சுவாரசியமான மாற்றம்.

விளையாட்டு நூல்கள்

ஞாயிற்றுகிழமை எகானாமிக் டைம்ஸில் ஒரு கட்டுரை வந்திருக்கிறது. அதன் சுட்டி இது.

சமீப காலமாக விளையாட்டு சம்மந்தமான புத்தகங்களுக்கு நல்ல மார்க்கெட் ஏற்பட்டிருப்பதாக இந்தக் கட்டுரை சொல்கிறது. நான் புத்தகக் கடைகளில் பார்த்தவரை, கிரிக்கெட் சம்மந்தமான புத்தகங்களையே அதிகம் பார்த்திருக்கிறேன். வழக்கம்போல், அது நமது அறிவிக்கப்படாத தேசிய விளையாட்டு என்பதால், அந்தத் துறையில் நிறைய சரிதை நூல்களும் விமர்சன நூல்களும் வருவது இயற்கைதான்.

அப்புறம், கிரிசாலிஸ் என்றொரு வெளிநாட்டுப் பதிப்பகம் இருக்கிறது. அவர்களது விலைப்பட்டியலை வேறொரு நாள் பார்த்துக்கொண்டு இருந்தேன். எண்ணற்ற செஸ் சம்மந்தமான நூல்களில் இருப்பதைப் பார்த்தேன். அந்தப் பதிப்பகத்தில் இருந்து வந்தவர், அந்த செஸ் நூல்கள் எல்லாம் நல்ல விற்பனை ஆகும் நூல்கள் என்ற போது உண்மையிலேயே ஆச்சரியப்பட்டேன். அந்த நூல்களை தமிழில் மொழிபெயர்த்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன். தெரியவில்லை. நிச்சயம் நேட்டிவிட்டி இருக்காது என்று மட்டும் தோன்றியது. ஆனால், விற்பனைக்கான வாய்ப்பு மட்டும் அதிகம இருப்பது தெரிகிறது. அதுவும் இந்த கோடை விடுமுறை நாள்களில் மூலைக்கு மூலை செஸ் வகுப்புகள், நீச்சல் வகுப்புகள், கைவேலை சொல்லித் தரும் வகுப்புகள் என்று ஹிந்து பத்திரிகையைத் திறந்தால் ஒரே அறிவிப்புகள்தான்.

தமிழகத்தைச் சேர்ந்த நல்ல செஸ் விளையாட்டு வீரர்கள் இதை எழுதினால் படிக்க சுவாரசியமாக இருக்குமோ என்னவோ? அதே போல், டென்னிஸ், பூப்பந்து போன்ற விளையாட்டுக்களைப் பற்றி நூல்கள் வந்தாலும் நன்றாகவே இருக்கும்.

நடராஜ் செல்லையா என்றொருவர் எழுதிய புத்தகங்களை அரசு நூலகங்களில் பார்த்திருக்கிறேன். அவ்வப்போது படித்திருக்கிறேன். நிறைய விளையாட்டுக்களைப் பற்றி எழுதியிருக்கிறார். பெரும்பாலானவை மிகவும் அரிச்சுவடி பாணியில் இருக்கும். விளையாட்டில் உள்ள லைஃப் அந்த நூல்களில் இருந்ததில்லை.

விகடன் பிரசுரத்தில் இருந்து மைதான யுத்தம் என்றொரு நூல், இந்த கிரிக்கெட் உலகக் கோப்பை சமயத்தில் கொண்டு வந்தோம். நன்றாக எழுதப்பட்ட நூல். நமது அணி இவ்வளவு மோசமாகத் தோற்றுத் திரும்பியபின், அந்த நூல் அதிகம் கவனிக்கப்படாமல் போய்விட்டது.

சானியா மிர்ஸாவைப் பற்றி ஒரு நூலை ஒரு நண்பரிடம் எழுதச் சொன்னேன்.

“அவ குதிச்சு குதிச்சு ஆடறாங்கறதுக்காக ஒரு புக் எழுதிட முடியுமா சார்? மீடியாவுக்கு ஒரு கலர்ஃபுல் முகம் வேணும். அதுக்காக சானியாவைத் தூக்கிவெச்சுகிட்டு கொண்டாடறாங்க. உண்மையாவா அவ என்ன சாதிச்சு இருக்கான்னு சொல்லுங்க பார்க்கலாம்” என்று ரொம்ப உஷ்ணமாக சண்டைக்கு வந்துவிட்டார்.

இப்படி ஒரேயடியாக புறங்கையால் தள்ளிவிட முடியுமா என்று தெரியவில்லை.

அதே போல், தமிழகத்தில் ஃபார்முலா 1 ரேசிங் பற்றியும் பெரிய எதிர்பார்ப்பு இருப்பதாகச் சொல்லுகிறார்கள். இதற்கு ஒரு பெரிய கிரேஸ் இருப்பதாகத் தெரிகிறது. ஆனால், இது சம்மந்தமாக ஏதும் நூல்கள் தமிழில் வந்து நான் பார்க்கவில்லை.

விளையாட்டு நூல்களுக்கு எதிர்காலம் இருப்பதாக எ.டை. சொல்கிறது. தமிழில் அது வருகிறதா என்று பார்ப்போம்.

எழுத்தாளர்களின் எழுத்தாளர்

நகுலன்இலக்கிய உலகில் நிறைய பேருக்கு நகுலன் என்ற பெயரைக் கேட்டாலே ஒருவித கவர்ச்சி உண்டு. சிறுபத்திரிகைகள் படிக்கத் தொடங்கிய காலத்தில் இருந்தே எனக்கும் அவர் மேல் அபாரமான ஓர் ஈர்ப்பு உண்டு. ரொம்ப சின்ன வயசிலேயே அவரது நவீனன் டைரி, நினைவுப்பாதை ஆகிய நாவல்களை படித்துவிட்டேன். நிச்சயம் புரியவில்லை. ஆனால், அதுவரை படித்த எந்த ஒரு நாவலையும் விட அவரது இந்த நவீனன் டைரி என்னை வேறோரு புது உலகத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டது.

அப்புறம் கோட்ஸ்டாண்ட் கவிதைகள், ஒன்று, இரண்டு, ஐந்து, இரு நீண்ட கவிதைகள் ஆகிய கவிதைத் தொகுதிகளை வேறு வேறு சந்தர்ப்பங்களில் படித்திருக்கிறேன். நாய்கள் நாவலை கொஞ்சம் காலம் கழித்துத்தான் படித்தேன்.

அவரைப் பற்றியும், அவரது எழுத்தைப் பற்றியும் எனக்கு பெரிய ஆச்சரியம் உண்டு. பொதுவாக எழுதுவது என்பது அடிப்படையில் கம்யூனிகேஷன். கூடவே அடுத்தவர் நம்மைப் பாராட்ட வேண்டும் என்று செய்யப்படும் ஒரு பிரசெண்டேஷன். இசை, நாட்டியம், மேடை நாடகம் போல், ஒரு வாசகன் தன் மனத்துக்குள் எழுப்பும் பிம்பத்தை எவ்வளவு திறம்பட கட்டமைக்கிறான் என்பதே ஒரு எழுத்தாளன் ஏற்றுக்கொள்ளும் சவால். இதில் அவனது ஈகோவும் புகழ் ஆசையும் இணைந்தே கட்டமைக்கப்படுகிறது. அதுவும் பெரும்பாலான மக்கள் தம் எழுத்தை வாசிக்கவேண்டும், மெச்ச வேண்டும் என்ற அவா இல்லாத எழுத்தாளனே இருக்க முடியாது.

நகுலன் இந்த ஆசைகளுக்கு எல்லாம் நேர் எதிராக இருந்திருக்கிறார். தன்க்குப் பிடித்த விஷயங்களை, தனக்குப் பிடித்த விதத்தில் எழுதிக்கொண்டு, வெளியிட வேண்டும் என்ற ஆசை கூட அதிகம் இல்லாமல் இருந்திருக்கிறார். எழுத்தாளன் என்ற செயல்பாட்டுக்கு நாம் கொடுத்திருக்கும் பொதுவான எந்த விதிக்கும் நகுலன் கட்டுப்பட்டவராகத் தெரியவில்லை.

சமீபத்தில் காவ்யா பதிப்பகம், நகுலனில் நாவல்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து ஒரே தொகுதியாக வெளியிட்டிருக்கிறது. இப்போது படித்தாலும் அதே சுவாரசியம். சுழன்று சுழன்று ஒரு நதி போல் அவரது எழுத்துகள் ஓடுகின்றன. அவர் பின்னிச் செல்லும் உணர்வுகள், வார்த்தைகளில் சிக்காமல் நழுவி நழுவி தேர்ந்த வாசகனின் உழைப்பை அதிகம் கோரிக்கொண்டே இருக்கிறது.

அவரை எழுத்தாளர்களின் எழுத்தாளர் என்கிறார்கள். உண்மைதான்.

17ஆம் தேதி அவர் திருவனந்தபுரத்தில் இயற்கை எய்தினார். இன்று காலை இறுதிக் கடன்கள் நிறைவேற்றப்படுகின்றனவாம்.

ராயல்டி சமாச்சாரம்

சமீபத்தில் நண்பர் ஒருவர் என்னிடம் பேசிக்கொண்டு இருந்தார். அவர் ஒரு ஆங்கில வலைப்பதிவாளர். நிறைய எழுதுகிறார். அவரது வலைப்பதிவுகளில் இருந்து தொகுத்து ஒரு நூலை வெளியிட ஒரு அமெரிக்கப் பதிப்பகம் முன்வந்துள்ளது. புத்தகம் வரும்போது, அதுவே இந்திய ஆங்கில வலைப்பதிவாளர் ஒருவரின் எழுத்துகள் முதலில் நூல் வடிவம் பெறுவதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

விஷயம் அதுமட்டுமல்ல. அவருக்கு அமெரிக்கப் பதிப்பகம் அனுப்பிய ராயல்டி அக்ரிமெண்ட்தான் என்னை ஆச்சரியத்துக்கு ஆளாக்கியது.

“என்ன ராயல்டி தராங்கப்பா?”
“50 சதவிகிதம்”

போனில் பேசிய நான் சட்டென சீட் நுனிக்கு வந்துவிட்டேன். என்னால் நம்பவே முடியவில்லை.

“ஒண்ணு ஐந்தா, ஐந்து பூஜ்ஜியமா?”

“ஃபிஃப்டி பர்சண்ட்”

என்னால் என் காதையே நம்ப முடியவில்லை. அதிகம் அவசரப்படவேண்டாம் என்று உள்மனது சொல்ல, முழு பத்தியையும் படிக்கச் சொன்னேன். புத்தகத் தயாரிப்புச் செலவுகள் மற்றும் எல்லாவிதமான கழிவுகள் போக கிடைக்கும் லாபத்தில் 50 சதவிகிதம் ராயல்டி என்பதே அந்தப் பத்தியின் முழு விவரம்.

ஆசிரியரையும் புத்தகத் தயாரிப்பு செலவுகளை ஏற்க வைக்கும் முறைகளில் இதுவும் ஒன்று. புத்தகத் தயாரிப்பு செலவுகள் என்பதில் என்னென்ன அம்சம் அடக்கம் என்பதற்கு எந்த ஒரு பட்டியலும் இல்லை. அதேபோல், கழிவுகள் என்பதில் என்னென்ன கழிவுகள் இதில் சேர்த்துக்கொள்ளப்படும் என்பதற்கும் தெளிவில்லை. ரொம்ப புத்திசாலித்தனமான ராயல்டி முறையாக எனக்குத் தோன்றியது.

பொதுவாக, புத்தக விலையில் – Cover Price – ராயல்டி தொகை வழங்குவதே இப்போது இருந்து வரும் பழக்கம். 5 % தொடங்கி 7.5% வரை இந்த ராயல்டி ஆசிரியருக்கு வழங்கப்படும். சில பதிப்பகங்களில், அட்வான்ஸ் ராயல்டி கொடுக்கப்படும் வழக்கம் இருக்கிறது.

இன்னொரு முறை, அடக்க விலையில் ராயல்டி (Royalty on Nett price) என்பது. அதாவது புத்தக விலையில், விற்பனையாளர்களுக்குக் கொடுக்கப்படும் கழிவு போக மீதமுள்ள தொகையே அடக்க விலை. இதில் 7.5% ராயல்டி என்பதும் புழக்கத்தில் இருக்கும் முறையே.

ராயல்டி என்பது எழுதுபவனுக்குக் கொடுக்கப்படும் மரியாதை. புத்தகம் வெளியிடுபவர்கள், ஆசிரியரின் உழைப்பு, அனுபவம், ஞானம் ஆகியவற்றுக்குக் கொடுக்கும் கெளரவம் அது. வேனிட்டி பப்ளிஷிங்க் எல்லாம் புழக்கத்துக்கு வந்தபின், எல்லாரையும் விற்பனைக்குக் கூட்டுச் சேர்ப்பது எந்த அளவுக்கு நியாயமோ தெரியவில்லை.

கோவை புத்தகக் காட்சி

சென்னைப் புத்தகக் காட்சியின் வெற்றியை ஒட்டி, தமிழகம் எங்கும் புத்தகக் காட்சிகளை நடத்தச் சொல்லி, தமிழக முதல்வர், பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் அமைப்பான பபாசியைக் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.

அதன் தொடர்ச்சியாக கோவையில் மே 16 முதல் 27 வரை, வ.உ.சி. மைதானத்தில் கோவை புத்தகத் திருவிழா 2007 நடைபெறுகிறது. இதில் விகடன் பிரசுரம் ஸ்டால் எண் 2,3ல் தமது புத்தகங்களை வைத்திருக்கிறது.

வாருங்கள்.