ஐசிஐசிஐ – பகல் கொள்ளை!

ஐசிஐசிஐ பற்றி எழுதக்கூடாது என்று இருந்தேன். மறுபடியும் அதே வங்கியின் இன்னொரு பிரிவிடம் மாட்டிக்கொண்டு, என் கோபத்தைத் தொலைக்க வேண்டியதாயிற்று.

இந்த முறை ஐசிஐசிஐ லோம்பார்ட் – காப்பீடு நிறுவனம். சென்ற டிசம்பர் மாதமே என் இரண்டு சக்கர வாகனத்தின் வாகன காப்பீடு முடிந்துவிட்டது. கடந்த சில ஆண்டுகளாக நான் வாகனம் பயன்படுத்துவதை முழுவதும் குறைத்துவிட்டு, பேருந்துகளையே பயன்படுத்தி வருகிறேன். வீட்டுக்கு அருகே இருக்கும் ஒரு சில இடங்களுக்கு மட்டும் வாகனம்.

வழக்கம்போல், சென்ற வெள்ளியன்று இராதாகிருஷ்ணன் சாலையில், நீல்கிரீஸ் அருகே இருக்கும் பெரிய பெட்ரோல் பங்குக்கு பெட்ரோல் போடப் போனேன். நான் சென்றிந்த நேரம், அங்கே ஐசிஐசிஐ வாகன காப்பீடு வழங்கும் நபர் உட்கார்ந்திருந்தார்.

ஏற்கெனவே இரண்டு ஆண்டுகள் அந்த பெட்ரோல் மையத்தில்தான் என் இன்ஷூரன்ஸைப் புதுப்பித்து இருக்கிறேன். அதனால், அவர் அருகே போய் வாகனத்தை நிறுத்திவிட்டு, பழைய பாலிசியை எடுத்துக்கொடுத்தேன். பாலிசி எக்ஸ்பைர் ஆகிவிட்டது, புதுதாக போட, ரூ.950க்கு மேல் ஆகும் என்றார். சரியென்று சொல்லிவிட்டு, கொஞ்சம் தள்ளிப் போய் தொலைபேசியில் பேசத் தொடங்கினேன். அவர் மீண்டும் கூப்பிட, பாலிசி போட்டிருந்தார்.. ரூ. 972க்கு கிரெடிட் கார்டைத் தீற்றவும் ஒத்துக்கொண்டேன். சிலிப்பில் கையெழுத்தும் போட்டாச்சு.

அப்போதுதான், எனக்கு அது ஞாபகம் வந்தது. சென்ற ஆண்டு, பாலிசி போடும் போது ரூ. 604 தானே கட்டினோம். எதற்கு 900க்கு மேல் ஆச்சு என்று யோசனை.

“ பத்தாயிரம் ரூபாய்க்கு ஆக்ஸிடெண்ட் இன்ஷூரன்ஸ் கூட போட்டு இருக்கு சார்.. அதுக்கு பிரிமியம் ரூ. 290.”

“நான் அதை கேக்கலியேப்பா… எதுக்கு என்கிட்ட சொல்லாம போட்டீங்க?”

“பாலிசி எக்ஸபைர் ஆயிடுச்சு சார்… அதனாலயும் ஜாஸ்தி ஆயிடுச்சு..”

“பிரதர், இன்ஷூரன்ஸ் தெரியாதவங்க சொல்லுங்க. வேற நேஷனலைஸ்டு இன்ஷூரன்ஸ் கம்பெனி கிட்ட போனா..இதை விட பிரிமியம் கம்மியாகும்.. எதுக்கு என்னகிட்ட சொல்லாம செஞ்சீங்க?”

“ஐசிஐசிஐல ரெண்டையும் சேர்த்துத்தான் போடணும்னு இன்ஸ்டரக்‌ஷன் சார்…”

“இது அநியாயமா இல்ல. நீங்க பாலிசி விக்க நான் தான் கெடைச்சேன்?”

“ஆக்ஸிடெண்ட் கவரேஜ்தானே சார்?”

“அதை முடிவு செய்ய நீங்க யாரு? வேணும் வேணாங்கறது என் முடிவுதானே?”

மேலும் பேச்சைத் தொடர விரும்பாதவர் போல், இன்னொரு பில்லையும் எழுதத் தொடங்கினார் அந்த நபர்.

“இது என்ன?”

“சர்வீஸ் சார்ஜ்ஜுக்கு பில்.”

“எதுக்கு சர்வீஸ் சார்ஜ்?”

“ஐசிஐசிஐ லோம்பார்ட் இந்த டெஸ்க்கை நிர்வாகம் செய்ய எங்கிட்ட கொடுத்துட்டாங்க சார்.. 99 ரூபாய் எங்க சர்வீஸ் சார்ஜ்.”

ஏதோ ஒரு புரோக்கரேஜ் நிறுவனம் அந்த வாகன இன்ஷூரன்ஸ் மேஜை நிர்வாகம் செய்வது அப்போதுதான் தெரிந்தது.

“போன வருஷம் கூட, ஐசிஐசிஐ ஆள் இங்கே இருந்தாரேப்பா”

“எங்கிட்ட கொடுத்துட்டாங்க சார்.”

“அப்படின்னா.. இன்ஷூரன்ஸ் கமிஷன், சர்வீஸ் சார்ஜ் எல்லாம் நீங்க ஐசிஐசிஐ லோம்பார்ட் கிட்டதானே வாங்கிக்கணும். என்கிட்ட ஏன் வாங்கறீங்க?”

என் கேள்வி காற்றி தொங்கிக்கொண்டு நிற்க, அடுத்து வந்த வாகனத்தின் இன்ஷூரன்ஸைப் பார்க்க போனார் அந்த நபர். அத்தனை அலட்சியம். அத்தனை பொறுப்பு. என்ன படித்து, என்ன விவரம் தெரிந்துகொண்டு என்ன பயன்? கண்ணெதிரே ஒருவர் ஏமாற்றுகிறார். அதையும் மிக லாகவமாய், நேர்த்தியாய், சுத்தமாக. ஒன்றும் செய்ய முடியாமல், எரிச்சலும் கோபமும் மட்டுமே மிச்சம்.

படித்தவனையும் படிக்காதவனையும் சேர்ந்து மொத்தமாக முட்டாளாக்கும் செயல் இது. பகல்கொள்ளை என்ற வார்த்தைக்கு அன்றுதான் எனக்கு அர்த்தம் புரிந்தது!

ஐசிஐசிஐ – நவீன முரட்டுத்தனம்!

சொந்தக் கதையை எழுதக்கூடாது என்று எப்போதுமே நினைத்துக்கொள்வேன். இந்த முறையும் முடியவில்லை. ஐசிஐசிஐ வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனத்தின் பொறுப்பற்ற தன்மை என்னை மிகுந்த மனவேதனைக்கு உள்ளாக்கிவிட்டது.

சென்னை மாநகரில் ஃப்ளாட் வாங்க ஆசைப்படும் லட்சோபலட்சம் மத்தியமர்களின் நானும் ஒருவன். 2001 திருவல்லிக்கேணியில் ஒரு ஃப்ளாட் வாங்கினேன். முதலில், கடன் வாங்கியது எல்.ஐ.சி.யின் வீட்டுக்கடன் நிறுவனத்தில். 13 சதவிகிதம் வட்டி அப்போது. வட்டி விகிதம் மிக அதிகமாக இருந்த சமயம் அது. பின்னர் 2002ல் வட்டி விகிதங்கள் குறையத் தொடங்கின. ஐசிஐசிஐ வங்கி 9.5 சதவிகிதத்துக்கு கடன் வழங்கத் தொடங்கியது.

உடனே என் கடனை ஐசிஐசிஐ வீட்டுக்கடன் நிறுவனத்துக்கு 2002ல் மாற்றினேன். தொடர்ந்து வட்டிவிகிதம் குறைந்துகொண்டே வர, ஒரு கட்டத்தில், ஐசிஐசிஐயிலேயே வீட்டுக்கடனை, ஃப்ளோட்டிங் ரேட்டில் இருந்து ஃபிக்சட் ரேட்டுக்கு மாற்றினேன். அதற்கு மொத்தத் தொகையில் 1.75 சதவிகிதமோ என்னவோ கட்டிய ஞாபகம்.

2005 என்று நினைவு. வீடு சம்பந்தமாக ஏதோ ஒன்றைத் தேடும்போது, வீட்டுப் பத்திரங்களின் பிரதியும், தாய்ப்பத்திரங்களின் பிரதிகளும் தேவைப்பட்டன. ஐசிஐசிஐ போய், பிரதிகள் வேண்டி விண்ணப்பித்து, அதற்கான கட்டணமாக ரூ. 500 கட்டிவிட்டு வந்தேன். பதிலே இல்லை. இரண்டு மூன்று முறை போய் கேட்டபோது, இதோ வந்துவிடும், அதோ வந்துவிடும் என்று சொன்னார்கள். இது நடுவே, வேறு வேலைகள் முந்திக்கொள்ள, பத்திரங்களின் பிரதிகளை வாங்கவேண்டிய அவசியம் ஏனோ மறைந்துவிட்டது. நானும் பின் தொடராமல் விட்டுவிட்டேன்.

2010 அக்டோபரோடு கடன் முடிந்தது. என்னுடைய சேல் டீட், சேல் அக்ரிமெண்ட், இதர தாய்ப்பத்திரங்கள் வேண்டி, ஐசிஐசிஐ வீட்டுக்கடன் நிறுவனத்திடம் போய் விசாரித்தேன். இன்னும் 21 நாள்களில் வந்துவிடும். வந்து பெற்றுக்கொள்ளலாம் என்றார்கள். 22 ஆம் நாள் போய் நிற்க, ஒரு சின்ன கவர் வருகிறது. உள்ளே கடனை கட்டிவிட்டதற்கான நோ அப்ஜெக்‌ஷன் சர்ட்டிபிகேட், டாக்குமெண்ட்ஸ் லிஸ்ட் மட்டுமே அதில் இருக்கிறது. அந்த லிஸ்டில், ஒரு பத்திரமும் அவர்களிடம் இருந்ததற்கான முகாந்தரமே இல்லை.

கதைகளில், “தூக்கி வாரிப் போட்டது” என்று எழுதுவார்களே, அதுதான் என் அப்போதைய உணர்வு. 2002ல் எல்.ஐ.சி.யில் இருந்து கடனை ஐசிஐசிஐக்கு மாற்றியபோது, ஐசிஐசிஐக்கான ஜெனரல் சேல்ஸ் ஏஜென்சிகள் இருந்தன. அவர்கள்தான் கடன் வாங்க உதவியவர்கள். பின்னர், ஜி.எஸ்.ஏ.க்களை எல்லாம் ஐசிஐசிஐ நிறுத்திவிட்டு, தாமே எல்லா செயல்பாடுகளை ஏற்றுக்கொண்டன. அந்தச் சமயத்தில்தான் நான் கடன் வாங்கினேன். எனக்கு உதவிய ஜி.எஸ்.ஏ. தாமே எல்லா பத்திரங்களையும் எல்.ஐ.சி.யில் இருந்து ஐசிஐசிஐக்கு மாற்றிக்கொள்வதாகவும், அதற்கு அனுமதி தரும் விதமான 150 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் அத்தாட்சிப் பத்திரமும் எழுதி வாங்கிக்கொண்டார்கள்.

இதையெல்லாம் இப்போது ஐசிஐசிஐ வீட்டுக்கடன் நிறுவன ஊழியர்களிடம் விளக்க, பத்திரம் உங்களிடம்தான் வந்திருக்க வேண்டும், உடனே தேடிப் பார்க்கச் சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டேன். ஐசிஐசிஐ வீட்டுக்கடன், மந்தைவெளி அலுவலகத்தில் இது நடந்தது. வழக்கம்போல், சிரித்த முகத்தோடு என்னைக் கையாளத் தொடங்கிய அலுவலருக்கு கொஞ்ச நாளிலேயே நான் இம்சையாகிப் போனேன். என் அழைப்பை எடுக்க மாட்டார். நேரே போய் பேசும்போது, மேலும் மேலும் காரணங்களும், தேடுவதற்கான புதிய இடங்களும் அகப்பட்டுக்கொண்டே இருந்தன. ஒரு கட்டத்தில், பத்திரங்களை வைக்கும் மைய அலுவலக ஊழியரின் செல்பேசி எண்ணைக் கொடுக்க, அவர் பின்னால் லோ லோ என்று மூன்று நான்கு மாதங்கள் அலைந்திருப்பேன். அவர் மும்பை என்பார், சென்னை அடையாறு என்பார்… ஆனால், பத்திரம் போன இடம் தெரியவில்லை. ஒரு கட்டத்தில் இந்த நபரும் என் அழைப்பைத் தவிர்க்கத் தொடங்கிவிட்டார்.

இந்த இக்கட்டு ஏற்படுத்தியிருக்கும் மன உளைச்சல் கொஞ்சம் நஞ்சம் அல்ல. மொத்த பணத்தையும் கட்டியாகிவிட்டது; ஆனால் கையில் பத்திரமில்லை. எங்கு இருக்கிறது என்றும் தெரியவில்லை. என் மனைவி அமைதி மெல்ல மெல்ல குறையத் தொடங்கிவிட்டது. ஒரு கட்டத்தில் இருவரும் வீட்டுப் பத்திரம் சம்பந்தமாக பேசிக்கொள்ளவே கூடாது என்று சபதமெடுக்கும் அளவுக்கு மனவேதனை. சட்ட ரீதியாக என்ன செய்யவேண்டும், அப்படியே செய்தாலும், காணாமல் போன பத்திரத்தை வைத்துக்கொண்டு என்ன வேண்டுமானாலும் நடக்கலாமே. என்னென்ன விதமான இடர்களைச் சந்திக்கப் போகிறோமோ என்ற பதற்றம் ஒருபக்கம். ஐசிஐசிஐயின் விட்டேற்றித்தனம் மற்றொரு பக்கம்.

முகம் நிறைய புன்னகையும், அலுவலகப் பொலிவும், நிதானமும் நவீன வங்கியியலின் அடையாளங்களாக இருந்தாலும் உள்ளே இருக்கும் பொறுப்பற்றதன்மை எல்லா இடங்களிலும் ஒன்றாகவே இருப்பது மெல்ல மெல்ல புரியத் தொடங்கியது.

ஒரு நாள், நேரே எல்.ஐ.சி. வீட்டுக்கடன் நிறுவனத்தையே போய் கேட்டால் என்ன என்று எண்ணம் தோன்ற, பழைய வீட்டுக்கடன் எண்ணைத் தேடி எடுத்துக்கொண்டு, சைதாப்பேட்டையில் இருக்கும் அலுவலகத்துக்குப் போனேன். அங்கே இருந்த அதிகாரி, அப்போதுதான் ஓர் உண்மையை எனக்குச் சொன்னார். எல்.ஐ.சி.யில் வீட்டுக்கடன் அடைக்கப்பட்டாலும் வேறு வங்கிகளுக்கு மாற்றப்பட்டாலும், உரிமையாளர்களிடம்தான் மூலப் பத்திரங்கள் திருப்பி அளிக்கப்படும், வேறு வங்கிகளுக்கோ, நிதி நிறுவனங்களுக்கோ கொடுக்கப்படாது என்றார்.

மேலும், இது பத்தாண்டுகளுக்கு மேலான விஷயம், கோரிக்கை கடிதம் கொடுத்துவிட்டுச் செல்லுங்கள், எங்களால் முடிந்ததைச் செய்கிறோம் என்றார். கடிதம் கொடுத்துவிட்டு, கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் காத்திருந்தேன்.

மூன்றாவது வாரம் அந்த எல்.ஐ.சி. வீட்டுக்கடன் நிறுவனப் பெண் அலுவலரைப் போய் பார்க்க,  ஒரு மணி நேரம் காத்திருக்கச் சொன்னார். இரண்டு மணி நேரங்கள் கழித்து கூப்பிட்டவர் மேஜையில், நான் கொடுத்திருந்த பத்திரங்கள் அத்தனையும் சீலிடப்பட்ட உறையில் இருப்பது தெரிந்தது. என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அந்தம்மா எல்லா நலன்களும் வளங்களும் பெற வாழ்த்திவிட்டு, கையில் இருந்த இதழ்களைப் பரிசாக கொடுத்துவிட்டு, என் பத்திரங்களை வாங்கி வந்தேன்.

என் பத்திரங்களை பத்திரமாக வைத்துக்கொண்டு இருக்கவேண்டும் என்று எல்.ஐ.சி.க்கு தலையெழுத்தா என்ன? ஆனால் வைத்திருந்து பத்திரமாகத் திருப்பிக் கொடுத்தார்கள். எல்.ஐ.சி.மேல் இருந்த மரியாதை ஒரு சில படிகள் உயர்ந்தது உண்மை.

மீண்டும் ஐசிஐசிஐ. புதிய அலுவலர். புதிய முகங்கள். நான் இரண்டு மூன்று கேள்விகள்தான் கேட்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டு சென்றேன்.

பத்தாண்டுகளாக கடனுக்கு ஈடான பத்திரமே இல்லாமல் எப்படி நீங்கள் கடன் கொடுத்தீர்கள்? பத்திரங்கள் இல்லை என்று தெரியவந்ததும், என்னை எப்படிக் கேட்காமல் போனீர்கள்? அப்படியானால், உங்களுக்குப் பத்திரங்கள் முக்கியமில்லை. கடனை அடைத்துவிட்டால் போதும். அவ்வளவுதானே.

நவீன மோஸ்தரில் மயங்கி, சிஸ்டம்ஸ் அண்ட் பிராசஸஸில் மயங்கி, அழகிய புன்னகையில் மயங்கி, மேம்பட்ட சேவை என்ற ஹம்பக்கில் மயங்கி, இத்தனைஆண்டுகளாக, பத்திரங்கள் ஐசிஐசிஐயில் பத்திரமாக இருக்கின்றன என்ற என் எண்ணம் எவ்வளவு பைத்தியக்காரத்தனமானது?

அங்கு இருந்த அலுவலரின் உடல் மொழி எனக்கு ஒன்றைத்தான் திருப்பித் திருப்பிச் சொன்னது. பல லட்சம் நபர்களில் நீயும் இன்னொரு கஸ்டமர். நான் தொழில் செய்ய வந்திருக்கிறேன். உனக்கு பத்திரம் கிடைத்துவிட்டது அல்லவா? வாயை மூடிக்கொண்டு அடுத்த வேலையைப் பார்.

நடந்தது ஒரு தவறு என்றோ, ஒரு வாடிக்கையாளரின் மனவேதனைக்கு மன உளைச்சலுக்கு தாம் காரணமாக இருந்தோம் என்றோ துளிகூட நெக்குருகும் மனம் அங்கே இல்லை. புரொபஷனலிசம். பிளாஸ்டிக் புன்னகை. நவீன முரட்டுத்தனம். வருத்தம் தெரிவிக்கும் பக்குவம் தொலைத்த கார்ப்பரேட் கலாசாரம்.

என்.ஓ.சி.ஐ மட்டும் வாங்கிக்கொண்ட பின்னர், என் மனைவி கேட்டார், “பத்திரம் கிடைக்கலன்னா என்ன செஞ்சிருப்பீங்க?”

“மூணு மாசம் பார்த்துட்டு, போலீஸ்ல எஃப்.ஐ.ஆர். கொடுத்திருப்போம். அப்புறம், டூப்ளிக்கேட் காப்பி வாங்கியிருப்போம்…”

எல்லாவற்றுக்கும் துணிந்துதான் இருக்கிறார்கள். என்னைப் போல் எத்தனை ஏமாளிகளைப் பார்த்திருக்கிறார்களோ? முதல் முறையாக, நவீன வங்கியியலின் மேல் இருந்த மதிப்பு என்வரையில் சரியத் தொடங்கியது.

இதை நான் செஞ்சிருக்கணும்…

நல்ல நாவல், நல்ல சிறுகதை, நல்ல சினிமா, எதைப் பார்த்தாலும், சே..இதை நான் செஞ்சிருக்கணும்… மிஸ் பண்ணிட்டேனே என்று ராத்தூக்கம் இல்லாமல் அவஸ்தை படுவேன். இதழியலில், இது இன்னும் கொஞ்சம் ரொம்பவே ஓவர்.

ஏதாவது நல்ல லேஅவுட், டிசைன், கட்டுரை, தொடர், அட்டைப்படம் பார்த்துவிட்டால், மனசே ஆறாது. திருப்பித் திருப்பி அதையே பார்த்துக்கொண்டு இருப்பேன், பேசுபவர்களிடமே சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ, அதை எடுத்துச் சொல்லுவேன். ஆற்றாமை ஆற ரொம்ப நேரம் ஆகும்!

சமீபத்தில் இப்படி என்னை ஆற்றாமைக்குள் ஆட்படுத்தும் ஆச்சரியங்கள் நடந்துகொண்டு இருக்கின்றன:

1. புதிய தலைமுறை இதழில் சட்டென பிரியல்லண்டாக தென்படும் சில கட்டுரைகள். குறிப்பாக, எழுத்தாளர் பிரபஞ்சனின் தொடர். நேர்த்தியான மொழி, அழகான வடிவம், மனத்தைத் தீண்டும் அனுபவங்கள்.

2. பாவை சந்திரன் இதழ் ஆசிரியராக பொறுப்பேற்ற பின்பு வரும் தினமணி கதிர் வார இதழை, அப்படியே கண்களில் ஒற்றிக்கொள்ளலாம். பாவையின் டிசைன் சென்ஸ் என்னை எப்போதும் கட்டிப்போடும். புதிய பார்வை இணை ஆசிரியராக இருந்தபோது, அவர் அதில் செய்த லே அவுட்கள் ஒவ்வொன்றும் அபாரம்! பத்திரமாக பழைய இதழ்களைச் சேமித்து வைத்திருக்கிறேன். இயற்கையாகவே அவருக்குள் ஓர் அழகியல் பார்வை உண்டு. அதுதான் இதழ் முழுவதும் வியாபித்திருக்கும். இப்போது, தினமணி கதிர் அந்த டிசைன் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறது.

3. சமநிலை சமுதாயம் என்று ஒரு இஸ்லாமிய இதழ் வருகிறது. ரொம்ப தைரியமான இதழ். இஸ்லாமிய சமுதாயத்துக்கு உள்ளேயே கேட்கப்பட வேண்டிய கேள்விகளின் திறவுகோல் இந்த இதழ். ஹஜ் யாத்திரை அழைத்துப் போகிறேன் என்று கல்லா கட்டும் பயண முகவர்களைப் பற்றி மிக நல்ல கட்டுரை இதன் ஓர் இதழில் இடம்பெற்றது. வேலூரில் இருக்கும் மற்றொரு இஸ்லாமிய மார்க்க கல்லூரியின் குறைகளைப் பற்றி இந்த இதழில் கட்டுரை வந்திருக்கிறது. ச.ச. இதழ், அட்டைப்படத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவம் என்னை பரவசப்படுத்தும். ஜெ. ஜெயித்து வந்தபோது, ச.ச. இதழின் முகப்பில் ஓர் அட்டைப்படம் வைத்தார்கள். இன்றுவரை அதை எல்லோருக்கும் நான் சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.

4. அடுத்து, இன்னும் கொஞ்ச நாளைக்கு நான் சொல்லிக்கொண்டு திரியும் ஒரு விஷயத்தை நேற்று படித்து முடித்தேன். தி சண்டே இந்தியன் இதழில் தீபாவளி இதழோடு, ரசிகன் என்றொரு இணைப்பு இதழும் வந்திருக்கிறது. தமிழின் முக்கிய நடிகைகளைக் குறித்த மலரும் நினைவுகள். முக்கிய எழுத்தாளர்கள் அனைவரும் எழுதியிருக்கிறார்கள். ஒவ்வொரு நடிகையும் எவ்வாறு தமிழ்சமூகத்தின் மனத்திரையில் நீக்காத இடம் பிடித்திருக்கிறார்கள் என்று நாஸ்டால்ஜியாவைத் தூண்டு சுவையான கட்டுரைகள். கலெக்டர்ஸ் ஐட்டம் மாதிரியான ஓர் நூல். அ.முத்துலிங்கம், மாலன், சுகுமாரன், இயக்குநர் வஸந்த், ஜெயமோகன், நாசர் ஆகியோரின் கட்டுரைகள் முதல் தரமானவை. பத்திரப்படுத்திக்கொள்ளத் தூண்டும் ஆவணம்.

இரண்டு மரணங்கள்

விவரிக்கவியலா வெறுமையை ஏற்படுத்துகின்றன மரணங்கள். சிறிது காலம் பழகினாலும் நீண்ட காலம் பழகினாலும், நல்ல நட்புக்களின் மறைவு ஏற்படுத்தும் வெற்றிடம், மனம் நெகிழச் செய்பவை.

1. கல்யாண் என்கிற கல்யாணராமன்: இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த மாதம் புத்தகம் பேசுது இதழ் படிக்கையில், ஒரு மூலையில் சின்ன பெட்டிச் செய்தி. தோழர் டி. கல்யாணராமன் மறைவுக்கு வருத்தம்.

சென்னை ஃபிலிம் சொஸைட்டி பற்றி தெரிந்தவர்களுக்கு கல்யாணும் நாயுடுவும் கண்டிப்பாக தெரிந்திருக்கும். 80களின் கடைசி, தொண்ணூறுகளின் தொடக்கத்தில், சி.எஃப்.எஸ்.சில் நான் ஏராளமான வெளிநாட்டுப் படங்களைப் பார்த்ததற்கு, கல்யாண் முக்கிய காரணம். மெலிந்த தேகம். கத்தையான மீசை. ஆங்கிலமும் கொஞ்சம் அழகிய தமிழும் கலந்து அவர் பேசும் மொழி, வசீகரம்.  எல்லா விஷயங்களிலும் அவருக்கு இருந்த ஈடுபாட்டைத் தொடர்ந்து பார்த்திருக்கிறேன். பத்திரிகை, புத்தகம், நல்ல சினிமா என்று அறிவின் விசாலம், கவர்ச்சி நிரம்பியவர் கல்யாண். சி.எஃப்.எஸ். பின்னர் “சலனம்” என்ற நல்ல சினிமாவுக்கான இதழை நடத்தியது. அதன் ஆசிரியர் குழுவில் என் பெயரும் இருந்தது. அதற்காக சினிமா கட்டுரைகளை நான் மொழிபெயர்த்துக் கொடுத்திருக்கிறேன்.

கால ஓட்டத்தில், அவர் கிருஷ்ணமூர்த்தி புக் செல்லர்ஸ் – தீரர் சத்தியமூர்த்தி மகள் லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தியின் கணவர் உருவாக்கிய பதிப்பகம் / விற்பனை துறை – பதிப்பு ஆசிரியராக இருந்தபோது, தி.நகர் தணிகாசலம் தெருவில் சந்தித்து உரையாடியிருக்கிறேன். அவருடைய உற்சாகம் ததும்பும் குரலையும் மேனரிஸம்களையும் மறக்கவே முடியவில்லை.

2. ஸ்ரீதர் – விகடன் குழுமத்துக்குள், பர்சேஸ் ஸ்ரீதர் என்றால் அனைவருக்கும் தெரியும் நபர். நல்ல உயரம். புன்சிரிப்பு. மாந்தளிர் நிறம். நல்ல அழகர். நான் பழகியபோதே அவருக்கு ஐம்பது வயதுக்கு மேல் இருக்கும். இளமையில் இன்னும் மகா அழகராக இருந்திருக்க வேண்டும்.

விகடன் பிரிட்டானிகா வெளியிடும் சமயத்தில் அவரோடு நிறைய நேரம் செலவிட்டு இருக்கிறேன். வெளிநாடுகளில் இருந்து விதம்விதமான பேப்பர்களை இறக்குமதி செய்தல், அட்டைகளை இறக்குமதி செய்தல், தாளின் தரம், கெட்டித்தன்மை…ஏராளமான விஷயங்களைத் தெரிந்த நல்ல மனிதர்.

பதற்றமே இல்லாமல், ஒவ்வொரு பிரச்னையையும் அணுகக்கூடியவர். அவரது ஆளுமையை கண்டு வியந்திருக்கிறேன். சில பேரைக் கண்டால் போய் நின்று இன்னும் கொஞ்சம் நேரம் பேசப் பிடிக்குமே…அது மாதிரியான கவர்ச்சி அவரிடம் உண்டு.

எனக்கு ஒரு புத்தகம் அன்பளிப்பாக கொடுத்தார். ஃபின்னிஷ் கதைகள் என்ற ஆங்கிலச் சிறுகதைத் தொகுதி. கனமே இல்லாத தாளில் அச்சடித்த நூல். 200 பக்கங்களுக்கு மேல் இருந்தாலும் தக்கையான புத்தகம். ஆன்ஸ் கிரிஸ்டி ஆண்டர்சனின் டேல்ஸ் என்ற லண்டனில் அச்சடித்த நூலொன்றை இதற்கு முன்பு பார்த்திருக்கிறேன். முழுத் தொகுதி. ஆனால், தக்கையாக இருக்கும்.

ஸ்ரீதர், ஹார்ட் அட்டாக்கில் போய்விட்டார் என்று கேள்விப்பட்டேன். ஒரு மாதம் ஆகிவிட்டது என்றார்கள்.

மரணம் ஏற்படுத்தும் வெற்றிடம், வலி நிரம்பியது.