கூருணர்வுச் சொற்கள்!

தொலைக்காட்சியில் நான் செய்திப் ப்ரியன். மெகா தொடர்கள் பார்ப்பவன் அல்ல. இரண்டு நாள்களுக்கு முன்பு, கூடத்தில் ஓடிக்கொண்டு இருந்த தொலைக்காட்சி தொடர் நடுவே சில நொடிகள் நின்றேன். பிரபலமான “சரவணன் – மீனாட்சி” தொடரின் இடையே வரும் முன்னோட்டம் அது. ஒரு முதிய பெண் இன்னொரு பெண்ணைப் பார்த்துச் சொல்கிறார் : “தமிழுக்குத்தான் இது ஃபர்ஸ்ட் நைட். உனக்கு அப்படியா என்ன…” அந்தப் பெண் கூனிக் குறுகி தவித்தாள். அதற்கு மேல் அங்கே என்னால் நிற்க முடியவில்லை. கதையில் வரும் அந்தச் சூழ்நிலையை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. இந்த வசனத்தை எழுதியவருக்கு எவ்வளவு மனவக்கிரம் இருக்கவேண்டும்? அதைக் காட்சிப்படுத்தி திரைக்கதை எழுதிய இயக்குனர் எவ்வளவு கூருணர்வு இல்லாதவராக இருக்கவேண்டும்? மக்கள் அனைவரும் பார்க்கும் ஒரு தொடரில் இவ்வளவு கீழ்த்தரமாக யோசிக்க முடியுமா? என்னால் ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை.

வார்த்தைகளை மணிமணியாகப் பயன்படுத்த வேண்டாமா? சூழ்நிலைக்கேற்ப, அங்கு நிலவும் உணர்வுகளுக்கு ஏற்ப, சொற்களைத் தட்டித் தட்டிப் பார்த்துப் பயன்படுத்த வேண்டாமா? இரண்டாயிரம் ஆண்டு பண்பாடு, வளர்ச்சி, மூத்த குடி என்றெல்லாம் பெருமைப்படுகிறோம். அப்படியானால், நம் மனங்களில் எவ்வளவு தூரம் பண்பாடு மேலோங்கி இருக்கவேண்டும்? அது நம் வார்த்தைகளில் எவ்வளவு அழகாக பிரதிபலிக்க வேண்டும்? ஏன் இல்லாமல் போச்சு நாகரிகம்? தெரியவில்லை.

பல சொற்களைப் பயன்படுத்த நான் மிகவும் சங்கடப்படுவேன். வேறு வார்த்தைகளுக்காக ரொம்ப நேரம் காத்திருந்த அனுபவமும் உண்டு. “விதவை” அப்படிப்பட்ட சொல். பயன்படுத்த மனம் ஒப்பாத சொல். பயன்படுத்தித் தேய்ந்து போன சொல் மட்டுமல்ல; அது எதிர்மறை எண்ணங்களைச் சுமந்துள்ள சொல். பெண்ணுக்கு எந்த வகையிலும் பெருமை சேர்க்காத சொல் அது. சொல்லப் போனால், அது அப்பெண்ணை இன்னும் காயப்படுத்தவல்லது, இழிவுபடுத்தவல்லது. மனம் நிறைந்த கணவனை இழந்து நிற்கும் ஒரு பெண்ணை, எவ்வளவு கெளரவத்தோடு எடுத்துப் பேசவேண்டும்? அவளை எழுத்தால் கூட நான் காயப்படுத்த விரும்பவில்லை.

“கைம்பெண்” என்று கொஞ்ச நாள் எழுதினேன். அதுவும் ஒப்பவில்லை. பின்னர், “வைதவ்யம்” என்ற சொல்லைக் கண்டுபிடித்தேன். புழக்கத்தில் இல்லாத சொல்தான். ஆனால், ’விதவை’யும், ’கைம்பெண்’ணும் அடைந்துள்ள நலிவை, இச்சொல் இன்னும் அடையவில்லை. என் மனத்துக்குள் உணர்வு ரீதியாக ”வைதவ்யம்” இன்னும் தேய்ந்து, பொருளழிந்து போகவில்லை. கெளரவமும் சிதையவில்லை.

இதேபோல், பெண்ணைக் குறிக்கும் “ஃபிகர்” என்ற சொல்லை என்னால் பயன்படுத்தவே முடியாது. இது அவளைக் கொச்சைப்படுத்துவது மட்டுமல்ல, எல்லாவிதமான தப்பர்த்தங்களுக்கும் இட்டுச்செல்லவல்லது. அதுவும் “செம ஃபிகர்” என்பதெல்லாம் பாலியல் ரீதியாக மிகவும் வக்கிர மனத்தின் வெளிப்பாடு. ஒரு பெண்ணை சகமனுஷியாக அல்லாமல் சதைப் பிண்டமாக நோக்கும் கற்காலச் சிந்தனையை வெளிப்படுத்தும் சொல் அது.

கூருணர்வு என்பது சமூகமொழியில் வெளிப்பட வேண்டும். சமூகம் முன்னேறி இருக்கிறது என்பதற்கு அதுதான் அடையாளம். இப்போதெல்லாம் யாரும் “ஊனமுற்றவர்” என்று பயன்படுத்துவதில்லை; நல்ல சொல் “மாற்றுத் திறனாளி.” அரசியலில் யாரும் “பொய்” சொல்வதில்லை; “உண்மைக்கு மாறான” செய்திகளையே சொல்வார்கள். ”அலி” அவதூறு; “அரவாணி” நீங்கி, இப்போது எங்கும் “திருநங்கை”தான்.  ”தாழ்த்தப்பட்டவர்கள்”, “தலித்”, “பிற்படுத்தப்பட்டவர்கள்” எல்லாம் சமூகம் இவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுக்க விரும்புகிறது என்பதை வெளிப்படுத்தும் சொற்கள்.  இதற்கு முன்பு பயன்படுத்தப்பட்ட சொற்களில் தொக்கி நின்றவை மேலாதிக்கம், ஆணவம், திமிர் ஆகியவை. அவற்றை சமூகம் விலக்க விரும்புகிறது என்பதற்கு முதல் படிதான், சொற்களில் காட்டப்படும் கரிசனம். பொலிட்டிக்கல் கரெக்ட்னஸ், ஜெண்டர் கரெக்ட்னஸ் மிகவும் முக்கியம்.

உணர்வுகளுக்கான மொழி வார்த்தைகள். அது அடுத்தவரைக் காயப்படுத்தக் கூடாது. கொச்சைப்படுத்தக் கூடாது. இந்த ஜாக்கிரதையோடுதான் ஒவ்வொரு எழுத்தும் உருவாக வேண்டும். டிவியாக இருந்தாலும் சரி, இதழாக இருந்தாலும் சரி – இது தான் நியதி.

ஈரத்தை மீட்டெடுக்க…

பாப்புலர் இதழ்களானாலும் சரி, இலக்கிய இதழ்கள் ஆனாலும் சரி, நேரடி நாவல்கள் ஆனாலும் சரி, எங்கும் நல்ல காதல் கதையே காணோம். சட்டென்று ஞாபகம் வரும் கதைகள் எல்லாம் இருபதாண்டுகளுக்கு முந்தைய கதைகளாகவே உள்ளன. மாதநாவல்கள், தொடர்கதைகள் ஆகியவற்றில் சித்திரிக்கப்படும் காதல் வெகு மேம்போக்காக, உள்ளத்தைத் தீண்டாமல், மேற்பரப்பிலேயே நிற்கின்றன. ஆண், பெண்கள் ஒன்று ஏற்கெனவே சந்தித்து, காதல் செய்துகொண்டிருப்பார்கள்; அல்லது காதலுக்கு பெற்றோர், இன்ன பிற எதிர்ப்புகளைச் சந்தித்துக்கொண்டு இருப்பார்கள். அங்கே காதலைவிட, வேறு பிரச்னைகளே முக்கியத்துவம் பெற்றிருக்கும். வாசகனின் மனத்தை ஈர்க்கும் காதல் கதைகளுக்கு இன்றைக்கு கடும் பஞ்சம்.

இலக்கிய இதழ்களில் எழுதப்படும் சிறுகதைகளில், காதலுக்கு இடமே இல்லை. அங்கே காமம் தான் தூக்கல். ஆண் – பெண் பாத்திரங்கள் ஏதோ ஒருவித மனப்பிரச்னைகளோடு அலைவார்கள். மென்மையை முற்றிலும் இழந்தநிலையில், உடல்ரீதியான தேவைகளே முன்னிற்கின்றன. காமத்தை எழுதுவதுதான் அதிர்ச்சி அளிக்கும்; அதுதான் நவ நவீனத்துவம், மரபுகளை மீறுதல்; புது வித எழுத்து என்ற எண்ணங்கள் ஆழ வேரூன்றி இருப்பது தெரிகிறது. உடைந்த மனங்களையும், நொறுங்கிய உறவுகளையும், நிம்மதியற்ற மனிதர்களையும் பதிவு செய்வதில் காட்டப்படும் ஆர்வம், நல்ல ஆரோக்கியமான உறவுகள் பற்றி எழுதுவதில் காட்டப்படுவதில்லை. காதல் ஒருவித பொய்; அல்லது எழுதி எழுதி தேய்ந்துபோன கருப்பொருள் என்ற காரணங்களும் பின்னணியில் இருக்கலாம். காதல் கதை எழுதுவது இன்றைய காலகட்டத்தில் இலக்கிய அந்தஸ்துக்குரிய அம்சமாகவும் இல்லாமல் இருக்கலாம்! வார்த்தைகளுக்குள் சிக்கிக்கொண்டு, அருவ உணர்வுகளுக்கு உருவம் கொடுக்க முயல்வதுதான் வெற்றிகரமான இலக்கிய இதழ் எழுத்தாளர்களுக்கான அடையாளமாக மாறிப்போய்விட்டதோ என்னவோ!

நேரடி நாவல்களிலும் இதே பிரச்னைதான். காதலைத் தவிர்த்துவிட்டு வேறேதோ எழுதுகிறார்கள். அல்லது, காதலைத் தொடாமல், நேரடியாக உடல் ரீதியான உறவுகளுக்குத் தாவிவிடுகிறார்கள். இதையெல்லாம் அடிப்படை தரவுகளாக கொண்டு சமூகத்தைப் புரிந்துகொள்ள முயன்றால், இப்படித்தான் புரிந்துகொள்ள முடிகிறது:

மனித வாழ்வுக்கு ஆதார உணர்வான அன்பை நாம் தொலைத்துவிட்டோம்.

அன்பின் பல்வேறு முகங்களில் ஒன்று காதல். அதன் நளினத்தை, எழிலை, கூச்சத்தை, விவரிக்கயியலா வலிகளை, எதிர்பார்ப்புகளை எல்லாம் நாம் இழந்து நிற்கிறோம். மிருது உணர்வு நீங்கி, முரட்டுத்தனமே கோலோச்சுகிறது.

அதற்கான அத்தாட்சிகளைத்தான் தில்லி மருத்துவக் கல்லூரி மாணவி வன்கொடுமை முதல் அனைத்து இடங்களில் காண்கிறோம்.

காதல் ஓர் ஆரோக்கிய உணர்வு. மனத்தை வளப்படுத்தவல்லது. உறவுகளை மேம்படுத்தவல்லது. எதிர்கால நம்பிக்கை, துணிவு, வாழ்க்கை மேல் பிடிப்பு, சகமனிதர்களை நேசித்தல் ஆகிய அனைத்தையும் ஏற்படுத்தவல்லது. அதற்கு எந்தவிதமான எல்லைகளும் வேலியமைக்க முடியாது. 

இலக்கியத்தில் காதல் கதைகளே இல்லாமல் போனதுகூட, தில்லி சம்பவத்துக்குக் காரணமாக இருக்ககூடுமோ என்ற எண்ணம் எனக்குண்டு. ஒரு சமூகத்தின் கட்டமைப்பில், பேசப்படும் பல்வேறு உணர்வுகள்தான், மனிதர்களின் மனங்களைக் கட்டமைக்கிறது. இன்று, பணம் சம்பாதித்தல், உயர் பதவிகளை அடைதல், அமெரிக்கா செல்தல், கார் வாங்குதல், வீடு கட்டுதல் என்று பொருள்ரீதியான வாழ்க்கை முக்கியத்துவம் பெற்றுவிட்டது. சமூகத்தில் திரும்பிய பக்கமெல்லாம் இவைதான் முன்னிறுத்தப்படுகின்றன. யாரும் அன்பையோ கருணையையோ சகோதரத்துவத்தையோ இணக்கத்தையோ – உணர்வுகள் சார்ந்த எதையுமே பேசுவதில்லை. மெல்லமெல்ல உணர்வுகள் மொண்ணையாகி, இயல்புத்தன்மை விலகி, முரட்டுத்தனமே மேலே எழுகிறது.

இன்றைய நிலையில், நாம் அன்பை மீட்டெடுப்பது மிகவும் அவசியம். மிருது உணர்வுகளை போதிப்பது அவசியம். ரசனையைக் கட்டியெழுப்புவது அவசியம். பொறியியல் படிப்புகளைவிட, கலைத்துறைப் படிப்புகள் முன்னணி பெற வேண்டும். கவிதையும் கதையும் ஓவியங்களும் நாடகங்களும் நுண்கலைகளும் மனிதர்களை மனிதர்களாக மீட்டெடுக்க உதவும் கருவிகள். வரட்டுத்தனத்தை, தனிமையை, அந்நியமாதலை விலக்கி, ஈரத்தையும் பாசத்தையும் ஊட்டுவது கலைஞர்களின் கடமை.  

இத்தனை ஆண்டுகளும் நான் காதல் கதைகளே எழுதியதில்லை. எழுதிய சிலவும் உணர்வுரீதியாக எனக்குத் திருப்தி தராதவை. வெண்ணிற இரவுகள், வண்ணநிலவனின் கடல்புரத்தில், மெஹரூனிஸா, பிரபஞ்சனின் பல கதைகளைப் படித்த பின்னர், என்னால் இப்படியெல்லாம் எழுதவே முடியாது என்ற நிச்சயமான தயக்கமே முதல் காரணம். அப்படிப்பட்ட உச்சங்களைத் தொட்டப் பிறகு, வேறு உயரம் குறைவான படைப்புகள் கவனமே பெறாமல் போய்விடும் என்ற அச்சமும் மறுகாரணம். 

ஆனால், இன்று சமூக ரீதியாக காதல் கதைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. உணர்வுகளை மீட்டெடுக்க, ஈரத்தை மீட்டெடுக்க, மனிதத்தின் மேன்மையை உணர்த்த, காதல் கதைகளே ஒரே வழி.

சரியாக வருகிறதோ, இல்லையோ, இனி காதல் கதைகள் எழுதுவதாக இருக்கிறேன்!

 

மிடில்கிளாஸ் அல்பத்தனங்கள்?

திருமணமோ, வேறு வைபவங்களோ, எப்போது வெளியே உணவு உட்கொண்டாலும் வீட்டுக்கு வந்தவுடன், சூடாக ஒரு டம்ளர் வெந்நீர் குடித்துவிட்டே படுப்பேன். வெளி உணவுகளில் காரமோ, எண்ணெயோ அதிகமாக இருப்பதே காரணம். வெந்நீர் பருகுவது சின்னவயசு பழக்கம். எந்த உடல் பிரச்னையானாலும் வெந்நீர் எனக்குக் கைகண்ட மருந்து. ஜூரம் வந்தாலும் சரி, சோர்வு, அசதி, வலி ஏற்பட்டாலும் சரி, வெந்நீரைக் குடித்தால் போதும். சற்று நேரத்தில் உடல் தெம்பாகிவிடும். அதில் என்ன மாயம் இருக்கிறது என்று தெரியவில்லை. செரிமானக் கோளாறு இருந்தாலும் வெந்நீர்தான். உணவு உடனே ஜீரணமாகிவிடும். அல்லது வாயால் வெளியேறிவிடும். எதுவானாலும் நல்ல பலன்தான்!

வெந்நீரை நோய் நிவாரணியாகப் பயன்படுத்துவது சரியா என்று தெரியவில்லை. எனக்கு அது சரியாக வேலை செய்கிறது. என் குடும்பத்தினருக்கும் இதைப் பரிந்துரைப்பேன். ஆனால், வெந்நீர் குடிப்பது நிறைய பேருக்குப் பிடிப்பதில்லை. குளிர்ந்த நீர் சுவை இருப்பதாக கருதுவோர், இதில் எந்தச் சுவையும் இல்லை என்றே சொல்லக் கேட்டிருக்கிறேன். வெறும் நீர்தான், சப்பென்று இருக்கும் என்று முகம் சுளிப்பதைப் பார்த்திருக்கிறேன். அந்த வெப்பம்தான் அதன் மகிமையே. நீரை நன்கு கொதிக்க விட்டு, டபரா டம்ளரில் எடுத்துக்கொள்வேன். வாய் பொறுக்கும் சூட்டுக்கு அதை ஆற்றி,வெப்பத்தைத் தணித்து, பின்னர் குடிக்கத் தொடங்குவேன். நீர் தொண்டை வழியாக, நெஞ்சில் இறங்கி, வயிற்றை அடைவதை, வெப்பப் பாதை சொல்லும். உணவகங்களில், வெந்நீர் கேட்டுவாங்கிப் பருகும் மூத்தவர்களைப் பார்த்திருக்கிறேன்.

வேறொரு சந்தர்ப்பத்தில் இணையத்தில், வெந்நீர் பற்றி படித்தபோது, ஏராளமான தகவல்கள் கிடைத்தன. உடல் எடையைக் குறைக்கக்கூட வெந்நீர் பயன்படும் என்பதெல்லாம் கொஞ்சம் அதிகபட்சமாகத் தோன்றியது. ஆனால், அது உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது, ஜீரணத்துக்கு கைகண்ட மருந்து என்பதெல்லாம் ஏற்கத்தக்கவை. வெந்நீருக்கு ஏதோ மருத்துவ குணம் இருக்கவேண்டும் என்பதை மட்டும் எல்லோரும் ஏற்கின்றனர்.

தேங்காய் எண்ணெய் மற்றொரு அருமருந்து. எந்தப் புண்ணாக இருந்தாலும், அடியாக இருந்தாலும், தோல் சம்பந்தமாக எந்தவிதமான குறைகள் தெரிந்தாலும், தேங்காய் எண்ணெய்தான் உடனடி நிவாரணி. பல வீடுகளில் தேங்காய் எண்ணெய் இருப்பதில்லை. பெண்கள், தங்கள் கேசத்துக்கு வேறு வகை கிரீம்களைப் பயன்படுத்தத் தொடங்கியபின், தேங்காய் எண்ணெய்க்கு மவுசு போய்விட்டது போலும். தேங்காயைப் பற்றிய இன்றைய சிந்தனைகள் வெகுவாக மாறிவிட்டன. அதை கொழுப்புச் சத்து நிறைந்தது, அதன் வாசனை ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது என்று சொல்லப்படுகிறது. சின்னச் சின்ன காயங்களுக்கு தேங்காய் எண்ணெய்யும் நீபாசல்ஃப் பெளடரும்தான் கைமருந்து.

காற்றடைத்த சோடா (carbonated water) இன்னொரு பிரமாதமான கைமருந்து. எப்போது செரிமானக்கோளாறு ஏற்பட்டு, வயிற்றுப்போக்கு உண்டானாலும் சோடாவை வாங்கி ஒரே மூச்சில் குடித்து முடித்துவிட்டால் போதும். வயிறு திம்மென்று இருக்கும். அடுத்த வேளையே வயிற்றுப் போக்கு முற்றிலும் நின்றுவிடுவதைப் பார்த்திருக்கிறேன்.

இவற்றையெல்லாம் மற்றவர்களுக்குச் சொல்லும்போது, ஒருவித ஏளனத்தைச் சந்தித்திருக்கிறேன். மிடில்கிளாஸ் அல்பத்தனத்தின் வெளிப்பாடாக இவை பார்க்கப்படுகின்றன. நேரடியாக மருத்துவரிடம் செல்வதும், அவர் எழுதித்தரும் மருந்துகளை வாங்கி உண்பதுமே மிகச் சரியான வழி என்று ஆணியடித்தாற்போல் மக்கள் மனங்களில் ஆழப்பதிந்துவிட்டது. அதுதான் சரியான முறை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. வழிவழியாக ஒரு சில மருத்துவமுறைகள் நல்ல பலனைக் கொடுத்திருக்கின்றன என்பதும் உண்மை.

உடலைப் புரிந்துகொள்வதிலும் அதற்கேற்ப சிகிச்சைமுறைகளை உருவாக்குவதிலும் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு நாட்டிலும் ஆர்வம் காட்டப்பட்டிருக்கிறது. இதில் ஒருசில இன்று வழக்கொழிந்திருக்கின்றன; ஒரு சில மேலோங்கி இருக்கின்றன. இதில் தவறு, சரி என்று எதுவுமில்லை. எல்லாமே மக்கள் சாய்ஸ்தான்.

எனக்கும் மாற்று மருத்துவம் பக்கம் போக பயம் அதிகம். வாய்ப்புண் வந்தபோது, உறவினர் ஒரு தந்த தைரியத்தில், அண்ணா நகரில் இருந்து ஒரு சித்த மருத்துவரைப் பார்த்தேன். வலது உள்ளங்கையை விரிக்கச் சொன்னார் அவர். அதற்கு மேலே, மணியின் நாக்கு போலிருந்த ஒரு குமிழைக் கையில் பிடித்துக்கொண்டு, ஆட்டினார். கூடவே, நாடியையும் பிடித்துக்கொண்டார். என் உடலின் தன்மை பற்றியும் அதில் இருக்கக்கூடிய பிரச்னைகள் பற்றியும் அவர் சொல்லச் சொல்ல, அசந்து போனேன். என் மாமியாருக்கு மூட்டுவலி. அவரிடம் பேசிக்கொண்டே வலது கை நடுவிரலில், பால்பாயிண்ட் பேனாவால் அழுத்தி உருட்டினார் அந்த மருத்துவர். “வலி குறைஞ்சிருக்காம்மா?” என்று கேட்டபடி, அடுத்த ஒரு சில நிமிடங்கள் பேனாவால் தொடர்ந்து அழுத்தம். எனக்கே நம்புவதற்கு கொஞ்சம் யோசனையாகத்தான் இருக்கிறது. மூட்டு வலி குறைந்திருப்பதாக மாமியார் தெரிவித்தார்.

என் நண்பர் டாக்டர் ராஜா வெங்கடேஷ், சென்னை பொது மருத்துவமனையில் உள்ள கார்டியோதொராசிக் சர்ஜன். பேசும்போதெல்லாம், அவர் ஒரு விஷயத்தை வலியுறுத்துவார். ஆங்கில மருத்துவம் ஒரு சில நோய்களுக்கு மிகச் சிறந்தது. வேறு சில நோய்களை மாற்று மருத்துவர்கள் மிகச் சிறப்பாக குணமடைய வைக்கிறார்கள். அவர்கள் சொல்வதை அலோபதி மருத்துவர்கள் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். இதுதான் பெரிய பிரச்னை. எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் மருத்துவ முறைகளை இணைத்து, ஒருங்கிணைந்த மருத்துவ முறையை உருவாக்கவேண்டும். நாம் மக்களுக்குதானே உதவப் போகிறோம். அவர்கள் விரைவாகவும், தொடர் பாதிப்புகள் இல்லாமலும், பின் விளைவுகள் ஏதுமின்றியும் குணமடைந்தால், அதைவிட பெரிய சாதனை என்ன இருக்க முடியும் என்று கேட்பார் டாக்டர் ராஜா.

நியாயம்தானே?

மீராவை முன்வைத்து…

மீரா என்று பெயருடைய பெண்கள், காதல் மணம் புரிந்தவர்களாகவே காண்கிறேன். அதுவும் வீட்டை விட்டு காதலனோடு போய் திருமணம். காதல் திருமணத்தில் அவர்கள் மிக மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். அல்லது, ஏதோ ஒரு வகையில் காதலால் மீரா பாதிக்கப்பட்டிருப்பார். காதலுக்கும் மீராவுக்கும் பூர்வஜென்ம தொடர்பு போலும். இதே போல், வரதராஜன் என்ற பெயருடையவர்கள் தனியார் நிறுவனங்களில் பெரும் பதவிகளில் இருப்பர். குறிப்பாகநிதி, நிர்வாகம், வர்த்தகம் ஆகிய துறைகளில். கஸ்தூரி ரங்கன் என்று பெயருடையவர்கள் அரசுத் துறை உயர்பதவிகளில் நிறைய பேர். அனிதா என்ற பெயருடையவர் பெரும்பாலும் நுண்கலைகளில் ஆர்வமுடையவர்.

இதெல்லாம் என்னுடைய அனுமானங்கள். அல்லது நான் கண்ட ஒற்றுமைகளில் இருந்து பெற்ற புரிதல். எல்லா நேரங்களிலும் சரியாக
இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை. ஆனால், பெயர்களுக்கு ஒரு கேரக்டர் இருக்கிறது. சில பெயர்களைச் சொல்லும்போதே, அப்பெயருக்கு
உரியவரின் தோற்றம் மனத்தில் எட்டிப் பார்க்கும். எழுத்துகள்தான். ஆனால், அதைச் சொல்லும்போது ஒரு மிடுக்கு, ஒரு துயரம், ஒரு மேன்மை, ஒரு இழிவு எல்லாமும் விரியும். யாரையேனும் சந்திக்கப் போகும் முன், பெயர்களால் உருவான பிம்பம்தான் என்னை வழிநடத்தியிருக்கிறது. நேரே சந்திக்கும்போது, அந்த நபர், என் மனத்தோற்றத்துக்கு முற்றிலும் எதிராக இருக்கலாம். ஆனால், என் கற்பனை உரையாடலுக்கு, ஓர் பிம்பம் அவசியம்தானே.

கதைகளில் பாத்திரங்களுக்குப் பெயர் வைக்கும்போது ரொம்ப திண்டாடிப் போய்விடுவேன். ஷ் என்று முடியும் பெயர்கள் எனக்கு அலர்ஜி. இயல்பான நடுத்தர வர்க்கப் பாத்திரங்கள்தான் என் கதை மாந்தர்கள். அவர்களின் பெயர்கள், ரொம்பத் தேய்ந்து போனதாகவும் இருக்கக்கூடாது. அதேசமயம் அந்நியமாகவும் இருக்கக்கூடாது. ஒவ்வொருமுறையும், பெயர்களை உருட்டி உருட்டிப் பார்த்து, மனத்துக்குள் நிம்மதி ஏற்பட்டவுடன் தான், அதை எழுத்தில் எழுதுவேன். சொல்லப்படும் கதையில் ஏதோ ஒரு புள்ளியில், பெயரும் அதன் தன்மையும் ஒருங்கிணைய வேண்டும். அப்போதுதான், படிக்கும் வாசகன் மனத்தில் கேரக்டரோடு பெயரும் நிலைத்து நிற்கும்.

இதற்கு மாறாக ஒருசிலர், ஒரு குறிப்பிட்ட பெயரை எப்போதும் பயன்படுத்துவர். கிரேஸி மோகன் நாடகங்களில் பெண் பாத்திரங்கள் எல்லோரும் ‘மைதிலி’ அல்லது ‘ஜானகி’. பிரபஞ்சன் கதைகளில் ‘சுமதி’ பிரபலம். மா.அரங்கநாதனின் கதைகள் எல்லாவற்றிலும் ‘முத்துக்கறுப்பன்’தான் ஹீரோ. மறக்க முடியாத பாத்திரப் பெயர்கள் என்று ஒரு பட்டியல் போட்டால், அதில் நிச்சயம் பாபு, யமுனா, அரவிந்தன், வந்தியதேவன், குந்தவை, பூங்குழலி, ஜே.ஜே., டல்பதடோ, அபே குபேக்னா, சந்திரசேகர், ராமசேஷன், கணேசன், பாண்டியன், மெஹரூனிஸா எல்லோருக்கும் இடமிருக்கும்.

ஒருசில தட்டையான பெயர்களும் உண்டு. சுந்தரி, சுரேஷ், கல்பனா, கல்யாணி… இப்படிப்பட்ட பெயர்களை எந்தப் பாத்திரத்துக்கு வைத்தாலும், அது ஒட்டவே ஒட்டாது. ஆங்கிலத்தில், “Placeholder name” என்று சொல்வார்களே, அதற்கிணையானது இந்தப் பெயர்கள். இப்பெயர்கள் ஏற்படுத்தும் மனப்பிம்பம், வலிமையற்றவை. ஏதும் புதிதாக சொல்ல இயலாதவை.

ஆனால், பெயர்களை பொருத்தத்தோடு திரையில் உலவ விடுபவர்களில், கெளதம் வாசுதேவ் மேனன் கெட்டிக்காரர். ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் ராகவன் என்ற பெயரைக் கமல் உச்சரிக்கும்போது, மிடுக்கு வெளிப்படும். காவல்துறை பற்றி பொதுப்புத்தியில் நிலைத்திருக்கும் கம்பீரம் எதிரொலிக்கும். அவர் படத்தில் “மாயா”வுக்கு ஓர் இடம் எப்போதும் உண்டு. இளைஞர்கள் தாம் விரும்பும் தோற்றத்தை ‘கார்த்திக் – ஜெஸ்ஸி’யில் கண்டதால்தான், ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ பெரும் வெற்றி பெற்றது. ‘பள்ளிக்கூடம்’ படத்தின் ‘குமாரசாமி’ எல்லோருக்கும் பிடித்துப் போனதற்கு, அந்தப் பெயர் பாத்திரத்துக்கு ஏற்ப அமைந்ததே காரணம். ‘சொல்ல மறந்த கதை’ ‘சிவதாணு’வில் சேரன் காணாமலே போனது நிஜம்.

அவ்வப்போது என்னைப் பாதிக்கும் பெயர்களை ஒரு குறிப்புப் புத்தகத்தில் எழுதி வைத்திருக்கிறேன். அப்பெயர்களே கதையைச் சொல்லிவிடக்கூடியன. எழுத்தில் எழுதவேண்டும். சீக்கிரம் கைவர வேண்டும்.

கத்திரி புராணம்!

இன்று விக்கிரமன் நடத்தும் “இலக்கியப் பீடம்” இதழ் வந்தது. அதில், லா.ச.ராமாமிர்தத்தின் மனைவி ஹைமாவதி தம் கணவர் பற்றி ஒரு தொடர் எழுதுகிறார். ரசனை தொக்கிநிற்கும் தொடர் அது. இந்த இதழில் லா.ச.ரா.வின் உணவு ரசனையை எழுதி வருபவர், ஓரிடத்தில் இப்படிச் சொல்கிறார்:

”எண்ணெய் கத்தரிக்காய் மசாலா பொடியில் வேகும் வாசனை தூக்க தூக்க ரெண்டு கன்னத்துலேயும் உள் பக்கம் வேல் குத்தறது என்பவர் இவர்.”

படித்தவுடன் மனத்தில் உற்சாகம். என்னைப் போல், லா.ச.ரா.வும் கத்தரிக்காய் ப்ரியர். ஒத்த ரசனை உள்ள மனிதர்களைப் பார்க்கும் போது ஏற்படும் உற்சாகம் எனக்கு.

உணவில் கத்திரிக்காய் என்னுடைய ஃபேவரிட். கத்திரியில் என்ன செய்தாலும்  கண்ணை மூடிக்கொண்டு சாப்பிடுவேன். நான் பார்த்தவரை, நிறையபேருக்கு கத்திரி மேல் பெரிய ஆசை இல்லை. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு டேஸ்ட். மூன்று வேளை கத்திரி சமைத்துப் போட்டாலும் அலுக்காமல் சாப்பிடுவேன்.

பூனாவில் இருந்தபோது, நாக்பூர் கத்திரி அங்கே கிடைக்கும். சின்னச் சின்னதாக இளசாக கிடைக்கும். அதன் வண்ணமே தனி அழகு. உள்ளே விதைகளே இருக்காது. சதை நிறைந்தது. இரவு சப்பாத்திக்கு அதுதான் தொட்டுக்கொள்ள. கத்திரியை நீளவாக்கில் மெல்லிசு மெல்லிசாய வெட்டி, வாணலியில் கொஞ்சமாய் எண்ணெய் விட்டு வதக்கினால் போதும். சப்பாத்திக்கு சரியான தோழன் அது. பூனாவில் இருந்தவரை காலையேனும் மாலையேனும் கத்திரி இல்லாமல் கழிந்ததில்லை. சென்னை வரும்போதெல்லாம், நாக்பூர் கத்திரி வாங்கிவருவேன். இங்கே அப்படிப்பட்ட கத்திரி கிடைப்பதே இல்லை.

திருவல்லிக்கேணியில் இரண்டு சமையல்காரர்கள் மிகவும் பிரபலம். ஒருவர், பட்டப்பா, இன்னொருவர் சம்பத். பட்டப்பா திருமண சமையலில் பொடிபோட்ட கத்திரிக்காய் காயும், தயிர்சாதமும் மிகமிக அற்புதமானவை. எங்கள் வீட்டு நிகழ்ச்சிகளில் பட்டப்பாவை எப்படியேனும் நுழைத்துவிடக் காரணம், அவரது பொடிபோட்ட கத்திரிக்காய்தான். பிரமாதத்துக்கு மேல் ஒரு வார்த்தை இருந்தால் சொல்லுங்கள்.

வீட்டில் கத்திரியும் வெங்காயத்தையும் சேர்த்துச் செய்யும் இரவு சப்ஜி ஏ கிளாஸ். வெங்காயம் வெட்டுவதில் நான் நிபுணன். ஒரே சீராக சிறிய சிறிய துகள்களாக வெட்டித்தள்ளுவேன். அதோடு கத்திரியும் சேர்த்து, சப்ஜி செய்தால் போதும். சப்பாத்தி கணக்கே இல்லாமல் உள்ளே இறங்கும்.

கத்திரியில் என்ன சத்து உண்டு என்றெல்லாம் எனக்குத் தெரியாது. கத்திரியை தூர இருந்து பார்த்தே, அதன் தன்மை எப்படி இருக்கும் என்று என் உள்ளுணர்வு கொண்டு சொல்வேன். சென்னையில் கிடைக்கும் நாட்டுக் கத்திரி, வேலூர் கத்திரி எல்லாம் அவ்வளவாக சுவையற்றவை. விதைகள் வேறு துருத்திக்கொண்டு நிற்கும்.

நிதானமாக பொறுக்கியெடுத்து கத்திரி வாங்குவேன். அதைப் பார்க்கும்போதெல்லாம் ஒருவிதப் பாசம் ஏற்படுவதைத் தவிர்க்கவே முடியவில்லை. காசி போனால், பிடித்த காய் ஒன்றை விட்டுவிட்டு வரவேண்டும் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.

யாராவது என்னை கத்திரியை விடச் சொல்லிவிடுவார்களோ என்ற பயத்தில் காசி பக்கமே தலைவைத்துப் படுப்பதில்லை!

சிக்கனமே அழகு!

அப்போது, இராயப்பேட்டை பைலட் தியேட்டருக்கு அருகில் இருந்தது க்ரியா பதிப்பகம். நண்பர் திலீப்குமார் அப்போது அங்கே இருந்தார். புத்தகங்கள் வாங்கப் போகும்போது கொஞ்சம் பேசுவோம். ஒருமுறை புத்தகம் வாங்கப் போனபோது எழுத்தாளர் எஸ். சங்கரநாராயணனைச் சந்தித்தேன். அதற்கு முன்பு, அவருடைய சிறுகதைகளைப் படித்திருந்தேன். வித்தியாசமான எழுத்துக்காரர். ரொம்பப் பிடிக்கும். அறிமுகப்படுத்திக்கொண்டு பேசத் தொடங்கினேன். மாடியை விட்டுக் கீழே இறங்கி சாலையோரத்தில் நின்று பேசினோம். அவர் என் கதைகளைப் படித்திருக்க வேண்டும். பேச்சுவாக்கில் ஒரு அம்சத்தைக் குறிப்பிட்டார்: “புரோஸ் எழுத எழுத மரத்திலேருந்து சருகெல்லாம் உதிர்கிற மாதிரி, வேண்டாத வார்த்தைகளெல்லாம் உதிர்ந்து போகும். கச்சிதமாக வார்த்தைகள் வந்து விழும் அப்புறம்.” 

வார்த்தைகளைப் பற்றிய கவனம் கூர்மையடைந்தது அதற்குப் பின்னால்தான். அதேசமயத்தில்தான் ம.வே.சிவகுமாரின் கதைகளை எல்லாம் படித்துக்கொண்டிருந்தேன். அவருடைய மொழியில் அப்படி ஒரு சொற்செட்டு இருக்கும். இப்போதும் விமலாதித்த மாமல்லன், தமது டிவீட்டுகளிலும் ஃபேஸ்புக் ஸ்டேடஸ்களிலும் இப்படிப்பட்ட சொற்செட்டைக் கையாள்வது தெரியும். மாமல்லன் ஒருபடி மேலே போய், ஒருசில வாக்கியங்களில் ஐ, ஆல், கு, இன், அது, கண் எல்லாவற்றையும் கூட நீக்கிவிட்டு எழுத முயற்சிக்கிறாரோ என்று சந்தேகம் எழுவதுண்டு.

மொழிவளம் அதிகமாக சொற்சிக்கனம் கைகூடும். “என்றார்கள்”, ”சொன்னார்கள்”, ”கிறு”, “கின்று” விகுதிகள் போன்றற்றைத் சில தவிர்க்கலாம். வழக்கமான ஆரம்பம், வழக்கமான முடிவு போன்றவற்றைத் தவிர்க்கவேண்டும் என்று முனைந்தாலே புது வாக்கியம் கிடைக்கும். ஒரு கட்டத்தில், ஒரு கதைக்குள் ஒரு சொல் மறுமுறை இடம்பெறக்கூடாது என்ற கட்டுப்பாட்டைக்கூட வகுத்துக்கொண்டு எழுதியிருக்கிறேன். மேலும், தவிர, அதே போல், இந்நிலையில் போன்ற இணைப்புச் சொற்களை மிகவும் பொருள்பொதிந்த இடங்களில் மட்டுமே பயன்படுத்துவது என்ற பழக்கத்தையும் ஏற்படுத்திக்கொண்டேன். இவை இல்லாமலும் வாக்கியம், முழுமை பெறும். பொருள் புரியும். 

மார்க்குவேஸ்ஸைப் பற்றிப் படித்த போது, ஓரிடத்தில் சொல்லைப் பற்றிய கவனம் என்னை ஈர்த்தது. யாரோ அவரிடம், அன்றைய நாள் எப்படி இருந்தது என்று கேட்க, “மிகவும் பயனுடையதாக இருந்தது. நான் எழுதிய பத்தியில் இரண்டு சொற்களை நீக்க முடிந்தது” என்று பதில் அளித்தாராம். லா.ச.ரா. அப்படி சொற்களையும் வாக்கியங்களையும் செதுக்கிச் செதுக்கிச் செம்மைப்படுத்தியவர். சொற்கள் மந்திரமென ஒலிக்கும். பா.ராகவன், அவரது பல வரிகளை மனப்பாடமாகச் சொல்வார். காரணம், சொற்செட்டு. அழகு. எளிமை. திருத்தம்.

இணைய எழுத்தில் இப்படிப்பட்டச் சொற்செட்டு, செறிவு, நேர்த்தி குறைவு. வெளியிடுவதற்கான இடத்துக்கு பற்றாக்குறை இல்லை என்பதால், வார்த்தைகளை அள்ளித் தெளிக்கக்கூடாதல்லவா? செலவழிக்கும் ஒவ்வொரு சொல்லும், மதிப்பு மிகுந்தது. அதை வீணே இறைப்பதில் பொருளென்ன?

எழுத்துக்கு அழகு சிக்கனம்!

உணர்வும் வாசனையும்

நகருக்கு என்று ஒரு ஒலி இருக்கிறது. ஒவ்வொரு நாளும் அலுவலகம் வரும்போது, அந்த ஒலியை மனத்தில் உணர்ந்துகொள்வேன். ஒருநாள் பரபரப்பு, ஒரு நாள் துக்கம், ஒரு நாள் அமைதி, ஒரு நாள் பதற்றம் என்று பல்வேறு உணர்வுகளை நகரம் எனக்குள் ஏற்படுத்துகிறது. இவை என் எண்ணங்களின், அவ்வப்போதைய மனநிலைகளின் பிரபலிப்போ என்றுகூட யோசிப்பேன். அப்படி இருந்ததில்லை. 

வண்டியோட்டிக்கொண்டு வரும் அரை மணிநேரமும் சென்னை தன் பல்வேறு முகங்களைக் காட்டும். கூட வரும் வாகனங்கள், மனிதர்கள், அவர்கள் பேசும் பேச்சுக்கள், குறுக்கே நடக்க மாடுகள், மனிதர்கள் எல்லோரும் அன்றன்றைய உணர்வைத் தொட்டுக்காட்டுவர். உதாரணமாக, இன்று ஒருவித பதற்றம் எல்லா இடங்களிலும் தெரிந்தது.

இராதாகிருஷ்ணன் சாலை, அண்ணா சாலை, தி.நகர் என்று எல்லா பகுதிகளிலும் ஒருவரை ஒருவர் முந்திச் செல்லும், அலறல் சப்தமெழுப்பும் வண்டிகள் மிக அதிகம். பொதுவாக இந்நேரத்தில் அலுவலகவாசிகள் விரைவார்கள். வேகம் இருக்கும், பதற்றம் இருக்காது. சைலன்சர்களைக் கழற்றி ஆட்டோக்களை இன்று கடந்து வந்தேன். என்னைக் கடந்து இரண்டு மூன்று ராட்சச பைக்குள் பறந்தன. எல்லோரின் உடல்மொழியிலும் பதற்றம்.

பல நாட்கள் இப்படி இருப்பதில்லை. நிதானத்தோடு கூடிய வேகம் இருக்கும். கடைகளின் ஷட்டர்களைத் உயர்த்துபவர்கள், தாளலயத்தோடு திறப்பார்கள். போக்குவரத்துக் காவலர், புன்னகையோடு வழியேற்படுத்துவார். தொலைக்காட்சியில் சொல்வது போல் “இயல்பு வாழ்க்கை” இயல்பாகத் தெரியும்.

இப்படிப்பட்ட உணர்வுக்கும் அன்று நகரில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கும் ஏதேனும் ஒற்றுமை இருக்கும் என்றே என் மனம் நம்ப விரும்பும். ஒரு நாள் தீ விபத்து, வேறொரு நாள் வாகன விபத்து, ஏதேனும் ஒரு பொதுக்கூட்டம், ஏதேனும் ஓர் ஊர்வலம்… தொலைக்காட்சி செய்திகள் இவற்றைச் சொல்லும்போது, உணர்வு நிஜமானது போல் தோன்றும்.

பொதுவாக நான் சிறுசாலைகள், குறுக்குச் சந்துகள் வழியாக வண்டியோட்டுவேன். அங்கெல்லாம் கூட, அன்றன்றைய உணர்வு துலக்கமாகத் தெரியும். அச்சம் நிரம்பிய நாள்களில் சாலைகள் நிறையபேர் வெறுமனே நின்றுகொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். தாம் சாலைகளின் நடுவே நிற்கிறோம் என்ற உணர்வே இல்லாமல், தூரத்து வாகனங்களை, மனிதர்களைப் பார்த்துக்கொண்டு நாலைந்து பேர் நிற்பார்கள். அவர்கள் அருகே போய் ஒலியெழுப்பினால் கூட, உணர்வு கலையாமல் நகர்வார்கள். ஏதோ ஒன்று அன்று எல்லோரையும் ஆட்கொண்டிருக்கும்.

நகருக்கு வாசனை இருப்பதையும் உணர்ந்திருக்கிறேன். முதல்முறையாக மும்பை நகருக்குள் நுழைந்தபோது விடிகாலை மூன்று மணி. காரை நிறுத்தச் சொல்லிவிட்டு, கீழே இறங்கி கொஞ்சம் தூரம் நடந்தேன். ஒருவித வெக்கை; இரும்புத் தாது வாசனை. பூனாவும் பெங்களூருவும் கொஞ்சம் குளிர் பிரதேசங்கள்.ஆனால் இரண்டிலும் வேறு வேறு வாசனைகளை நுகர்ந்திருக்கிறேன். பூனாவில் ஒருவித மூலிகையும், பெங்களூருவில் புழுக்கத்தின் வாசனையையும் உணர்ந்திருக்கிறேன். புது நகரங்களுக்குச் செல்லும்போது, இரவு முழுவதும் பயணம் செய்துவிட்டு, இருள் பிரிவதற்கு முன் போய் இறங்குவேன். நகரம் தன் வாசனை மொட்டுக்களை அவிழ்க்கும் தருணம் அது. 

இந்த வாசனைகள் எல்லாம் இன்று மாறியிருக்கலாம். என் நினைவில் தங்கிப் போன வாசனைகள் இவை. ஒரு நகரத்தைப் பற்றிய பிம்பத்தை, வாசனைகளும் உணர்வுகளும்தான் ஏற்படுத்துகின்றன. அங்கே இருக்கும் மனிதர்கள், அவர்களின் நடவடிக்கைகள் எல்லாம் இதற்குப் பின்னர்தான். ஒரு சில நகரங்களில் ஒவ்வாமை உணர்வு தலைதூக்கும். ஏனென்று தெரியவில்லை. எனக்கு தில்லி அப்படிப்பட்ட இடம். 

இதெல்லாம் பிரமையாக இருக்க வாய்ப்பில்லை. பல சமயங்களில் மனிதர்களின் நடவடிக்கைகள் இந்த வாசனை சார்ந்தும் உணர்வுகள் சார்ந்தும் இருப்பதைக் கவனித்திருக்கிறேன். முதல்முறையாக ஒருவரைப் பார்த்தாலும், அவரைப் புரிந்துகொள்ள இதெல்லாம் ஏதோ ஒருவகையில் எனக்கு உதவியிருக்கிறது. “இவர் இப்படித்தான் பதில் சொல்வார்”, “இவர் இப்படித்தான் நடந்துகொள்வார்” என்று நான் ஊகிக்கும் அம்சங்கள் நடந்திருக்கின்றன. ஒருவகையில், கொஞ்சம் பயமாகக் கூட இருக்கும். வேறு மாதிரி நடந்துகொள்ளக் கூடாதா என்று நினைப்பேன். அப்படி இதுவரை நடந்ததில்லை.

2012 – ரீவைண்ட்

ஆண்டு தொடக்கத்தில் இருக்கும் உற்சாகம், படிப்படியாக வடிந்து, ஒரு கட்டத்தில்  சமனடைந்துவிடும். 2012ல் அப்படித்தான் நேர்ந்தது. வாரம் ஒரு ஆயிரம் வார்த்தைகளாவது எழுத வேண்டும் என்று ஆரம்பத்தில் திட்டம் வகுத்தேன். அதற்கேற்ப, யோசித்து வைத்திருந்த ஒரு கதையை, “இடைவேளை” என்ற தலைப்பில், கல்கியில் ஜூன் இறுதி வரை எழுதினேன். எனக்கே திருப்தியாக வந்த நாவல் அது. இப்போது மறுமுறை வாசித்துச் செப்பனிட்டுக்கொண்டு இருக்கிறேன். இரண்டு சிறுகதைகள் எழுதியது கூடுதல் போனஸ். மற்ற எழுத்தெல்லாம் பத்திரிகை எழுத்துதான்.

நிறைய நாவல்கள், கட்டுரைத் தொகுதிகள் வாசித்தேன். இரண்டு நூல்கள் இப்போது நினைவில் நிற்கின்றன. ஒன்று யோகி ராம் சூரத் குமார் பற்றி, அவரது சீடர் பார்த்தசாரதி ஆங்கிலத்தில் எழுதிய அமரகாவியம். எளிமையும் நேர்த்தியும் நிரம்பிய நூல். மற்றொன்று, ராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ள “அளசிங்க பெருமாள்” பற்றிய வாழ்க்கை வரலாறு. அற்புதமான நூல்.

இரண்டு பத்திரிகைகள் சென்ற ஆண்டில் என்னை மிகவும் ஈர்த்தன. ஒன்று, ரோஜா ஆராய்ச்சி நூலகம் வெளியிடும் காலாண்டு இதழான “ரோஜா.” சிரத்தையெடுத்து தயாரிக்கிறார்கள். இரண்டு மூன்று கட்டுரைகள்தான் இடம்பெறுகின்றன. ஆனால், ஒவ்வொன்றும் தகவல் பொக்கிஷம். இரண்டாவது, “சமநிலை சமுதாயம்.” இஸ்லாமிய சமூகத்தில் பேசத் தயங்கும் பல விஷயங்கள் இவ்விதழில் விரிவாக எடுத்துப் பேசப்படுகிறது. சென்ற ஆண்டில் இரண்டு பிரச்னைகளை விரிவாக அலசினார்கள்: 1. ஹஜ் பயண முகவர்கள் செய்யும் அட்டூழியங்கள். 2. வேலூர் மார்க்கக் கல்லூரி ஒன்றின் திசைமாறும் போக்கு. ஆரோக்கியமான, ஆக்கப்பூர்வமான விவாதங்கள் வெளிவந்தன.

சென்ற ஆண்டு பார்த்த படங்களில், Jiro Dreams of Sushi, A Separation, Waste Land மிகச் சிறந்தவை. சூஷி மிகமிக அழகு. சூஷி உணவை எவ்வளவு ரசனையோடு, கலையுணர்வோடு ஒரு ஜப்பானிய குடும்பம் தயாரிக்கிறது என்பதே படம். நம்ம ஊர் மைசூர்பா அல்லது இருட்டுக் கடை அல்வா, அல்லது ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா பற்றி தாராளமாக இப்படி ஒரு படம் எடுக்க முடியும். 

தனிப்பட்ட முறையில் இரண்டு மகிழ்ச்சிகள்: 1. என் மூத்த மகள் நல்ல கிரேடில் பத்தாம் வகுப்பை முடித்துவிட்டு, அஹோபில மடப் பள்ளியில் +1 சேர்ந்துள்ளார். 2. கல்லூரிக் காலத்துக்குப் பின்னர் இப்போது மீண்டும் உடற்பயிற்சிப் பித்து மண்டைக்கு ஏறிவிட்டது. தினமும் கடுமையான உடற்பயிற்சி. ஆறு மாதங்களில் உடல் எடையைக் குறைப்பதே குறிக்கோள்.