ஸ்ருதிஹாசன் – பேஜ் 3 தமிழ்!

ஏழாம் அறிவு நேற்று இரவு பார்த்தேன். பல விமர்சனங்களில், ஸ்ருதிஹாசனின் உச்சரிப்பு,  நடிப்பு எல்லாவற்றையும் ஒரு மாதிரி கிண்டல் செய்தும் ஆலோசனை சொல்வது போலவும் எழுதப்பட்டதைப் படித்திருந்தேன். அதனாலேயே ஏழாம் அறிவு பார்க்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன்.

ஸ்ருதிஹாசனே டப்பிங் பேசியிருக்கிறார்; அவருக்குப் பதில் வேறு யாரேனும் நல்ல தெளிவான தமிழில் டப்பிங் பேசியிருக்கலாம் என்றெல்லாம் கருத்துக்கள் கேட்டு இருந்தேன்.  நேற்று படத்தை முழுமையாக நிதானமாக பார்த்தபோது, வேறு எண்ணங்களே ஏற்பட்டன.

ஸ்ருதி, இன்றைய தமிழ் இளைஞர்கள், பெண்களின் ஒரு வகை மாதிரி. இன்றைக்குப் பல குடும்பங்களில் வெளிநாடுகளில் போய் படித்து, அங்கேயே செட்டிலான இளைஞர்கள் உண்டு. திரும்பி வந்தவர்களும் உண்டு. நகர்ப்புறங்களில் ஆங்கிலப்பள்ளிகளில் மட்டுமே படித்து வளர்ந்தவர்களும் உண்டு. வீட்டில் மட்டுமே தமிழ் பேசும் வாய்ப்புள்ளவர்கள் அவர்கள். பல நிறுவன உயர்பதவிகளில் இருக்கும் தமிழ் இளைஞர்களுக்கு தமிழ் புரியும்; பேசுவது கொச்சையாக இருக்கும். சரளமாக தமிழ் பேச வரவில்லை என்பது குறித்து கவலை கொள்ளும் இளைஞர்கள் உண்டு.

இவர்கள் எல்லாம் தமிழ் பேசாததாலேயே, பழகாததாலேயே இவர்களுக்குத் தமிழ் மேல் காதல், ஆர்வம் இல்லை என்று அர்த்தமில்லை. தமிழைப் பேசிப் புழங்குவதற்கான தேவை, அவர்களைப் பொறுத்தவரை வெகுசில இடங்களிலேயே இருக்கிறது. இப்படிப்பட்டவர்களை, தமிழ் சினிமாவிலும் சரி, நேர்ப்பேச்சிலும் சரி ஒரு மாதிரி “பீட்டர்” என்று வகைப்படுத்தி, கிண்டல் அடிப்பதையே செய்திருக்கிறோம்.

அதேசமயம், மறைமுகமாக இந்தத் தன்மையை ரசிக்கவும், மேட்டிமையின் வெளிப்பாடாக உணர்ந்துகொள்ளவும் பின்பற்ற முடியுமா என்று முயன்றும் பார்த்தவர்கள் உண்டு. இன்றைய பல்சமூக, பல் இன வாழ்க்கைச் சூழலில், இத்தகைய ஓர் காஸ்மோபாலிடன் கலாசாரம் கவர்ச்சிகரமாக இருப்பதைப் பார்க்க முடிகிறது.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் பேஜ் 3 கேரக்டர்கள் இவர்கள். பேஜ் 3 பிரபலங்கள் ஆக, பலர் முயல்கின்றனர்.

ஏழாம் அறிவில், முருகதாஸ், இளைஞர்கள் மத்தியில் உள்ள ஆர்வத்தை நன்கு பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார். ஸ்ருதி, அந்தக் கேடரக்டருக்குப் பொருத்தமானவர். ஓர் அழகான முரணை உள்ளே வைத்து, கேரக்டரை இன்னும் மெருகேற்றி இருக்கிறார்.

அதாவது, வாழ்க்கை அவுட் லுக், நடை உடை பாவனை, பேச்சு எல்லாம் இன்றைய பேஜ் 3 மாடர்னிட்டி; உள்ளே உள்ளது, தீராத தமிழ் உணர்வு. இந்த முரண், இந்தக் கதைக்கு மிகவும் தேவை. ஒருபக்கம், சூர்யா நல்ல தமிழில், உணர்ச்சிப் பொங்க பேசவும் நடிக்கவும் வேண்டும்; அவருக்கு ஜோடியானவர் மாடர்னிட்டியோடு, தமிழ் உணர்வு கொண்டவராக இருக்கவேண்டும்.

இன்றைக்கு சினிமா பார்க்கப் போகும் இளம்பெண்கள், தம்மை, ஸ்ருதிஹாசனோடு இனங்கண்டு கொள்பவர்கள் ஏராளம். பயங்கரமாக கிண்டல் அடிக்கப்படும் அவரது “ஷ” மொழி, ஸ்டைல் மொழியானால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, அசினை, இன்றைய பெண்களின் பிரதிபலிப்பாக நினைத்திருந்தேன். ஸ்ருதி, அடுத்த கட்டம். இன்றைய 15 – 22 வயதுள்ள நகர்புறப் பெண்களின் பிரதிபலிப்பு. ஏழாம் அறிவின் அபரிமிதமான தமிழுணர்வுக்கு பின்புலமாக இருந்து வலிமை சேர்க்க, ஸ்ருதியின் நுனிநாக்கு, கடித்துத் துப்பும் தமிழை பயன்படுத்தியிருப்பது முருகதாஸின் புத்திசாலித்தனம்.

பிடிக்கறதோ இல்லையோ, ஸ்ருதி வகை தமிழுணர்வு, இன்றைய நிஜம். அதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்!

கூடங்குளமும் தி.நகரும்

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக, கூடங்குளம் அணுமின் நிலையமும் தி.நகர் கடைகள் சீல் வைக்கப்பட்டதும் பெருமளவில் எல்லா செய்திப் பத்திரிகைகளின் இடங்களையும் ஆக்கிரமித்துக்கொண்டன. தவறில்லை. இரண்டுமே முக்கியமானவை.  பேசப்படவேண்டியவை.

இரண்டு பிரச்னைகளின் பின்னிருந்து செயல்படும் ஒரு மனோநிலைதான் என்னை ரொம்பவும் இம்சிக்கிறது.

கூடங்குளம் அணு மின் நிலையத்தை பல கோடி ரூபாய் செலவில் கட்டியாயிற்று. உற்பத்தி தொடங்க வேண்டியதுதான் பாக்கி. இந்த நிலையில், அணுமின் நிலைய விபத்துக்கள் பற்றி ஏன் பேச வேண்டும்?  செயல்பட வேண்டியதுதானே? இல்லை என்றால், மொத்த செலவும் வேஸ்ட். மொத்த புத்திசாலித்தனமும் வீண்.

பிரச்னை வரும் போது பார்த்துக்கொள்ளலாம். விபத்து நடக்க வாய்ப்பில்லை என்று சொல்வதற்கு முன்னாள் குடியரசுத் தலைவர் வந்து சர்டிபிகேட்டும் கொடுத்துவிட்டார்.

அணுமின் ஆதரவாளர்களுக்கு மக்களின் தார்மிக எதிர்ப்பு பயங்கர எரிச்சலாக இருக்கிறது. அதனால்தான், கல்லணையையும் பெரிய கோவிலையும் நெல்லையப்பர் கோவிலையும் உதாரணமாகக் காட்டிப் பேசுகிறார் கலாம்.

இதேபோன்ற, “வந்தால், பார்த்துக்கொள்ளலாம்” மனப்பான்மைதான், தி.நகர் கடைகள் விஷயத்திலும் செயல்படுகிறது.  ரங்கநாதன் தெருவில் ஒரு கடை தீப் பிடித்ததே, ஏதேனும் காப்பாற்ற முடிந்ததா என்ற கேள்வி எழவே மாட்டேன் என்கிறது.

கடைகளை சீல் வைத்ததால், பெருத்த நஷ்டம். பல ஆயிரம் தொழிலாளர்கள், வேலை தேடிச் சென்னை வந்தவர்கள் நடுத்தெருவில் நிற்கிறார்கள். அவர்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது. இதற்கு மாநில அரசு தீர்வு காண வேண்டும் என்று பேசுகிறார்கள், வியாபாரிகள் சங்கத் தலைவர்கள்.

அவர்கள் ஒரு படி மேலே போய், இதையும் சொல்கிறார்கள்: தி.நகர் முழுவதையும் வணிக வளாகமாக (ஸ்பெஷல் ஸோன்) அறிவித்து, நகர்புற கட்டடங்களின் சட்ட விதிகளில் இருந்து விலக்கு அளியுங்கள். ஏனெனில், அங்கே வியாபாரம் கொழிக்கிறது. அரசுக்கு ஏராளமான வரி செலுத்தப்படுகிறது. அங்கே வணிகம் தடைபட்டால், அரசுக்கு வரிவருவாய் குறைந்துவிடும் என்றெல்லாம் மறைமுக மிரட்டல்கள்.

ஆனால், இங்கும் அடிப்படை கேள்வி கேட்கப்படுவதில்லை. அல்லது, மிக சாமர்த்தியமாக, மெளனம் காக்கப்படுகிறது. இவ்வளவு பெரிய கட்டடங்களைக் கட்டி இருக்கிறீர்களே? பல லட்சம் மக்கள் புழங்குகிறார்களே? அவர்களுடைய பாதுகாப்புக்கு உகந்தாற்போல், என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள்? தீ ஏற்பட்டால்? நெரிசல் ஏற்பட்டால்? வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டால் என்ன சேஃப்டி நடவடிக்கைகள் அங்கே அமலில் இருக்கிறது?

அதெல்லாம் பார்த்துக்கொள்ளலாம். முதலில், கடை நடத்த அனுமதியுங்கள். சீலை நீக்குங்கள். மற்ற விஷயங்களைச் சரிசெய்யலாம் என்று சொல்கிறார்கள். இவையெல்லாம் கட்டடங்களைக் கட்டும்போதே செய்திருக்க வேண்டியவை. இனியேனும் செய்துவிட்டு, கடைகளைத் திறவுங்கள் என்பதுதான் சரியான அணுகுமுறை.

ஆனால்,  “நடந்த பின்னால் பார்த்துக்கொள்ளலாம்” என்ற மோசமான நம்பிக்கை எவ்வளவு அபாயமானது? அணுவிபத்து நடந்தபின்னர் பார்க்க என்ன இருக்கிறது? இரண்டு கட்டடங்கள் தீ பிடித்துக்கொண்டால், உயிரிழப்புக்களைத் தடுத்துவிட முடியுமா?

ஒன்று அரசு; மற்றொன்று தனியார். இரண்டிலுமே பிடிவாதமும் உள்நோக்கங்களுமே நிறைந்திருக்கின்றன. மேலும், தெரிந்தே செய்யும் தவறுகள் இவை. உலக நாடுகள் எங்கும் அணு உலைகளை மூடிக்கொண்டு இருக்கும்போது, இங்கே நடத்த வேண்டும் என்கிறார்கள். பாதுகாப்பான கடைகள் வேண்டும், வசதியான ஷாப்பிங் அனுபவம் வேண்டும் என்ற எண்ணம் பெருகும் வேளையில், புறாக்கூண்டுகளைக் கட்டி வணிகத்தோடு, அபாயத்தையும் சேர்த்தே வளர்க்கிறார்கள் தி.நகர் கடைக்காரர்கள்.

நீதிமன்றமும் மக்கள் சக்தியும் இல்லை என்றால், இவர்களெல்லாம் நம்மை கால் தூசுக்குக் கூட மதிக்க மாட்டார்கள் என்பது மட்டும் நிஜம்.