பொன்னியின் செல்வன் ஓவியங்கள்!

கல்கி வார இதழில் மீண்டும் பொன்னியின் செல்வன், ஆகஸ்ட் 3, 2014 இதழ் முதல் ஆரம்பிக்கப் போகிறோம். சென்ற இதழில் இருந்து விளம்பரங்கள் ஆரம்பித்துவிட்டன. நாளை வரவிருக்கும் கல்கி இதழில், மேலும் பல விவரங்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன.

கிட்டத்தட்ட ஜுரம் மாதிரி வேலை நடந்துகொண்டு இருக்கிறது. ஒவ்வொரு தலைமுறையைச் சேர்ந்தவர்களும் பொன்னியின் செல்வனைப் படித்துச் சுவைத்து இருக்கிறார்கள். கடைசியாக வெளியிட்டது 1998 – 2002 காலகட்டத்தில். ஓவியர் பத்மவாசன் அப்போது பொ. செ. தொடருக்கு ஓவியங்கள் தீட்டியிருந்தார்.

பொ.செ. நாவல் எப்படி சுவாரசியமானதோ, அவ்வாறே அதற்குத் தீட்டப்பட்ட ஓவியங்களின் கதைகளும் மனம் கவர்பவை.

1950-54 காலகட்டத்தில்தான் முதல்முறையாக பொன்னியின் செல்வன், கல்கி வார இதழில் வெளியானது. அக்டோபர் 29, 1950 இதழ் முதல் நாவல் தொடங்கியது. அதற்கு முந்தைய இதழான அக்டோபர் 22, 1950 இதழில், அரைப்பக்க விளம்பரம் மட்டுமே வெளியாகி இருக்கிறது. அடுத்த வாரமே இவ்வளவு பெரிய நாவல் தொடங்கப்பட்டது.

எழுத்தாளர் கல்கி குடும்பத்தில் விசாரித்தபோது, ஐந்து பாகங்கள் கொண்ட இவ்வளவு பெரிய நாவலுக்கு எவ்வித குறிப்புகளோ, தயாரிப்புகளோ இருந்தாற்போல் தெரியவில்லை என்கிறார்கள். அத்தனை தயாரிப்புகளும் கல்கி அவர்களின் நினைவில் மட்டுமே இருந்திருக்க வேண்டும்.

முதல் இதழ் தொடங்கி ஓவியர் மணியம் ஒவ்வொரு காட்சியையும் தீட்டிக்கொடுத்திருக்கிறார். அக்காட்சிகளில் உள்ள சம்பவங்கள், விவரங்கள், முகத்தில் காட்டப்படும் உணர்ச்சிகள், பின்னணிகள் அனைத்துமே எழுத்தாளர் கல்கி அவர்களின் நேரடி மேற்பார்வையிலேயே ஓவியர் மணியம் வரைந்தாராம். பல சமயங்களில் மணியன் வரைந்த ஓவியங்களை, கல்கி அவர்கள் மாற்றித்தரச் சொல்ல, அவற்றை அவரது வீட்டில் இருந்தபடியே மாற்றிக்கொடுத்துள்ளாராம்.

அதேபோல், சமீபத்தில் ஓவியர் வேதாவின் மகள் திருமணத்தில், ஓவியர் மணியம் அவர்களின் மகன் ஓவியர் மணியம் செல்வன் அவர்களைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவர் ஒரு செய்தி சொன்னார். மணியம் ஒரு வாளை வரைந்து எடுத்துக்கொண்டு போய், கல்கி அவர்களிடம் காண்பிக்க, அதன் அழகையும் மிடுக்கையும் கண்ட கல்கி, தன் கதையில் அதை மிகப் பொருத்தமாகச் சேர்த்துக்கொண்டாராம்.

இன்றைக்கும் மணியன் அவர்களின் ஓவியம் கொண்டாடப்படுகிறது.

————

1968ல் மீண்டும் பொன்னியின் செல்வன் தொடராக வெளியிடப்பட்டது. இம்முறை பொன்னியின் செல்வனுக்கு ஓவிய மகுடம் சூட்டியவர் ஓவியர் வினு. இவரது ஓவியங்களுக்கு அடிப்படை ஓவியர் மணியம் வரைந்த ஓவியங்கள்தாம். 

1998ல் பொன்னியின் செல்வன் மீண்டும் தொடராக வெளியானபோது, ஓவியங்களால் அலங்காரம் செய்தவர் ஓவியர் பத்மவாசன். உண்மையிலேயே அவரது ஓவியங்கள் எல்லாம் அலங்காரங்கள்தாம். வண்ணக் கலவையிலும் சின்னச் சின்ன விவரங்களைக் கொண்டுவருவதிலும் அசாத்திய நுணுக்கம் பத்மவாசன் படங்களில் உண்டு. 

பத்மவாசனோடு பேசிக்கொண்டு இருந்தபோது, அவர் எடுத்துக்கொண்டு சிரத்தை என்னை வியப்பில் ஆழ்த்தியது. ஒரு பதிப்பாளர் அவருடைய படங்களைக் கொண்டு பொன்னியின் செல்வன் நூலைப் பதிப்பிக்க திட்டமிட்டு இருந்தாராம். அதில் படங்களை முன்னும் பின்னுமாக வைத்து, லே-அவுட் செய்திருந்தாராம். பாத்திரங்களை உருவாக்கிச் செல்லும்போது, கல்கி தம் எழுத்தில் எத்தகைய ஒரு முன்னேற்றத்தை, முதிர்ச்சியைக் கொண்டு வந்துள்ளாரோ, அதேபோன்றே ஓவியங்களில் அத்தகைய மாற்றங்களைப் பதிவு செய்திருந்தாராம் பத்மவாசன். அது தலைப்பாகையாகவோ, வாளை வைத்துக்கொள்ளும் விதமாகவோ, பெண் பாத்திரங்களின் உடையலங்காரமாகவோ இருக்கலாமாம். முன்னும் பின்னும் படங்கள் பதிப்பிக்கப்பட்டால், ஓவியத்தில் உள்ள மாற்றங்களை வாசகர்கள் உணர்ந்துகொள்ள முடியாது என்றார்.

இந்த நாவலுக்கு ஓவியம் தீட்டிய அனைத்து ஓவியர்களுமே அதனோடே பயணம் செய்து, தம் மனத்துக்குள் பாத்திரங்களையும் காட்சிகளையும் உணர்ச்சிகளையும் சம்பவங்களையும் யூகித்துக்கொண்டு, கோடுகளின் வழியாகத் தம் மேதமையைப் பொழிந்திருக்கிறார்கள்.

——–

இப்போது அதேபோன்றதொரு சவால், ஓவியர் வேதாவுக்குக் காத்திருக்கிறது. பிரபஞ்சன் எழுதிவரும் “மகாபாரத மாந்தர்கள் – காலம் தோறும் தர்மம்” தொடரிலேயே வேதாவின் ஓவியங்கள் வாசகர்களைக் கொள்ளை கொண்டிருக்கிறது.

இப்போது, பொன்னியின் செல்வன் தொடருக்கு, ஓவியர் வேதா அவர்களே ஓவியங்களைத் தீட்டிக் கொடுக்கிறார். ஒவ்வொரு படமாக அவரிடம் இருந்து வாங்கும்போதும் புதிய அனுபவமாக இருக்கிறது. 

கதையில் படித்த காட்சிகள், எண்ணங்கள் ஆகியவை, ஓவியரின் கைத்திறனில் பரிமளிக்கும்போது, அதன் வீச்சு விசேஷமாக இருக்கிறது. அவரது படங்களைக் கொண்டே அத்தனை விளம்பரங்களும் தயாராகிக்கொண்டு இருக்கின்றன. பேனர்கள், பஸ் பேக் பேனல்கள், போஸ்டர்கள், ரயிலுக்குள் ஸ்டிக்கர்கள், விளம்பர வாகனங்கள், நாளிதழ் விளம்பரங்கள் என்று அடுத்த இருபது நாள்களும் தமிழகமெங்கும் பொன்னியின் செல்வன் ஓவியங்கள் வலம் வரப்போகின்றன.

ஆகஸ்ட் 3,014 முதல், கல்கி வார இதழில், எழுத்தாளர் கல்கி அவர்கள் வழங்கும் இலக்கிய அனுபவத்தோடு ஓவிய எழிலும் வாசகர்களுக்கு விருந்தாகக் காத்திருக்கிறது.