பிரம்மராஜன் வலைப்பதிவு எழுதுகிறார்

இன்று வலையில் என்னவோ தேடிக்கொண்டு இருந்தபோது, கவிஞர், மொழிபெயர்ப்பாளர் பிரம்மராஜனின் ஆங்கில வலைப்பதிவு தென்பட்டது.

படித்துப் பாருங்கள்.

மஞ்சள் வெயில் – விமர்சனம்

தமிழில் காதல் நாவல்கள் மிகவும் அருகிவிட்ட நிலையில், யூமா வாசுகியின் மஞ்சள் வெயிலையும், ஜெ.பிரான்சிஸ் கிருபாவின் கன்னி நாவலையும் படியுங்கள் என்று நண்பர்கள் பரிந்துரைத்தார்கள்.

மஞ்சள் வெயில் 132 பக்கமுள்ள நாவல். கதிரவன் என்ற ஓவியன் / எழுத்தாளனின் ஒருதலைக் காதலைப் பேசும் நாவல் இது.  தினச்செய்தி என்ற பத்திரிகை அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஜீவிதா. அவள், கதிரவன் ஓவியங்களின் வாசகி. அதைத் தெரிந்துகொண்டு, ஜீவிதாவோடு மனதளவில் காதல் கொள்ள முயலும் கதிரவன் கதை இது.

நாவல் முழுவதும் கதிரவன், ஜீவிதாவுக்கு எழுதும் கடிதம் போன்றே அமைக்கப்பட்டிருக்கிறது.

இதில் கதிரவன் ஒரு introvert. தனனையே நொந்துகொள்ளும் தன்மையுடையவன். நாவல் முழுவதும் ஒருவிதத் தனிமைப் பினாத்தல் எக்கச்சக்கமாக இருக்கிறது.  கதிரவன் இரண்டு மூன்று வேலையைத்தான் நாவல் முழுவதும் அதிகம் செய்கிறார்: ஒன்று கடற்கரைக்குப் போய், கடலோடும் மணலோடும் மனத்தாங்கலைப் பகிர்ந்துகொள்கிறார்.  இரண்டு, அங்கே போவதற்கு முன்பு மறக்காமல் குடித்துவிடுகிறார். 

இந்த நாவலை எப்படி அணுகவேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. தனிமையும் சுயவெறுப்பும் மிகுந்த loner ஒருவனின் கதை இது. அப்படியானால், இதை பரிதாபத்தோடு அணுகவேண்டுமா? தான் தனி, உலகம் தனி என்று விலகியிருப்பது அல்லது உலகியலோடு ஒட்டமுடியாமல் இருப்பதை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

இந்த நாவலில் இரண்டு அம்சங்கள் பாராட்டுக்குரியன: கான் சாகிபு என்றொரு சின்ன பாத்திரம் வருகிறது. மிக அழகான மனத்தை நெருடும் பாத்திரம் அது. இரண்டு, சந்திரன் என்றொரு பத்திரிகை உதவி ஆசிரியர் வருகிறார். அதிகம் மது குடித்தபின், ஒரு இரவு எப்படி கதிரவனை அவர் சமாதானப்படுத்த முடியாமல் தவிக்கிறார் என்றொரு காட்சி வருகிறது. மிக அழகாக உருவாக்கப்பட்ட காட்சி அது.

மிக எளிமையான காதல் கதை. ஆனால், அதீத தனிமையையும் தேவையற்ற வார்த்தைச் சிடுக்குகளையும் வலிந்து திணித்து, அதற்கு ஒரு தீவிரத்தன்மையை உருவாக்க ஆசிரியர் முனைந்திருப்பதாகவே தோன்றுகிறது.

ஒரு நாவலாக எனக்கு இந்தப் படைப்பு அவ்வளவாக திருப்தி தரவில்லை.

வெளியீடு: அகல், 342, டி.டி.கே. சாலை, சென்னை 14, தொ.பே: 28115584.

விலை: ரூ.65.00

எப்படி புத்தகம் எழுத வேண்டும்?

என்னிடம் பேச வரும் பலரிடம் எழுதும் ஆர்வம் இருப்பதைப் பார்க்கிறேன். அது ஒரு பெரிய வேலையா என்ன என்ற ஒருவிதமான சுலபமாக எடுத்துக்கொள்ளும் தன்மையும் இருக்கிறது.  அப்படி பேச வருகிறவர்கள், பத்திரிகைகளில் நிறைய கட்டுரைகளை எழுதி இருப்பார்கள்.  அதனால் புத்தகம் எழுதுவது மிகவும் லகுவான வேலை என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

பொறுமையாக நேரம் செலவிட்டுப் பேசத் தொடங்கும்போதுதான், புத்தகம் என்று எதைச் சொல்கிறோம், அதை எழுத எப்படி அணுக வேண்டும், சிந்திக்க வேண்டும், உழைக்க வேண்டும் என்றெல்லாம் புரியத் தொடங்குகிறது. இதனால் நான் கண்ட பலன்கள் இரண்டு: அடுத்த முறை என்னைப் பார்க்கவே வரமாட்டார்கள். பார்த்தாலும், எழுதணும்னு நினைச்சேன், டைமே இல்ல சார் என்பார்கள்.

புத்தகம் எழுதுவதைப் பற்றி பல தவறான அபிப்பிராயங்கள் இருக்கின்றன. அதில் இருந்துதான் இத்தகைய எதிரிவினைகள் ஏற்படுகின்றன. முக்கியமானவை:

1. ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை என்ன சொல்லப் போகிறோம் என்ற தெளிவு புத்தகம் எழுதத் தொடங்கும் முன்பே இருக்க வேண்டும். விரிவாக யோசிக்கத் தெரியவேண்டும். எழுத எடுத்துக்கொண்ட விஷயத்தின் பல்வேறு முகங்களை பார்க்கத் தெரியவேண்டும்.

2. தனக்கான நோக்குநிலை என்ன என்பதைப் பற்றியும் தெளிவு வேண்டும். எந்த ஒரு ஸ்டாண்ட்டும் எடுக்காமல், உள்ளது உள்ளபடி தெரிவிக்க விரும்பினாலும் அதுவும் ஒரு நோக்குநிலைதான். இந்த நோக்குநிலை தடுமாற்றமில்லாமல் இருந்தால்தான், எழுத்தின் பின்னணியில் இயக்கும் தொனி சீராக இருக்கும்.

3. அதிரடி வாக்கியங்கள், வெறும் அனுமானத்தின் பேரில் எழுதப்படும் வாக்கியங்கள் எல்லாம் எவை என்பதைப் பற்றிய தெளிவு வேண்டும். இப்படிப்பட்ட வாக்கியங்களைப் பயன்படுத்தும் முன்பு, அதற்கான உரிய ஆதாரமோ, ஆவணங்களோ இருக்கிறதா என்று உறுதி செய்துகொள்ள வேண்டும்.

4. மிகவும் பொறுமை வேண்டும். பத்திரிகை கட்டுரை எழுதுவதில் காட்டக்கூடிய வேகம் இதற்கு எடுபடாது. அத்தியாயம் அத்தியாயமாக, ஒரு செடி வளர்ந்து தழைப்பதைப் போல், ஒரு புத்தகம் வளர முடியும். திட்டமிடலும், தொடர்ந்த உழைப்பும் மிக மிக அவசியம். எழுத எழுத மாளவே மாள மாட்டேன் என்கிறதே என்று எரிச்சல் எரிச்சலாக வரும்.  புத்தகத்துக்கு இந்த எரிச்சல் எதிரி.

5. எழுதும்போதுதான், நாம் எடுத்துக்கொண்ட விஷயத்தில் நமக்கு இருக்கக்கூடிய தகவல் போதாமை, ஞானம் போதாமை எல்லாம் பளிச்சென்று தெரியவரும். அதுவரை ஒரு விஷயத்தைப் பற்றி எல்லாம் தெரிந்ததாக நினைத்துக்கொண்டு இருந்ததெல்லாம், 50 பக்கம் தாண்டும்போதே வற்றிப்போகும். திடீர் வெறுமை படர்ந்துவிடும். நமக்கு இவ்வளவுதான் தெரியுமா? என்று நம் மேலே நமக்குச் சந்தேகம் ஏற்பட்டு விடும்.  இதற்கு இருக்கும் ஒரே மருந்து, எடுத்துக்கொண்ட தலைப்பு பற்றி படிப்பதும், மேலும் மேலும் படிப்பதுதான்.

6. எழுதுவதைத் தவிர எழுதுவதற்கு வேறு குறுக்கு வழியே இல்லை. எழுத்தைப் பற்றிய பிரமிப்போ, அயர்வோ ஏற்பட்டுவிட்டால், எழுத்தைப் பற்றி பகல்கனவு கண்டுகொண்டு இருக்கலாம்.

7. எழுதும் செய்தியில் நிரம்ப காதல் வேண்டும். கடனுக்குப் பேனா பிடிக்கக் கூடாது. எழுதத் தொடங்கும்போது காதல் இல்லையென்றாலும் எழுதிக்கொண்டே போகும்போதாவது அந்த ஆர்வத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில், முடிக்கும்போது, மனத்தில் மகிழ்ச்சியோ உற்சாகமோ பூரிப்போ இருக்காது. வாங்கின கடனைத் திருப்பிச் செலுத்திய ஆசுவாசமும் நிம்மதியும்தான் இருக்கும்.

இயல்பாகவே சில பேருக்கு மேலே சொன்ன தகுதிகள் எல்லாம் இருக்கின்றன. அவர்களிடம் பிரச்னையே இல்லை. 15 நாள், 20 நாளில் ஒரு புத்தகத்தை எழுதிக் கொடுத்துவிடுவார்கள்.

மற்றவர்களுக்கு இப்போது நான் வைத்திருக்கும் ஒரே உபாயம் இதுதான்: மேலே உள்ள எதையும் அவர்களுக்குச் சொல்வதில்லை!

ஒரு செயதி பற்றி நீங்கள் எழுத விரும்பினால், அதில் என்னென்னவெல்லாம் எழுதப்படலாம் என்ற ஒரு டேபிள் ஆஃப் கண்டெண்ட் மட்டும் எழுதிக்கொண்டு வாருங்கள் என்று சொல்லி அனுப்புகிறேன். அப்புறம், அவர்களோடு ஒரு நீண்ட அமர்வு. பின்னர் ஒவ்வொரு அத்தியாயமாக எழுதிக்கொண்டு வரச்செய்தல்.  சின்னச் சின்ன கோல்களை உருவாக்கி அதை அடைய ஒத்துழைத்தல்.

ஒரு பதிப்பாளராக இப்படி நேரம் செலவிடுவது, என் பணியின் ஒரு பகுதியாகவே தோன்றுகிறது. எல்லாம் ரெடிமேடாக கிடைத்துவிட்டால் அப்புறம் அதில் சவாலே இல்லையே!