கரோனா: கிராமமும், நகரமும்

‘நேசமுடன்’ முதல் இதழில், கரோனாவால் கிராமப் பொருளாதாரத்தில் ஏற்படவிருக்கும் பாதிப்புகள் பற்றி தெரிவித்திருந்தேன். பிசினஸ் ஸ்டாண்டர்டு இதழ் இதே விஷயத்தைப் பற்றி எழுதியிருக்கிறது. அது, மேற்கு வங்க மாநில கிராம சமூகங்களில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றத்தைப் பற்றிப் பேசுகிறது.
கிராம சமூகங்களில் என்னென்ன சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன தெரியுமா?
1. முதலில், வெளியூர்களில் இருந்து வந்த மக்களை உள்ளூர்க்காரர்களே சந்தேகத்துடன் பார்க்கின்றனர். வெளியூரில் வந்தவர்கள், கரோனாவைக் கொண்டுவந்திருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. அதனால், அவர்கள் ‘கண்காணிக்கிறார்களாம்.’
2. அடுத்த சில நாட்களில் வெளியூரில் வந்தவர்களிடம் உள்ள சேமிப்புத் தொகை கரைந்துவிடும். அப்புறம் என்ன செய்ய முடியும்? மாநில அரசு வழங்கும் நிதி உதவியை நம்பியே வாழவேண்டும். அது எத்தனை நாட்களுக்குத் தொடரும் என்று தெரியவில்லை.
3. கிராமப் பகுதிகளில் உள்ள பல சிறு மளிகைக் கடைகள் நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டன. பெரிய வணிகர்களிடம் இருந்து அத்தியாவசிய உணவுப் பொருட்களைக் கூட அதிக விலைக்கு வாங்க வேண்டியிருப்பதால், இவர்களால் கடைகளை நடத்த முடியவில்லை.
4. கிராமங்களுக்குத் திரும்பிவந்துள்ள புலம்பெயர் தொழிலாளர்கள், உள்ளூர் பொருளாதாரத்தில் மிகப்பெரும் சுமையாகப் பார்க்கப்படுகிறார்கள். விவசாயத்தில் ஈடுபடுவதற்குத் தேவையான பயிற்சிகள் இவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு வேறு தொழில்களில் பயிற்சி உண்டே தவிர, விவசாயத்தில் அல்ல. ஆனால்,
கிராமங்களில், விவசாயப் பணிகள் மட்டுமே கிடைக்கும் என்பதால், இவர்கள் எப்படி புதிய சூழலுக்கு பழகுவார்கள்?
5. கிராமங்களில் தொழிலாளர்களின் எண்ணிக்கை திடீரென பெருகுவதால், விவசாயம் உள்பட, பல துறைகளிலும் நிலவி வரும் கூலித் தொகை குறைந்துபோய்விடும். இவர்கள் எல்லோரும் வேறு வழியில்லாமல் 100 நாள் வேலைத்திட்டத்தைத் தான் நம்பியிருக்க வேண்டும். ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளில், இத்திட்டத்தின் கீழ் 40 முதல் 45 நாட்களுக்குத் தான் வேலை கொடுக்க முடிந்திருக்கிறது. மேலும் தினக்கூலி என்பது விவசாயக் கூலியை விடக்
குறைவானது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
6. கூலிவேலை செய்வதற்கான ஆட்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டதால், புலம்பெயர் தொழிலாளர்கள், கிராமங்களில் மேலும் சுரண்டப்படுவார்கள்.
7. மேற்குவங்கத்துக்குத் திரும்பிவரும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், சுமையாகவும் வேண்டாத விருந்தாளியாகவுமே பார்க்கப்படுகிறார்கள்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போன்றதுதான், இந்த மேற்கு வங்க உதாரணம்.
நகரம் வேறு சில பிரச்னைகளைச் சந்திக்கிறது.
1. கேரளத்தில், மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள், ஊரடங்கு காலத்தில் திண்டாடிப் போயிருக்கிறார்கள். இருவர் தற்கொலை செய்துகொண்டதாக செய்தி.
கேரள முதல்வர், மருத்துவ அறிவுரையின்படி, இவர்களுக்கு மது வழங்கலாம் என்று கருத்து சொல்லி, கடும் விமர்சனத்தைச் சந்தித்துள்ளார்.
2. கரோனா தொற்று முதலில் ஏற்பட்ட சீனாவின் வூஹான் மாகாணத்தில், கடந்து மூன்று மாதங்களில் தம்பதிகளிடையே பேச்சுவார்த்தை தடித்து, விவாகரத்து வரை சென்றிருக்கும் செய்திகள் வந்துள்ளன.
3. வீட்டிலேயே இருப்பதால், குடும்ப வன்முறை, பாலியல் தொந்தரவுகள் ஏற்படலாம் என்று எச்சரிக்கும் சில செய்திகளையும் படிக்க நேர்ந்தது.
4. 2008 பொருளாதார தேக்கத்துக்குப் பின்னர், மீண்டும், ஒருவித அநித்திய சூழலைப் பார்க்கிறேன். வேலை இருக்குமா, இருக்காதா என்பதுதான் பலரது மனத்தில் முதற் கேள்வி. யாருமே தவிர்க்கமுடியாத, இன்றியமையாத நபர் கிடையாது என்ற உண்மை தெளிவாகப் புரிகிறது. தான் இருந்தால் தான் குறிப்பிட்ட வேலை
நடக்கும் என்று இனி நம்புவதற்கில்லை. விளைவு, விரக்தி.
5. நகரங்களில் மறுசீரமைப்பும் மறுகட்டமைப்பும் எப்போது தொடங்கி, நிலைமை சீரடைவதற்கு எத்தனை காலம் ஆகும் என்பதையும் யாராலும் அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை.
ஒருமாதிரியான நிலையற்ற தன்மை. எப்படி மீளப் போகிறோமோ?

புரட்டிப் போடும் கரோனா

கரோனா கொள்ளைநோயில் இருந்து தப்பிப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் ஐந்தாவது நாள் இன்று. இதற்குள் எதிர்பாராத இரண்டு மூன்று விஷயங்கள் நடந்துவிட்டன. ஒரு சின்ன நகர்வு தான். வீட்டுக்குள் அனைவரும் பத்திரமாயிருங்கள் என்று சொல்லப்பட்டது. அவ்வளவுதான். ஆனால், தொடர்நிகழ்வாக அது எவ்வளவு தூரம் பல்வேறு இடர்களை ஏற்படுத்துகிறது!
தில்லியில் இருந்து பல ஆயிரம் தொழிலாளர்கள் கால்நடையாகவே ஊருக்குத் திரும்புகிறார்கள். அங்கே தான் அப்படியென்று பார்த்தால், கேரளத்தில் இருந்து பல கட்டடத் தொழிலாளர்கள் தமிழகம் நோக்கித் திரும்பிவருகிறார்கள். அதுவும் இரயில்வே இருப்புப்பாதை வழியாகவே. கோவையில் அவர்கள் தடுத்து நிறுத்தப்படும் செய்திகள் வருகின்றன.
இன்னொரு புறம், கேரள- கர்நாடக எல்லைப் பகுதியில், சாலைகளை மறித்து, கர்நாடக காவல்துறை மண்ணைக் கொட்டி தடுப்புகள் ஏற்படுத்தியுள்ளன. அத்தியாவசியத் தேவைகளுக்காக கூட பயணம் மேற்கொள்ள முடியவில்லை, விரைந்து நடவடிக்கை எடுங்கள் என்று கேரள முதல்வர், மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
கோவாவில் தமிழக மீனவர்கள் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை மீட்க நடவடிக்கை எடுங்கள் என்று தமிழக மீனவ கிராமம் ஒன்றில் இருந்து தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
வெளியூர்களில் இருந்து வருகிறவர்களை பல கிராமங்கள், ஊருக்குள் அனுமதிக்க மறுப்பதாகவும் செய்திகள் சொல்கின்றன. திடீரென்று நான் வேறு; நீ வேறு என்ற பிரிவினை மனப்பான்மை தோன்றியிருப்பது ஆச்சரியமளிக்கிறது.
பல உண்மைகளைச் சொல்லும் செய்திகள் இவை. வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்குப் பஞ்சம் பிழைக்க வந்தவர்களைப் போலவே, தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்திருப்பது இப்போது துலக்கமாகத் தெரிகிறது. இவர்கள் நிரந்தரமாக நகர்ந்தவர்கள் அல்லர்; கூலிகளாக, தாற்காலிக பணியாளர்களாக, ஒப்பந்தப் பணியாளர்களாக சென்றவர்கள்.
இவர்கள் மீண்டும் தம் தாய்மண்ணுக்கே திரும்புகிறார்கள். அந்தக் காலத்தில் எம்டன் குண்டு போட்ட போது, சென்னையைத் துறந்து பலர் தத்தமது கிராமங்களுக்கு திரும்பியதாக சரித்திரத்தில் படித்திருக்கிறேன். இப்போது அதேபோன்றதொரு நிகழ்வு நடந்துகொண்டிருக்கிறதோ என்ற எண்ணமே மேலிடுகிறது.
ஒவ்வொரு ஊரிலும் ஒரு மாதிரியான ரீ அரேஞ்ச்மென்ட் நடந்துகொண்டிருக்கிறது. ஊருக்குள் திரும்பி வருகிறவர்கள், பொருளாதார அழுத்தத்தை இன்னும் அதிகப்படுத்தத் தான் போகிறார்கள். இவர்களால் உள்ளூரில் போதிய வருவாய் ஈட்டமுடியவில்லை என்றுதானே வேறு வெளியூர்களுக்கு வேலை தேடிப் போனார்கள்? இவர்களால் எப்படிப்பட்ட சமூக அழுத்தங்கள் ஏற்படப் போகின்றன என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
நமது சமூக, பொருளாதாரக் கட்டமைப்பையே கரோனா மாற்றிப் போட்டுவிடும் போலிருக்கிறதே!

லிபரல்

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ‘புதுப் புது அர்த்தங்கள்’ நிகழ்ச்சியில் சமீபத்தில் பேசும்போது, மீண்டும் என்னுடைய விருப்பமான விஷயமான ‘நடுநிலை’ பற்றி பேச வேண்டி வந்தது.

பத்திரிகையாளனுக்கு கட்சி சார்பு தேவை இல்லை. கொள்கை சார்பு தேவை இல்லை. அவனது பார்வை பாரபட்சமற்று இருப்பது மட்டுமே. ‘பாரபட்சமற்று’ இருக்கவே முடியாது. எந்தக் கருத்தும் ஏதேனும் ஒரு தரப்பினருக்குச் சாதகமாகவும் இன்னொரு தரப்பினருக்கும் பாதகமாகவும் இருக்கும். அதனால், உடனடியாக பாதிக்கப்படுபவர்கள் வசவுமழை பொழிவதைப் பார்க்க முடிகிறது. (புதுப் புது அர்த்தங்கள் நிகழ்ச்சி யூடியூபில் வலையேற்றப்பட்டவுடன், அதன் கீழே பல்வேறு நண்பர்களும் என்னை தகாத வார்த்தைகளில் அர்ச்சிப்பதைக் கண்டு முதலில் கொஞ்சம் வருத்தம் இருந்தது. தற்போது, என்ன அர்ச்சனை செய்கிறார்கள்? உள்நோக்கங்கள் கண்டுபிடிக்கிறார்கள்? என்பதைப் படிக்கும் சுவாரசியமே ஏற்பட்டுவிட்டது…அதனால், அதனை நான் தவறவிடுவதில்லை. அதன் அரசியல் மற்றும் உளவியல் பின்னணிகள் பற்றி வேறொரு சமயம் எழுதுகிறேன்).

பாரபட்சமற்று இருப்பதற்கான அர்த்தம், அனைத்துத் தரப்புகளையும் கோணங்களையும் மனத்தில் வாங்கிக் கொண்டு, ஒவ்வொன்றுக்கும் அதற்கே உண்டான நியாயமான இடத்தை வழங்குவதே. அல்லது இன்னொரு விதமாகச் சொல்ல வேண்டுமென்றால், ‘பரந்த மனத்தோடு’ அணுகுவது. சார்புத்தன்மை அற்று அணுகுவது. இதற்கு ஆங்கிலத்தில் ‘லிபரல்’ என்று பெயர். ‘தாராளவாதம்’ என்று இதைச் சொல்லிப் பார்க்கலாம் (ஆனால், அப்போதும் முழுமையான பொருள் வரவில்லை)

ஒரு பத்திரிகையாளனாக இத்தகைய குணம் அவசியம் என்பதே என் கருத்து. எல்லோரையும் ஏதேனும் ஒரு சித்தாந்த, தத்துவ, சாதிய, மத ரீதியான சிமிழுக்குள் அடக்கி, அதையே ஒரு அடையாளமாகவும் வசவாகவும் மாற்றும் உத்தி இன்று செளகரியமாக இருக்கிறது.

இதை மீறி, நல்லதொரு ‘லிபரல்’ மனப்பான்மை உடையவனாக இருப்பதே பெரிய சவால். நான் முடிந்தவரை அதைத்தான் முயற்சி செய்துவருகிறேன்.

கூருணர்வுச் சொற்கள்!

தொலைக்காட்சியில் நான் செய்திப் ப்ரியன். மெகா தொடர்கள் பார்ப்பவன் அல்ல. இரண்டு நாள்களுக்கு முன்பு, கூடத்தில் ஓடிக்கொண்டு இருந்த தொலைக்காட்சி தொடர் நடுவே சில நொடிகள் நின்றேன். பிரபலமான “சரவணன் – மீனாட்சி” தொடரின் இடையே வரும் முன்னோட்டம் அது. ஒரு முதிய பெண் இன்னொரு பெண்ணைப் பார்த்துச் சொல்கிறார் : “தமிழுக்குத்தான் இது ஃபர்ஸ்ட் நைட். உனக்கு அப்படியா என்ன…” அந்தப் பெண் கூனிக் குறுகி தவித்தாள். அதற்கு மேல் அங்கே என்னால் நிற்க முடியவில்லை. கதையில் வரும் அந்தச் சூழ்நிலையை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. இந்த வசனத்தை எழுதியவருக்கு எவ்வளவு மனவக்கிரம் இருக்கவேண்டும்? அதைக் காட்சிப்படுத்தி திரைக்கதை எழுதிய இயக்குனர் எவ்வளவு கூருணர்வு இல்லாதவராக இருக்கவேண்டும்? மக்கள் அனைவரும் பார்க்கும் ஒரு தொடரில் இவ்வளவு கீழ்த்தரமாக யோசிக்க முடியுமா? என்னால் ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை.

வார்த்தைகளை மணிமணியாகப் பயன்படுத்த வேண்டாமா? சூழ்நிலைக்கேற்ப, அங்கு நிலவும் உணர்வுகளுக்கு ஏற்ப, சொற்களைத் தட்டித் தட்டிப் பார்த்துப் பயன்படுத்த வேண்டாமா? இரண்டாயிரம் ஆண்டு பண்பாடு, வளர்ச்சி, மூத்த குடி என்றெல்லாம் பெருமைப்படுகிறோம். அப்படியானால், நம் மனங்களில் எவ்வளவு தூரம் பண்பாடு மேலோங்கி இருக்கவேண்டும்? அது நம் வார்த்தைகளில் எவ்வளவு அழகாக பிரதிபலிக்க வேண்டும்? ஏன் இல்லாமல் போச்சு நாகரிகம்? தெரியவில்லை.

பல சொற்களைப் பயன்படுத்த நான் மிகவும் சங்கடப்படுவேன். வேறு வார்த்தைகளுக்காக ரொம்ப நேரம் காத்திருந்த அனுபவமும் உண்டு. “விதவை” அப்படிப்பட்ட சொல். பயன்படுத்த மனம் ஒப்பாத சொல். பயன்படுத்தித் தேய்ந்து போன சொல் மட்டுமல்ல; அது எதிர்மறை எண்ணங்களைச் சுமந்துள்ள சொல். பெண்ணுக்கு எந்த வகையிலும் பெருமை சேர்க்காத சொல் அது. சொல்லப் போனால், அது அப்பெண்ணை இன்னும் காயப்படுத்தவல்லது, இழிவுபடுத்தவல்லது. மனம் நிறைந்த கணவனை இழந்து நிற்கும் ஒரு பெண்ணை, எவ்வளவு கெளரவத்தோடு எடுத்துப் பேசவேண்டும்? அவளை எழுத்தால் கூட நான் காயப்படுத்த விரும்பவில்லை.

“கைம்பெண்” என்று கொஞ்ச நாள் எழுதினேன். அதுவும் ஒப்பவில்லை. பின்னர், “வைதவ்யம்” என்ற சொல்லைக் கண்டுபிடித்தேன். புழக்கத்தில் இல்லாத சொல்தான். ஆனால், ’விதவை’யும், ’கைம்பெண்’ணும் அடைந்துள்ள நலிவை, இச்சொல் இன்னும் அடையவில்லை. என் மனத்துக்குள் உணர்வு ரீதியாக ”வைதவ்யம்” இன்னும் தேய்ந்து, பொருளழிந்து போகவில்லை. கெளரவமும் சிதையவில்லை.

இதேபோல், பெண்ணைக் குறிக்கும் “ஃபிகர்” என்ற சொல்லை என்னால் பயன்படுத்தவே முடியாது. இது அவளைக் கொச்சைப்படுத்துவது மட்டுமல்ல, எல்லாவிதமான தப்பர்த்தங்களுக்கும் இட்டுச்செல்லவல்லது. அதுவும் “செம ஃபிகர்” என்பதெல்லாம் பாலியல் ரீதியாக மிகவும் வக்கிர மனத்தின் வெளிப்பாடு. ஒரு பெண்ணை சகமனுஷியாக அல்லாமல் சதைப் பிண்டமாக நோக்கும் கற்காலச் சிந்தனையை வெளிப்படுத்தும் சொல் அது.

கூருணர்வு என்பது சமூகமொழியில் வெளிப்பட வேண்டும். சமூகம் முன்னேறி இருக்கிறது என்பதற்கு அதுதான் அடையாளம். இப்போதெல்லாம் யாரும் “ஊனமுற்றவர்” என்று பயன்படுத்துவதில்லை; நல்ல சொல் “மாற்றுத் திறனாளி.” அரசியலில் யாரும் “பொய்” சொல்வதில்லை; “உண்மைக்கு மாறான” செய்திகளையே சொல்வார்கள். ”அலி” அவதூறு; “அரவாணி” நீங்கி, இப்போது எங்கும் “திருநங்கை”தான்.  ”தாழ்த்தப்பட்டவர்கள்”, “தலித்”, “பிற்படுத்தப்பட்டவர்கள்” எல்லாம் சமூகம் இவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுக்க விரும்புகிறது என்பதை வெளிப்படுத்தும் சொற்கள்.  இதற்கு முன்பு பயன்படுத்தப்பட்ட சொற்களில் தொக்கி நின்றவை மேலாதிக்கம், ஆணவம், திமிர் ஆகியவை. அவற்றை சமூகம் விலக்க விரும்புகிறது என்பதற்கு முதல் படிதான், சொற்களில் காட்டப்படும் கரிசனம். பொலிட்டிக்கல் கரெக்ட்னஸ், ஜெண்டர் கரெக்ட்னஸ் மிகவும் முக்கியம்.

உணர்வுகளுக்கான மொழி வார்த்தைகள். அது அடுத்தவரைக் காயப்படுத்தக் கூடாது. கொச்சைப்படுத்தக் கூடாது. இந்த ஜாக்கிரதையோடுதான் ஒவ்வொரு எழுத்தும் உருவாக வேண்டும். டிவியாக இருந்தாலும் சரி, இதழாக இருந்தாலும் சரி – இது தான் நியதி.

உள்ளாட்சித் தேர்தல் கணக்குகள்!

தமிழக உள்ளாட்சித் தேர்தல் களைகட்டத் தொடங்கிவிட்டது. அ.தி.மு.க., தி.மு.க. தனித்து நிற்க முடிவு செய்தவுடன், மற்ற கட்சிகள் அனைத்தும் தனித்தே களம் காண வேண்டிய நிர்ப்பந்ததுக்குத் தள்ளப்பட்டு இருக்கின்றன. தே.மு.தி.க., மார்க்சிஸ்டோடு கூட்டு அமைத்து இருக்கிறது.

இந்த நிலையை மனத்தில் வைத்துக்கொண்டு என்ன கார்ட்டூன் போடலாம் என்று யோசித்தபோது, உதித்த சில ஐடியாக்கள் இவை:

1. அம்மாவும் அய்யாவும் மிட்டாய் டப்பாவை காலி என்பது போல் தட்டி மூடிக்கொண்டே தத்தமது வீடுகளுக்குள் நுழைய, காத்திருக்கும் கட்சிகள் அனைத்தும் ஏக்கம் பீடிக்க நிற்க வேண்டும். “அடுத்த பண்டிகைக்குப் பார்த்துக்கலாம், இப்போ ஒண்ணுமில்லை… போயிட்டு வாங்க!” என்று கமெண்ட் வைக்கலாம்.

2. எல்லா கட்சியினரும் தத்தமது கட்சிக் கொடிகளோடு முண்டியடுக்க, அய்யாவும் அம்மாவும், யாரையும் சீந்தாமல், தமது கட்சிக் கொடிகளை உயர்த்துவதில் முனைப்புடன் நிற்கவேண்டும். “முதல்ல எங்க கொடி ஏறட்டும். அப்புறம் பார்த்துக்கலாம்” – கமெண்ட் வைக்கலாம்.

மெனக்கெட்டால் இன்னும் சிறப்பான ஐடியாக்கள் வரலாம். ஆனால், இதெல்லாம் ஒரே செய்தியைத்தான் சொல்கின்றன. தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் தனித்தே உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க என்ன காரணம் இருக்க முடியும்? பல தியரிகள் உலவுகின்றன.

1. இரு பெரிய கட்சிகளுமே தத்தமது அடிமட்ட கட்சிக்காரர்களை எங்கேஜ் செய்யவும் வாய்ப்பளிக்கவும் உற்சாகமூட்டவும் இதைவிட வேறு சிறந்த வாய்ப்பு இல்லை. கூட்டணிக் கட்சிகளுக்கு சில இடங்களைப் பிரித்துக்கொடுக்கும்போது, பெரிய கட்சியின் உள்கட்டுமானத்தில் தேவையற்ற மனக்கசப்புகள் ஏற்படவும் பிளவுகள் ஏற்படவும் ஏதுவாகிவிடலாம். அதைத் தடுக்க, கூட்டணியைத் தவிர்த்துவிட்டு, தாமே அனைத்து இடங்களிலும் தம் கட்சிக்காரர்களை நிறுத்துவது சரியான அணுகுமுறை. இருகட்சிகளுமே அதைத்தான் செய்திருக்கின்றன.

2. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி தோல்வி, பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடப் போவதில்லை. மக்கள் மனத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டு இருந்தால், அது ஒரு சில இடங்களில் மட்டுமே பிரதிபலிக்க வாய்ப்புண்டு. மற்றபடி, ஆளுங்கட்சியினரே, உள்ளாட்சி அமைப்புகளிலும் வெற்றி பெறுவார்கள்; பெற்றிருக்கிறார்கள். மாற்றுக் கட்சிக்கு உள்ளாட்சி அமைப்புகளில் வாய்ப்பளித்தால், அவர்களால் பெரிதாக ஏதும் திட்டங்களைச் செயல்படுத்திவிட முடியாது; மாநில அரசைச் சார்ந்தே செயல்படுவது உகந்த வழி என்று மக்கள் ஒருவித தீர்மானத்தில்தான் வாக்களிக்கவே வருவார்கள். இந்தப் பின்னணியில் இருந்து பார்க்கும்போது, மற்றொரு வெற்றி வாய்ப்பை ஏன் இழக்க வேண்டும் என்று அ.தி.மு.க நினைக்கலாம். கடுமையாக மோதி, மக்களிடம் தம் செல்வாக்கு இன்னும் மிச்சமிருக்கிறது என்று காண்பிக்க இது ஒரு வாய்ப்பு என்று தி.மு.க. கருதலாம். கூட்டணி சேர்த்துக்கொண்டால், கூட்டணி பலத்தால்தான் வெற்றி கிடைத்தது என்ற அவப்பெயர் ஏற்பட வழியேற்பட்டுவிடலாம். அதைத் தவிர்க்கவே தி.மு.க. விரும்பி இருக்கக்கூடும்.

3. இன்னொரு கோணத்தில் இதையே புரிந்துகொள்ளலாம். சட்டமன்றத் தேர்தலில், தே.மு.தி.க.வின் ஆதரவில்தான் அ.தி.மு.க. வெற்றி பெற்றது என்ற கருத்து ஆழமாக இருக்கிறது. இதை உடைக்கவேண்டும்; தம் சொந்த செல்வாக்காலும், அ.தி.மு.க.வின் தீவிர தொண்டர்களாலுமே வெற்றி கிடைத்தது என்பதை நிரூபிக்க இதை ஒரு சரியான வாய்ப்பாக ஜெ. கருதியிருக்கலாம்.

4. இதற்கு இன்னொரு கோணமும் உண்டு: ஜெ. மெல்ல மெல்ல பா.ஜ.க. பக்கம் நகர்ந்துகொண்டு இருக்கிறார் என்றே தெரிகிறது. 2014ல் நரேந்திர மோதி பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. கம்யூனிஸ்டுகளோ, தே.மு.தி.க.வோ அப்போது தேவையற்ற சுமை. இப்போதே மெல்ல அவர்களைக் கழட்டி விட்டுவிடுவது உத்தமம் என்று ஜெ. கணக்கு போட்டு இருக்கலாம்.

5. தி.மு.க.வோடு கூட்டணி சேர்ந்ததால்தான், தோற்றுப் போனோம் என்ற கருத்து பல இடங்களில் காங்கிரஸ்காரர்களால் முன்வைக்கப்படுகிறது. தம் கட்சி ஆதரவு இல்லையெனில், காங்கிரஸ் பெற்றிருக்கும் குறைந்தபட்ச சீட்களைக் கூட பெற்றிருக்க முடியாது என்பதை நிரூபிக்க இது சரியான வாய்ப்பு என்று கலைஞர் நினைத்து இருக்கலாம். வருங்காலத்தில் தி.மு.க. கூட்டணியில் தொடர வேண்டிய தேவையை, காங்கிரசுக்கு வலியுறுத்த இதைவிட சிறப்பான சந்தர்ப்பம் அமையாது என்றும் அவர் கணக்கு போட்டு இருக்கலாம்.

6. மற்ற கட்சிகள் அனைத்துக்கும் இத்தேர்தல் ஓர் ரியாலிட்டி செக். ஆசிட் டெஸ்ட். தாம் அடிமட்ட தொண்டர்கள் வரை உண்மையிலேயே செல்வாக்கு பெற்றிருக்கிறோம் என்பதை பெரிய கட்சிகளுக்கு நிரூபிக்க வேண்டிய தேவை இப்போது ஏற்பட்டுவிட்டது. தே.மு.தி.க.வின் 10 சதவிகித, கம்யூனிஸ்ட்டுகளின் 3-4 சதவிகித வாக்குவங்கிகள் பத்திரமாக இருக்கின்றனவா; செல்வாக்கில் உயர்வா, சரிவா என்பதை இத்தேர்தல் அவர்களுக்குக் காண்பித்துவிடும். வாக்குகள் சேதாரம் இல்லாமல் இருந்தால்தான் அடுத்து வரும் தேர்தல்களில் பெரிய கட்சிகளுடன் பேரம் பேச முடியும்; இல்லையெனில், கட்சி வளர்ச்சிப் பணிகளில் இனி முனைந்து செயல்பட முயலவேண்டும்.

7. பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் வேகமாக வளர்ந்த கட்சிகள்; கூட்டணி ஆதரவிலேயே செல்வாக்கு பெற்றவை. ஆரம்ப காலத்தில் அக்கட்சித் தலைவர்களுக்கு அடிமட்ட தொண்டர்களோடு இருந்த அணுக்கம், கால ஓட்டத்தில் மெல்லக் குறைந்துவிட்டது. இப்போது, உண்மையில் தம் செல்வாக்கை அவர்கள் புரிந்துகொள்வார்கள். தம் அடிப்படை பலம் கைநழுவிப் போய்விட்டதா? வலுப்பெற்றிருக்கிறதா என்று தெரிந்துவிடும்.

8. உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றி பெற்று வந்தவர்கள் என்ன செய்தார்கள் என்று மக்களுக்கு தெரியவே தெரியாது என்பதுதான் உண்மை. மக்களின் தேவைகளுக்காக அவர்கள் குரல் கொடுத்தார்களா? மாமன்றக் கூட்டங்களில் அவர்களுடைய செயல்பாடுகள் எப்படி இருந்தன? என்ன புதிய திட்டங்களை அவர்கள் தம் வார்டுகளில் செயல்படுத்தினார்கள்? எம்.எல்.ஏ.க்கள் என்ன செய்தார்கள் என்று தேடினால், தெரிந்துகொண்டுவிடலாம். ஆனால், மாமன்ற, நகராட்சி உறுப்பினர்கள்? தம் வார்டுகளில் உள்ள மக்கள் பிரச்னைகளுக்கு மிக அருகிலேயே இருக்கும் இந்த உறுப்பினர்கள்தான், மிகவும் விலகி இருக்கிறார்கள் (விதிவிலக்குகள் உண்டு). மக்கள் சம்பந்தமான வேலைகளை விட, இந்த உறுப்பினர்கள், அவர்கள் சார்ந்த கட்சி வேலைகளிலேயே அதிகம் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி அவர்கள் முன்னேற வேண்டுமல்லவா 🙂

9. இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் கட்சி சார்ந்த உறுப்பினர்களுக்கு வாக்களிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எம்.எல்.ஏ. தேர்தல் என்றால், மக்கள் தொகை அதிகம். அக்கவுண்டபிளிட்டி குறைவு (அங்கும் அக்கவுண்டபிளிட்டி வேண்டும்; ஆனால் வலியுறுத்தும் வழிகள் குறைவு!). வார்டு என்பதோ, நகராட்சி, பஞ்சாயத்து என்பதோ, இன்னும் அருகில் இருக்கும் அலகுகள். அங்கே மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்களை சுலபமாக அடையாளம் காண முடியும். அவர்கள் இத்தேர்தலில் நின்றால், அவர்களுக்கு வாக்களிக்க முன்வாருங்கள்.

10. உள்ளாட்சி அமைப்புகளுக்கு, மத்திய மாநில அரசுகள், உலக வங்கி, இன்னபிற நிதியங்கள் ஏராளமாக பணம் ஒதுக்குகின்றன. அங்கே நல்லவர்கள், நேர்மையாளர்கள் உறுப்பினர்களாக இருந்தால், பலன் நிச்சயம் மக்களைப் போய்ச் சேரும். இன்றைக்கு இருக்கும் மோசமான அரசியல் சூழலில், நல்லவர்களால் என்ன செய்ய முடியும்? நேர்மையாளர்கள் என்பதெல்லாம் பம்மாத்து என்றெல்லாம் குரல்கள் ஒலிக்கின்றன. இருக்கலாம். அவர்களால் ஒன்றுமே செய்ய முடியாமல் கூட போகலாம். பரவாயில்லை. குறைந்தபட்சம், நமக்குத் தெரிந்த நல்லவருக்கு, நேர்மையாளருக்கு, மக்கள்நலப் பணியாளருக்கு வாக்களித்தோம் என்ற திருப்தியாவது இருக்கட்டுமே. முதல் செங்கல் நம்முடையதாக இருக்கட்டுமே.

இதைக்கூடச் செய்யாமல் விலகி இருப்பதில் அர்த்தமில்லை. மறக்காமல், வாக்கு அளியுங்கள்.