கூருணர்வுச் சொற்கள்!

தொலைக்காட்சியில் நான் செய்திப் ப்ரியன். மெகா தொடர்கள் பார்ப்பவன் அல்ல. இரண்டு நாள்களுக்கு முன்பு, கூடத்தில் ஓடிக்கொண்டு இருந்த தொலைக்காட்சி தொடர் நடுவே சில நொடிகள் நின்றேன். பிரபலமான “சரவணன் – மீனாட்சி” தொடரின் இடையே வரும் முன்னோட்டம் அது. ஒரு முதிய பெண் இன்னொரு பெண்ணைப் பார்த்துச் சொல்கிறார் : “தமிழுக்குத்தான் இது ஃபர்ஸ்ட் நைட். உனக்கு அப்படியா என்ன…” அந்தப் பெண் கூனிக் குறுகி தவித்தாள். அதற்கு மேல் அங்கே என்னால் நிற்க முடியவில்லை. கதையில் வரும் அந்தச் சூழ்நிலையை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. இந்த வசனத்தை எழுதியவருக்கு எவ்வளவு மனவக்கிரம் இருக்கவேண்டும்? அதைக் காட்சிப்படுத்தி திரைக்கதை எழுதிய இயக்குனர் எவ்வளவு கூருணர்வு இல்லாதவராக இருக்கவேண்டும்? மக்கள் அனைவரும் பார்க்கும் ஒரு தொடரில் இவ்வளவு கீழ்த்தரமாக யோசிக்க முடியுமா? என்னால் ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை.

வார்த்தைகளை மணிமணியாகப் பயன்படுத்த வேண்டாமா? சூழ்நிலைக்கேற்ப, அங்கு நிலவும் உணர்வுகளுக்கு ஏற்ப, சொற்களைத் தட்டித் தட்டிப் பார்த்துப் பயன்படுத்த வேண்டாமா? இரண்டாயிரம் ஆண்டு பண்பாடு, வளர்ச்சி, மூத்த குடி என்றெல்லாம் பெருமைப்படுகிறோம். அப்படியானால், நம் மனங்களில் எவ்வளவு தூரம் பண்பாடு மேலோங்கி இருக்கவேண்டும்? அது நம் வார்த்தைகளில் எவ்வளவு அழகாக பிரதிபலிக்க வேண்டும்? ஏன் இல்லாமல் போச்சு நாகரிகம்? தெரியவில்லை.

பல சொற்களைப் பயன்படுத்த நான் மிகவும் சங்கடப்படுவேன். வேறு வார்த்தைகளுக்காக ரொம்ப நேரம் காத்திருந்த அனுபவமும் உண்டு. “விதவை” அப்படிப்பட்ட சொல். பயன்படுத்த மனம் ஒப்பாத சொல். பயன்படுத்தித் தேய்ந்து போன சொல் மட்டுமல்ல; அது எதிர்மறை எண்ணங்களைச் சுமந்துள்ள சொல். பெண்ணுக்கு எந்த வகையிலும் பெருமை சேர்க்காத சொல் அது. சொல்லப் போனால், அது அப்பெண்ணை இன்னும் காயப்படுத்தவல்லது, இழிவுபடுத்தவல்லது. மனம் நிறைந்த கணவனை இழந்து நிற்கும் ஒரு பெண்ணை, எவ்வளவு கெளரவத்தோடு எடுத்துப் பேசவேண்டும்? அவளை எழுத்தால் கூட நான் காயப்படுத்த விரும்பவில்லை.

“கைம்பெண்” என்று கொஞ்ச நாள் எழுதினேன். அதுவும் ஒப்பவில்லை. பின்னர், “வைதவ்யம்” என்ற சொல்லைக் கண்டுபிடித்தேன். புழக்கத்தில் இல்லாத சொல்தான். ஆனால், ’விதவை’யும், ’கைம்பெண்’ணும் அடைந்துள்ள நலிவை, இச்சொல் இன்னும் அடையவில்லை. என் மனத்துக்குள் உணர்வு ரீதியாக ”வைதவ்யம்” இன்னும் தேய்ந்து, பொருளழிந்து போகவில்லை. கெளரவமும் சிதையவில்லை.

இதேபோல், பெண்ணைக் குறிக்கும் “ஃபிகர்” என்ற சொல்லை என்னால் பயன்படுத்தவே முடியாது. இது அவளைக் கொச்சைப்படுத்துவது மட்டுமல்ல, எல்லாவிதமான தப்பர்த்தங்களுக்கும் இட்டுச்செல்லவல்லது. அதுவும் “செம ஃபிகர்” என்பதெல்லாம் பாலியல் ரீதியாக மிகவும் வக்கிர மனத்தின் வெளிப்பாடு. ஒரு பெண்ணை சகமனுஷியாக அல்லாமல் சதைப் பிண்டமாக நோக்கும் கற்காலச் சிந்தனையை வெளிப்படுத்தும் சொல் அது.

கூருணர்வு என்பது சமூகமொழியில் வெளிப்பட வேண்டும். சமூகம் முன்னேறி இருக்கிறது என்பதற்கு அதுதான் அடையாளம். இப்போதெல்லாம் யாரும் “ஊனமுற்றவர்” என்று பயன்படுத்துவதில்லை; நல்ல சொல் “மாற்றுத் திறனாளி.” அரசியலில் யாரும் “பொய்” சொல்வதில்லை; “உண்மைக்கு மாறான” செய்திகளையே சொல்வார்கள். ”அலி” அவதூறு; “அரவாணி” நீங்கி, இப்போது எங்கும் “திருநங்கை”தான்.  ”தாழ்த்தப்பட்டவர்கள்”, “தலித்”, “பிற்படுத்தப்பட்டவர்கள்” எல்லாம் சமூகம் இவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுக்க விரும்புகிறது என்பதை வெளிப்படுத்தும் சொற்கள்.  இதற்கு முன்பு பயன்படுத்தப்பட்ட சொற்களில் தொக்கி நின்றவை மேலாதிக்கம், ஆணவம், திமிர் ஆகியவை. அவற்றை சமூகம் விலக்க விரும்புகிறது என்பதற்கு முதல் படிதான், சொற்களில் காட்டப்படும் கரிசனம். பொலிட்டிக்கல் கரெக்ட்னஸ், ஜெண்டர் கரெக்ட்னஸ் மிகவும் முக்கியம்.

உணர்வுகளுக்கான மொழி வார்த்தைகள். அது அடுத்தவரைக் காயப்படுத்தக் கூடாது. கொச்சைப்படுத்தக் கூடாது. இந்த ஜாக்கிரதையோடுதான் ஒவ்வொரு எழுத்தும் உருவாக வேண்டும். டிவியாக இருந்தாலும் சரி, இதழாக இருந்தாலும் சரி – இது தான் நியதி.