வார்த்தை வாங்கியவன்!

சமீபத்தில் ஒரு கட்டுரையில் “சுனாமி” என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டி வந்தது. எழுதும்போதே உள்ளம் பதற ஆரம்பித்துவிட்டது. அதற்கு இணையாக வேறொரு சொல் சட்டெனக் கிடைக்கவில்லை. எழுதி, பின் நிறுத்தி, மாற்ற நினைத்து, வார்த்தை தேடி… சில கணங்கள் அவஸ்தை. 2004 ஆழிப்பேரலையும் அது என்னுள் ஏற்படுத்திய பாதிப்புகளும் மிக மிக ஆழமானது. அந்தச் சொல்லை நினைத்தாலே அது ஏற்படுத்தும் பயவுணர்வு கூடவே சேர்ந்து வருவதைத் தவிர்க்க முடியவில்லை. 

சொற்களுக்கு பயந்தவன் நான்! சொல்லுக்குள்ள பலம் அது. எந்தச் சொல்லும் எளிமையானது அல்ல. ஆசீர்வாதமாகவோ வசவாகவோ மாறும் தன்மை அதற்குண்டு. இது என் பள்ளி கணித ஆசிரியரிடம் இருந்து கற்றது. இன்றைக்கு கணிதத்தில் எனக்கு உள்ள ஆர்வத்துக்கும் புரிதலுக்கும் காரணம் அவரே. அவர் பி.எஸ். சி. கணிதம் மட்டுமே படித்தவர். எம்.எஸ்.சி. படிக்க முடியாமல் – முடிக்க முடியாமல் – வலி சுமந்தவர். ஒருமுறை சொன்னார், “நான் என்னோட பேரண்ட்ஸ்கிட்ட வாங்கின சாபம்தான் காரணம்…இன்னிவரைக்கும் முடிக்க முடியல…நல்ல வார்த்தை வாங்க முடியலன்னா கூட பரவாயில்லை… திட்டு மட்டும் வாங்கிடக் கூடாது.’’

நானும் அப்படி யாரிடமேனும் வார்த்தை வாங்கிவிட்டேனோ என்று அவ்வப்போது யோசிப்பதுண்டு. அடுத்தவர்களிடம் மிக ஜாக்கிரதையாகப் பேசுபவன் நான். எந்தச் சந்தர்ப்பத்திலும் யாரையும் மனம் நோக அடித்துவிடக் கூடாது, சுடு எண்ணம், சுடுசொல்லுக்கு ஆளாகிவிடக் கூடாது என்பதில் நிரம்ப கவனம் உண்டு. ஆனால், எனக்கு தெரியாமல் யாரிடமோ அப்படி “வார்த்தை வாங்கியிருக்கவேண்டும்.” இன்று திரும்பிப் பார்க்கும்போது, என் கல்வி இவ்வளவு தூரம் தடைபட்டிருக்க வேறு எந்தக் காரணத்தையும் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. 

பி.எஸ்.சி (கணிதம்) முடித்தேன். எம்.எஸ்.சி. ஓராண்டு மட்டுமே படித்தேன். தொடரமுடியவில்லை. வேலைக்கு வந்துவிட்டேன். பின்னர் எம்.பி.ஏ. சேர்ந்தேன். இது 1994. முடிக்கவே முடியவில்லை. கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள். ஏதோ ஒரு காரணம். ஏதோ ஒரு தடை. சிக்கல். படிப்பின் அருகே போகவே முடியவில்லை. படிக்க முடியவில்லை என்ற வேதனை என்னை ஆட்டிப் படைத்த இரவுகள் எண்ணற்றவை. பலமுறை இதே சென்னை பல்கலைக்கழகம் வழியாகத்தான் போவேன், வருவேன். ஒருமுறை கூட உள்ளே போய், நின்றுவிட்ட நான்கு பேப்பர்களை எழுதி, எம்.பி.ஏ. கிளியர் செய்யவேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டதில்லை. 

ஆனால், அதிசயம் 2010ல் நடந்தது. விடுபட்ட நான்கு தாள்களையும் ஒருசேர படித்து எழுதி, முடித்தேன். தாமதமானாலும் நான் எம்.பி.ஏ. படிப்பை முடித்த மகிழ்ச்சியோடு, நான் வாங்கிய வார்த்தை என்னை இவ்வளவு தூரம் அலைக்கழித்திருக்கிறது, அதை ஓரளவு தகர்ந்தெரிந்து மீண்டுவிட்டேன் என்ற ஆசுவாசமே நிம்மதி அளித்தது. 

எம்.பி.ஏ. முடிக்கவே முடியாது என்ற உறுதியாக இருந்த சமயத்தில், வேறு ஏதேனும் படிக்கவேண்டும் என்ற எண்ணம் பிறந்தது. அப்போது, எம்.ஏ. இதழியல் படிக்க ஆரம்பித்தேன். எப்போது எந்தத் தடை ஏற்பட்டுவிடுமோ என்ற பதற்றம் அந்த இரண்டு ஆண்டுகளும் எனக்கிருந்தது. என் வரையில் நான் ஒழுங்காக படித்தேன், பல செய்திகள் புதியவை, புரிந்துகொண்டேன். ஆனால், தேர்வு அறைக்குப் போனபோதுதான், மனம் வெதும்பிற்று. முழு அறையிலும் மாஸ் காப்பி. ஒருவர் புத்தகத்தைத் திறந்துவைத்துக்கொண்டு பதில் எழுதினார். கேள்வி கேட்ட இன்விஜிலேட்டரிடம் சண்டைக்கே போய்விட்டார் அவர். இப்படிப்பட்ட ஒரு டிகிரி எனக்குத் தேவையா என்று எண்ணம் ஏற்பட்டுவிட்டது. தேர்வு அறையில் இருந்து எழுந்து வெளியே வந்துவிடத் துணிந்துவிட்டேன். ஒன்றரை மணிநேரத்துக்குப் பின்னரே வெளியே செல்ல அனுமதி என்ற நிலை. மனம் ஒருநிலைப்பட கொஞ்ச நேரமானது. என்னால் எதையும் மாற்ற முடியாது; என் வரையில் ஒழுங்காக எழுதினேன் என்ற மத்தியமர்களின் திருப்தி / கையாலாகத்தன லாஜிக் எட்டிப் பார்த்தது. அமைதியாக அத்தனை தாள்களையும் எழுதி முடித்து, இரண்டு ஆண்டுகளில் இதழியல் டிகிரி பெற்றேன். 

இப்போது அடுத்த கட்டமாக, முனைவர் ஆய்வு செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறேன். எல்லாம் ஒழுங்காக நடந்திருக்குமானால், என்னுடைய 25 வயதில் பி.எச்.டி. முடித்திருக்கவேண்டும்; அதுதான் நான் அடைய நினைத்த இலக்கு. இருபதாண்டுகள் தாமதம். கல்வி என்னும் மலையில் நான் விழுந்து விழுந்து, தடுமாறித் தடுமாறியே மேலே உயர்ந்திருக்கிறேன்.

ஆனால், அதில் எனக்கு இருக்கும் ஆர்வம் என்றுமே குறைந்ததில்லை. யார் கல்வி வாய்ப்புகள், புதிய துறைகள், புதிய படிப்புகள் பற்றிப் பேசினாலும், ஆவென வாயைத் திறந்து பார்த்துக்கொண்டு இருப்பேன். இப்போதேனும் எந்தத் தடையும் இன்றி, என் முனைவர் ஆய்வு தொடங்கவேண்டும், நல்லதொரு தீசிஸ் எழுதி வழங்கவேண்டும் என்றெல்லாம் ஆயிரம் பயங்கள். 

கல்வி பெரும்சொத்து. அதற்கு புத்திசாலித்தனம், உழைப்பு மட்டும் போதாது, கூடவே கொஞ்சம் இறைவன் அருளும் வேண்டும். வார்த்தைகள் வாங்காமலும் இருக்கவேண்டும்.