எழுத்தாளர்களின் எழுத்தாளர்

நகுலன்இலக்கிய உலகில் நிறைய பேருக்கு நகுலன் என்ற பெயரைக் கேட்டாலே ஒருவித கவர்ச்சி உண்டு. சிறுபத்திரிகைகள் படிக்கத் தொடங்கிய காலத்தில் இருந்தே எனக்கும் அவர் மேல் அபாரமான ஓர் ஈர்ப்பு உண்டு. ரொம்ப சின்ன வயசிலேயே அவரது நவீனன் டைரி, நினைவுப்பாதை ஆகிய நாவல்களை படித்துவிட்டேன். நிச்சயம் புரியவில்லை. ஆனால், அதுவரை படித்த எந்த ஒரு நாவலையும் விட அவரது இந்த நவீனன் டைரி என்னை வேறோரு புது உலகத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டது.

அப்புறம் கோட்ஸ்டாண்ட் கவிதைகள், ஒன்று, இரண்டு, ஐந்து, இரு நீண்ட கவிதைகள் ஆகிய கவிதைத் தொகுதிகளை வேறு வேறு சந்தர்ப்பங்களில் படித்திருக்கிறேன். நாய்கள் நாவலை கொஞ்சம் காலம் கழித்துத்தான் படித்தேன்.

அவரைப் பற்றியும், அவரது எழுத்தைப் பற்றியும் எனக்கு பெரிய ஆச்சரியம் உண்டு. பொதுவாக எழுதுவது என்பது அடிப்படையில் கம்யூனிகேஷன். கூடவே அடுத்தவர் நம்மைப் பாராட்ட வேண்டும் என்று செய்யப்படும் ஒரு பிரசெண்டேஷன். இசை, நாட்டியம், மேடை நாடகம் போல், ஒரு வாசகன் தன் மனத்துக்குள் எழுப்பும் பிம்பத்தை எவ்வளவு திறம்பட கட்டமைக்கிறான் என்பதே ஒரு எழுத்தாளன் ஏற்றுக்கொள்ளும் சவால். இதில் அவனது ஈகோவும் புகழ் ஆசையும் இணைந்தே கட்டமைக்கப்படுகிறது. அதுவும் பெரும்பாலான மக்கள் தம் எழுத்தை வாசிக்கவேண்டும், மெச்ச வேண்டும் என்ற அவா இல்லாத எழுத்தாளனே இருக்க முடியாது.

நகுலன் இந்த ஆசைகளுக்கு எல்லாம் நேர் எதிராக இருந்திருக்கிறார். தன்க்குப் பிடித்த விஷயங்களை, தனக்குப் பிடித்த விதத்தில் எழுதிக்கொண்டு, வெளியிட வேண்டும் என்ற ஆசை கூட அதிகம் இல்லாமல் இருந்திருக்கிறார். எழுத்தாளன் என்ற செயல்பாட்டுக்கு நாம் கொடுத்திருக்கும் பொதுவான எந்த விதிக்கும் நகுலன் கட்டுப்பட்டவராகத் தெரியவில்லை.

சமீபத்தில் காவ்யா பதிப்பகம், நகுலனில் நாவல்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து ஒரே தொகுதியாக வெளியிட்டிருக்கிறது. இப்போது படித்தாலும் அதே சுவாரசியம். சுழன்று சுழன்று ஒரு நதி போல் அவரது எழுத்துகள் ஓடுகின்றன. அவர் பின்னிச் செல்லும் உணர்வுகள், வார்த்தைகளில் சிக்காமல் நழுவி நழுவி தேர்ந்த வாசகனின் உழைப்பை அதிகம் கோரிக்கொண்டே இருக்கிறது.

அவரை எழுத்தாளர்களின் எழுத்தாளர் என்கிறார்கள். உண்மைதான்.

17ஆம் தேதி அவர் திருவனந்தபுரத்தில் இயற்கை எய்தினார். இன்று காலை இறுதிக் கடன்கள் நிறைவேற்றப்படுகின்றனவாம்.