தமிழகத்தில் முடங்கிய கணித நதி

முதலில் சில பெயர்களைச் சொல்கிறேன், ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்:
கே.ஆர்.பார்த்தசாரதி, சி.எஸ். சேஷாத்ரி, எம்.எஸ். நரசிம்மன், வி.எஸ். வரதராஜன், எஸ்.ஆர். ஸ்ரீனிவாச வரதன், எம்.எஸ். ரகுநாதன், இ.எம்.வி. கிருஷ்ணமூர்த்தி, எஸ். ரமணன், எஸ். ராகவன், ஆர். ஸ்ரீதரன், ஆர். பார்த்தசாரதி, டி.பார்த்தசாரதி, ஆர்.பாலசுப்பிரமணியன், அண்ணாமலை ராமநாதன், வி.கே. சுந்தர், டி.ஆர்.
ராமதாஸ், ராமன் பரிமளா, எஸ். தங்கவேலு…
உலக கணித வரைபடத்தில் இந்தியாவின் புகழை நிலைநாட்டிய அற்புத தமிழர்கள் இவர்கள். நான் அடிப்படையில் கணிதம் படித்தவன். எப்போதும், கணிதத் துறையின் மீது ஆர்வமுண்டு.
தினமலர் மாணவர் பதிப்பான ‘பட்டம்’ இதழின் கணித பக்கத்துக்கு இந்திய கணித மேதைகளைப் பற்றி எழுதலாம் என்று ஆசை வந்தது. தேடத் தொடங்கியபோது தான் பெரிய வரலாற்று உண்மை என்னைத் தாக்கியது.
அதாவது, 1930கள் முதல், சுமார் 1970கள் வரை, தமிழகத்தில் இருந்து கணித அறிவுஜீவிகளின் வற்றாத ஆறு ஓடிக்கொண்டே இருந்திருக்கிறது. மிகவும் சுவாரசியமான வரலாறு இது.
தமிழகத்தின் பல்வேறு சிற்றூர்களில் இருந்தெல்லாம் கணித மேதைகள் தோன்றியுள்ளார்கள். இவர்கள் எல்லோரும் சென்னை நோக்கிய படையெடுப்பார்கள்.
இவர்களுக்கு இருந்தது இரண்டே முகவரிகள் தான். ஒரு பகுதியினர் இலயோலா கல்லூரிக்குப் போவார்கள். இன்னொரு குழுவினர் விவேகானந்தா கல்லூரிக்கும்,மாநிலக் கல்லூரிக்கும் செல்வார்கள்.
இலயோலாவில் அந்தக் காலத்தில், ஃபாதர் ரெசின் (Fr. C. Racine, S. J) என்றொரு உயர்ந்த கணித பிதாமகர் இருந்துள்ளார். இவரே அனைத்து மாணவர்களையும் ஊக்கப்படுத்தி, மும்பையில் உள்ள டாடா அடிப்படை ஆய்வு மையத்தின் கணிதத் துறைக்கு அனுப்பிவைத்துள்ளார். அங்கே சென்றவர்கள் எவரும் சோடை
போனதில்லை. தொடர்ச்சியாக கணித ஆய்வுகள் மேற்கொள்ள இவர்கள் பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளுக்குப் போய் புகழ்பரப்பினார்கள்.
இந்தப் பக்கம், விவேகானந்தாவிலும், மாநிலக் கல்லூரியிலும் பயின்றவர்கள், நேராக கொல்கத்தாவில் இருக்கும் இந்தியப் புள்ளியியல் இன்ஸ்டிடியூட்டுக்குப் போனார்கள். அங்கே கணித ஆய்வுகளில் கொடிகட்டிப் பறக்க, இவர்கள் எல்லோரையும் அமெரிக்கா அரவணைத்துக்கொண்டது.
மும்பையில் கே.எஸ். சந்திரசேகரனும் கொல்கத்தாவில் சி.ஆர். ராவும் தான் தமிழக கணித மாணவ அறிவுஜீவிகளுக்கு குருமார்கள். அப்படியொரு வாய்ப்பை இவர்களுக்கு உருவாக்கிக் கொடுக்க, உலக அளவில் கணிதத்தில் தமிழகம் கோலோச்சியுள்ளது.
எண்பதுகளுக்குப் பிறகு இந்த வரலாற்றில் பெரிய தொய்வு. இலயோலாவும் விவேகானந்தாவும் மாநிலக் கல்லூரியில் இத்தகைய உயர்தரமான கணித அறிஞர்களை உற்பத்தி செய்யவில்லை. தமிழகப் பெற்றோர்களின் முன்னுரிமைகள் மாறியிருப்பதையே இது உணர்த்துகிறது.
சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளும், பிற்பாடு கணினி அறிவியலும் கோலோச்சத் தொடங்க, அடிப்படைக் கணிதத்தை தமிழகப் பெற்றோர்கள் கைவிட்டுவிட்டனர்.
இன்னொருவிதமாகவும் புரிந்துகொள்ளலாம். எழுபதுகளிலும் எண்பதுகளிலும் மிகப்பெரும் பொருளாதார மந்தநிலை நீடித்தது. தனியார் வேலைவாய்ப்புகள் சரிந்திருந்தன. ஆசிரியர் பணியும் வங்கித் துறை வேலைகளும் தான் அப்போதைய கனவு. நடுவே சில ஆண்டுகள் விளம்பர ஏஜென்சிகள் (அதுவும் வெளிநாட்டு
விளம்பர ஏஜென்சிக்களின் வரவால்!) ஒரு கற்பனை உலகைச் சிருஷ்டித்தன. இந்நிலையில், எது பணம் சம்பாதிக்க ஏதுவான துறையோ, அதில் தம் குழந்தைகளை ஈடுபடுத்தினர். இவையெல்லாம் 1991க்கு முன்புள்ள இரண்டு தசாப்தங்களில் தமிழகத்தின் வரலாறு.
இங்கே தான், கணிதம் பின்தங்கிப் போனது.
இப்போதும் தமிழக பெற்றோர்கள் சிலரிடத்தில், அறிவியலுக்கும் கணிதத்துக்கும் மவுசு உள்ளதென்றால், அது தமிழகத்தின் பழைய வாசனையால் தான். எந்த மாணவரேனும் கணிதத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டால், நாம் உச்சிமுகர்ந்து கொண்டாடுவதற்கும் காரணம், நம் மரபணுவிலேயே கணிதம் ஊறிக் கிடக்கிறது என்பதுதான்.
முடங்கிப் போன கணித நதி எப்போது ஓடப் போகிறதோ?

க(ணி)தனகுதூகலம்

கணித அறிஞர்களைத் தேடிக்கொண்டு போனபோது, என் கண்ணில் தட்டுப்பட்ட முத்துதான், ‘பாவனா.’ பேரா.சி.எஸ். அரவிந்தாவை ஆசிரியராக கொண்டு வெளிவரும் அற்புத கணித இதழ் இது. ஆண்டுக்கு நான்கு இதழ்கள் தான். பெங்களூருவில் இருந்து வெளிவருகிறது.
ஒவ்வொரு இதழிலும் இந்திய கணித அறிஞர்களின் மிக விரிவான பேட்டிகள் இடம்பெறுகின்றன. பல்வேறு கணிதத் துறைகள் தொடர்பான கட்டுரைகளும் உண்டு. பழைய இதழ்களை எல்லாம் இணையத்தில் சேமித்து வைத்துள்ளனர்.
அனைத்து இதழ்களையும் பைத்தியம் மாதிரி நான் ஒரே இரவில் படித்திருக்கிறேன். பலமுறை மீண்டும் மீண்டும் படித்திருக்கிறேன். நண்பர்கள் எல்லோருக்கும் இதைப் பற்றி வாய் ஓயாமல் எடுத்துச் சொல்லியிருக்கிறேன். இந்தியக் கணிதவியலின் பங்களிப்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் பேட்டிகள் இவ்விதழ்களில்
இடம்பெற்றுள்ளன.
என் வாழ்நாளுக்குள் நான் செய்ய விரும்பும் ஏராளமான வேலைகள் உண்டு. அதில் முக்கியமானது, இவ்விதழ்களில் வெளியாகியுள்ள பேட்டிகளைத் தொகுத்து, தமிழில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் என்பது. இதில் தான், தமிழகத்தின் முக்கியமான கணித அறிஞர்களின் பேட்டிகளும் இடம்பெற்றுள்ளன.
ஐம்பதாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தின் கணித வளம் எப்படிப்பட்டது, பெற்றோர்கள் அந்தக் காலங்களில் எப்படி தம் பிள்ளைகளை ஊக்குவித்தார்கள், எத்தகைய
அற்புதமான ஆசிரியர்கள் மாணவர்களின் அறிவைச் செழுமைப்படுத்தினார்கள் என்றெல்லாம் இந்தப் பேட்டிகள் தெரிவிக்கின்றன.
அப்பப்பா… பெரிய கணித யாகம் அன்றைய கல்லூரிகளில் நடைபெற்றுள்ளன என்ற எண்ணம் தான் எனக்கு ஏற்படுகிறது.
உண்மையில் எனக்கு வேறொரு எண்ணமும் உண்டு. மத்திய அரசு விஞ்ஞானியான நண்பர் த.வி. வெங்கடேஸ்வரனிடமும் இதைப் பற்றிச் சொல்லிக்கொண்டு இருந்தேன். விஞ்ஞான் பிரசார் சார்பாக, அவர்கள் ஒருசில நூல்களை வெளியிடும் முயற்சியில் உள்ளனர். தமிழகத்தின் கணித அறிஞர்களில் தற்போது இன்னும் உடல்நலத்துடன் உள்ளவர்களைப் பேட்டி கண்டு எழுதி, புத்தகமாக வெளியிட வேண்டும் என்பது என் அவா. ஆதரவு தாருங்கள் என்று சொல்லியிருக்கிறேன்.
சில சமயங்களில் என் நடத்தை எனக்கே ஆச்சரியமளிப்பது உண்டு. ‘பாவனா’ இதழ் ஆசிரியரிடம் பேசவேண்டும் என்பது என்னுடைய ரொம்ப நாள் கனவு.
திடீரென்று அவர்களுடைய வலைத்தளத்தில், ஒரு அலைபேசி எண் கொடுக்கப்பட்டது. அழைத்துப் பேசியபோது, அரவிந்தாவே எதிர்ப்பக்கம் உரையாடினார்.
உண்மையில் நான் சிறுகுழந்தையின் குதூகலத்தோடு என் மகிழ்ச்சியைத் தெரிவித்தேன். தமிழகத்தில் அந்த மனிதர் சுமார் 10 ஆண்டுகள் இருந்திருக்கிறார். என் குரலில் தெரிந்த மகிழ்ச்சி அவரையும் தொற்றிக்கொண்டது.
அனைவரிடமும் கணிதத்தை எடுத்துச் செல்லவேண்டும் என்பதற்காகவே, ஒரு மனிதர் இவ்வளவு தூரம் உழைக்கும்போது, அவரை மெச்சாமல் எப்படி இருக்க
முடியும்?
கணித ஆர்வம் உள்ளவரா நீங்கள்? இதோ ‘பாவனா’ இதழ்கள். படியுங்கள்: http://bhavana.org.in/

லிபரல்

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ‘புதுப் புது அர்த்தங்கள்’ நிகழ்ச்சியில் சமீபத்தில் பேசும்போது, மீண்டும் என்னுடைய விருப்பமான விஷயமான ‘நடுநிலை’ பற்றி பேச வேண்டி வந்தது.

பத்திரிகையாளனுக்கு கட்சி சார்பு தேவை இல்லை. கொள்கை சார்பு தேவை இல்லை. அவனது பார்வை பாரபட்சமற்று இருப்பது மட்டுமே. ‘பாரபட்சமற்று’ இருக்கவே முடியாது. எந்தக் கருத்தும் ஏதேனும் ஒரு தரப்பினருக்குச் சாதகமாகவும் இன்னொரு தரப்பினருக்கும் பாதகமாகவும் இருக்கும். அதனால், உடனடியாக பாதிக்கப்படுபவர்கள் வசவுமழை பொழிவதைப் பார்க்க முடிகிறது. (புதுப் புது அர்த்தங்கள் நிகழ்ச்சி யூடியூபில் வலையேற்றப்பட்டவுடன், அதன் கீழே பல்வேறு நண்பர்களும் என்னை தகாத வார்த்தைகளில் அர்ச்சிப்பதைக் கண்டு முதலில் கொஞ்சம் வருத்தம் இருந்தது. தற்போது, என்ன அர்ச்சனை செய்கிறார்கள்? உள்நோக்கங்கள் கண்டுபிடிக்கிறார்கள்? என்பதைப் படிக்கும் சுவாரசியமே ஏற்பட்டுவிட்டது…அதனால், அதனை நான் தவறவிடுவதில்லை. அதன் அரசியல் மற்றும் உளவியல் பின்னணிகள் பற்றி வேறொரு சமயம் எழுதுகிறேன்).

பாரபட்சமற்று இருப்பதற்கான அர்த்தம், அனைத்துத் தரப்புகளையும் கோணங்களையும் மனத்தில் வாங்கிக் கொண்டு, ஒவ்வொன்றுக்கும் அதற்கே உண்டான நியாயமான இடத்தை வழங்குவதே. அல்லது இன்னொரு விதமாகச் சொல்ல வேண்டுமென்றால், ‘பரந்த மனத்தோடு’ அணுகுவது. சார்புத்தன்மை அற்று அணுகுவது. இதற்கு ஆங்கிலத்தில் ‘லிபரல்’ என்று பெயர். ‘தாராளவாதம்’ என்று இதைச் சொல்லிப் பார்க்கலாம் (ஆனால், அப்போதும் முழுமையான பொருள் வரவில்லை)

ஒரு பத்திரிகையாளனாக இத்தகைய குணம் அவசியம் என்பதே என் கருத்து. எல்லோரையும் ஏதேனும் ஒரு சித்தாந்த, தத்துவ, சாதிய, மத ரீதியான சிமிழுக்குள் அடக்கி, அதையே ஒரு அடையாளமாகவும் வசவாகவும் மாற்றும் உத்தி இன்று செளகரியமாக இருக்கிறது.

இதை மீறி, நல்லதொரு ‘லிபரல்’ மனப்பான்மை உடையவனாக இருப்பதே பெரிய சவால். நான் முடிந்தவரை அதைத்தான் முயற்சி செய்துவருகிறேன்.

கூருணர்வுச் சொற்கள்!

தொலைக்காட்சியில் நான் செய்திப் ப்ரியன். மெகா தொடர்கள் பார்ப்பவன் அல்ல. இரண்டு நாள்களுக்கு முன்பு, கூடத்தில் ஓடிக்கொண்டு இருந்த தொலைக்காட்சி தொடர் நடுவே சில நொடிகள் நின்றேன். பிரபலமான “சரவணன் – மீனாட்சி” தொடரின் இடையே வரும் முன்னோட்டம் அது. ஒரு முதிய பெண் இன்னொரு பெண்ணைப் பார்த்துச் சொல்கிறார் : “தமிழுக்குத்தான் இது ஃபர்ஸ்ட் நைட். உனக்கு அப்படியா என்ன…” அந்தப் பெண் கூனிக் குறுகி தவித்தாள். அதற்கு மேல் அங்கே என்னால் நிற்க முடியவில்லை. கதையில் வரும் அந்தச் சூழ்நிலையை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. இந்த வசனத்தை எழுதியவருக்கு எவ்வளவு மனவக்கிரம் இருக்கவேண்டும்? அதைக் காட்சிப்படுத்தி திரைக்கதை எழுதிய இயக்குனர் எவ்வளவு கூருணர்வு இல்லாதவராக இருக்கவேண்டும்? மக்கள் அனைவரும் பார்க்கும் ஒரு தொடரில் இவ்வளவு கீழ்த்தரமாக யோசிக்க முடியுமா? என்னால் ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை.

வார்த்தைகளை மணிமணியாகப் பயன்படுத்த வேண்டாமா? சூழ்நிலைக்கேற்ப, அங்கு நிலவும் உணர்வுகளுக்கு ஏற்ப, சொற்களைத் தட்டித் தட்டிப் பார்த்துப் பயன்படுத்த வேண்டாமா? இரண்டாயிரம் ஆண்டு பண்பாடு, வளர்ச்சி, மூத்த குடி என்றெல்லாம் பெருமைப்படுகிறோம். அப்படியானால், நம் மனங்களில் எவ்வளவு தூரம் பண்பாடு மேலோங்கி இருக்கவேண்டும்? அது நம் வார்த்தைகளில் எவ்வளவு அழகாக பிரதிபலிக்க வேண்டும்? ஏன் இல்லாமல் போச்சு நாகரிகம்? தெரியவில்லை.

பல சொற்களைப் பயன்படுத்த நான் மிகவும் சங்கடப்படுவேன். வேறு வார்த்தைகளுக்காக ரொம்ப நேரம் காத்திருந்த அனுபவமும் உண்டு. “விதவை” அப்படிப்பட்ட சொல். பயன்படுத்த மனம் ஒப்பாத சொல். பயன்படுத்தித் தேய்ந்து போன சொல் மட்டுமல்ல; அது எதிர்மறை எண்ணங்களைச் சுமந்துள்ள சொல். பெண்ணுக்கு எந்த வகையிலும் பெருமை சேர்க்காத சொல் அது. சொல்லப் போனால், அது அப்பெண்ணை இன்னும் காயப்படுத்தவல்லது, இழிவுபடுத்தவல்லது. மனம் நிறைந்த கணவனை இழந்து நிற்கும் ஒரு பெண்ணை, எவ்வளவு கெளரவத்தோடு எடுத்துப் பேசவேண்டும்? அவளை எழுத்தால் கூட நான் காயப்படுத்த விரும்பவில்லை.

“கைம்பெண்” என்று கொஞ்ச நாள் எழுதினேன். அதுவும் ஒப்பவில்லை. பின்னர், “வைதவ்யம்” என்ற சொல்லைக் கண்டுபிடித்தேன். புழக்கத்தில் இல்லாத சொல்தான். ஆனால், ’விதவை’யும், ’கைம்பெண்’ணும் அடைந்துள்ள நலிவை, இச்சொல் இன்னும் அடையவில்லை. என் மனத்துக்குள் உணர்வு ரீதியாக ”வைதவ்யம்” இன்னும் தேய்ந்து, பொருளழிந்து போகவில்லை. கெளரவமும் சிதையவில்லை.

இதேபோல், பெண்ணைக் குறிக்கும் “ஃபிகர்” என்ற சொல்லை என்னால் பயன்படுத்தவே முடியாது. இது அவளைக் கொச்சைப்படுத்துவது மட்டுமல்ல, எல்லாவிதமான தப்பர்த்தங்களுக்கும் இட்டுச்செல்லவல்லது. அதுவும் “செம ஃபிகர்” என்பதெல்லாம் பாலியல் ரீதியாக மிகவும் வக்கிர மனத்தின் வெளிப்பாடு. ஒரு பெண்ணை சகமனுஷியாக அல்லாமல் சதைப் பிண்டமாக நோக்கும் கற்காலச் சிந்தனையை வெளிப்படுத்தும் சொல் அது.

கூருணர்வு என்பது சமூகமொழியில் வெளிப்பட வேண்டும். சமூகம் முன்னேறி இருக்கிறது என்பதற்கு அதுதான் அடையாளம். இப்போதெல்லாம் யாரும் “ஊனமுற்றவர்” என்று பயன்படுத்துவதில்லை; நல்ல சொல் “மாற்றுத் திறனாளி.” அரசியலில் யாரும் “பொய்” சொல்வதில்லை; “உண்மைக்கு மாறான” செய்திகளையே சொல்வார்கள். ”அலி” அவதூறு; “அரவாணி” நீங்கி, இப்போது எங்கும் “திருநங்கை”தான்.  ”தாழ்த்தப்பட்டவர்கள்”, “தலித்”, “பிற்படுத்தப்பட்டவர்கள்” எல்லாம் சமூகம் இவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுக்க விரும்புகிறது என்பதை வெளிப்படுத்தும் சொற்கள்.  இதற்கு முன்பு பயன்படுத்தப்பட்ட சொற்களில் தொக்கி நின்றவை மேலாதிக்கம், ஆணவம், திமிர் ஆகியவை. அவற்றை சமூகம் விலக்க விரும்புகிறது என்பதற்கு முதல் படிதான், சொற்களில் காட்டப்படும் கரிசனம். பொலிட்டிக்கல் கரெக்ட்னஸ், ஜெண்டர் கரெக்ட்னஸ் மிகவும் முக்கியம்.

உணர்வுகளுக்கான மொழி வார்த்தைகள். அது அடுத்தவரைக் காயப்படுத்தக் கூடாது. கொச்சைப்படுத்தக் கூடாது. இந்த ஜாக்கிரதையோடுதான் ஒவ்வொரு எழுத்தும் உருவாக வேண்டும். டிவியாக இருந்தாலும் சரி, இதழாக இருந்தாலும் சரி – இது தான் நியதி.

ஈரத்தை மீட்டெடுக்க…

பாப்புலர் இதழ்களானாலும் சரி, இலக்கிய இதழ்கள் ஆனாலும் சரி, நேரடி நாவல்கள் ஆனாலும் சரி, எங்கும் நல்ல காதல் கதையே காணோம். சட்டென்று ஞாபகம் வரும் கதைகள் எல்லாம் இருபதாண்டுகளுக்கு முந்தைய கதைகளாகவே உள்ளன. மாதநாவல்கள், தொடர்கதைகள் ஆகியவற்றில் சித்திரிக்கப்படும் காதல் வெகு மேம்போக்காக, உள்ளத்தைத் தீண்டாமல், மேற்பரப்பிலேயே நிற்கின்றன. ஆண், பெண்கள் ஒன்று ஏற்கெனவே சந்தித்து, காதல் செய்துகொண்டிருப்பார்கள்; அல்லது காதலுக்கு பெற்றோர், இன்ன பிற எதிர்ப்புகளைச் சந்தித்துக்கொண்டு இருப்பார்கள். அங்கே காதலைவிட, வேறு பிரச்னைகளே முக்கியத்துவம் பெற்றிருக்கும். வாசகனின் மனத்தை ஈர்க்கும் காதல் கதைகளுக்கு இன்றைக்கு கடும் பஞ்சம்.

இலக்கிய இதழ்களில் எழுதப்படும் சிறுகதைகளில், காதலுக்கு இடமே இல்லை. அங்கே காமம் தான் தூக்கல். ஆண் – பெண் பாத்திரங்கள் ஏதோ ஒருவித மனப்பிரச்னைகளோடு அலைவார்கள். மென்மையை முற்றிலும் இழந்தநிலையில், உடல்ரீதியான தேவைகளே முன்னிற்கின்றன. காமத்தை எழுதுவதுதான் அதிர்ச்சி அளிக்கும்; அதுதான் நவ நவீனத்துவம், மரபுகளை மீறுதல்; புது வித எழுத்து என்ற எண்ணங்கள் ஆழ வேரூன்றி இருப்பது தெரிகிறது. உடைந்த மனங்களையும், நொறுங்கிய உறவுகளையும், நிம்மதியற்ற மனிதர்களையும் பதிவு செய்வதில் காட்டப்படும் ஆர்வம், நல்ல ஆரோக்கியமான உறவுகள் பற்றி எழுதுவதில் காட்டப்படுவதில்லை. காதல் ஒருவித பொய்; அல்லது எழுதி எழுதி தேய்ந்துபோன கருப்பொருள் என்ற காரணங்களும் பின்னணியில் இருக்கலாம். காதல் கதை எழுதுவது இன்றைய காலகட்டத்தில் இலக்கிய அந்தஸ்துக்குரிய அம்சமாகவும் இல்லாமல் இருக்கலாம்! வார்த்தைகளுக்குள் சிக்கிக்கொண்டு, அருவ உணர்வுகளுக்கு உருவம் கொடுக்க முயல்வதுதான் வெற்றிகரமான இலக்கிய இதழ் எழுத்தாளர்களுக்கான அடையாளமாக மாறிப்போய்விட்டதோ என்னவோ!

நேரடி நாவல்களிலும் இதே பிரச்னைதான். காதலைத் தவிர்த்துவிட்டு வேறேதோ எழுதுகிறார்கள். அல்லது, காதலைத் தொடாமல், நேரடியாக உடல் ரீதியான உறவுகளுக்குத் தாவிவிடுகிறார்கள். இதையெல்லாம் அடிப்படை தரவுகளாக கொண்டு சமூகத்தைப் புரிந்துகொள்ள முயன்றால், இப்படித்தான் புரிந்துகொள்ள முடிகிறது:

மனித வாழ்வுக்கு ஆதார உணர்வான அன்பை நாம் தொலைத்துவிட்டோம்.

அன்பின் பல்வேறு முகங்களில் ஒன்று காதல். அதன் நளினத்தை, எழிலை, கூச்சத்தை, விவரிக்கயியலா வலிகளை, எதிர்பார்ப்புகளை எல்லாம் நாம் இழந்து நிற்கிறோம். மிருது உணர்வு நீங்கி, முரட்டுத்தனமே கோலோச்சுகிறது.

அதற்கான அத்தாட்சிகளைத்தான் தில்லி மருத்துவக் கல்லூரி மாணவி வன்கொடுமை முதல் அனைத்து இடங்களில் காண்கிறோம்.

காதல் ஓர் ஆரோக்கிய உணர்வு. மனத்தை வளப்படுத்தவல்லது. உறவுகளை மேம்படுத்தவல்லது. எதிர்கால நம்பிக்கை, துணிவு, வாழ்க்கை மேல் பிடிப்பு, சகமனிதர்களை நேசித்தல் ஆகிய அனைத்தையும் ஏற்படுத்தவல்லது. அதற்கு எந்தவிதமான எல்லைகளும் வேலியமைக்க முடியாது. 

இலக்கியத்தில் காதல் கதைகளே இல்லாமல் போனதுகூட, தில்லி சம்பவத்துக்குக் காரணமாக இருக்ககூடுமோ என்ற எண்ணம் எனக்குண்டு. ஒரு சமூகத்தின் கட்டமைப்பில், பேசப்படும் பல்வேறு உணர்வுகள்தான், மனிதர்களின் மனங்களைக் கட்டமைக்கிறது. இன்று, பணம் சம்பாதித்தல், உயர் பதவிகளை அடைதல், அமெரிக்கா செல்தல், கார் வாங்குதல், வீடு கட்டுதல் என்று பொருள்ரீதியான வாழ்க்கை முக்கியத்துவம் பெற்றுவிட்டது. சமூகத்தில் திரும்பிய பக்கமெல்லாம் இவைதான் முன்னிறுத்தப்படுகின்றன. யாரும் அன்பையோ கருணையையோ சகோதரத்துவத்தையோ இணக்கத்தையோ – உணர்வுகள் சார்ந்த எதையுமே பேசுவதில்லை. மெல்லமெல்ல உணர்வுகள் மொண்ணையாகி, இயல்புத்தன்மை விலகி, முரட்டுத்தனமே மேலே எழுகிறது.

இன்றைய நிலையில், நாம் அன்பை மீட்டெடுப்பது மிகவும் அவசியம். மிருது உணர்வுகளை போதிப்பது அவசியம். ரசனையைக் கட்டியெழுப்புவது அவசியம். பொறியியல் படிப்புகளைவிட, கலைத்துறைப் படிப்புகள் முன்னணி பெற வேண்டும். கவிதையும் கதையும் ஓவியங்களும் நாடகங்களும் நுண்கலைகளும் மனிதர்களை மனிதர்களாக மீட்டெடுக்க உதவும் கருவிகள். வரட்டுத்தனத்தை, தனிமையை, அந்நியமாதலை விலக்கி, ஈரத்தையும் பாசத்தையும் ஊட்டுவது கலைஞர்களின் கடமை.  

இத்தனை ஆண்டுகளும் நான் காதல் கதைகளே எழுதியதில்லை. எழுதிய சிலவும் உணர்வுரீதியாக எனக்குத் திருப்தி தராதவை. வெண்ணிற இரவுகள், வண்ணநிலவனின் கடல்புரத்தில், மெஹரூனிஸா, பிரபஞ்சனின் பல கதைகளைப் படித்த பின்னர், என்னால் இப்படியெல்லாம் எழுதவே முடியாது என்ற நிச்சயமான தயக்கமே முதல் காரணம். அப்படிப்பட்ட உச்சங்களைத் தொட்டப் பிறகு, வேறு உயரம் குறைவான படைப்புகள் கவனமே பெறாமல் போய்விடும் என்ற அச்சமும் மறுகாரணம். 

ஆனால், இன்று சமூக ரீதியாக காதல் கதைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. உணர்வுகளை மீட்டெடுக்க, ஈரத்தை மீட்டெடுக்க, மனிதத்தின் மேன்மையை உணர்த்த, காதல் கதைகளே ஒரே வழி.

சரியாக வருகிறதோ, இல்லையோ, இனி காதல் கதைகள் எழுதுவதாக இருக்கிறேன்!

 

ஸ்ருதிஹாசன் – பேஜ் 3 தமிழ்!

ஏழாம் அறிவு நேற்று இரவு பார்த்தேன். பல விமர்சனங்களில், ஸ்ருதிஹாசனின் உச்சரிப்பு,  நடிப்பு எல்லாவற்றையும் ஒரு மாதிரி கிண்டல் செய்தும் ஆலோசனை சொல்வது போலவும் எழுதப்பட்டதைப் படித்திருந்தேன். அதனாலேயே ஏழாம் அறிவு பார்க்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன்.

ஸ்ருதிஹாசனே டப்பிங் பேசியிருக்கிறார்; அவருக்குப் பதில் வேறு யாரேனும் நல்ல தெளிவான தமிழில் டப்பிங் பேசியிருக்கலாம் என்றெல்லாம் கருத்துக்கள் கேட்டு இருந்தேன்.  நேற்று படத்தை முழுமையாக நிதானமாக பார்த்தபோது, வேறு எண்ணங்களே ஏற்பட்டன.

ஸ்ருதி, இன்றைய தமிழ் இளைஞர்கள், பெண்களின் ஒரு வகை மாதிரி. இன்றைக்குப் பல குடும்பங்களில் வெளிநாடுகளில் போய் படித்து, அங்கேயே செட்டிலான இளைஞர்கள் உண்டு. திரும்பி வந்தவர்களும் உண்டு. நகர்ப்புறங்களில் ஆங்கிலப்பள்ளிகளில் மட்டுமே படித்து வளர்ந்தவர்களும் உண்டு. வீட்டில் மட்டுமே தமிழ் பேசும் வாய்ப்புள்ளவர்கள் அவர்கள். பல நிறுவன உயர்பதவிகளில் இருக்கும் தமிழ் இளைஞர்களுக்கு தமிழ் புரியும்; பேசுவது கொச்சையாக இருக்கும். சரளமாக தமிழ் பேச வரவில்லை என்பது குறித்து கவலை கொள்ளும் இளைஞர்கள் உண்டு.

இவர்கள் எல்லாம் தமிழ் பேசாததாலேயே, பழகாததாலேயே இவர்களுக்குத் தமிழ் மேல் காதல், ஆர்வம் இல்லை என்று அர்த்தமில்லை. தமிழைப் பேசிப் புழங்குவதற்கான தேவை, அவர்களைப் பொறுத்தவரை வெகுசில இடங்களிலேயே இருக்கிறது. இப்படிப்பட்டவர்களை, தமிழ் சினிமாவிலும் சரி, நேர்ப்பேச்சிலும் சரி ஒரு மாதிரி “பீட்டர்” என்று வகைப்படுத்தி, கிண்டல் அடிப்பதையே செய்திருக்கிறோம்.

அதேசமயம், மறைமுகமாக இந்தத் தன்மையை ரசிக்கவும், மேட்டிமையின் வெளிப்பாடாக உணர்ந்துகொள்ளவும் பின்பற்ற முடியுமா என்று முயன்றும் பார்த்தவர்கள் உண்டு. இன்றைய பல்சமூக, பல் இன வாழ்க்கைச் சூழலில், இத்தகைய ஓர் காஸ்மோபாலிடன் கலாசாரம் கவர்ச்சிகரமாக இருப்பதைப் பார்க்க முடிகிறது.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் பேஜ் 3 கேரக்டர்கள் இவர்கள். பேஜ் 3 பிரபலங்கள் ஆக, பலர் முயல்கின்றனர்.

ஏழாம் அறிவில், முருகதாஸ், இளைஞர்கள் மத்தியில் உள்ள ஆர்வத்தை நன்கு பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார். ஸ்ருதி, அந்தக் கேடரக்டருக்குப் பொருத்தமானவர். ஓர் அழகான முரணை உள்ளே வைத்து, கேரக்டரை இன்னும் மெருகேற்றி இருக்கிறார்.

அதாவது, வாழ்க்கை அவுட் லுக், நடை உடை பாவனை, பேச்சு எல்லாம் இன்றைய பேஜ் 3 மாடர்னிட்டி; உள்ளே உள்ளது, தீராத தமிழ் உணர்வு. இந்த முரண், இந்தக் கதைக்கு மிகவும் தேவை. ஒருபக்கம், சூர்யா நல்ல தமிழில், உணர்ச்சிப் பொங்க பேசவும் நடிக்கவும் வேண்டும்; அவருக்கு ஜோடியானவர் மாடர்னிட்டியோடு, தமிழ் உணர்வு கொண்டவராக இருக்கவேண்டும்.

இன்றைக்கு சினிமா பார்க்கப் போகும் இளம்பெண்கள், தம்மை, ஸ்ருதிஹாசனோடு இனங்கண்டு கொள்பவர்கள் ஏராளம். பயங்கரமாக கிண்டல் அடிக்கப்படும் அவரது “ஷ” மொழி, ஸ்டைல் மொழியானால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, அசினை, இன்றைய பெண்களின் பிரதிபலிப்பாக நினைத்திருந்தேன். ஸ்ருதி, அடுத்த கட்டம். இன்றைய 15 – 22 வயதுள்ள நகர்புறப் பெண்களின் பிரதிபலிப்பு. ஏழாம் அறிவின் அபரிமிதமான தமிழுணர்வுக்கு பின்புலமாக இருந்து வலிமை சேர்க்க, ஸ்ருதியின் நுனிநாக்கு, கடித்துத் துப்பும் தமிழை பயன்படுத்தியிருப்பது முருகதாஸின் புத்திசாலித்தனம்.

பிடிக்கறதோ இல்லையோ, ஸ்ருதி வகை தமிழுணர்வு, இன்றைய நிஜம். அதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்!

இதை நான் செஞ்சிருக்கணும்…

நல்ல நாவல், நல்ல சிறுகதை, நல்ல சினிமா, எதைப் பார்த்தாலும், சே..இதை நான் செஞ்சிருக்கணும்… மிஸ் பண்ணிட்டேனே என்று ராத்தூக்கம் இல்லாமல் அவஸ்தை படுவேன். இதழியலில், இது இன்னும் கொஞ்சம் ரொம்பவே ஓவர்.

ஏதாவது நல்ல லேஅவுட், டிசைன், கட்டுரை, தொடர், அட்டைப்படம் பார்த்துவிட்டால், மனசே ஆறாது. திருப்பித் திருப்பி அதையே பார்த்துக்கொண்டு இருப்பேன், பேசுபவர்களிடமே சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ, அதை எடுத்துச் சொல்லுவேன். ஆற்றாமை ஆற ரொம்ப நேரம் ஆகும்!

சமீபத்தில் இப்படி என்னை ஆற்றாமைக்குள் ஆட்படுத்தும் ஆச்சரியங்கள் நடந்துகொண்டு இருக்கின்றன:

1. புதிய தலைமுறை இதழில் சட்டென பிரியல்லண்டாக தென்படும் சில கட்டுரைகள். குறிப்பாக, எழுத்தாளர் பிரபஞ்சனின் தொடர். நேர்த்தியான மொழி, அழகான வடிவம், மனத்தைத் தீண்டும் அனுபவங்கள்.

2. பாவை சந்திரன் இதழ் ஆசிரியராக பொறுப்பேற்ற பின்பு வரும் தினமணி கதிர் வார இதழை, அப்படியே கண்களில் ஒற்றிக்கொள்ளலாம். பாவையின் டிசைன் சென்ஸ் என்னை எப்போதும் கட்டிப்போடும். புதிய பார்வை இணை ஆசிரியராக இருந்தபோது, அவர் அதில் செய்த லே அவுட்கள் ஒவ்வொன்றும் அபாரம்! பத்திரமாக பழைய இதழ்களைச் சேமித்து வைத்திருக்கிறேன். இயற்கையாகவே அவருக்குள் ஓர் அழகியல் பார்வை உண்டு. அதுதான் இதழ் முழுவதும் வியாபித்திருக்கும். இப்போது, தினமணி கதிர் அந்த டிசைன் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறது.

3. சமநிலை சமுதாயம் என்று ஒரு இஸ்லாமிய இதழ் வருகிறது. ரொம்ப தைரியமான இதழ். இஸ்லாமிய சமுதாயத்துக்கு உள்ளேயே கேட்கப்பட வேண்டிய கேள்விகளின் திறவுகோல் இந்த இதழ். ஹஜ் யாத்திரை அழைத்துப் போகிறேன் என்று கல்லா கட்டும் பயண முகவர்களைப் பற்றி மிக நல்ல கட்டுரை இதன் ஓர் இதழில் இடம்பெற்றது. வேலூரில் இருக்கும் மற்றொரு இஸ்லாமிய மார்க்க கல்லூரியின் குறைகளைப் பற்றி இந்த இதழில் கட்டுரை வந்திருக்கிறது. ச.ச. இதழ், அட்டைப்படத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவம் என்னை பரவசப்படுத்தும். ஜெ. ஜெயித்து வந்தபோது, ச.ச. இதழின் முகப்பில் ஓர் அட்டைப்படம் வைத்தார்கள். இன்றுவரை அதை எல்லோருக்கும் நான் சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.

4. அடுத்து, இன்னும் கொஞ்ச நாளைக்கு நான் சொல்லிக்கொண்டு திரியும் ஒரு விஷயத்தை நேற்று படித்து முடித்தேன். தி சண்டே இந்தியன் இதழில் தீபாவளி இதழோடு, ரசிகன் என்றொரு இணைப்பு இதழும் வந்திருக்கிறது. தமிழின் முக்கிய நடிகைகளைக் குறித்த மலரும் நினைவுகள். முக்கிய எழுத்தாளர்கள் அனைவரும் எழுதியிருக்கிறார்கள். ஒவ்வொரு நடிகையும் எவ்வாறு தமிழ்சமூகத்தின் மனத்திரையில் நீக்காத இடம் பிடித்திருக்கிறார்கள் என்று நாஸ்டால்ஜியாவைத் தூண்டு சுவையான கட்டுரைகள். கலெக்டர்ஸ் ஐட்டம் மாதிரியான ஓர் நூல். அ.முத்துலிங்கம், மாலன், சுகுமாரன், இயக்குநர் வஸந்த், ஜெயமோகன், நாசர் ஆகியோரின் கட்டுரைகள் முதல் தரமானவை. பத்திரப்படுத்திக்கொள்ளத் தூண்டும் ஆவணம்.

உள்ளாட்சித் தேர்தல் கணக்குகள்!

தமிழக உள்ளாட்சித் தேர்தல் களைகட்டத் தொடங்கிவிட்டது. அ.தி.மு.க., தி.மு.க. தனித்து நிற்க முடிவு செய்தவுடன், மற்ற கட்சிகள் அனைத்தும் தனித்தே களம் காண வேண்டிய நிர்ப்பந்ததுக்குத் தள்ளப்பட்டு இருக்கின்றன. தே.மு.தி.க., மார்க்சிஸ்டோடு கூட்டு அமைத்து இருக்கிறது.

இந்த நிலையை மனத்தில் வைத்துக்கொண்டு என்ன கார்ட்டூன் போடலாம் என்று யோசித்தபோது, உதித்த சில ஐடியாக்கள் இவை:

1. அம்மாவும் அய்யாவும் மிட்டாய் டப்பாவை காலி என்பது போல் தட்டி மூடிக்கொண்டே தத்தமது வீடுகளுக்குள் நுழைய, காத்திருக்கும் கட்சிகள் அனைத்தும் ஏக்கம் பீடிக்க நிற்க வேண்டும். “அடுத்த பண்டிகைக்குப் பார்த்துக்கலாம், இப்போ ஒண்ணுமில்லை… போயிட்டு வாங்க!” என்று கமெண்ட் வைக்கலாம்.

2. எல்லா கட்சியினரும் தத்தமது கட்சிக் கொடிகளோடு முண்டியடுக்க, அய்யாவும் அம்மாவும், யாரையும் சீந்தாமல், தமது கட்சிக் கொடிகளை உயர்த்துவதில் முனைப்புடன் நிற்கவேண்டும். “முதல்ல எங்க கொடி ஏறட்டும். அப்புறம் பார்த்துக்கலாம்” – கமெண்ட் வைக்கலாம்.

மெனக்கெட்டால் இன்னும் சிறப்பான ஐடியாக்கள் வரலாம். ஆனால், இதெல்லாம் ஒரே செய்தியைத்தான் சொல்கின்றன. தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் தனித்தே உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க என்ன காரணம் இருக்க முடியும்? பல தியரிகள் உலவுகின்றன.

1. இரு பெரிய கட்சிகளுமே தத்தமது அடிமட்ட கட்சிக்காரர்களை எங்கேஜ் செய்யவும் வாய்ப்பளிக்கவும் உற்சாகமூட்டவும் இதைவிட வேறு சிறந்த வாய்ப்பு இல்லை. கூட்டணிக் கட்சிகளுக்கு சில இடங்களைப் பிரித்துக்கொடுக்கும்போது, பெரிய கட்சியின் உள்கட்டுமானத்தில் தேவையற்ற மனக்கசப்புகள் ஏற்படவும் பிளவுகள் ஏற்படவும் ஏதுவாகிவிடலாம். அதைத் தடுக்க, கூட்டணியைத் தவிர்த்துவிட்டு, தாமே அனைத்து இடங்களிலும் தம் கட்சிக்காரர்களை நிறுத்துவது சரியான அணுகுமுறை. இருகட்சிகளுமே அதைத்தான் செய்திருக்கின்றன.

2. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி தோல்வி, பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடப் போவதில்லை. மக்கள் மனத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டு இருந்தால், அது ஒரு சில இடங்களில் மட்டுமே பிரதிபலிக்க வாய்ப்புண்டு. மற்றபடி, ஆளுங்கட்சியினரே, உள்ளாட்சி அமைப்புகளிலும் வெற்றி பெறுவார்கள்; பெற்றிருக்கிறார்கள். மாற்றுக் கட்சிக்கு உள்ளாட்சி அமைப்புகளில் வாய்ப்பளித்தால், அவர்களால் பெரிதாக ஏதும் திட்டங்களைச் செயல்படுத்திவிட முடியாது; மாநில அரசைச் சார்ந்தே செயல்படுவது உகந்த வழி என்று மக்கள் ஒருவித தீர்மானத்தில்தான் வாக்களிக்கவே வருவார்கள். இந்தப் பின்னணியில் இருந்து பார்க்கும்போது, மற்றொரு வெற்றி வாய்ப்பை ஏன் இழக்க வேண்டும் என்று அ.தி.மு.க நினைக்கலாம். கடுமையாக மோதி, மக்களிடம் தம் செல்வாக்கு இன்னும் மிச்சமிருக்கிறது என்று காண்பிக்க இது ஒரு வாய்ப்பு என்று தி.மு.க. கருதலாம். கூட்டணி சேர்த்துக்கொண்டால், கூட்டணி பலத்தால்தான் வெற்றி கிடைத்தது என்ற அவப்பெயர் ஏற்பட வழியேற்பட்டுவிடலாம். அதைத் தவிர்க்கவே தி.மு.க. விரும்பி இருக்கக்கூடும்.

3. இன்னொரு கோணத்தில் இதையே புரிந்துகொள்ளலாம். சட்டமன்றத் தேர்தலில், தே.மு.தி.க.வின் ஆதரவில்தான் அ.தி.மு.க. வெற்றி பெற்றது என்ற கருத்து ஆழமாக இருக்கிறது. இதை உடைக்கவேண்டும்; தம் சொந்த செல்வாக்காலும், அ.தி.மு.க.வின் தீவிர தொண்டர்களாலுமே வெற்றி கிடைத்தது என்பதை நிரூபிக்க இதை ஒரு சரியான வாய்ப்பாக ஜெ. கருதியிருக்கலாம்.

4. இதற்கு இன்னொரு கோணமும் உண்டு: ஜெ. மெல்ல மெல்ல பா.ஜ.க. பக்கம் நகர்ந்துகொண்டு இருக்கிறார் என்றே தெரிகிறது. 2014ல் நரேந்திர மோதி பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. கம்யூனிஸ்டுகளோ, தே.மு.தி.க.வோ அப்போது தேவையற்ற சுமை. இப்போதே மெல்ல அவர்களைக் கழட்டி விட்டுவிடுவது உத்தமம் என்று ஜெ. கணக்கு போட்டு இருக்கலாம்.

5. தி.மு.க.வோடு கூட்டணி சேர்ந்ததால்தான், தோற்றுப் போனோம் என்ற கருத்து பல இடங்களில் காங்கிரஸ்காரர்களால் முன்வைக்கப்படுகிறது. தம் கட்சி ஆதரவு இல்லையெனில், காங்கிரஸ் பெற்றிருக்கும் குறைந்தபட்ச சீட்களைக் கூட பெற்றிருக்க முடியாது என்பதை நிரூபிக்க இது சரியான வாய்ப்பு என்று கலைஞர் நினைத்து இருக்கலாம். வருங்காலத்தில் தி.மு.க. கூட்டணியில் தொடர வேண்டிய தேவையை, காங்கிரசுக்கு வலியுறுத்த இதைவிட சிறப்பான சந்தர்ப்பம் அமையாது என்றும் அவர் கணக்கு போட்டு இருக்கலாம்.

6. மற்ற கட்சிகள் அனைத்துக்கும் இத்தேர்தல் ஓர் ரியாலிட்டி செக். ஆசிட் டெஸ்ட். தாம் அடிமட்ட தொண்டர்கள் வரை உண்மையிலேயே செல்வாக்கு பெற்றிருக்கிறோம் என்பதை பெரிய கட்சிகளுக்கு நிரூபிக்க வேண்டிய தேவை இப்போது ஏற்பட்டுவிட்டது. தே.மு.தி.க.வின் 10 சதவிகித, கம்யூனிஸ்ட்டுகளின் 3-4 சதவிகித வாக்குவங்கிகள் பத்திரமாக இருக்கின்றனவா; செல்வாக்கில் உயர்வா, சரிவா என்பதை இத்தேர்தல் அவர்களுக்குக் காண்பித்துவிடும். வாக்குகள் சேதாரம் இல்லாமல் இருந்தால்தான் அடுத்து வரும் தேர்தல்களில் பெரிய கட்சிகளுடன் பேரம் பேச முடியும்; இல்லையெனில், கட்சி வளர்ச்சிப் பணிகளில் இனி முனைந்து செயல்பட முயலவேண்டும்.

7. பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் வேகமாக வளர்ந்த கட்சிகள்; கூட்டணி ஆதரவிலேயே செல்வாக்கு பெற்றவை. ஆரம்ப காலத்தில் அக்கட்சித் தலைவர்களுக்கு அடிமட்ட தொண்டர்களோடு இருந்த அணுக்கம், கால ஓட்டத்தில் மெல்லக் குறைந்துவிட்டது. இப்போது, உண்மையில் தம் செல்வாக்கை அவர்கள் புரிந்துகொள்வார்கள். தம் அடிப்படை பலம் கைநழுவிப் போய்விட்டதா? வலுப்பெற்றிருக்கிறதா என்று தெரிந்துவிடும்.

8. உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றி பெற்று வந்தவர்கள் என்ன செய்தார்கள் என்று மக்களுக்கு தெரியவே தெரியாது என்பதுதான் உண்மை. மக்களின் தேவைகளுக்காக அவர்கள் குரல் கொடுத்தார்களா? மாமன்றக் கூட்டங்களில் அவர்களுடைய செயல்பாடுகள் எப்படி இருந்தன? என்ன புதிய திட்டங்களை அவர்கள் தம் வார்டுகளில் செயல்படுத்தினார்கள்? எம்.எல்.ஏ.க்கள் என்ன செய்தார்கள் என்று தேடினால், தெரிந்துகொண்டுவிடலாம். ஆனால், மாமன்ற, நகராட்சி உறுப்பினர்கள்? தம் வார்டுகளில் உள்ள மக்கள் பிரச்னைகளுக்கு மிக அருகிலேயே இருக்கும் இந்த உறுப்பினர்கள்தான், மிகவும் விலகி இருக்கிறார்கள் (விதிவிலக்குகள் உண்டு). மக்கள் சம்பந்தமான வேலைகளை விட, இந்த உறுப்பினர்கள், அவர்கள் சார்ந்த கட்சி வேலைகளிலேயே அதிகம் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி அவர்கள் முன்னேற வேண்டுமல்லவா 🙂

9. இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் கட்சி சார்ந்த உறுப்பினர்களுக்கு வாக்களிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எம்.எல்.ஏ. தேர்தல் என்றால், மக்கள் தொகை அதிகம். அக்கவுண்டபிளிட்டி குறைவு (அங்கும் அக்கவுண்டபிளிட்டி வேண்டும்; ஆனால் வலியுறுத்தும் வழிகள் குறைவு!). வார்டு என்பதோ, நகராட்சி, பஞ்சாயத்து என்பதோ, இன்னும் அருகில் இருக்கும் அலகுகள். அங்கே மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்களை சுலபமாக அடையாளம் காண முடியும். அவர்கள் இத்தேர்தலில் நின்றால், அவர்களுக்கு வாக்களிக்க முன்வாருங்கள்.

10. உள்ளாட்சி அமைப்புகளுக்கு, மத்திய மாநில அரசுகள், உலக வங்கி, இன்னபிற நிதியங்கள் ஏராளமாக பணம் ஒதுக்குகின்றன. அங்கே நல்லவர்கள், நேர்மையாளர்கள் உறுப்பினர்களாக இருந்தால், பலன் நிச்சயம் மக்களைப் போய்ச் சேரும். இன்றைக்கு இருக்கும் மோசமான அரசியல் சூழலில், நல்லவர்களால் என்ன செய்ய முடியும்? நேர்மையாளர்கள் என்பதெல்லாம் பம்மாத்து என்றெல்லாம் குரல்கள் ஒலிக்கின்றன. இருக்கலாம். அவர்களால் ஒன்றுமே செய்ய முடியாமல் கூட போகலாம். பரவாயில்லை. குறைந்தபட்சம், நமக்குத் தெரிந்த நல்லவருக்கு, நேர்மையாளருக்கு, மக்கள்நலப் பணியாளருக்கு வாக்களித்தோம் என்ற திருப்தியாவது இருக்கட்டுமே. முதல் செங்கல் நம்முடையதாக இருக்கட்டுமே.

இதைக்கூடச் செய்யாமல் விலகி இருப்பதில் அர்த்தமில்லை. மறக்காமல், வாக்கு அளியுங்கள்.

விமானத்துள் இதழ்கள்

இந்தியாவில் செயல்படும் ஒவ்வொரு விமான சேவை நிறுவனமும், இன் ஃபிளைட் மேகசின் நடத்துகின்றன. மிக அழகிய அச்சு, நல்ல தாள், வண்ணம், உருவாக்கம் என்று திறமையான தயாரிப்பு. கையில் பிடிக்கவே அழகாக இருக்கிறது.

உள்ளடக்கம், உயர் மத்தியதர வர்க்கத்தை மையப்படுத்தியே கொடுக்கப்படுகின்றன. உடைகள், ஆபரணங்கள், ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், ஸ்பா, அல்லது பயண அனுபவங்கள். பல பக்கங்களைத் தள்ளிக்கொண்டே போய்விடலாம். கஷ்டப்படுத்தாத லைட் ரீடிங் உள்ளடக்கம்.

என் பக்கத்தில் உட்காருபவர்கள் பெரும்பாலும் இதழைத் தொட்டுக்கூட பார்க்க மாட்டேன் என்கிறார்கள். அப்படியே பிரித்துப் பார்ப்பவர்களும் மேய்கிறார்கள், புரட்டிக்கொண்டே போகிறார்கள்.

எவ்வளவு சுலபமான கேப்டிவ் ஆடியன்ஸ்? விமானத்தில் உட்காரும் ஒவ்வொருவரும் அவர் இறங்கும்வரை – அது அரை மணியாக இருக்கலாம், 3 மணி நேரமாகவும் இருக்கலாம் – வேறு ஒன்றையுமே செய்ய முடியாது. சட்டென புற உலகில் இருந்து துண்டிக்கப்பட்ட தருணம் இது. இதில் உருப்படியாக இதழைத் தயாரித்துக்கொடுத்தால், எவ்வளவு நன்றாக இருக்கும்?

சில விமானங்களில் தினசரிகள் உண்டு. லோ-காஸ்ட் ஏர்லைன்களில் அதுவும் இல்லை. இந்த இதழ்தான் உண்டு. ஏதோ ஒரு ஏர்லைனில், பிசினஸ் வேர்ல்டு இதழையும் இன்னொன்றில் வீக் இதழையும் பார்த்தேன்.

இதில் சிக்கல் எங்கே தெரியுமோ? இந்த விமான இதழ்களைத் தயாரிக்கும் பணியை விமான நிறுவனங்கள் அவுட்சோர்ஸ் செய்து இருக்கின்றன. எனக்குத் தெரிந்து மும்பையில் இருக்கும் மூன்று நிறுவனங்களே எல்லா இதழ்களையும் தயாரித்துக் கொடுக்கின்றன. இவையெல்லாம், காண்ட்ராக்ட் பப்ளிஷிங் நிறுவனங்கள். எடிட்டோரியல், விளம்பரத் துறை, அச்சு என்  எல்லாவற்றையும் செண்ட்ரலைஸ் செய்து வைத்து இருக்கின்றன.

முன்னணி இதழ்களோ, தினசரிகளோ இந்த காண்ட்ராக்ட் பப்ளிஷிங் தொழிலில் இறங்கத் தயாரில்லை போல் இருக்கிறது. விளைவு, இதுபோல் அரைகுறை இதழ்களே படிக்கக் கிடைக்கின்றன.

இதில் உள்ளடக்கத்தை விட விளம்பர வருவாயே முக்கியமாகக் கருதப்படுகிறது. மேலும், உள்ளடக்கம் பற்றி விவரம் தெரிந்தவர், எல்லா விமான சேவை நிறுவனத்திலும் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை இல்லையா?

வேறு எங்கோ இதைப் படித்தேன். கத்தார் ஏர்வேஸ் என்று ஞாபகம். விமானத்தின் உள்ளே வைக்கப்படும் பத்திரிகை, இதழ்கள், விவர அட்டைகளை எல்லாம் நீக்கினார்களாம்; விமானத்தின் எடையில் ஒரு டன் குறைந்துவிட்டதாம். இப்போ, எல்லாவற்றையும் சீட் முன்னே இருக்கும் டிஜிட்டல் திரையில் படிக்க ஏற்பாடு செய்துவிட்டார்கள்.

விமானத்துள் உள்ளடக்கம் மேம்பட, இதுவும் ஒருவழியாக உருவாகலாம்.

எப்படி புத்தகம் எழுத வேண்டும்?

என்னிடம் பேச வரும் பலரிடம் எழுதும் ஆர்வம் இருப்பதைப் பார்க்கிறேன். அது ஒரு பெரிய வேலையா என்ன என்ற ஒருவிதமான சுலபமாக எடுத்துக்கொள்ளும் தன்மையும் இருக்கிறது.  அப்படி பேச வருகிறவர்கள், பத்திரிகைகளில் நிறைய கட்டுரைகளை எழுதி இருப்பார்கள்.  அதனால் புத்தகம் எழுதுவது மிகவும் லகுவான வேலை என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

பொறுமையாக நேரம் செலவிட்டுப் பேசத் தொடங்கும்போதுதான், புத்தகம் என்று எதைச் சொல்கிறோம், அதை எழுத எப்படி அணுக வேண்டும், சிந்திக்க வேண்டும், உழைக்க வேண்டும் என்றெல்லாம் புரியத் தொடங்குகிறது. இதனால் நான் கண்ட பலன்கள் இரண்டு: அடுத்த முறை என்னைப் பார்க்கவே வரமாட்டார்கள். பார்த்தாலும், எழுதணும்னு நினைச்சேன், டைமே இல்ல சார் என்பார்கள்.

புத்தகம் எழுதுவதைப் பற்றி பல தவறான அபிப்பிராயங்கள் இருக்கின்றன. அதில் இருந்துதான் இத்தகைய எதிரிவினைகள் ஏற்படுகின்றன. முக்கியமானவை:

1. ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை என்ன சொல்லப் போகிறோம் என்ற தெளிவு புத்தகம் எழுதத் தொடங்கும் முன்பே இருக்க வேண்டும். விரிவாக யோசிக்கத் தெரியவேண்டும். எழுத எடுத்துக்கொண்ட விஷயத்தின் பல்வேறு முகங்களை பார்க்கத் தெரியவேண்டும்.

2. தனக்கான நோக்குநிலை என்ன என்பதைப் பற்றியும் தெளிவு வேண்டும். எந்த ஒரு ஸ்டாண்ட்டும் எடுக்காமல், உள்ளது உள்ளபடி தெரிவிக்க விரும்பினாலும் அதுவும் ஒரு நோக்குநிலைதான். இந்த நோக்குநிலை தடுமாற்றமில்லாமல் இருந்தால்தான், எழுத்தின் பின்னணியில் இயக்கும் தொனி சீராக இருக்கும்.

3. அதிரடி வாக்கியங்கள், வெறும் அனுமானத்தின் பேரில் எழுதப்படும் வாக்கியங்கள் எல்லாம் எவை என்பதைப் பற்றிய தெளிவு வேண்டும். இப்படிப்பட்ட வாக்கியங்களைப் பயன்படுத்தும் முன்பு, அதற்கான உரிய ஆதாரமோ, ஆவணங்களோ இருக்கிறதா என்று உறுதி செய்துகொள்ள வேண்டும்.

4. மிகவும் பொறுமை வேண்டும். பத்திரிகை கட்டுரை எழுதுவதில் காட்டக்கூடிய வேகம் இதற்கு எடுபடாது. அத்தியாயம் அத்தியாயமாக, ஒரு செடி வளர்ந்து தழைப்பதைப் போல், ஒரு புத்தகம் வளர முடியும். திட்டமிடலும், தொடர்ந்த உழைப்பும் மிக மிக அவசியம். எழுத எழுத மாளவே மாள மாட்டேன் என்கிறதே என்று எரிச்சல் எரிச்சலாக வரும்.  புத்தகத்துக்கு இந்த எரிச்சல் எதிரி.

5. எழுதும்போதுதான், நாம் எடுத்துக்கொண்ட விஷயத்தில் நமக்கு இருக்கக்கூடிய தகவல் போதாமை, ஞானம் போதாமை எல்லாம் பளிச்சென்று தெரியவரும். அதுவரை ஒரு விஷயத்தைப் பற்றி எல்லாம் தெரிந்ததாக நினைத்துக்கொண்டு இருந்ததெல்லாம், 50 பக்கம் தாண்டும்போதே வற்றிப்போகும். திடீர் வெறுமை படர்ந்துவிடும். நமக்கு இவ்வளவுதான் தெரியுமா? என்று நம் மேலே நமக்குச் சந்தேகம் ஏற்பட்டு விடும்.  இதற்கு இருக்கும் ஒரே மருந்து, எடுத்துக்கொண்ட தலைப்பு பற்றி படிப்பதும், மேலும் மேலும் படிப்பதுதான்.

6. எழுதுவதைத் தவிர எழுதுவதற்கு வேறு குறுக்கு வழியே இல்லை. எழுத்தைப் பற்றிய பிரமிப்போ, அயர்வோ ஏற்பட்டுவிட்டால், எழுத்தைப் பற்றி பகல்கனவு கண்டுகொண்டு இருக்கலாம்.

7. எழுதும் செய்தியில் நிரம்ப காதல் வேண்டும். கடனுக்குப் பேனா பிடிக்கக் கூடாது. எழுதத் தொடங்கும்போது காதல் இல்லையென்றாலும் எழுதிக்கொண்டே போகும்போதாவது அந்த ஆர்வத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில், முடிக்கும்போது, மனத்தில் மகிழ்ச்சியோ உற்சாகமோ பூரிப்போ இருக்காது. வாங்கின கடனைத் திருப்பிச் செலுத்திய ஆசுவாசமும் நிம்மதியும்தான் இருக்கும்.

இயல்பாகவே சில பேருக்கு மேலே சொன்ன தகுதிகள் எல்லாம் இருக்கின்றன. அவர்களிடம் பிரச்னையே இல்லை. 15 நாள், 20 நாளில் ஒரு புத்தகத்தை எழுதிக் கொடுத்துவிடுவார்கள்.

மற்றவர்களுக்கு இப்போது நான் வைத்திருக்கும் ஒரே உபாயம் இதுதான்: மேலே உள்ள எதையும் அவர்களுக்குச் சொல்வதில்லை!

ஒரு செயதி பற்றி நீங்கள் எழுத விரும்பினால், அதில் என்னென்னவெல்லாம் எழுதப்படலாம் என்ற ஒரு டேபிள் ஆஃப் கண்டெண்ட் மட்டும் எழுதிக்கொண்டு வாருங்கள் என்று சொல்லி அனுப்புகிறேன். அப்புறம், அவர்களோடு ஒரு நீண்ட அமர்வு. பின்னர் ஒவ்வொரு அத்தியாயமாக எழுதிக்கொண்டு வரச்செய்தல்.  சின்னச் சின்ன கோல்களை உருவாக்கி அதை அடைய ஒத்துழைத்தல்.

ஒரு பதிப்பாளராக இப்படி நேரம் செலவிடுவது, என் பணியின் ஒரு பகுதியாகவே தோன்றுகிறது. எல்லாம் ரெடிமேடாக கிடைத்துவிட்டால் அப்புறம் அதில் சவாலே இல்லையே!