நல்ல நாவல், நல்ல சிறுகதை, நல்ல சினிமா, எதைப் பார்த்தாலும், சே..இதை நான் செஞ்சிருக்கணும்… மிஸ் பண்ணிட்டேனே என்று ராத்தூக்கம் இல்லாமல் அவஸ்தை படுவேன். இதழியலில், இது இன்னும் கொஞ்சம் ரொம்பவே ஓவர்.
ஏதாவது நல்ல லேஅவுட், டிசைன், கட்டுரை, தொடர், அட்டைப்படம் பார்த்துவிட்டால், மனசே ஆறாது. திருப்பித் திருப்பி அதையே பார்த்துக்கொண்டு இருப்பேன், பேசுபவர்களிடமே சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ, அதை எடுத்துச் சொல்லுவேன். ஆற்றாமை ஆற ரொம்ப நேரம் ஆகும்!
சமீபத்தில் இப்படி என்னை ஆற்றாமைக்குள் ஆட்படுத்தும் ஆச்சரியங்கள் நடந்துகொண்டு இருக்கின்றன:
1. புதிய தலைமுறை இதழில் சட்டென பிரியல்லண்டாக தென்படும் சில கட்டுரைகள். குறிப்பாக, எழுத்தாளர் பிரபஞ்சனின் தொடர். நேர்த்தியான மொழி, அழகான வடிவம், மனத்தைத் தீண்டும் அனுபவங்கள்.
2. பாவை சந்திரன் இதழ் ஆசிரியராக பொறுப்பேற்ற பின்பு வரும் தினமணி கதிர் வார இதழை, அப்படியே கண்களில் ஒற்றிக்கொள்ளலாம். பாவையின் டிசைன் சென்ஸ் என்னை எப்போதும் கட்டிப்போடும். புதிய பார்வை இணை ஆசிரியராக இருந்தபோது, அவர் அதில் செய்த லே அவுட்கள் ஒவ்வொன்றும் அபாரம்! பத்திரமாக பழைய இதழ்களைச் சேமித்து வைத்திருக்கிறேன். இயற்கையாகவே அவருக்குள் ஓர் அழகியல் பார்வை உண்டு. அதுதான் இதழ் முழுவதும் வியாபித்திருக்கும். இப்போது, தினமணி கதிர் அந்த டிசைன் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறது.
3. சமநிலை சமுதாயம் என்று ஒரு இஸ்லாமிய இதழ் வருகிறது. ரொம்ப தைரியமான இதழ். இஸ்லாமிய சமுதாயத்துக்கு உள்ளேயே கேட்கப்பட வேண்டிய கேள்விகளின் திறவுகோல் இந்த இதழ். ஹஜ் யாத்திரை அழைத்துப் போகிறேன் என்று கல்லா கட்டும் பயண முகவர்களைப் பற்றி மிக நல்ல கட்டுரை இதன் ஓர் இதழில் இடம்பெற்றது. வேலூரில் இருக்கும் மற்றொரு இஸ்லாமிய மார்க்க கல்லூரியின் குறைகளைப் பற்றி இந்த இதழில் கட்டுரை வந்திருக்கிறது. ச.ச. இதழ், அட்டைப்படத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவம் என்னை பரவசப்படுத்தும். ஜெ. ஜெயித்து வந்தபோது, ச.ச. இதழின் முகப்பில் ஓர் அட்டைப்படம் வைத்தார்கள். இன்றுவரை அதை எல்லோருக்கும் நான் சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.
4. அடுத்து, இன்னும் கொஞ்ச நாளைக்கு நான் சொல்லிக்கொண்டு திரியும் ஒரு விஷயத்தை நேற்று படித்து முடித்தேன். தி சண்டே இந்தியன் இதழில் தீபாவளி இதழோடு, ரசிகன் என்றொரு இணைப்பு இதழும் வந்திருக்கிறது. தமிழின் முக்கிய நடிகைகளைக் குறித்த மலரும் நினைவுகள். முக்கிய எழுத்தாளர்கள் அனைவரும் எழுதியிருக்கிறார்கள். ஒவ்வொரு நடிகையும் எவ்வாறு தமிழ்சமூகத்தின் மனத்திரையில் நீக்காத இடம் பிடித்திருக்கிறார்கள் என்று நாஸ்டால்ஜியாவைத் தூண்டு சுவையான கட்டுரைகள். கலெக்டர்ஸ் ஐட்டம் மாதிரியான ஓர் நூல். அ.முத்துலிங்கம், மாலன், சுகுமாரன், இயக்குநர் வஸந்த், ஜெயமோகன், நாசர் ஆகியோரின் கட்டுரைகள் முதல் தரமானவை. பத்திரப்படுத்திக்கொள்ளத் தூண்டும் ஆவணம்.