கணித அறிஞர்களைத் தேடிக்கொண்டு போனபோது, என் கண்ணில் தட்டுப்பட்ட முத்துதான், ‘பாவனா.’ பேரா.சி.எஸ். அரவிந்தாவை ஆசிரியராக கொண்டு வெளிவரும் அற்புத கணித இதழ் இது. ஆண்டுக்கு நான்கு இதழ்கள் தான். பெங்களூருவில் இருந்து வெளிவருகிறது.
ஒவ்வொரு இதழிலும் இந்திய கணித அறிஞர்களின் மிக விரிவான பேட்டிகள் இடம்பெறுகின்றன. பல்வேறு கணிதத் துறைகள் தொடர்பான கட்டுரைகளும் உண்டு. பழைய இதழ்களை எல்லாம் இணையத்தில் சேமித்து வைத்துள்ளனர்.
அனைத்து இதழ்களையும் பைத்தியம் மாதிரி நான் ஒரே இரவில் படித்திருக்கிறேன். பலமுறை மீண்டும் மீண்டும் படித்திருக்கிறேன். நண்பர்கள் எல்லோருக்கும் இதைப் பற்றி வாய் ஓயாமல் எடுத்துச் சொல்லியிருக்கிறேன். இந்தியக் கணிதவியலின் பங்களிப்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் பேட்டிகள் இவ்விதழ்களில்
இடம்பெற்றுள்ளன.
என் வாழ்நாளுக்குள் நான் செய்ய விரும்பும் ஏராளமான வேலைகள் உண்டு. அதில் முக்கியமானது, இவ்விதழ்களில் வெளியாகியுள்ள பேட்டிகளைத் தொகுத்து, தமிழில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் என்பது. இதில் தான், தமிழகத்தின் முக்கியமான கணித அறிஞர்களின் பேட்டிகளும் இடம்பெற்றுள்ளன.
ஐம்பதாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தின் கணித வளம் எப்படிப்பட்டது, பெற்றோர்கள் அந்தக் காலங்களில் எப்படி தம் பிள்ளைகளை ஊக்குவித்தார்கள், எத்தகைய
அற்புதமான ஆசிரியர்கள் மாணவர்களின் அறிவைச் செழுமைப்படுத்தினார்கள் என்றெல்லாம் இந்தப் பேட்டிகள் தெரிவிக்கின்றன.
அப்பப்பா… பெரிய கணித யாகம் அன்றைய கல்லூரிகளில் நடைபெற்றுள்ளன என்ற எண்ணம் தான் எனக்கு ஏற்படுகிறது.
உண்மையில் எனக்கு வேறொரு எண்ணமும் உண்டு. மத்திய அரசு விஞ்ஞானியான நண்பர் த.வி. வெங்கடேஸ்வரனிடமும் இதைப் பற்றிச் சொல்லிக்கொண்டு இருந்தேன். விஞ்ஞான் பிரசார் சார்பாக, அவர்கள் ஒருசில நூல்களை வெளியிடும் முயற்சியில் உள்ளனர். தமிழகத்தின் கணித அறிஞர்களில் தற்போது இன்னும் உடல்நலத்துடன் உள்ளவர்களைப் பேட்டி கண்டு எழுதி, புத்தகமாக வெளியிட வேண்டும் என்பது என் அவா. ஆதரவு தாருங்கள் என்று சொல்லியிருக்கிறேன்.
சில சமயங்களில் என் நடத்தை எனக்கே ஆச்சரியமளிப்பது உண்டு. ‘பாவனா’ இதழ் ஆசிரியரிடம் பேசவேண்டும் என்பது என்னுடைய ரொம்ப நாள் கனவு.
திடீரென்று அவர்களுடைய வலைத்தளத்தில், ஒரு அலைபேசி எண் கொடுக்கப்பட்டது. அழைத்துப் பேசியபோது, அரவிந்தாவே எதிர்ப்பக்கம் உரையாடினார்.
உண்மையில் நான் சிறுகுழந்தையின் குதூகலத்தோடு என் மகிழ்ச்சியைத் தெரிவித்தேன். தமிழகத்தில் அந்த மனிதர் சுமார் 10 ஆண்டுகள் இருந்திருக்கிறார். என் குரலில் தெரிந்த மகிழ்ச்சி அவரையும் தொற்றிக்கொண்டது.
அனைவரிடமும் கணிதத்தை எடுத்துச் செல்லவேண்டும் என்பதற்காகவே, ஒரு மனிதர் இவ்வளவு தூரம் உழைக்கும்போது, அவரை மெச்சாமல் எப்படி இருக்க
முடியும்?
கணித ஆர்வம் உள்ளவரா நீங்கள்? இதோ ‘பாவனா’ இதழ்கள். படியுங்கள்: http://bhavana.org.in/