மிடில்கிளாஸ் அல்பத்தனங்கள்?

திருமணமோ, வேறு வைபவங்களோ, எப்போது வெளியே உணவு உட்கொண்டாலும் வீட்டுக்கு வந்தவுடன், சூடாக ஒரு டம்ளர் வெந்நீர் குடித்துவிட்டே படுப்பேன். வெளி உணவுகளில் காரமோ, எண்ணெயோ அதிகமாக இருப்பதே காரணம். வெந்நீர் பருகுவது சின்னவயசு பழக்கம். எந்த உடல் பிரச்னையானாலும் வெந்நீர் எனக்குக் கைகண்ட மருந்து. ஜூரம் வந்தாலும் சரி, சோர்வு, அசதி, வலி ஏற்பட்டாலும் சரி, வெந்நீரைக் குடித்தால் போதும். சற்று நேரத்தில் உடல் தெம்பாகிவிடும். அதில் என்ன மாயம் இருக்கிறது என்று தெரியவில்லை. செரிமானக் கோளாறு இருந்தாலும் வெந்நீர்தான். உணவு உடனே ஜீரணமாகிவிடும். அல்லது வாயால் வெளியேறிவிடும். எதுவானாலும் நல்ல பலன்தான்!

வெந்நீரை நோய் நிவாரணியாகப் பயன்படுத்துவது சரியா என்று தெரியவில்லை. எனக்கு அது சரியாக வேலை செய்கிறது. என் குடும்பத்தினருக்கும் இதைப் பரிந்துரைப்பேன். ஆனால், வெந்நீர் குடிப்பது நிறைய பேருக்குப் பிடிப்பதில்லை. குளிர்ந்த நீர் சுவை இருப்பதாக கருதுவோர், இதில் எந்தச் சுவையும் இல்லை என்றே சொல்லக் கேட்டிருக்கிறேன். வெறும் நீர்தான், சப்பென்று இருக்கும் என்று முகம் சுளிப்பதைப் பார்த்திருக்கிறேன். அந்த வெப்பம்தான் அதன் மகிமையே. நீரை நன்கு கொதிக்க விட்டு, டபரா டம்ளரில் எடுத்துக்கொள்வேன். வாய் பொறுக்கும் சூட்டுக்கு அதை ஆற்றி,வெப்பத்தைத் தணித்து, பின்னர் குடிக்கத் தொடங்குவேன். நீர் தொண்டை வழியாக, நெஞ்சில் இறங்கி, வயிற்றை அடைவதை, வெப்பப் பாதை சொல்லும். உணவகங்களில், வெந்நீர் கேட்டுவாங்கிப் பருகும் மூத்தவர்களைப் பார்த்திருக்கிறேன்.

வேறொரு சந்தர்ப்பத்தில் இணையத்தில், வெந்நீர் பற்றி படித்தபோது, ஏராளமான தகவல்கள் கிடைத்தன. உடல் எடையைக் குறைக்கக்கூட வெந்நீர் பயன்படும் என்பதெல்லாம் கொஞ்சம் அதிகபட்சமாகத் தோன்றியது. ஆனால், அது உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது, ஜீரணத்துக்கு கைகண்ட மருந்து என்பதெல்லாம் ஏற்கத்தக்கவை. வெந்நீருக்கு ஏதோ மருத்துவ குணம் இருக்கவேண்டும் என்பதை மட்டும் எல்லோரும் ஏற்கின்றனர்.

தேங்காய் எண்ணெய் மற்றொரு அருமருந்து. எந்தப் புண்ணாக இருந்தாலும், அடியாக இருந்தாலும், தோல் சம்பந்தமாக எந்தவிதமான குறைகள் தெரிந்தாலும், தேங்காய் எண்ணெய்தான் உடனடி நிவாரணி. பல வீடுகளில் தேங்காய் எண்ணெய் இருப்பதில்லை. பெண்கள், தங்கள் கேசத்துக்கு வேறு வகை கிரீம்களைப் பயன்படுத்தத் தொடங்கியபின், தேங்காய் எண்ணெய்க்கு மவுசு போய்விட்டது போலும். தேங்காயைப் பற்றிய இன்றைய சிந்தனைகள் வெகுவாக மாறிவிட்டன. அதை கொழுப்புச் சத்து நிறைந்தது, அதன் வாசனை ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது என்று சொல்லப்படுகிறது. சின்னச் சின்ன காயங்களுக்கு தேங்காய் எண்ணெய்யும் நீபாசல்ஃப் பெளடரும்தான் கைமருந்து.

காற்றடைத்த சோடா (carbonated water) இன்னொரு பிரமாதமான கைமருந்து. எப்போது செரிமானக்கோளாறு ஏற்பட்டு, வயிற்றுப்போக்கு உண்டானாலும் சோடாவை வாங்கி ஒரே மூச்சில் குடித்து முடித்துவிட்டால் போதும். வயிறு திம்மென்று இருக்கும். அடுத்த வேளையே வயிற்றுப் போக்கு முற்றிலும் நின்றுவிடுவதைப் பார்த்திருக்கிறேன்.

இவற்றையெல்லாம் மற்றவர்களுக்குச் சொல்லும்போது, ஒருவித ஏளனத்தைச் சந்தித்திருக்கிறேன். மிடில்கிளாஸ் அல்பத்தனத்தின் வெளிப்பாடாக இவை பார்க்கப்படுகின்றன. நேரடியாக மருத்துவரிடம் செல்வதும், அவர் எழுதித்தரும் மருந்துகளை வாங்கி உண்பதுமே மிகச் சரியான வழி என்று ஆணியடித்தாற்போல் மக்கள் மனங்களில் ஆழப்பதிந்துவிட்டது. அதுதான் சரியான முறை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. வழிவழியாக ஒரு சில மருத்துவமுறைகள் நல்ல பலனைக் கொடுத்திருக்கின்றன என்பதும் உண்மை.

உடலைப் புரிந்துகொள்வதிலும் அதற்கேற்ப சிகிச்சைமுறைகளை உருவாக்குவதிலும் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு நாட்டிலும் ஆர்வம் காட்டப்பட்டிருக்கிறது. இதில் ஒருசில இன்று வழக்கொழிந்திருக்கின்றன; ஒரு சில மேலோங்கி இருக்கின்றன. இதில் தவறு, சரி என்று எதுவுமில்லை. எல்லாமே மக்கள் சாய்ஸ்தான்.

எனக்கும் மாற்று மருத்துவம் பக்கம் போக பயம் அதிகம். வாய்ப்புண் வந்தபோது, உறவினர் ஒரு தந்த தைரியத்தில், அண்ணா நகரில் இருந்து ஒரு சித்த மருத்துவரைப் பார்த்தேன். வலது உள்ளங்கையை விரிக்கச் சொன்னார் அவர். அதற்கு மேலே, மணியின் நாக்கு போலிருந்த ஒரு குமிழைக் கையில் பிடித்துக்கொண்டு, ஆட்டினார். கூடவே, நாடியையும் பிடித்துக்கொண்டார். என் உடலின் தன்மை பற்றியும் அதில் இருக்கக்கூடிய பிரச்னைகள் பற்றியும் அவர் சொல்லச் சொல்ல, அசந்து போனேன். என் மாமியாருக்கு மூட்டுவலி. அவரிடம் பேசிக்கொண்டே வலது கை நடுவிரலில், பால்பாயிண்ட் பேனாவால் அழுத்தி உருட்டினார் அந்த மருத்துவர். “வலி குறைஞ்சிருக்காம்மா?” என்று கேட்டபடி, அடுத்த ஒரு சில நிமிடங்கள் பேனாவால் தொடர்ந்து அழுத்தம். எனக்கே நம்புவதற்கு கொஞ்சம் யோசனையாகத்தான் இருக்கிறது. மூட்டு வலி குறைந்திருப்பதாக மாமியார் தெரிவித்தார்.

என் நண்பர் டாக்டர் ராஜா வெங்கடேஷ், சென்னை பொது மருத்துவமனையில் உள்ள கார்டியோதொராசிக் சர்ஜன். பேசும்போதெல்லாம், அவர் ஒரு விஷயத்தை வலியுறுத்துவார். ஆங்கில மருத்துவம் ஒரு சில நோய்களுக்கு மிகச் சிறந்தது. வேறு சில நோய்களை மாற்று மருத்துவர்கள் மிகச் சிறப்பாக குணமடைய வைக்கிறார்கள். அவர்கள் சொல்வதை அலோபதி மருத்துவர்கள் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். இதுதான் பெரிய பிரச்னை. எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் மருத்துவ முறைகளை இணைத்து, ஒருங்கிணைந்த மருத்துவ முறையை உருவாக்கவேண்டும். நாம் மக்களுக்குதானே உதவப் போகிறோம். அவர்கள் விரைவாகவும், தொடர் பாதிப்புகள் இல்லாமலும், பின் விளைவுகள் ஏதுமின்றியும் குணமடைந்தால், அதைவிட பெரிய சாதனை என்ன இருக்க முடியும் என்று கேட்பார் டாக்டர் ராஜா.

நியாயம்தானே?

6 thoughts on “மிடில்கிளாஸ் அல்பத்தனங்கள்?

  1. என்னை போலவே ஒரு வெந்நீர் மற்றும் தேங்காய் ரசிகர். தேங்காய் போத்தல் என தலைமாட்டில் வைத்து விட்டு தான் தூங்குவேன். மொபைல் இல்ல போத்தல் என் கையில் இருக்கும் வஸ்து

  2. வெந்நீரை நான் மட்டும்தான் ரொம்ப நம்புகிறேனோ என்று நினைத்திருந்தேன். நீங்களும் அதை சிலாகித்து இருக்கிறீர்கள்.

    உங்களைப்போலவே நானும் டபராவில் ஆற்றி ஆற்றிக் (ரசித்துக்) குடிப்பேன்.

    இரண்டு நாட்களுக்கு முன் எங்கள் அடுக்குமாடி குடியிருப்பின் புது வருடக் கொண்டாட்டம். அன்று சாப்பிட்ட ஐஸ்க்ரீமினால் ஜலதோஷம், ஜுரம். நான் பாடும் அவஸ்தையைப் பார்த்துவிட்டு எங்கள் பக்கத்துவீட்டுப் பெண் சொனாள்:

    ஐஸ்கிரீம் சாப்பிட்டவுடன் சுடு நீர் குடித்துவிட்டால் உடல் பாதிக்கப் படாது என்று!

    பல நோய்களுக்கு மாற்று மருந்து கண்கண்ட மருந்தாக இருக்கிறது என்பது மிகவும் உண்மை.

  3. பாட்டி வைத்தியம் போல பயனுள்ள, எளிமையான அனுபவ மருத்துவத்தை தேனாகத் தந்திருக்கிறீர்கள் பாஸ். அருமை; பின்பற்ற வேண்டிய முறைகளும்கூட!

  4. அண்ணா நகரில் அந்த மருத்துவரின் பெயர் நினைவிருக்கிறதா? என் தந்தைக்கு மூட்டு வலி பிரச்சினை நீண்ட நாட்களாக இருக்கிறது.

பின்னூட்டமொன்றை இடுக