மீராவை முன்வைத்து…

மீரா என்று பெயருடைய பெண்கள், காதல் மணம் புரிந்தவர்களாகவே காண்கிறேன். அதுவும் வீட்டை விட்டு காதலனோடு போய் திருமணம். காதல் திருமணத்தில் அவர்கள் மிக மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். அல்லது, ஏதோ ஒரு வகையில் காதலால் மீரா பாதிக்கப்பட்டிருப்பார். காதலுக்கும் மீராவுக்கும் பூர்வஜென்ம தொடர்பு போலும். இதே போல், வரதராஜன் என்ற பெயருடையவர்கள் தனியார் நிறுவனங்களில் பெரும் பதவிகளில் இருப்பர். குறிப்பாகநிதி, நிர்வாகம், வர்த்தகம் ஆகிய துறைகளில். கஸ்தூரி ரங்கன் என்று பெயருடையவர்கள் அரசுத் துறை உயர்பதவிகளில் நிறைய பேர். அனிதா என்ற பெயருடையவர் பெரும்பாலும் நுண்கலைகளில் ஆர்வமுடையவர்.

இதெல்லாம் என்னுடைய அனுமானங்கள். அல்லது நான் கண்ட ஒற்றுமைகளில் இருந்து பெற்ற புரிதல். எல்லா நேரங்களிலும் சரியாக
இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை. ஆனால், பெயர்களுக்கு ஒரு கேரக்டர் இருக்கிறது. சில பெயர்களைச் சொல்லும்போதே, அப்பெயருக்கு
உரியவரின் தோற்றம் மனத்தில் எட்டிப் பார்க்கும். எழுத்துகள்தான். ஆனால், அதைச் சொல்லும்போது ஒரு மிடுக்கு, ஒரு துயரம், ஒரு மேன்மை, ஒரு இழிவு எல்லாமும் விரியும். யாரையேனும் சந்திக்கப் போகும் முன், பெயர்களால் உருவான பிம்பம்தான் என்னை வழிநடத்தியிருக்கிறது. நேரே சந்திக்கும்போது, அந்த நபர், என் மனத்தோற்றத்துக்கு முற்றிலும் எதிராக இருக்கலாம். ஆனால், என் கற்பனை உரையாடலுக்கு, ஓர் பிம்பம் அவசியம்தானே.

கதைகளில் பாத்திரங்களுக்குப் பெயர் வைக்கும்போது ரொம்ப திண்டாடிப் போய்விடுவேன். ஷ் என்று முடியும் பெயர்கள் எனக்கு அலர்ஜி. இயல்பான நடுத்தர வர்க்கப் பாத்திரங்கள்தான் என் கதை மாந்தர்கள். அவர்களின் பெயர்கள், ரொம்பத் தேய்ந்து போனதாகவும் இருக்கக்கூடாது. அதேசமயம் அந்நியமாகவும் இருக்கக்கூடாது. ஒவ்வொருமுறையும், பெயர்களை உருட்டி உருட்டிப் பார்த்து, மனத்துக்குள் நிம்மதி ஏற்பட்டவுடன் தான், அதை எழுத்தில் எழுதுவேன். சொல்லப்படும் கதையில் ஏதோ ஒரு புள்ளியில், பெயரும் அதன் தன்மையும் ஒருங்கிணைய வேண்டும். அப்போதுதான், படிக்கும் வாசகன் மனத்தில் கேரக்டரோடு பெயரும் நிலைத்து நிற்கும்.

இதற்கு மாறாக ஒருசிலர், ஒரு குறிப்பிட்ட பெயரை எப்போதும் பயன்படுத்துவர். கிரேஸி மோகன் நாடகங்களில் பெண் பாத்திரங்கள் எல்லோரும் ‘மைதிலி’ அல்லது ‘ஜானகி’. பிரபஞ்சன் கதைகளில் ‘சுமதி’ பிரபலம். மா.அரங்கநாதனின் கதைகள் எல்லாவற்றிலும் ‘முத்துக்கறுப்பன்’தான் ஹீரோ. மறக்க முடியாத பாத்திரப் பெயர்கள் என்று ஒரு பட்டியல் போட்டால், அதில் நிச்சயம் பாபு, யமுனா, அரவிந்தன், வந்தியதேவன், குந்தவை, பூங்குழலி, ஜே.ஜே., டல்பதடோ, அபே குபேக்னா, சந்திரசேகர், ராமசேஷன், கணேசன், பாண்டியன், மெஹரூனிஸா எல்லோருக்கும் இடமிருக்கும்.

ஒருசில தட்டையான பெயர்களும் உண்டு. சுந்தரி, சுரேஷ், கல்பனா, கல்யாணி… இப்படிப்பட்ட பெயர்களை எந்தப் பாத்திரத்துக்கு வைத்தாலும், அது ஒட்டவே ஒட்டாது. ஆங்கிலத்தில், “Placeholder name” என்று சொல்வார்களே, அதற்கிணையானது இந்தப் பெயர்கள். இப்பெயர்கள் ஏற்படுத்தும் மனப்பிம்பம், வலிமையற்றவை. ஏதும் புதிதாக சொல்ல இயலாதவை.

ஆனால், பெயர்களை பொருத்தத்தோடு திரையில் உலவ விடுபவர்களில், கெளதம் வாசுதேவ் மேனன் கெட்டிக்காரர். ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் ராகவன் என்ற பெயரைக் கமல் உச்சரிக்கும்போது, மிடுக்கு வெளிப்படும். காவல்துறை பற்றி பொதுப்புத்தியில் நிலைத்திருக்கும் கம்பீரம் எதிரொலிக்கும். அவர் படத்தில் “மாயா”வுக்கு ஓர் இடம் எப்போதும் உண்டு. இளைஞர்கள் தாம் விரும்பும் தோற்றத்தை ‘கார்த்திக் – ஜெஸ்ஸி’யில் கண்டதால்தான், ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ பெரும் வெற்றி பெற்றது. ‘பள்ளிக்கூடம்’ படத்தின் ‘குமாரசாமி’ எல்லோருக்கும் பிடித்துப் போனதற்கு, அந்தப் பெயர் பாத்திரத்துக்கு ஏற்ப அமைந்ததே காரணம். ‘சொல்ல மறந்த கதை’ ‘சிவதாணு’வில் சேரன் காணாமலே போனது நிஜம்.

அவ்வப்போது என்னைப் பாதிக்கும் பெயர்களை ஒரு குறிப்புப் புத்தகத்தில் எழுதி வைத்திருக்கிறேன். அப்பெயர்களே கதையைச் சொல்லிவிடக்கூடியன. எழுத்தில் எழுதவேண்டும். சீக்கிரம் கைவர வேண்டும்.