சிக்கனமே அழகு!

ஜனவரி 4, 2013

அப்போது, இராயப்பேட்டை பைலட் தியேட்டருக்கு அருகில் இருந்தது க்ரியா பதிப்பகம். நண்பர் திலீப்குமார் அப்போது அங்கே இருந்தார். புத்தகங்கள் வாங்கப் போகும்போது கொஞ்சம் பேசுவோம். ஒருமுறை புத்தகம் வாங்கப் போனபோது எழுத்தாளர் எஸ். சங்கரநாராயணனைச் சந்தித்தேன். அதற்கு முன்பு, அவருடைய சிறுகதைகளைப் படித்திருந்தேன். வித்தியாசமான எழுத்துக்காரர். ரொம்பப் பிடிக்கும். அறிமுகப்படுத்திக்கொண்டு பேசத் தொடங்கினேன். மாடியை விட்டுக் கீழே இறங்கி சாலையோரத்தில் நின்று பேசினோம். அவர் என் கதைகளைப் படித்திருக்க வேண்டும். பேச்சுவாக்கில் ஒரு அம்சத்தைக் குறிப்பிட்டார்: “புரோஸ் எழுத எழுத மரத்திலேருந்து சருகெல்லாம் உதிர்கிற மாதிரி, வேண்டாத வார்த்தைகளெல்லாம் உதிர்ந்து போகும். கச்சிதமாக வார்த்தைகள் வந்து விழும் அப்புறம்.” 

வார்த்தைகளைப் பற்றிய கவனம் கூர்மையடைந்தது அதற்குப் பின்னால்தான். அதேசமயத்தில்தான் ம.வே.சிவகுமாரின் கதைகளை எல்லாம் படித்துக்கொண்டிருந்தேன். அவருடைய மொழியில் அப்படி ஒரு சொற்செட்டு இருக்கும். இப்போதும் விமலாதித்த மாமல்லன், தமது டிவீட்டுகளிலும் ஃபேஸ்புக் ஸ்டேடஸ்களிலும் இப்படிப்பட்ட சொற்செட்டைக் கையாள்வது தெரியும். மாமல்லன் ஒருபடி மேலே போய், ஒருசில வாக்கியங்களில் ஐ, ஆல், கு, இன், அது, கண் எல்லாவற்றையும் கூட நீக்கிவிட்டு எழுத முயற்சிக்கிறாரோ என்று சந்தேகம் எழுவதுண்டு.

மொழிவளம் அதிகமாக சொற்சிக்கனம் கைகூடும். “என்றார்கள்”, ”சொன்னார்கள்”, ”கிறு”, “கின்று” விகுதிகள் போன்றற்றைத் சில தவிர்க்கலாம். வழக்கமான ஆரம்பம், வழக்கமான முடிவு போன்றவற்றைத் தவிர்க்கவேண்டும் என்று முனைந்தாலே புது வாக்கியம் கிடைக்கும். ஒரு கட்டத்தில், ஒரு கதைக்குள் ஒரு சொல் மறுமுறை இடம்பெறக்கூடாது என்ற கட்டுப்பாட்டைக்கூட வகுத்துக்கொண்டு எழுதியிருக்கிறேன். மேலும், தவிர, அதே போல், இந்நிலையில் போன்ற இணைப்புச் சொற்களை மிகவும் பொருள்பொதிந்த இடங்களில் மட்டுமே பயன்படுத்துவது என்ற பழக்கத்தையும் ஏற்படுத்திக்கொண்டேன். இவை இல்லாமலும் வாக்கியம், முழுமை பெறும். பொருள் புரியும். 

மார்க்குவேஸ்ஸைப் பற்றிப் படித்த போது, ஓரிடத்தில் சொல்லைப் பற்றிய கவனம் என்னை ஈர்த்தது. யாரோ அவரிடம், அன்றைய நாள் எப்படி இருந்தது என்று கேட்க, “மிகவும் பயனுடையதாக இருந்தது. நான் எழுதிய பத்தியில் இரண்டு சொற்களை நீக்க முடிந்தது” என்று பதில் அளித்தாராம். லா.ச.ரா. அப்படி சொற்களையும் வாக்கியங்களையும் செதுக்கிச் செதுக்கிச் செம்மைப்படுத்தியவர். சொற்கள் மந்திரமென ஒலிக்கும். பா.ராகவன், அவரது பல வரிகளை மனப்பாடமாகச் சொல்வார். காரணம், சொற்செட்டு. அழகு. எளிமை. திருத்தம்.

இணைய எழுத்தில் இப்படிப்பட்டச் சொற்செட்டு, செறிவு, நேர்த்தி குறைவு. வெளியிடுவதற்கான இடத்துக்கு பற்றாக்குறை இல்லை என்பதால், வார்த்தைகளை அள்ளித் தெளிக்கக்கூடாதல்லவா? செலவழிக்கும் ஒவ்வொரு சொல்லும், மதிப்பு மிகுந்தது. அதை வீணே இறைப்பதில் பொருளென்ன?

எழுத்துக்கு அழகு சிக்கனம்!

Advertisements

நகருக்கு என்று ஒரு ஒலி இருக்கிறது. ஒவ்வொரு நாளும் அலுவலகம் வரும்போது, அந்த ஒலியை மனத்தில் உணர்ந்துகொள்வேன். ஒருநாள் பரபரப்பு, ஒரு நாள் துக்கம், ஒரு நாள் அமைதி, ஒரு நாள் பதற்றம் என்று பல்வேறு உணர்வுகளை நகரம் எனக்குள் ஏற்படுத்துகிறது. இவை என் எண்ணங்களின், அவ்வப்போதைய மனநிலைகளின் பிரபலிப்போ என்றுகூட யோசிப்பேன். அப்படி இருந்ததில்லை. 

வண்டியோட்டிக்கொண்டு வரும் அரை மணிநேரமும் சென்னை தன் பல்வேறு முகங்களைக் காட்டும். கூட வரும் வாகனங்கள், மனிதர்கள், அவர்கள் பேசும் பேச்சுக்கள், குறுக்கே நடக்க மாடுகள், மனிதர்கள் எல்லோரும் அன்றன்றைய உணர்வைத் தொட்டுக்காட்டுவர். உதாரணமாக, இன்று ஒருவித பதற்றம் எல்லா இடங்களிலும் தெரிந்தது.

இராதாகிருஷ்ணன் சாலை, அண்ணா சாலை, தி.நகர் என்று எல்லா பகுதிகளிலும் ஒருவரை ஒருவர் முந்திச் செல்லும், அலறல் சப்தமெழுப்பும் வண்டிகள் மிக அதிகம். பொதுவாக இந்நேரத்தில் அலுவலகவாசிகள் விரைவார்கள். வேகம் இருக்கும், பதற்றம் இருக்காது. சைலன்சர்களைக் கழற்றி ஆட்டோக்களை இன்று கடந்து வந்தேன். என்னைக் கடந்து இரண்டு மூன்று ராட்சச பைக்குள் பறந்தன. எல்லோரின் உடல்மொழியிலும் பதற்றம்.

பல நாட்கள் இப்படி இருப்பதில்லை. நிதானத்தோடு கூடிய வேகம் இருக்கும். கடைகளின் ஷட்டர்களைத் உயர்த்துபவர்கள், தாளலயத்தோடு திறப்பார்கள். போக்குவரத்துக் காவலர், புன்னகையோடு வழியேற்படுத்துவார். தொலைக்காட்சியில் சொல்வது போல் “இயல்பு வாழ்க்கை” இயல்பாகத் தெரியும்.

இப்படிப்பட்ட உணர்வுக்கும் அன்று நகரில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கும் ஏதேனும் ஒற்றுமை இருக்கும் என்றே என் மனம் நம்ப விரும்பும். ஒரு நாள் தீ விபத்து, வேறொரு நாள் வாகன விபத்து, ஏதேனும் ஒரு பொதுக்கூட்டம், ஏதேனும் ஓர் ஊர்வலம்… தொலைக்காட்சி செய்திகள் இவற்றைச் சொல்லும்போது, உணர்வு நிஜமானது போல் தோன்றும்.

பொதுவாக நான் சிறுசாலைகள், குறுக்குச் சந்துகள் வழியாக வண்டியோட்டுவேன். அங்கெல்லாம் கூட, அன்றன்றைய உணர்வு துலக்கமாகத் தெரியும். அச்சம் நிரம்பிய நாள்களில் சாலைகள் நிறையபேர் வெறுமனே நின்றுகொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். தாம் சாலைகளின் நடுவே நிற்கிறோம் என்ற உணர்வே இல்லாமல், தூரத்து வாகனங்களை, மனிதர்களைப் பார்த்துக்கொண்டு நாலைந்து பேர் நிற்பார்கள். அவர்கள் அருகே போய் ஒலியெழுப்பினால் கூட, உணர்வு கலையாமல் நகர்வார்கள். ஏதோ ஒன்று அன்று எல்லோரையும் ஆட்கொண்டிருக்கும்.

நகருக்கு வாசனை இருப்பதையும் உணர்ந்திருக்கிறேன். முதல்முறையாக மும்பை நகருக்குள் நுழைந்தபோது விடிகாலை மூன்று மணி. காரை நிறுத்தச் சொல்லிவிட்டு, கீழே இறங்கி கொஞ்சம் தூரம் நடந்தேன். ஒருவித வெக்கை; இரும்புத் தாது வாசனை. பூனாவும் பெங்களூருவும் கொஞ்சம் குளிர் பிரதேசங்கள்.ஆனால் இரண்டிலும் வேறு வேறு வாசனைகளை நுகர்ந்திருக்கிறேன். பூனாவில் ஒருவித மூலிகையும், பெங்களூருவில் புழுக்கத்தின் வாசனையையும் உணர்ந்திருக்கிறேன். புது நகரங்களுக்குச் செல்லும்போது, இரவு முழுவதும் பயணம் செய்துவிட்டு, இருள் பிரிவதற்கு முன் போய் இறங்குவேன். நகரம் தன் வாசனை மொட்டுக்களை அவிழ்க்கும் தருணம் அது. 

இந்த வாசனைகள் எல்லாம் இன்று மாறியிருக்கலாம். என் நினைவில் தங்கிப் போன வாசனைகள் இவை. ஒரு நகரத்தைப் பற்றிய பிம்பத்தை, வாசனைகளும் உணர்வுகளும்தான் ஏற்படுத்துகின்றன. அங்கே இருக்கும் மனிதர்கள், அவர்களின் நடவடிக்கைகள் எல்லாம் இதற்குப் பின்னர்தான். ஒரு சில நகரங்களில் ஒவ்வாமை உணர்வு தலைதூக்கும். ஏனென்று தெரியவில்லை. எனக்கு தில்லி அப்படிப்பட்ட இடம். 

இதெல்லாம் பிரமையாக இருக்க வாய்ப்பில்லை. பல சமயங்களில் மனிதர்களின் நடவடிக்கைகள் இந்த வாசனை சார்ந்தும் உணர்வுகள் சார்ந்தும் இருப்பதைக் கவனித்திருக்கிறேன். முதல்முறையாக ஒருவரைப் பார்த்தாலும், அவரைப் புரிந்துகொள்ள இதெல்லாம் ஏதோ ஒருவகையில் எனக்கு உதவியிருக்கிறது. “இவர் இப்படித்தான் பதில் சொல்வார்”, “இவர் இப்படித்தான் நடந்துகொள்வார்” என்று நான் ஊகிக்கும் அம்சங்கள் நடந்திருக்கின்றன. ஒருவகையில், கொஞ்சம் பயமாகக் கூட இருக்கும். வேறு மாதிரி நடந்துகொள்ளக் கூடாதா என்று நினைப்பேன். அப்படி இதுவரை நடந்ததில்லை.

2012 – ரீவைண்ட்

ஜனவரி 2, 2013

ஆண்டு தொடக்கத்தில் இருக்கும் உற்சாகம், படிப்படியாக வடிந்து, ஒரு கட்டத்தில்  சமனடைந்துவிடும். 2012ல் அப்படித்தான் நேர்ந்தது. வாரம் ஒரு ஆயிரம் வார்த்தைகளாவது எழுத வேண்டும் என்று ஆரம்பத்தில் திட்டம் வகுத்தேன். அதற்கேற்ப, யோசித்து வைத்திருந்த ஒரு கதையை, “இடைவேளை” என்ற தலைப்பில், கல்கியில் ஜூன் இறுதி வரை எழுதினேன். எனக்கே திருப்தியாக வந்த நாவல் அது. இப்போது மறுமுறை வாசித்துச் செப்பனிட்டுக்கொண்டு இருக்கிறேன். இரண்டு சிறுகதைகள் எழுதியது கூடுதல் போனஸ். மற்ற எழுத்தெல்லாம் பத்திரிகை எழுத்துதான்.

நிறைய நாவல்கள், கட்டுரைத் தொகுதிகள் வாசித்தேன். இரண்டு நூல்கள் இப்போது நினைவில் நிற்கின்றன. ஒன்று யோகி ராம் சூரத் குமார் பற்றி, அவரது சீடர் பார்த்தசாரதி ஆங்கிலத்தில் எழுதிய அமரகாவியம். எளிமையும் நேர்த்தியும் நிரம்பிய நூல். மற்றொன்று, ராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ள “அளசிங்க பெருமாள்” பற்றிய வாழ்க்கை வரலாறு. அற்புதமான நூல்.

இரண்டு பத்திரிகைகள் சென்ற ஆண்டில் என்னை மிகவும் ஈர்த்தன. ஒன்று, ரோஜா ஆராய்ச்சி நூலகம் வெளியிடும் காலாண்டு இதழான “ரோஜா.” சிரத்தையெடுத்து தயாரிக்கிறார்கள். இரண்டு மூன்று கட்டுரைகள்தான் இடம்பெறுகின்றன. ஆனால், ஒவ்வொன்றும் தகவல் பொக்கிஷம். இரண்டாவது, “சமநிலை சமுதாயம்.” இஸ்லாமிய சமூகத்தில் பேசத் தயங்கும் பல விஷயங்கள் இவ்விதழில் விரிவாக எடுத்துப் பேசப்படுகிறது. சென்ற ஆண்டில் இரண்டு பிரச்னைகளை விரிவாக அலசினார்கள்: 1. ஹஜ் பயண முகவர்கள் செய்யும் அட்டூழியங்கள். 2. வேலூர் மார்க்கக் கல்லூரி ஒன்றின் திசைமாறும் போக்கு. ஆரோக்கியமான, ஆக்கப்பூர்வமான விவாதங்கள் வெளிவந்தன.

சென்ற ஆண்டு பார்த்த படங்களில், Jiro Dreams of Sushi, A Separation, Waste Land மிகச் சிறந்தவை. சூஷி மிகமிக அழகு. சூஷி உணவை எவ்வளவு ரசனையோடு, கலையுணர்வோடு ஒரு ஜப்பானிய குடும்பம் தயாரிக்கிறது என்பதே படம். நம்ம ஊர் மைசூர்பா அல்லது இருட்டுக் கடை அல்வா, அல்லது ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா பற்றி தாராளமாக இப்படி ஒரு படம் எடுக்க முடியும். 

தனிப்பட்ட முறையில் இரண்டு மகிழ்ச்சிகள்: 1. என் மூத்த மகள் நல்ல கிரேடில் பத்தாம் வகுப்பை முடித்துவிட்டு, அஹோபில மடப் பள்ளியில் +1 சேர்ந்துள்ளார். 2. கல்லூரிக் காலத்துக்குப் பின்னர் இப்போது மீண்டும் உடற்பயிற்சிப் பித்து மண்டைக்கு ஏறிவிட்டது. தினமும் கடுமையான உடற்பயிற்சி. ஆறு மாதங்களில் உடல் எடையைக் குறைப்பதே குறிக்கோள்.

ஏழாம் அறிவு நேற்று இரவு பார்த்தேன். பல விமர்சனங்களில், ஸ்ருதிஹாசனின் உச்சரிப்பு,  நடிப்பு எல்லாவற்றையும் ஒரு மாதிரி கிண்டல் செய்தும் ஆலோசனை சொல்வது போலவும் எழுதப்பட்டதைப் படித்திருந்தேன். அதனாலேயே ஏழாம் அறிவு பார்க்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன்.

ஸ்ருதிஹாசனே டப்பிங் பேசியிருக்கிறார்; அவருக்குப் பதில் வேறு யாரேனும் நல்ல தெளிவான தமிழில் டப்பிங் பேசியிருக்கலாம் என்றெல்லாம் கருத்துக்கள் கேட்டு இருந்தேன்.  நேற்று படத்தை முழுமையாக நிதானமாக பார்த்தபோது, வேறு எண்ணங்களே ஏற்பட்டன.

ஸ்ருதி, இன்றைய தமிழ் இளைஞர்கள், பெண்களின் ஒரு வகை மாதிரி. இன்றைக்குப் பல குடும்பங்களில் வெளிநாடுகளில் போய் படித்து, அங்கேயே செட்டிலான இளைஞர்கள் உண்டு. திரும்பி வந்தவர்களும் உண்டு. நகர்ப்புறங்களில் ஆங்கிலப்பள்ளிகளில் மட்டுமே படித்து வளர்ந்தவர்களும் உண்டு. வீட்டில் மட்டுமே தமிழ் பேசும் வாய்ப்புள்ளவர்கள் அவர்கள். பல நிறுவன உயர்பதவிகளில் இருக்கும் தமிழ் இளைஞர்களுக்கு தமிழ் புரியும்; பேசுவது கொச்சையாக இருக்கும். சரளமாக தமிழ் பேச வரவில்லை என்பது குறித்து கவலை கொள்ளும் இளைஞர்கள் உண்டு.

இவர்கள் எல்லாம் தமிழ் பேசாததாலேயே, பழகாததாலேயே இவர்களுக்குத் தமிழ் மேல் காதல், ஆர்வம் இல்லை என்று அர்த்தமில்லை. தமிழைப் பேசிப் புழங்குவதற்கான தேவை, அவர்களைப் பொறுத்தவரை வெகுசில இடங்களிலேயே இருக்கிறது. இப்படிப்பட்டவர்களை, தமிழ் சினிமாவிலும் சரி, நேர்ப்பேச்சிலும் சரி ஒரு மாதிரி “பீட்டர்” என்று வகைப்படுத்தி, கிண்டல் அடிப்பதையே செய்திருக்கிறோம்.

அதேசமயம், மறைமுகமாக இந்தத் தன்மையை ரசிக்கவும், மேட்டிமையின் வெளிப்பாடாக உணர்ந்துகொள்ளவும் பின்பற்ற முடியுமா என்று முயன்றும் பார்த்தவர்கள் உண்டு. இன்றைய பல்சமூக, பல் இன வாழ்க்கைச் சூழலில், இத்தகைய ஓர் காஸ்மோபாலிடன் கலாசாரம் கவர்ச்சிகரமாக இருப்பதைப் பார்க்க முடிகிறது.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் பேஜ் 3 கேரக்டர்கள் இவர்கள். பேஜ் 3 பிரபலங்கள் ஆக, பலர் முயல்கின்றனர்.

ஏழாம் அறிவில், முருகதாஸ், இளைஞர்கள் மத்தியில் உள்ள ஆர்வத்தை நன்கு பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார். ஸ்ருதி, அந்தக் கேடரக்டருக்குப் பொருத்தமானவர். ஓர் அழகான முரணை உள்ளே வைத்து, கேரக்டரை இன்னும் மெருகேற்றி இருக்கிறார்.

அதாவது, வாழ்க்கை அவுட் லுக், நடை உடை பாவனை, பேச்சு எல்லாம் இன்றைய பேஜ் 3 மாடர்னிட்டி; உள்ளே உள்ளது, தீராத தமிழ் உணர்வு. இந்த முரண், இந்தக் கதைக்கு மிகவும் தேவை. ஒருபக்கம், சூர்யா நல்ல தமிழில், உணர்ச்சிப் பொங்க பேசவும் நடிக்கவும் வேண்டும்; அவருக்கு ஜோடியானவர் மாடர்னிட்டியோடு, தமிழ் உணர்வு கொண்டவராக இருக்கவேண்டும்.

இன்றைக்கு சினிமா பார்க்கப் போகும் இளம்பெண்கள், தம்மை, ஸ்ருதிஹாசனோடு இனங்கண்டு கொள்பவர்கள் ஏராளம். பயங்கரமாக கிண்டல் அடிக்கப்படும் அவரது “ஷ” மொழி, ஸ்டைல் மொழியானால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, அசினை, இன்றைய பெண்களின் பிரதிபலிப்பாக நினைத்திருந்தேன். ஸ்ருதி, அடுத்த கட்டம். இன்றைய 15 – 22 வயதுள்ள நகர்புறப் பெண்களின் பிரதிபலிப்பு. ஏழாம் அறிவின் அபரிமிதமான தமிழுணர்வுக்கு பின்புலமாக இருந்து வலிமை சேர்க்க, ஸ்ருதியின் நுனிநாக்கு, கடித்துத் துப்பும் தமிழை பயன்படுத்தியிருப்பது முருகதாஸின் புத்திசாலித்தனம்.

பிடிக்கறதோ இல்லையோ, ஸ்ருதி வகை தமிழுணர்வு, இன்றைய நிஜம். அதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்!

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக, கூடங்குளம் அணுமின் நிலையமும் தி.நகர் கடைகள் சீல் வைக்கப்பட்டதும் பெருமளவில் எல்லா செய்திப் பத்திரிகைகளின் இடங்களையும் ஆக்கிரமித்துக்கொண்டன. தவறில்லை. இரண்டுமே முக்கியமானவை.  பேசப்படவேண்டியவை.

இரண்டு பிரச்னைகளின் பின்னிருந்து செயல்படும் ஒரு மனோநிலைதான் என்னை ரொம்பவும் இம்சிக்கிறது.

கூடங்குளம் அணு மின் நிலையத்தை பல கோடி ரூபாய் செலவில் கட்டியாயிற்று. உற்பத்தி தொடங்க வேண்டியதுதான் பாக்கி. இந்த நிலையில், அணுமின் நிலைய விபத்துக்கள் பற்றி ஏன் பேச வேண்டும்?  செயல்பட வேண்டியதுதானே? இல்லை என்றால், மொத்த செலவும் வேஸ்ட். மொத்த புத்திசாலித்தனமும் வீண்.

பிரச்னை வரும் போது பார்த்துக்கொள்ளலாம். விபத்து நடக்க வாய்ப்பில்லை என்று சொல்வதற்கு முன்னாள் குடியரசுத் தலைவர் வந்து சர்டிபிகேட்டும் கொடுத்துவிட்டார்.

அணுமின் ஆதரவாளர்களுக்கு மக்களின் தார்மிக எதிர்ப்பு பயங்கர எரிச்சலாக இருக்கிறது. அதனால்தான், கல்லணையையும் பெரிய கோவிலையும் நெல்லையப்பர் கோவிலையும் உதாரணமாகக் காட்டிப் பேசுகிறார் கலாம்.

இதேபோன்ற, “வந்தால், பார்த்துக்கொள்ளலாம்” மனப்பான்மைதான், தி.நகர் கடைகள் விஷயத்திலும் செயல்படுகிறது.  ரங்கநாதன் தெருவில் ஒரு கடை தீப் பிடித்ததே, ஏதேனும் காப்பாற்ற முடிந்ததா என்ற கேள்வி எழவே மாட்டேன் என்கிறது.

கடைகளை சீல் வைத்ததால், பெருத்த நஷ்டம். பல ஆயிரம் தொழிலாளர்கள், வேலை தேடிச் சென்னை வந்தவர்கள் நடுத்தெருவில் நிற்கிறார்கள். அவர்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது. இதற்கு மாநில அரசு தீர்வு காண வேண்டும் என்று பேசுகிறார்கள், வியாபாரிகள் சங்கத் தலைவர்கள்.

அவர்கள் ஒரு படி மேலே போய், இதையும் சொல்கிறார்கள்: தி.நகர் முழுவதையும் வணிக வளாகமாக (ஸ்பெஷல் ஸோன்) அறிவித்து, நகர்புற கட்டடங்களின் சட்ட விதிகளில் இருந்து விலக்கு அளியுங்கள். ஏனெனில், அங்கே வியாபாரம் கொழிக்கிறது. அரசுக்கு ஏராளமான வரி செலுத்தப்படுகிறது. அங்கே வணிகம் தடைபட்டால், அரசுக்கு வரிவருவாய் குறைந்துவிடும் என்றெல்லாம் மறைமுக மிரட்டல்கள்.

ஆனால், இங்கும் அடிப்படை கேள்வி கேட்கப்படுவதில்லை. அல்லது, மிக சாமர்த்தியமாக, மெளனம் காக்கப்படுகிறது. இவ்வளவு பெரிய கட்டடங்களைக் கட்டி இருக்கிறீர்களே? பல லட்சம் மக்கள் புழங்குகிறார்களே? அவர்களுடைய பாதுகாப்புக்கு உகந்தாற்போல், என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள்? தீ ஏற்பட்டால்? நெரிசல் ஏற்பட்டால்? வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டால் என்ன சேஃப்டி நடவடிக்கைகள் அங்கே அமலில் இருக்கிறது?

அதெல்லாம் பார்த்துக்கொள்ளலாம். முதலில், கடை நடத்த அனுமதியுங்கள். சீலை நீக்குங்கள். மற்ற விஷயங்களைச் சரிசெய்யலாம் என்று சொல்கிறார்கள். இவையெல்லாம் கட்டடங்களைக் கட்டும்போதே செய்திருக்க வேண்டியவை. இனியேனும் செய்துவிட்டு, கடைகளைத் திறவுங்கள் என்பதுதான் சரியான அணுகுமுறை.

ஆனால்,  “நடந்த பின்னால் பார்த்துக்கொள்ளலாம்” என்ற மோசமான நம்பிக்கை எவ்வளவு அபாயமானது? அணுவிபத்து நடந்தபின்னர் பார்க்க என்ன இருக்கிறது? இரண்டு கட்டடங்கள் தீ பிடித்துக்கொண்டால், உயிரிழப்புக்களைத் தடுத்துவிட முடியுமா?

ஒன்று அரசு; மற்றொன்று தனியார். இரண்டிலுமே பிடிவாதமும் உள்நோக்கங்களுமே நிறைந்திருக்கின்றன. மேலும், தெரிந்தே செய்யும் தவறுகள் இவை. உலக நாடுகள் எங்கும் அணு உலைகளை மூடிக்கொண்டு இருக்கும்போது, இங்கே நடத்த வேண்டும் என்கிறார்கள். பாதுகாப்பான கடைகள் வேண்டும், வசதியான ஷாப்பிங் அனுபவம் வேண்டும் என்ற எண்ணம் பெருகும் வேளையில், புறாக்கூண்டுகளைக் கட்டி வணிகத்தோடு, அபாயத்தையும் சேர்த்தே வளர்க்கிறார்கள் தி.நகர் கடைக்காரர்கள்.

நீதிமன்றமும் மக்கள் சக்தியும் இல்லை என்றால், இவர்களெல்லாம் நம்மை கால் தூசுக்குக் கூட மதிக்க மாட்டார்கள் என்பது மட்டும் நிஜம்.

ஐசிஐசிஐ பற்றி எழுதக்கூடாது என்று இருந்தேன். மறுபடியும் அதே வங்கியின் இன்னொரு பிரிவிடம் மாட்டிக்கொண்டு, என் கோபத்தைத் தொலைக்க வேண்டியதாயிற்று.

இந்த முறை ஐசிஐசிஐ லோம்பார்ட் – காப்பீடு நிறுவனம். சென்ற டிசம்பர் மாதமே என் இரண்டு சக்கர வாகனத்தின் வாகன காப்பீடு முடிந்துவிட்டது. கடந்த சில ஆண்டுகளாக நான் வாகனம் பயன்படுத்துவதை முழுவதும் குறைத்துவிட்டு, பேருந்துகளையே பயன்படுத்தி வருகிறேன். வீட்டுக்கு அருகே இருக்கும் ஒரு சில இடங்களுக்கு மட்டும் வாகனம்.

வழக்கம்போல், சென்ற வெள்ளியன்று இராதாகிருஷ்ணன் சாலையில், நீல்கிரீஸ் அருகே இருக்கும் பெரிய பெட்ரோல் பங்குக்கு பெட்ரோல் போடப் போனேன். நான் சென்றிந்த நேரம், அங்கே ஐசிஐசிஐ வாகன காப்பீடு வழங்கும் நபர் உட்கார்ந்திருந்தார்.

ஏற்கெனவே இரண்டு ஆண்டுகள் அந்த பெட்ரோல் மையத்தில்தான் என் இன்ஷூரன்ஸைப் புதுப்பித்து இருக்கிறேன். அதனால், அவர் அருகே போய் வாகனத்தை நிறுத்திவிட்டு, பழைய பாலிசியை எடுத்துக்கொடுத்தேன். பாலிசி எக்ஸ்பைர் ஆகிவிட்டது, புதுதாக போட, ரூ.950க்கு மேல் ஆகும் என்றார். சரியென்று சொல்லிவிட்டு, கொஞ்சம் தள்ளிப் போய் தொலைபேசியில் பேசத் தொடங்கினேன். அவர் மீண்டும் கூப்பிட, பாலிசி போட்டிருந்தார்.. ரூ. 972க்கு கிரெடிட் கார்டைத் தீற்றவும் ஒத்துக்கொண்டேன். சிலிப்பில் கையெழுத்தும் போட்டாச்சு.

அப்போதுதான், எனக்கு அது ஞாபகம் வந்தது. சென்ற ஆண்டு, பாலிசி போடும் போது ரூ. 604 தானே கட்டினோம். எதற்கு 900க்கு மேல் ஆச்சு என்று யோசனை.

“ பத்தாயிரம் ரூபாய்க்கு ஆக்ஸிடெண்ட் இன்ஷூரன்ஸ் கூட போட்டு இருக்கு சார்.. அதுக்கு பிரிமியம் ரூ. 290.”

“நான் அதை கேக்கலியேப்பா… எதுக்கு என்கிட்ட சொல்லாம போட்டீங்க?”

“பாலிசி எக்ஸபைர் ஆயிடுச்சு சார்… அதனாலயும் ஜாஸ்தி ஆயிடுச்சு..”

“பிரதர், இன்ஷூரன்ஸ் தெரியாதவங்க சொல்லுங்க. வேற நேஷனலைஸ்டு இன்ஷூரன்ஸ் கம்பெனி கிட்ட போனா..இதை விட பிரிமியம் கம்மியாகும்.. எதுக்கு என்னகிட்ட சொல்லாம செஞ்சீங்க?”

“ஐசிஐசிஐல ரெண்டையும் சேர்த்துத்தான் போடணும்னு இன்ஸ்டரக்‌ஷன் சார்…”

“இது அநியாயமா இல்ல. நீங்க பாலிசி விக்க நான் தான் கெடைச்சேன்?”

“ஆக்ஸிடெண்ட் கவரேஜ்தானே சார்?”

“அதை முடிவு செய்ய நீங்க யாரு? வேணும் வேணாங்கறது என் முடிவுதானே?”

மேலும் பேச்சைத் தொடர விரும்பாதவர் போல், இன்னொரு பில்லையும் எழுதத் தொடங்கினார் அந்த நபர்.

“இது என்ன?”

“சர்வீஸ் சார்ஜ்ஜுக்கு பில்.”

“எதுக்கு சர்வீஸ் சார்ஜ்?”

“ஐசிஐசிஐ லோம்பார்ட் இந்த டெஸ்க்கை நிர்வாகம் செய்ய எங்கிட்ட கொடுத்துட்டாங்க சார்.. 99 ரூபாய் எங்க சர்வீஸ் சார்ஜ்.”

ஏதோ ஒரு புரோக்கரேஜ் நிறுவனம் அந்த வாகன இன்ஷூரன்ஸ் மேஜை நிர்வாகம் செய்வது அப்போதுதான் தெரிந்தது.

“போன வருஷம் கூட, ஐசிஐசிஐ ஆள் இங்கே இருந்தாரேப்பா”

“எங்கிட்ட கொடுத்துட்டாங்க சார்.”

“அப்படின்னா.. இன்ஷூரன்ஸ் கமிஷன், சர்வீஸ் சார்ஜ் எல்லாம் நீங்க ஐசிஐசிஐ லோம்பார்ட் கிட்டதானே வாங்கிக்கணும். என்கிட்ட ஏன் வாங்கறீங்க?”

என் கேள்வி காற்றி தொங்கிக்கொண்டு நிற்க, அடுத்து வந்த வாகனத்தின் இன்ஷூரன்ஸைப் பார்க்க போனார் அந்த நபர். அத்தனை அலட்சியம். அத்தனை பொறுப்பு. என்ன படித்து, என்ன விவரம் தெரிந்துகொண்டு என்ன பயன்? கண்ணெதிரே ஒருவர் ஏமாற்றுகிறார். அதையும் மிக லாகவமாய், நேர்த்தியாய், சுத்தமாக. ஒன்றும் செய்ய முடியாமல், எரிச்சலும் கோபமும் மட்டுமே மிச்சம்.

படித்தவனையும் படிக்காதவனையும் சேர்ந்து மொத்தமாக முட்டாளாக்கும் செயல் இது. பகல்கொள்ளை என்ற வார்த்தைக்கு அன்றுதான் எனக்கு அர்த்தம் புரிந்தது!

சொந்தக் கதையை எழுதக்கூடாது என்று எப்போதுமே நினைத்துக்கொள்வேன். இந்த முறையும் முடியவில்லை. ஐசிஐசிஐ வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனத்தின் பொறுப்பற்ற தன்மை என்னை மிகுந்த மனவேதனைக்கு உள்ளாக்கிவிட்டது.

சென்னை மாநகரில் ஃப்ளாட் வாங்க ஆசைப்படும் லட்சோபலட்சம் மத்தியமர்களின் நானும் ஒருவன். 2001 திருவல்லிக்கேணியில் ஒரு ஃப்ளாட் வாங்கினேன். முதலில், கடன் வாங்கியது எல்.ஐ.சி.யின் வீட்டுக்கடன் நிறுவனத்தில். 13 சதவிகிதம் வட்டி அப்போது. வட்டி விகிதம் மிக அதிகமாக இருந்த சமயம் அது. பின்னர் 2002ல் வட்டி விகிதங்கள் குறையத் தொடங்கின. ஐசிஐசிஐ வங்கி 9.5 சதவிகிதத்துக்கு கடன் வழங்கத் தொடங்கியது.

உடனே என் கடனை ஐசிஐசிஐ வீட்டுக்கடன் நிறுவனத்துக்கு 2002ல் மாற்றினேன். தொடர்ந்து வட்டிவிகிதம் குறைந்துகொண்டே வர, ஒரு கட்டத்தில், ஐசிஐசிஐயிலேயே வீட்டுக்கடனை, ஃப்ளோட்டிங் ரேட்டில் இருந்து ஃபிக்சட் ரேட்டுக்கு மாற்றினேன். அதற்கு மொத்தத் தொகையில் 1.75 சதவிகிதமோ என்னவோ கட்டிய ஞாபகம்.

2005 என்று நினைவு. வீடு சம்பந்தமாக ஏதோ ஒன்றைத் தேடும்போது, வீட்டுப் பத்திரங்களின் பிரதியும், தாய்ப்பத்திரங்களின் பிரதிகளும் தேவைப்பட்டன. ஐசிஐசிஐ போய், பிரதிகள் வேண்டி விண்ணப்பித்து, அதற்கான கட்டணமாக ரூ. 500 கட்டிவிட்டு வந்தேன். பதிலே இல்லை. இரண்டு மூன்று முறை போய் கேட்டபோது, இதோ வந்துவிடும், அதோ வந்துவிடும் என்று சொன்னார்கள். இது நடுவே, வேறு வேலைகள் முந்திக்கொள்ள, பத்திரங்களின் பிரதிகளை வாங்கவேண்டிய அவசியம் ஏனோ மறைந்துவிட்டது. நானும் பின் தொடராமல் விட்டுவிட்டேன்.

2010 அக்டோபரோடு கடன் முடிந்தது. என்னுடைய சேல் டீட், சேல் அக்ரிமெண்ட், இதர தாய்ப்பத்திரங்கள் வேண்டி, ஐசிஐசிஐ வீட்டுக்கடன் நிறுவனத்திடம் போய் விசாரித்தேன். இன்னும் 21 நாள்களில் வந்துவிடும். வந்து பெற்றுக்கொள்ளலாம் என்றார்கள். 22 ஆம் நாள் போய் நிற்க, ஒரு சின்ன கவர் வருகிறது. உள்ளே கடனை கட்டிவிட்டதற்கான நோ அப்ஜெக்‌ஷன் சர்ட்டிபிகேட், டாக்குமெண்ட்ஸ் லிஸ்ட் மட்டுமே அதில் இருக்கிறது. அந்த லிஸ்டில், ஒரு பத்திரமும் அவர்களிடம் இருந்ததற்கான முகாந்தரமே இல்லை.

கதைகளில், “தூக்கி வாரிப் போட்டது” என்று எழுதுவார்களே, அதுதான் என் அப்போதைய உணர்வு. 2002ல் எல்.ஐ.சி.யில் இருந்து கடனை ஐசிஐசிஐக்கு மாற்றியபோது, ஐசிஐசிஐக்கான ஜெனரல் சேல்ஸ் ஏஜென்சிகள் இருந்தன. அவர்கள்தான் கடன் வாங்க உதவியவர்கள். பின்னர், ஜி.எஸ்.ஏ.க்களை எல்லாம் ஐசிஐசிஐ நிறுத்திவிட்டு, தாமே எல்லா செயல்பாடுகளை ஏற்றுக்கொண்டன. அந்தச் சமயத்தில்தான் நான் கடன் வாங்கினேன். எனக்கு உதவிய ஜி.எஸ்.ஏ. தாமே எல்லா பத்திரங்களையும் எல்.ஐ.சி.யில் இருந்து ஐசிஐசிஐக்கு மாற்றிக்கொள்வதாகவும், அதற்கு அனுமதி தரும் விதமான 150 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் அத்தாட்சிப் பத்திரமும் எழுதி வாங்கிக்கொண்டார்கள்.

இதையெல்லாம் இப்போது ஐசிஐசிஐ வீட்டுக்கடன் நிறுவன ஊழியர்களிடம் விளக்க, பத்திரம் உங்களிடம்தான் வந்திருக்க வேண்டும், உடனே தேடிப் பார்க்கச் சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டேன். ஐசிஐசிஐ வீட்டுக்கடன், மந்தைவெளி அலுவலகத்தில் இது நடந்தது. வழக்கம்போல், சிரித்த முகத்தோடு என்னைக் கையாளத் தொடங்கிய அலுவலருக்கு கொஞ்ச நாளிலேயே நான் இம்சையாகிப் போனேன். என் அழைப்பை எடுக்க மாட்டார். நேரே போய் பேசும்போது, மேலும் மேலும் காரணங்களும், தேடுவதற்கான புதிய இடங்களும் அகப்பட்டுக்கொண்டே இருந்தன. ஒரு கட்டத்தில், பத்திரங்களை வைக்கும் மைய அலுவலக ஊழியரின் செல்பேசி எண்ணைக் கொடுக்க, அவர் பின்னால் லோ லோ என்று மூன்று நான்கு மாதங்கள் அலைந்திருப்பேன். அவர் மும்பை என்பார், சென்னை அடையாறு என்பார்… ஆனால், பத்திரம் போன இடம் தெரியவில்லை. ஒரு கட்டத்தில் இந்த நபரும் என் அழைப்பைத் தவிர்க்கத் தொடங்கிவிட்டார்.

இந்த இக்கட்டு ஏற்படுத்தியிருக்கும் மன உளைச்சல் கொஞ்சம் நஞ்சம் அல்ல. மொத்த பணத்தையும் கட்டியாகிவிட்டது; ஆனால் கையில் பத்திரமில்லை. எங்கு இருக்கிறது என்றும் தெரியவில்லை. என் மனைவி அமைதி மெல்ல மெல்ல குறையத் தொடங்கிவிட்டது. ஒரு கட்டத்தில் இருவரும் வீட்டுப் பத்திரம் சம்பந்தமாக பேசிக்கொள்ளவே கூடாது என்று சபதமெடுக்கும் அளவுக்கு மனவேதனை. சட்ட ரீதியாக என்ன செய்யவேண்டும், அப்படியே செய்தாலும், காணாமல் போன பத்திரத்தை வைத்துக்கொண்டு என்ன வேண்டுமானாலும் நடக்கலாமே. என்னென்ன விதமான இடர்களைச் சந்திக்கப் போகிறோமோ என்ற பதற்றம் ஒருபக்கம். ஐசிஐசிஐயின் விட்டேற்றித்தனம் மற்றொரு பக்கம்.

முகம் நிறைய புன்னகையும், அலுவலகப் பொலிவும், நிதானமும் நவீன வங்கியியலின் அடையாளங்களாக இருந்தாலும் உள்ளே இருக்கும் பொறுப்பற்றதன்மை எல்லா இடங்களிலும் ஒன்றாகவே இருப்பது மெல்ல மெல்ல புரியத் தொடங்கியது.

ஒரு நாள், நேரே எல்.ஐ.சி. வீட்டுக்கடன் நிறுவனத்தையே போய் கேட்டால் என்ன என்று எண்ணம் தோன்ற, பழைய வீட்டுக்கடன் எண்ணைத் தேடி எடுத்துக்கொண்டு, சைதாப்பேட்டையில் இருக்கும் அலுவலகத்துக்குப் போனேன். அங்கே இருந்த அதிகாரி, அப்போதுதான் ஓர் உண்மையை எனக்குச் சொன்னார். எல்.ஐ.சி.யில் வீட்டுக்கடன் அடைக்கப்பட்டாலும் வேறு வங்கிகளுக்கு மாற்றப்பட்டாலும், உரிமையாளர்களிடம்தான் மூலப் பத்திரங்கள் திருப்பி அளிக்கப்படும், வேறு வங்கிகளுக்கோ, நிதி நிறுவனங்களுக்கோ கொடுக்கப்படாது என்றார்.

மேலும், இது பத்தாண்டுகளுக்கு மேலான விஷயம், கோரிக்கை கடிதம் கொடுத்துவிட்டுச் செல்லுங்கள், எங்களால் முடிந்ததைச் செய்கிறோம் என்றார். கடிதம் கொடுத்துவிட்டு, கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் காத்திருந்தேன்.

மூன்றாவது வாரம் அந்த எல்.ஐ.சி. வீட்டுக்கடன் நிறுவனப் பெண் அலுவலரைப் போய் பார்க்க,  ஒரு மணி நேரம் காத்திருக்கச் சொன்னார். இரண்டு மணி நேரங்கள் கழித்து கூப்பிட்டவர் மேஜையில், நான் கொடுத்திருந்த பத்திரங்கள் அத்தனையும் சீலிடப்பட்ட உறையில் இருப்பது தெரிந்தது. என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அந்தம்மா எல்லா நலன்களும் வளங்களும் பெற வாழ்த்திவிட்டு, கையில் இருந்த இதழ்களைப் பரிசாக கொடுத்துவிட்டு, என் பத்திரங்களை வாங்கி வந்தேன்.

என் பத்திரங்களை பத்திரமாக வைத்துக்கொண்டு இருக்கவேண்டும் என்று எல்.ஐ.சி.க்கு தலையெழுத்தா என்ன? ஆனால் வைத்திருந்து பத்திரமாகத் திருப்பிக் கொடுத்தார்கள். எல்.ஐ.சி.மேல் இருந்த மரியாதை ஒரு சில படிகள் உயர்ந்தது உண்மை.

மீண்டும் ஐசிஐசிஐ. புதிய அலுவலர். புதிய முகங்கள். நான் இரண்டு மூன்று கேள்விகள்தான் கேட்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டு சென்றேன்.

பத்தாண்டுகளாக கடனுக்கு ஈடான பத்திரமே இல்லாமல் எப்படி நீங்கள் கடன் கொடுத்தீர்கள்? பத்திரங்கள் இல்லை என்று தெரியவந்ததும், என்னை எப்படிக் கேட்காமல் போனீர்கள்? அப்படியானால், உங்களுக்குப் பத்திரங்கள் முக்கியமில்லை. கடனை அடைத்துவிட்டால் போதும். அவ்வளவுதானே.

நவீன மோஸ்தரில் மயங்கி, சிஸ்டம்ஸ் அண்ட் பிராசஸஸில் மயங்கி, அழகிய புன்னகையில் மயங்கி, மேம்பட்ட சேவை என்ற ஹம்பக்கில் மயங்கி, இத்தனைஆண்டுகளாக, பத்திரங்கள் ஐசிஐசிஐயில் பத்திரமாக இருக்கின்றன என்ற என் எண்ணம் எவ்வளவு பைத்தியக்காரத்தனமானது?

அங்கு இருந்த அலுவலரின் உடல் மொழி எனக்கு ஒன்றைத்தான் திருப்பித் திருப்பிச் சொன்னது. பல லட்சம் நபர்களில் நீயும் இன்னொரு கஸ்டமர். நான் தொழில் செய்ய வந்திருக்கிறேன். உனக்கு பத்திரம் கிடைத்துவிட்டது அல்லவா? வாயை மூடிக்கொண்டு அடுத்த வேலையைப் பார்.

நடந்தது ஒரு தவறு என்றோ, ஒரு வாடிக்கையாளரின் மனவேதனைக்கு மன உளைச்சலுக்கு தாம் காரணமாக இருந்தோம் என்றோ துளிகூட நெக்குருகும் மனம் அங்கே இல்லை. புரொபஷனலிசம். பிளாஸ்டிக் புன்னகை. நவீன முரட்டுத்தனம். வருத்தம் தெரிவிக்கும் பக்குவம் தொலைத்த கார்ப்பரேட் கலாசாரம்.

என்.ஓ.சி.ஐ மட்டும் வாங்கிக்கொண்ட பின்னர், என் மனைவி கேட்டார், “பத்திரம் கிடைக்கலன்னா என்ன செஞ்சிருப்பீங்க?”

“மூணு மாசம் பார்த்துட்டு, போலீஸ்ல எஃப்.ஐ.ஆர். கொடுத்திருப்போம். அப்புறம், டூப்ளிக்கேட் காப்பி வாங்கியிருப்போம்…”

எல்லாவற்றுக்கும் துணிந்துதான் இருக்கிறார்கள். என்னைப் போல் எத்தனை ஏமாளிகளைப் பார்த்திருக்கிறார்களோ? முதல் முறையாக, நவீன வங்கியியலின் மேல் இருந்த மதிப்பு என்வரையில் சரியத் தொடங்கியது.