கரோனா: கிராமமும், நகரமும்

‘நேசமுடன்’ முதல் இதழில், கரோனாவால் கிராமப் பொருளாதாரத்தில் ஏற்படவிருக்கும் பாதிப்புகள் பற்றி தெரிவித்திருந்தேன். பிசினஸ் ஸ்டாண்டர்டு இதழ் இதே விஷயத்தைப் பற்றி எழுதியிருக்கிறது. அது, மேற்கு வங்க மாநில கிராம சமூகங்களில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றத்தைப் பற்றிப் பேசுகிறது.
கிராம சமூகங்களில் என்னென்ன சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன தெரியுமா?
1. முதலில், வெளியூர்களில் இருந்து வந்த மக்களை உள்ளூர்க்காரர்களே சந்தேகத்துடன் பார்க்கின்றனர். வெளியூரில் வந்தவர்கள், கரோனாவைக் கொண்டுவந்திருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. அதனால், அவர்கள் ‘கண்காணிக்கிறார்களாம்.’
2. அடுத்த சில நாட்களில் வெளியூரில் வந்தவர்களிடம் உள்ள சேமிப்புத் தொகை கரைந்துவிடும். அப்புறம் என்ன செய்ய முடியும்? மாநில அரசு வழங்கும் நிதி உதவியை நம்பியே வாழவேண்டும். அது எத்தனை நாட்களுக்குத் தொடரும் என்று தெரியவில்லை.
3. கிராமப் பகுதிகளில் உள்ள பல சிறு மளிகைக் கடைகள் நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டன. பெரிய வணிகர்களிடம் இருந்து அத்தியாவசிய உணவுப் பொருட்களைக் கூட அதிக விலைக்கு வாங்க வேண்டியிருப்பதால், இவர்களால் கடைகளை நடத்த முடியவில்லை.
4. கிராமங்களுக்குத் திரும்பிவந்துள்ள புலம்பெயர் தொழிலாளர்கள், உள்ளூர் பொருளாதாரத்தில் மிகப்பெரும் சுமையாகப் பார்க்கப்படுகிறார்கள். விவசாயத்தில் ஈடுபடுவதற்குத் தேவையான பயிற்சிகள் இவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு வேறு தொழில்களில் பயிற்சி உண்டே தவிர, விவசாயத்தில் அல்ல. ஆனால்,
கிராமங்களில், விவசாயப் பணிகள் மட்டுமே கிடைக்கும் என்பதால், இவர்கள் எப்படி புதிய சூழலுக்கு பழகுவார்கள்?
5. கிராமங்களில் தொழிலாளர்களின் எண்ணிக்கை திடீரென பெருகுவதால், விவசாயம் உள்பட, பல துறைகளிலும் நிலவி வரும் கூலித் தொகை குறைந்துபோய்விடும். இவர்கள் எல்லோரும் வேறு வழியில்லாமல் 100 நாள் வேலைத்திட்டத்தைத் தான் நம்பியிருக்க வேண்டும். ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளில், இத்திட்டத்தின் கீழ் 40 முதல் 45 நாட்களுக்குத் தான் வேலை கொடுக்க முடிந்திருக்கிறது. மேலும் தினக்கூலி என்பது விவசாயக் கூலியை விடக்
குறைவானது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
6. கூலிவேலை செய்வதற்கான ஆட்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டதால், புலம்பெயர் தொழிலாளர்கள், கிராமங்களில் மேலும் சுரண்டப்படுவார்கள்.
7. மேற்குவங்கத்துக்குத் திரும்பிவரும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், சுமையாகவும் வேண்டாத விருந்தாளியாகவுமே பார்க்கப்படுகிறார்கள்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போன்றதுதான், இந்த மேற்கு வங்க உதாரணம்.
நகரம் வேறு சில பிரச்னைகளைச் சந்திக்கிறது.
1. கேரளத்தில், மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள், ஊரடங்கு காலத்தில் திண்டாடிப் போயிருக்கிறார்கள். இருவர் தற்கொலை செய்துகொண்டதாக செய்தி.
கேரள முதல்வர், மருத்துவ அறிவுரையின்படி, இவர்களுக்கு மது வழங்கலாம் என்று கருத்து சொல்லி, கடும் விமர்சனத்தைச் சந்தித்துள்ளார்.
2. கரோனா தொற்று முதலில் ஏற்பட்ட சீனாவின் வூஹான் மாகாணத்தில், கடந்து மூன்று மாதங்களில் தம்பதிகளிடையே பேச்சுவார்த்தை தடித்து, விவாகரத்து வரை சென்றிருக்கும் செய்திகள் வந்துள்ளன.
3. வீட்டிலேயே இருப்பதால், குடும்ப வன்முறை, பாலியல் தொந்தரவுகள் ஏற்படலாம் என்று எச்சரிக்கும் சில செய்திகளையும் படிக்க நேர்ந்தது.
4. 2008 பொருளாதார தேக்கத்துக்குப் பின்னர், மீண்டும், ஒருவித அநித்திய சூழலைப் பார்க்கிறேன். வேலை இருக்குமா, இருக்காதா என்பதுதான் பலரது மனத்தில் முதற் கேள்வி. யாருமே தவிர்க்கமுடியாத, இன்றியமையாத நபர் கிடையாது என்ற உண்மை தெளிவாகப் புரிகிறது. தான் இருந்தால் தான் குறிப்பிட்ட வேலை
நடக்கும் என்று இனி நம்புவதற்கில்லை. விளைவு, விரக்தி.
5. நகரங்களில் மறுசீரமைப்பும் மறுகட்டமைப்பும் எப்போது தொடங்கி, நிலைமை சீரடைவதற்கு எத்தனை காலம் ஆகும் என்பதையும் யாராலும் அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை.
ஒருமாதிரியான நிலையற்ற தன்மை. எப்படி மீளப் போகிறோமோ?

கூருணர்வுச் சொற்கள்!

தொலைக்காட்சியில் நான் செய்திப் ப்ரியன். மெகா தொடர்கள் பார்ப்பவன் அல்ல. இரண்டு நாள்களுக்கு முன்பு, கூடத்தில் ஓடிக்கொண்டு இருந்த தொலைக்காட்சி தொடர் நடுவே சில நொடிகள் நின்றேன். பிரபலமான “சரவணன் – மீனாட்சி” தொடரின் இடையே வரும் முன்னோட்டம் அது. ஒரு முதிய பெண் இன்னொரு பெண்ணைப் பார்த்துச் சொல்கிறார் : “தமிழுக்குத்தான் இது ஃபர்ஸ்ட் நைட். உனக்கு அப்படியா என்ன…” அந்தப் பெண் கூனிக் குறுகி தவித்தாள். அதற்கு மேல் அங்கே என்னால் நிற்க முடியவில்லை. கதையில் வரும் அந்தச் சூழ்நிலையை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. இந்த வசனத்தை எழுதியவருக்கு எவ்வளவு மனவக்கிரம் இருக்கவேண்டும்? அதைக் காட்சிப்படுத்தி திரைக்கதை எழுதிய இயக்குனர் எவ்வளவு கூருணர்வு இல்லாதவராக இருக்கவேண்டும்? மக்கள் அனைவரும் பார்க்கும் ஒரு தொடரில் இவ்வளவு கீழ்த்தரமாக யோசிக்க முடியுமா? என்னால் ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை.

வார்த்தைகளை மணிமணியாகப் பயன்படுத்த வேண்டாமா? சூழ்நிலைக்கேற்ப, அங்கு நிலவும் உணர்வுகளுக்கு ஏற்ப, சொற்களைத் தட்டித் தட்டிப் பார்த்துப் பயன்படுத்த வேண்டாமா? இரண்டாயிரம் ஆண்டு பண்பாடு, வளர்ச்சி, மூத்த குடி என்றெல்லாம் பெருமைப்படுகிறோம். அப்படியானால், நம் மனங்களில் எவ்வளவு தூரம் பண்பாடு மேலோங்கி இருக்கவேண்டும்? அது நம் வார்த்தைகளில் எவ்வளவு அழகாக பிரதிபலிக்க வேண்டும்? ஏன் இல்லாமல் போச்சு நாகரிகம்? தெரியவில்லை.

பல சொற்களைப் பயன்படுத்த நான் மிகவும் சங்கடப்படுவேன். வேறு வார்த்தைகளுக்காக ரொம்ப நேரம் காத்திருந்த அனுபவமும் உண்டு. “விதவை” அப்படிப்பட்ட சொல். பயன்படுத்த மனம் ஒப்பாத சொல். பயன்படுத்தித் தேய்ந்து போன சொல் மட்டுமல்ல; அது எதிர்மறை எண்ணங்களைச் சுமந்துள்ள சொல். பெண்ணுக்கு எந்த வகையிலும் பெருமை சேர்க்காத சொல் அது. சொல்லப் போனால், அது அப்பெண்ணை இன்னும் காயப்படுத்தவல்லது, இழிவுபடுத்தவல்லது. மனம் நிறைந்த கணவனை இழந்து நிற்கும் ஒரு பெண்ணை, எவ்வளவு கெளரவத்தோடு எடுத்துப் பேசவேண்டும்? அவளை எழுத்தால் கூட நான் காயப்படுத்த விரும்பவில்லை.

“கைம்பெண்” என்று கொஞ்ச நாள் எழுதினேன். அதுவும் ஒப்பவில்லை. பின்னர், “வைதவ்யம்” என்ற சொல்லைக் கண்டுபிடித்தேன். புழக்கத்தில் இல்லாத சொல்தான். ஆனால், ’விதவை’யும், ’கைம்பெண்’ணும் அடைந்துள்ள நலிவை, இச்சொல் இன்னும் அடையவில்லை. என் மனத்துக்குள் உணர்வு ரீதியாக ”வைதவ்யம்” இன்னும் தேய்ந்து, பொருளழிந்து போகவில்லை. கெளரவமும் சிதையவில்லை.

இதேபோல், பெண்ணைக் குறிக்கும் “ஃபிகர்” என்ற சொல்லை என்னால் பயன்படுத்தவே முடியாது. இது அவளைக் கொச்சைப்படுத்துவது மட்டுமல்ல, எல்லாவிதமான தப்பர்த்தங்களுக்கும் இட்டுச்செல்லவல்லது. அதுவும் “செம ஃபிகர்” என்பதெல்லாம் பாலியல் ரீதியாக மிகவும் வக்கிர மனத்தின் வெளிப்பாடு. ஒரு பெண்ணை சகமனுஷியாக அல்லாமல் சதைப் பிண்டமாக நோக்கும் கற்காலச் சிந்தனையை வெளிப்படுத்தும் சொல் அது.

கூருணர்வு என்பது சமூகமொழியில் வெளிப்பட வேண்டும். சமூகம் முன்னேறி இருக்கிறது என்பதற்கு அதுதான் அடையாளம். இப்போதெல்லாம் யாரும் “ஊனமுற்றவர்” என்று பயன்படுத்துவதில்லை; நல்ல சொல் “மாற்றுத் திறனாளி.” அரசியலில் யாரும் “பொய்” சொல்வதில்லை; “உண்மைக்கு மாறான” செய்திகளையே சொல்வார்கள். ”அலி” அவதூறு; “அரவாணி” நீங்கி, இப்போது எங்கும் “திருநங்கை”தான்.  ”தாழ்த்தப்பட்டவர்கள்”, “தலித்”, “பிற்படுத்தப்பட்டவர்கள்” எல்லாம் சமூகம் இவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுக்க விரும்புகிறது என்பதை வெளிப்படுத்தும் சொற்கள்.  இதற்கு முன்பு பயன்படுத்தப்பட்ட சொற்களில் தொக்கி நின்றவை மேலாதிக்கம், ஆணவம், திமிர் ஆகியவை. அவற்றை சமூகம் விலக்க விரும்புகிறது என்பதற்கு முதல் படிதான், சொற்களில் காட்டப்படும் கரிசனம். பொலிட்டிக்கல் கரெக்ட்னஸ், ஜெண்டர் கரெக்ட்னஸ் மிகவும் முக்கியம்.

உணர்வுகளுக்கான மொழி வார்த்தைகள். அது அடுத்தவரைக் காயப்படுத்தக் கூடாது. கொச்சைப்படுத்தக் கூடாது. இந்த ஜாக்கிரதையோடுதான் ஒவ்வொரு எழுத்தும் உருவாக வேண்டும். டிவியாக இருந்தாலும் சரி, இதழாக இருந்தாலும் சரி – இது தான் நியதி.

ஈரத்தை மீட்டெடுக்க…

பாப்புலர் இதழ்களானாலும் சரி, இலக்கிய இதழ்கள் ஆனாலும் சரி, நேரடி நாவல்கள் ஆனாலும் சரி, எங்கும் நல்ல காதல் கதையே காணோம். சட்டென்று ஞாபகம் வரும் கதைகள் எல்லாம் இருபதாண்டுகளுக்கு முந்தைய கதைகளாகவே உள்ளன. மாதநாவல்கள், தொடர்கதைகள் ஆகியவற்றில் சித்திரிக்கப்படும் காதல் வெகு மேம்போக்காக, உள்ளத்தைத் தீண்டாமல், மேற்பரப்பிலேயே நிற்கின்றன. ஆண், பெண்கள் ஒன்று ஏற்கெனவே சந்தித்து, காதல் செய்துகொண்டிருப்பார்கள்; அல்லது காதலுக்கு பெற்றோர், இன்ன பிற எதிர்ப்புகளைச் சந்தித்துக்கொண்டு இருப்பார்கள். அங்கே காதலைவிட, வேறு பிரச்னைகளே முக்கியத்துவம் பெற்றிருக்கும். வாசகனின் மனத்தை ஈர்க்கும் காதல் கதைகளுக்கு இன்றைக்கு கடும் பஞ்சம்.

இலக்கிய இதழ்களில் எழுதப்படும் சிறுகதைகளில், காதலுக்கு இடமே இல்லை. அங்கே காமம் தான் தூக்கல். ஆண் – பெண் பாத்திரங்கள் ஏதோ ஒருவித மனப்பிரச்னைகளோடு அலைவார்கள். மென்மையை முற்றிலும் இழந்தநிலையில், உடல்ரீதியான தேவைகளே முன்னிற்கின்றன. காமத்தை எழுதுவதுதான் அதிர்ச்சி அளிக்கும்; அதுதான் நவ நவீனத்துவம், மரபுகளை மீறுதல்; புது வித எழுத்து என்ற எண்ணங்கள் ஆழ வேரூன்றி இருப்பது தெரிகிறது. உடைந்த மனங்களையும், நொறுங்கிய உறவுகளையும், நிம்மதியற்ற மனிதர்களையும் பதிவு செய்வதில் காட்டப்படும் ஆர்வம், நல்ல ஆரோக்கியமான உறவுகள் பற்றி எழுதுவதில் காட்டப்படுவதில்லை. காதல் ஒருவித பொய்; அல்லது எழுதி எழுதி தேய்ந்துபோன கருப்பொருள் என்ற காரணங்களும் பின்னணியில் இருக்கலாம். காதல் கதை எழுதுவது இன்றைய காலகட்டத்தில் இலக்கிய அந்தஸ்துக்குரிய அம்சமாகவும் இல்லாமல் இருக்கலாம்! வார்த்தைகளுக்குள் சிக்கிக்கொண்டு, அருவ உணர்வுகளுக்கு உருவம் கொடுக்க முயல்வதுதான் வெற்றிகரமான இலக்கிய இதழ் எழுத்தாளர்களுக்கான அடையாளமாக மாறிப்போய்விட்டதோ என்னவோ!

நேரடி நாவல்களிலும் இதே பிரச்னைதான். காதலைத் தவிர்த்துவிட்டு வேறேதோ எழுதுகிறார்கள். அல்லது, காதலைத் தொடாமல், நேரடியாக உடல் ரீதியான உறவுகளுக்குத் தாவிவிடுகிறார்கள். இதையெல்லாம் அடிப்படை தரவுகளாக கொண்டு சமூகத்தைப் புரிந்துகொள்ள முயன்றால், இப்படித்தான் புரிந்துகொள்ள முடிகிறது:

மனித வாழ்வுக்கு ஆதார உணர்வான அன்பை நாம் தொலைத்துவிட்டோம்.

அன்பின் பல்வேறு முகங்களில் ஒன்று காதல். அதன் நளினத்தை, எழிலை, கூச்சத்தை, விவரிக்கயியலா வலிகளை, எதிர்பார்ப்புகளை எல்லாம் நாம் இழந்து நிற்கிறோம். மிருது உணர்வு நீங்கி, முரட்டுத்தனமே கோலோச்சுகிறது.

அதற்கான அத்தாட்சிகளைத்தான் தில்லி மருத்துவக் கல்லூரி மாணவி வன்கொடுமை முதல் அனைத்து இடங்களில் காண்கிறோம்.

காதல் ஓர் ஆரோக்கிய உணர்வு. மனத்தை வளப்படுத்தவல்லது. உறவுகளை மேம்படுத்தவல்லது. எதிர்கால நம்பிக்கை, துணிவு, வாழ்க்கை மேல் பிடிப்பு, சகமனிதர்களை நேசித்தல் ஆகிய அனைத்தையும் ஏற்படுத்தவல்லது. அதற்கு எந்தவிதமான எல்லைகளும் வேலியமைக்க முடியாது. 

இலக்கியத்தில் காதல் கதைகளே இல்லாமல் போனதுகூட, தில்லி சம்பவத்துக்குக் காரணமாக இருக்ககூடுமோ என்ற எண்ணம் எனக்குண்டு. ஒரு சமூகத்தின் கட்டமைப்பில், பேசப்படும் பல்வேறு உணர்வுகள்தான், மனிதர்களின் மனங்களைக் கட்டமைக்கிறது. இன்று, பணம் சம்பாதித்தல், உயர் பதவிகளை அடைதல், அமெரிக்கா செல்தல், கார் வாங்குதல், வீடு கட்டுதல் என்று பொருள்ரீதியான வாழ்க்கை முக்கியத்துவம் பெற்றுவிட்டது. சமூகத்தில் திரும்பிய பக்கமெல்லாம் இவைதான் முன்னிறுத்தப்படுகின்றன. யாரும் அன்பையோ கருணையையோ சகோதரத்துவத்தையோ இணக்கத்தையோ – உணர்வுகள் சார்ந்த எதையுமே பேசுவதில்லை. மெல்லமெல்ல உணர்வுகள் மொண்ணையாகி, இயல்புத்தன்மை விலகி, முரட்டுத்தனமே மேலே எழுகிறது.

இன்றைய நிலையில், நாம் அன்பை மீட்டெடுப்பது மிகவும் அவசியம். மிருது உணர்வுகளை போதிப்பது அவசியம். ரசனையைக் கட்டியெழுப்புவது அவசியம். பொறியியல் படிப்புகளைவிட, கலைத்துறைப் படிப்புகள் முன்னணி பெற வேண்டும். கவிதையும் கதையும் ஓவியங்களும் நாடகங்களும் நுண்கலைகளும் மனிதர்களை மனிதர்களாக மீட்டெடுக்க உதவும் கருவிகள். வரட்டுத்தனத்தை, தனிமையை, அந்நியமாதலை விலக்கி, ஈரத்தையும் பாசத்தையும் ஊட்டுவது கலைஞர்களின் கடமை.  

இத்தனை ஆண்டுகளும் நான் காதல் கதைகளே எழுதியதில்லை. எழுதிய சிலவும் உணர்வுரீதியாக எனக்குத் திருப்தி தராதவை. வெண்ணிற இரவுகள், வண்ணநிலவனின் கடல்புரத்தில், மெஹரூனிஸா, பிரபஞ்சனின் பல கதைகளைப் படித்த பின்னர், என்னால் இப்படியெல்லாம் எழுதவே முடியாது என்ற நிச்சயமான தயக்கமே முதல் காரணம். அப்படிப்பட்ட உச்சங்களைத் தொட்டப் பிறகு, வேறு உயரம் குறைவான படைப்புகள் கவனமே பெறாமல் போய்விடும் என்ற அச்சமும் மறுகாரணம். 

ஆனால், இன்று சமூக ரீதியாக காதல் கதைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. உணர்வுகளை மீட்டெடுக்க, ஈரத்தை மீட்டெடுக்க, மனிதத்தின் மேன்மையை உணர்த்த, காதல் கதைகளே ஒரே வழி.

சரியாக வருகிறதோ, இல்லையோ, இனி காதல் கதைகள் எழுதுவதாக இருக்கிறேன்!

 

மிடில்கிளாஸ் அல்பத்தனங்கள்?

திருமணமோ, வேறு வைபவங்களோ, எப்போது வெளியே உணவு உட்கொண்டாலும் வீட்டுக்கு வந்தவுடன், சூடாக ஒரு டம்ளர் வெந்நீர் குடித்துவிட்டே படுப்பேன். வெளி உணவுகளில் காரமோ, எண்ணெயோ அதிகமாக இருப்பதே காரணம். வெந்நீர் பருகுவது சின்னவயசு பழக்கம். எந்த உடல் பிரச்னையானாலும் வெந்நீர் எனக்குக் கைகண்ட மருந்து. ஜூரம் வந்தாலும் சரி, சோர்வு, அசதி, வலி ஏற்பட்டாலும் சரி, வெந்நீரைக் குடித்தால் போதும். சற்று நேரத்தில் உடல் தெம்பாகிவிடும். அதில் என்ன மாயம் இருக்கிறது என்று தெரியவில்லை. செரிமானக் கோளாறு இருந்தாலும் வெந்நீர்தான். உணவு உடனே ஜீரணமாகிவிடும். அல்லது வாயால் வெளியேறிவிடும். எதுவானாலும் நல்ல பலன்தான்!

வெந்நீரை நோய் நிவாரணியாகப் பயன்படுத்துவது சரியா என்று தெரியவில்லை. எனக்கு அது சரியாக வேலை செய்கிறது. என் குடும்பத்தினருக்கும் இதைப் பரிந்துரைப்பேன். ஆனால், வெந்நீர் குடிப்பது நிறைய பேருக்குப் பிடிப்பதில்லை. குளிர்ந்த நீர் சுவை இருப்பதாக கருதுவோர், இதில் எந்தச் சுவையும் இல்லை என்றே சொல்லக் கேட்டிருக்கிறேன். வெறும் நீர்தான், சப்பென்று இருக்கும் என்று முகம் சுளிப்பதைப் பார்த்திருக்கிறேன். அந்த வெப்பம்தான் அதன் மகிமையே. நீரை நன்கு கொதிக்க விட்டு, டபரா டம்ளரில் எடுத்துக்கொள்வேன். வாய் பொறுக்கும் சூட்டுக்கு அதை ஆற்றி,வெப்பத்தைத் தணித்து, பின்னர் குடிக்கத் தொடங்குவேன். நீர் தொண்டை வழியாக, நெஞ்சில் இறங்கி, வயிற்றை அடைவதை, வெப்பப் பாதை சொல்லும். உணவகங்களில், வெந்நீர் கேட்டுவாங்கிப் பருகும் மூத்தவர்களைப் பார்த்திருக்கிறேன்.

வேறொரு சந்தர்ப்பத்தில் இணையத்தில், வெந்நீர் பற்றி படித்தபோது, ஏராளமான தகவல்கள் கிடைத்தன. உடல் எடையைக் குறைக்கக்கூட வெந்நீர் பயன்படும் என்பதெல்லாம் கொஞ்சம் அதிகபட்சமாகத் தோன்றியது. ஆனால், அது உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது, ஜீரணத்துக்கு கைகண்ட மருந்து என்பதெல்லாம் ஏற்கத்தக்கவை. வெந்நீருக்கு ஏதோ மருத்துவ குணம் இருக்கவேண்டும் என்பதை மட்டும் எல்லோரும் ஏற்கின்றனர்.

தேங்காய் எண்ணெய் மற்றொரு அருமருந்து. எந்தப் புண்ணாக இருந்தாலும், அடியாக இருந்தாலும், தோல் சம்பந்தமாக எந்தவிதமான குறைகள் தெரிந்தாலும், தேங்காய் எண்ணெய்தான் உடனடி நிவாரணி. பல வீடுகளில் தேங்காய் எண்ணெய் இருப்பதில்லை. பெண்கள், தங்கள் கேசத்துக்கு வேறு வகை கிரீம்களைப் பயன்படுத்தத் தொடங்கியபின், தேங்காய் எண்ணெய்க்கு மவுசு போய்விட்டது போலும். தேங்காயைப் பற்றிய இன்றைய சிந்தனைகள் வெகுவாக மாறிவிட்டன. அதை கொழுப்புச் சத்து நிறைந்தது, அதன் வாசனை ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது என்று சொல்லப்படுகிறது. சின்னச் சின்ன காயங்களுக்கு தேங்காய் எண்ணெய்யும் நீபாசல்ஃப் பெளடரும்தான் கைமருந்து.

காற்றடைத்த சோடா (carbonated water) இன்னொரு பிரமாதமான கைமருந்து. எப்போது செரிமானக்கோளாறு ஏற்பட்டு, வயிற்றுப்போக்கு உண்டானாலும் சோடாவை வாங்கி ஒரே மூச்சில் குடித்து முடித்துவிட்டால் போதும். வயிறு திம்மென்று இருக்கும். அடுத்த வேளையே வயிற்றுப் போக்கு முற்றிலும் நின்றுவிடுவதைப் பார்த்திருக்கிறேன்.

இவற்றையெல்லாம் மற்றவர்களுக்குச் சொல்லும்போது, ஒருவித ஏளனத்தைச் சந்தித்திருக்கிறேன். மிடில்கிளாஸ் அல்பத்தனத்தின் வெளிப்பாடாக இவை பார்க்கப்படுகின்றன. நேரடியாக மருத்துவரிடம் செல்வதும், அவர் எழுதித்தரும் மருந்துகளை வாங்கி உண்பதுமே மிகச் சரியான வழி என்று ஆணியடித்தாற்போல் மக்கள் மனங்களில் ஆழப்பதிந்துவிட்டது. அதுதான் சரியான முறை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. வழிவழியாக ஒரு சில மருத்துவமுறைகள் நல்ல பலனைக் கொடுத்திருக்கின்றன என்பதும் உண்மை.

உடலைப் புரிந்துகொள்வதிலும் அதற்கேற்ப சிகிச்சைமுறைகளை உருவாக்குவதிலும் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு நாட்டிலும் ஆர்வம் காட்டப்பட்டிருக்கிறது. இதில் ஒருசில இன்று வழக்கொழிந்திருக்கின்றன; ஒரு சில மேலோங்கி இருக்கின்றன. இதில் தவறு, சரி என்று எதுவுமில்லை. எல்லாமே மக்கள் சாய்ஸ்தான்.

எனக்கும் மாற்று மருத்துவம் பக்கம் போக பயம் அதிகம். வாய்ப்புண் வந்தபோது, உறவினர் ஒரு தந்த தைரியத்தில், அண்ணா நகரில் இருந்து ஒரு சித்த மருத்துவரைப் பார்த்தேன். வலது உள்ளங்கையை விரிக்கச் சொன்னார் அவர். அதற்கு மேலே, மணியின் நாக்கு போலிருந்த ஒரு குமிழைக் கையில் பிடித்துக்கொண்டு, ஆட்டினார். கூடவே, நாடியையும் பிடித்துக்கொண்டார். என் உடலின் தன்மை பற்றியும் அதில் இருக்கக்கூடிய பிரச்னைகள் பற்றியும் அவர் சொல்லச் சொல்ல, அசந்து போனேன். என் மாமியாருக்கு மூட்டுவலி. அவரிடம் பேசிக்கொண்டே வலது கை நடுவிரலில், பால்பாயிண்ட் பேனாவால் அழுத்தி உருட்டினார் அந்த மருத்துவர். “வலி குறைஞ்சிருக்காம்மா?” என்று கேட்டபடி, அடுத்த ஒரு சில நிமிடங்கள் பேனாவால் தொடர்ந்து அழுத்தம். எனக்கே நம்புவதற்கு கொஞ்சம் யோசனையாகத்தான் இருக்கிறது. மூட்டு வலி குறைந்திருப்பதாக மாமியார் தெரிவித்தார்.

என் நண்பர் டாக்டர் ராஜா வெங்கடேஷ், சென்னை பொது மருத்துவமனையில் உள்ள கார்டியோதொராசிக் சர்ஜன். பேசும்போதெல்லாம், அவர் ஒரு விஷயத்தை வலியுறுத்துவார். ஆங்கில மருத்துவம் ஒரு சில நோய்களுக்கு மிகச் சிறந்தது. வேறு சில நோய்களை மாற்று மருத்துவர்கள் மிகச் சிறப்பாக குணமடைய வைக்கிறார்கள். அவர்கள் சொல்வதை அலோபதி மருத்துவர்கள் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். இதுதான் பெரிய பிரச்னை. எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் மருத்துவ முறைகளை இணைத்து, ஒருங்கிணைந்த மருத்துவ முறையை உருவாக்கவேண்டும். நாம் மக்களுக்குதானே உதவப் போகிறோம். அவர்கள் விரைவாகவும், தொடர் பாதிப்புகள் இல்லாமலும், பின் விளைவுகள் ஏதுமின்றியும் குணமடைந்தால், அதைவிட பெரிய சாதனை என்ன இருக்க முடியும் என்று கேட்பார் டாக்டர் ராஜா.

நியாயம்தானே?

ஐசிஐசிஐ – நவீன முரட்டுத்தனம்!

சொந்தக் கதையை எழுதக்கூடாது என்று எப்போதுமே நினைத்துக்கொள்வேன். இந்த முறையும் முடியவில்லை. ஐசிஐசிஐ வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனத்தின் பொறுப்பற்ற தன்மை என்னை மிகுந்த மனவேதனைக்கு உள்ளாக்கிவிட்டது.

சென்னை மாநகரில் ஃப்ளாட் வாங்க ஆசைப்படும் லட்சோபலட்சம் மத்தியமர்களின் நானும் ஒருவன். 2001 திருவல்லிக்கேணியில் ஒரு ஃப்ளாட் வாங்கினேன். முதலில், கடன் வாங்கியது எல்.ஐ.சி.யின் வீட்டுக்கடன் நிறுவனத்தில். 13 சதவிகிதம் வட்டி அப்போது. வட்டி விகிதம் மிக அதிகமாக இருந்த சமயம் அது. பின்னர் 2002ல் வட்டி விகிதங்கள் குறையத் தொடங்கின. ஐசிஐசிஐ வங்கி 9.5 சதவிகிதத்துக்கு கடன் வழங்கத் தொடங்கியது.

உடனே என் கடனை ஐசிஐசிஐ வீட்டுக்கடன் நிறுவனத்துக்கு 2002ல் மாற்றினேன். தொடர்ந்து வட்டிவிகிதம் குறைந்துகொண்டே வர, ஒரு கட்டத்தில், ஐசிஐசிஐயிலேயே வீட்டுக்கடனை, ஃப்ளோட்டிங் ரேட்டில் இருந்து ஃபிக்சட் ரேட்டுக்கு மாற்றினேன். அதற்கு மொத்தத் தொகையில் 1.75 சதவிகிதமோ என்னவோ கட்டிய ஞாபகம்.

2005 என்று நினைவு. வீடு சம்பந்தமாக ஏதோ ஒன்றைத் தேடும்போது, வீட்டுப் பத்திரங்களின் பிரதியும், தாய்ப்பத்திரங்களின் பிரதிகளும் தேவைப்பட்டன. ஐசிஐசிஐ போய், பிரதிகள் வேண்டி விண்ணப்பித்து, அதற்கான கட்டணமாக ரூ. 500 கட்டிவிட்டு வந்தேன். பதிலே இல்லை. இரண்டு மூன்று முறை போய் கேட்டபோது, இதோ வந்துவிடும், அதோ வந்துவிடும் என்று சொன்னார்கள். இது நடுவே, வேறு வேலைகள் முந்திக்கொள்ள, பத்திரங்களின் பிரதிகளை வாங்கவேண்டிய அவசியம் ஏனோ மறைந்துவிட்டது. நானும் பின் தொடராமல் விட்டுவிட்டேன்.

2010 அக்டோபரோடு கடன் முடிந்தது. என்னுடைய சேல் டீட், சேல் அக்ரிமெண்ட், இதர தாய்ப்பத்திரங்கள் வேண்டி, ஐசிஐசிஐ வீட்டுக்கடன் நிறுவனத்திடம் போய் விசாரித்தேன். இன்னும் 21 நாள்களில் வந்துவிடும். வந்து பெற்றுக்கொள்ளலாம் என்றார்கள். 22 ஆம் நாள் போய் நிற்க, ஒரு சின்ன கவர் வருகிறது. உள்ளே கடனை கட்டிவிட்டதற்கான நோ அப்ஜெக்‌ஷன் சர்ட்டிபிகேட், டாக்குமெண்ட்ஸ் லிஸ்ட் மட்டுமே அதில் இருக்கிறது. அந்த லிஸ்டில், ஒரு பத்திரமும் அவர்களிடம் இருந்ததற்கான முகாந்தரமே இல்லை.

கதைகளில், “தூக்கி வாரிப் போட்டது” என்று எழுதுவார்களே, அதுதான் என் அப்போதைய உணர்வு. 2002ல் எல்.ஐ.சி.யில் இருந்து கடனை ஐசிஐசிஐக்கு மாற்றியபோது, ஐசிஐசிஐக்கான ஜெனரல் சேல்ஸ் ஏஜென்சிகள் இருந்தன. அவர்கள்தான் கடன் வாங்க உதவியவர்கள். பின்னர், ஜி.எஸ்.ஏ.க்களை எல்லாம் ஐசிஐசிஐ நிறுத்திவிட்டு, தாமே எல்லா செயல்பாடுகளை ஏற்றுக்கொண்டன. அந்தச் சமயத்தில்தான் நான் கடன் வாங்கினேன். எனக்கு உதவிய ஜி.எஸ்.ஏ. தாமே எல்லா பத்திரங்களையும் எல்.ஐ.சி.யில் இருந்து ஐசிஐசிஐக்கு மாற்றிக்கொள்வதாகவும், அதற்கு அனுமதி தரும் விதமான 150 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் அத்தாட்சிப் பத்திரமும் எழுதி வாங்கிக்கொண்டார்கள்.

இதையெல்லாம் இப்போது ஐசிஐசிஐ வீட்டுக்கடன் நிறுவன ஊழியர்களிடம் விளக்க, பத்திரம் உங்களிடம்தான் வந்திருக்க வேண்டும், உடனே தேடிப் பார்க்கச் சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டேன். ஐசிஐசிஐ வீட்டுக்கடன், மந்தைவெளி அலுவலகத்தில் இது நடந்தது. வழக்கம்போல், சிரித்த முகத்தோடு என்னைக் கையாளத் தொடங்கிய அலுவலருக்கு கொஞ்ச நாளிலேயே நான் இம்சையாகிப் போனேன். என் அழைப்பை எடுக்க மாட்டார். நேரே போய் பேசும்போது, மேலும் மேலும் காரணங்களும், தேடுவதற்கான புதிய இடங்களும் அகப்பட்டுக்கொண்டே இருந்தன. ஒரு கட்டத்தில், பத்திரங்களை வைக்கும் மைய அலுவலக ஊழியரின் செல்பேசி எண்ணைக் கொடுக்க, அவர் பின்னால் லோ லோ என்று மூன்று நான்கு மாதங்கள் அலைந்திருப்பேன். அவர் மும்பை என்பார், சென்னை அடையாறு என்பார்… ஆனால், பத்திரம் போன இடம் தெரியவில்லை. ஒரு கட்டத்தில் இந்த நபரும் என் அழைப்பைத் தவிர்க்கத் தொடங்கிவிட்டார்.

இந்த இக்கட்டு ஏற்படுத்தியிருக்கும் மன உளைச்சல் கொஞ்சம் நஞ்சம் அல்ல. மொத்த பணத்தையும் கட்டியாகிவிட்டது; ஆனால் கையில் பத்திரமில்லை. எங்கு இருக்கிறது என்றும் தெரியவில்லை. என் மனைவி அமைதி மெல்ல மெல்ல குறையத் தொடங்கிவிட்டது. ஒரு கட்டத்தில் இருவரும் வீட்டுப் பத்திரம் சம்பந்தமாக பேசிக்கொள்ளவே கூடாது என்று சபதமெடுக்கும் அளவுக்கு மனவேதனை. சட்ட ரீதியாக என்ன செய்யவேண்டும், அப்படியே செய்தாலும், காணாமல் போன பத்திரத்தை வைத்துக்கொண்டு என்ன வேண்டுமானாலும் நடக்கலாமே. என்னென்ன விதமான இடர்களைச் சந்திக்கப் போகிறோமோ என்ற பதற்றம் ஒருபக்கம். ஐசிஐசிஐயின் விட்டேற்றித்தனம் மற்றொரு பக்கம்.

முகம் நிறைய புன்னகையும், அலுவலகப் பொலிவும், நிதானமும் நவீன வங்கியியலின் அடையாளங்களாக இருந்தாலும் உள்ளே இருக்கும் பொறுப்பற்றதன்மை எல்லா இடங்களிலும் ஒன்றாகவே இருப்பது மெல்ல மெல்ல புரியத் தொடங்கியது.

ஒரு நாள், நேரே எல்.ஐ.சி. வீட்டுக்கடன் நிறுவனத்தையே போய் கேட்டால் என்ன என்று எண்ணம் தோன்ற, பழைய வீட்டுக்கடன் எண்ணைத் தேடி எடுத்துக்கொண்டு, சைதாப்பேட்டையில் இருக்கும் அலுவலகத்துக்குப் போனேன். அங்கே இருந்த அதிகாரி, அப்போதுதான் ஓர் உண்மையை எனக்குச் சொன்னார். எல்.ஐ.சி.யில் வீட்டுக்கடன் அடைக்கப்பட்டாலும் வேறு வங்கிகளுக்கு மாற்றப்பட்டாலும், உரிமையாளர்களிடம்தான் மூலப் பத்திரங்கள் திருப்பி அளிக்கப்படும், வேறு வங்கிகளுக்கோ, நிதி நிறுவனங்களுக்கோ கொடுக்கப்படாது என்றார்.

மேலும், இது பத்தாண்டுகளுக்கு மேலான விஷயம், கோரிக்கை கடிதம் கொடுத்துவிட்டுச் செல்லுங்கள், எங்களால் முடிந்ததைச் செய்கிறோம் என்றார். கடிதம் கொடுத்துவிட்டு, கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் காத்திருந்தேன்.

மூன்றாவது வாரம் அந்த எல்.ஐ.சி. வீட்டுக்கடன் நிறுவனப் பெண் அலுவலரைப் போய் பார்க்க,  ஒரு மணி நேரம் காத்திருக்கச் சொன்னார். இரண்டு மணி நேரங்கள் கழித்து கூப்பிட்டவர் மேஜையில், நான் கொடுத்திருந்த பத்திரங்கள் அத்தனையும் சீலிடப்பட்ட உறையில் இருப்பது தெரிந்தது. என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அந்தம்மா எல்லா நலன்களும் வளங்களும் பெற வாழ்த்திவிட்டு, கையில் இருந்த இதழ்களைப் பரிசாக கொடுத்துவிட்டு, என் பத்திரங்களை வாங்கி வந்தேன்.

என் பத்திரங்களை பத்திரமாக வைத்துக்கொண்டு இருக்கவேண்டும் என்று எல்.ஐ.சி.க்கு தலையெழுத்தா என்ன? ஆனால் வைத்திருந்து பத்திரமாகத் திருப்பிக் கொடுத்தார்கள். எல்.ஐ.சி.மேல் இருந்த மரியாதை ஒரு சில படிகள் உயர்ந்தது உண்மை.

மீண்டும் ஐசிஐசிஐ. புதிய அலுவலர். புதிய முகங்கள். நான் இரண்டு மூன்று கேள்விகள்தான் கேட்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டு சென்றேன்.

பத்தாண்டுகளாக கடனுக்கு ஈடான பத்திரமே இல்லாமல் எப்படி நீங்கள் கடன் கொடுத்தீர்கள்? பத்திரங்கள் இல்லை என்று தெரியவந்ததும், என்னை எப்படிக் கேட்காமல் போனீர்கள்? அப்படியானால், உங்களுக்குப் பத்திரங்கள் முக்கியமில்லை. கடனை அடைத்துவிட்டால் போதும். அவ்வளவுதானே.

நவீன மோஸ்தரில் மயங்கி, சிஸ்டம்ஸ் அண்ட் பிராசஸஸில் மயங்கி, அழகிய புன்னகையில் மயங்கி, மேம்பட்ட சேவை என்ற ஹம்பக்கில் மயங்கி, இத்தனைஆண்டுகளாக, பத்திரங்கள் ஐசிஐசிஐயில் பத்திரமாக இருக்கின்றன என்ற என் எண்ணம் எவ்வளவு பைத்தியக்காரத்தனமானது?

அங்கு இருந்த அலுவலரின் உடல் மொழி எனக்கு ஒன்றைத்தான் திருப்பித் திருப்பிச் சொன்னது. பல லட்சம் நபர்களில் நீயும் இன்னொரு கஸ்டமர். நான் தொழில் செய்ய வந்திருக்கிறேன். உனக்கு பத்திரம் கிடைத்துவிட்டது அல்லவா? வாயை மூடிக்கொண்டு அடுத்த வேலையைப் பார்.

நடந்தது ஒரு தவறு என்றோ, ஒரு வாடிக்கையாளரின் மனவேதனைக்கு மன உளைச்சலுக்கு தாம் காரணமாக இருந்தோம் என்றோ துளிகூட நெக்குருகும் மனம் அங்கே இல்லை. புரொபஷனலிசம். பிளாஸ்டிக் புன்னகை. நவீன முரட்டுத்தனம். வருத்தம் தெரிவிக்கும் பக்குவம் தொலைத்த கார்ப்பரேட் கலாசாரம்.

என்.ஓ.சி.ஐ மட்டும் வாங்கிக்கொண்ட பின்னர், என் மனைவி கேட்டார், “பத்திரம் கிடைக்கலன்னா என்ன செஞ்சிருப்பீங்க?”

“மூணு மாசம் பார்த்துட்டு, போலீஸ்ல எஃப்.ஐ.ஆர். கொடுத்திருப்போம். அப்புறம், டூப்ளிக்கேட் காப்பி வாங்கியிருப்போம்…”

எல்லாவற்றுக்கும் துணிந்துதான் இருக்கிறார்கள். என்னைப் போல் எத்தனை ஏமாளிகளைப் பார்த்திருக்கிறார்களோ? முதல் முறையாக, நவீன வங்கியியலின் மேல் இருந்த மதிப்பு என்வரையில் சரியத் தொடங்கியது.

இதை நான் செஞ்சிருக்கணும்…

நல்ல நாவல், நல்ல சிறுகதை, நல்ல சினிமா, எதைப் பார்த்தாலும், சே..இதை நான் செஞ்சிருக்கணும்… மிஸ் பண்ணிட்டேனே என்று ராத்தூக்கம் இல்லாமல் அவஸ்தை படுவேன். இதழியலில், இது இன்னும் கொஞ்சம் ரொம்பவே ஓவர்.

ஏதாவது நல்ல லேஅவுட், டிசைன், கட்டுரை, தொடர், அட்டைப்படம் பார்த்துவிட்டால், மனசே ஆறாது. திருப்பித் திருப்பி அதையே பார்த்துக்கொண்டு இருப்பேன், பேசுபவர்களிடமே சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ, அதை எடுத்துச் சொல்லுவேன். ஆற்றாமை ஆற ரொம்ப நேரம் ஆகும்!

சமீபத்தில் இப்படி என்னை ஆற்றாமைக்குள் ஆட்படுத்தும் ஆச்சரியங்கள் நடந்துகொண்டு இருக்கின்றன:

1. புதிய தலைமுறை இதழில் சட்டென பிரியல்லண்டாக தென்படும் சில கட்டுரைகள். குறிப்பாக, எழுத்தாளர் பிரபஞ்சனின் தொடர். நேர்த்தியான மொழி, அழகான வடிவம், மனத்தைத் தீண்டும் அனுபவங்கள்.

2. பாவை சந்திரன் இதழ் ஆசிரியராக பொறுப்பேற்ற பின்பு வரும் தினமணி கதிர் வார இதழை, அப்படியே கண்களில் ஒற்றிக்கொள்ளலாம். பாவையின் டிசைன் சென்ஸ் என்னை எப்போதும் கட்டிப்போடும். புதிய பார்வை இணை ஆசிரியராக இருந்தபோது, அவர் அதில் செய்த லே அவுட்கள் ஒவ்வொன்றும் அபாரம்! பத்திரமாக பழைய இதழ்களைச் சேமித்து வைத்திருக்கிறேன். இயற்கையாகவே அவருக்குள் ஓர் அழகியல் பார்வை உண்டு. அதுதான் இதழ் முழுவதும் வியாபித்திருக்கும். இப்போது, தினமணி கதிர் அந்த டிசைன் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறது.

3. சமநிலை சமுதாயம் என்று ஒரு இஸ்லாமிய இதழ் வருகிறது. ரொம்ப தைரியமான இதழ். இஸ்லாமிய சமுதாயத்துக்கு உள்ளேயே கேட்கப்பட வேண்டிய கேள்விகளின் திறவுகோல் இந்த இதழ். ஹஜ் யாத்திரை அழைத்துப் போகிறேன் என்று கல்லா கட்டும் பயண முகவர்களைப் பற்றி மிக நல்ல கட்டுரை இதன் ஓர் இதழில் இடம்பெற்றது. வேலூரில் இருக்கும் மற்றொரு இஸ்லாமிய மார்க்க கல்லூரியின் குறைகளைப் பற்றி இந்த இதழில் கட்டுரை வந்திருக்கிறது. ச.ச. இதழ், அட்டைப்படத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவம் என்னை பரவசப்படுத்தும். ஜெ. ஜெயித்து வந்தபோது, ச.ச. இதழின் முகப்பில் ஓர் அட்டைப்படம் வைத்தார்கள். இன்றுவரை அதை எல்லோருக்கும் நான் சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.

4. அடுத்து, இன்னும் கொஞ்ச நாளைக்கு நான் சொல்லிக்கொண்டு திரியும் ஒரு விஷயத்தை நேற்று படித்து முடித்தேன். தி சண்டே இந்தியன் இதழில் தீபாவளி இதழோடு, ரசிகன் என்றொரு இணைப்பு இதழும் வந்திருக்கிறது. தமிழின் முக்கிய நடிகைகளைக் குறித்த மலரும் நினைவுகள். முக்கிய எழுத்தாளர்கள் அனைவரும் எழுதியிருக்கிறார்கள். ஒவ்வொரு நடிகையும் எவ்வாறு தமிழ்சமூகத்தின் மனத்திரையில் நீக்காத இடம் பிடித்திருக்கிறார்கள் என்று நாஸ்டால்ஜியாவைத் தூண்டு சுவையான கட்டுரைகள். கலெக்டர்ஸ் ஐட்டம் மாதிரியான ஓர் நூல். அ.முத்துலிங்கம், மாலன், சுகுமாரன், இயக்குநர் வஸந்த், ஜெயமோகன், நாசர் ஆகியோரின் கட்டுரைகள் முதல் தரமானவை. பத்திரப்படுத்திக்கொள்ளத் தூண்டும் ஆவணம்.

உள்ளாட்சித் தேர்தல் கணக்குகள்!

தமிழக உள்ளாட்சித் தேர்தல் களைகட்டத் தொடங்கிவிட்டது. அ.தி.மு.க., தி.மு.க. தனித்து நிற்க முடிவு செய்தவுடன், மற்ற கட்சிகள் அனைத்தும் தனித்தே களம் காண வேண்டிய நிர்ப்பந்ததுக்குத் தள்ளப்பட்டு இருக்கின்றன. தே.மு.தி.க., மார்க்சிஸ்டோடு கூட்டு அமைத்து இருக்கிறது.

இந்த நிலையை மனத்தில் வைத்துக்கொண்டு என்ன கார்ட்டூன் போடலாம் என்று யோசித்தபோது, உதித்த சில ஐடியாக்கள் இவை:

1. அம்மாவும் அய்யாவும் மிட்டாய் டப்பாவை காலி என்பது போல் தட்டி மூடிக்கொண்டே தத்தமது வீடுகளுக்குள் நுழைய, காத்திருக்கும் கட்சிகள் அனைத்தும் ஏக்கம் பீடிக்க நிற்க வேண்டும். “அடுத்த பண்டிகைக்குப் பார்த்துக்கலாம், இப்போ ஒண்ணுமில்லை… போயிட்டு வாங்க!” என்று கமெண்ட் வைக்கலாம்.

2. எல்லா கட்சியினரும் தத்தமது கட்சிக் கொடிகளோடு முண்டியடுக்க, அய்யாவும் அம்மாவும், யாரையும் சீந்தாமல், தமது கட்சிக் கொடிகளை உயர்த்துவதில் முனைப்புடன் நிற்கவேண்டும். “முதல்ல எங்க கொடி ஏறட்டும். அப்புறம் பார்த்துக்கலாம்” – கமெண்ட் வைக்கலாம்.

மெனக்கெட்டால் இன்னும் சிறப்பான ஐடியாக்கள் வரலாம். ஆனால், இதெல்லாம் ஒரே செய்தியைத்தான் சொல்கின்றன. தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் தனித்தே உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க என்ன காரணம் இருக்க முடியும்? பல தியரிகள் உலவுகின்றன.

1. இரு பெரிய கட்சிகளுமே தத்தமது அடிமட்ட கட்சிக்காரர்களை எங்கேஜ் செய்யவும் வாய்ப்பளிக்கவும் உற்சாகமூட்டவும் இதைவிட வேறு சிறந்த வாய்ப்பு இல்லை. கூட்டணிக் கட்சிகளுக்கு சில இடங்களைப் பிரித்துக்கொடுக்கும்போது, பெரிய கட்சியின் உள்கட்டுமானத்தில் தேவையற்ற மனக்கசப்புகள் ஏற்படவும் பிளவுகள் ஏற்படவும் ஏதுவாகிவிடலாம். அதைத் தடுக்க, கூட்டணியைத் தவிர்த்துவிட்டு, தாமே அனைத்து இடங்களிலும் தம் கட்சிக்காரர்களை நிறுத்துவது சரியான அணுகுமுறை. இருகட்சிகளுமே அதைத்தான் செய்திருக்கின்றன.

2. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி தோல்வி, பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடப் போவதில்லை. மக்கள் மனத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டு இருந்தால், அது ஒரு சில இடங்களில் மட்டுமே பிரதிபலிக்க வாய்ப்புண்டு. மற்றபடி, ஆளுங்கட்சியினரே, உள்ளாட்சி அமைப்புகளிலும் வெற்றி பெறுவார்கள்; பெற்றிருக்கிறார்கள். மாற்றுக் கட்சிக்கு உள்ளாட்சி அமைப்புகளில் வாய்ப்பளித்தால், அவர்களால் பெரிதாக ஏதும் திட்டங்களைச் செயல்படுத்திவிட முடியாது; மாநில அரசைச் சார்ந்தே செயல்படுவது உகந்த வழி என்று மக்கள் ஒருவித தீர்மானத்தில்தான் வாக்களிக்கவே வருவார்கள். இந்தப் பின்னணியில் இருந்து பார்க்கும்போது, மற்றொரு வெற்றி வாய்ப்பை ஏன் இழக்க வேண்டும் என்று அ.தி.மு.க நினைக்கலாம். கடுமையாக மோதி, மக்களிடம் தம் செல்வாக்கு இன்னும் மிச்சமிருக்கிறது என்று காண்பிக்க இது ஒரு வாய்ப்பு என்று தி.மு.க. கருதலாம். கூட்டணி சேர்த்துக்கொண்டால், கூட்டணி பலத்தால்தான் வெற்றி கிடைத்தது என்ற அவப்பெயர் ஏற்பட வழியேற்பட்டுவிடலாம். அதைத் தவிர்க்கவே தி.மு.க. விரும்பி இருக்கக்கூடும்.

3. இன்னொரு கோணத்தில் இதையே புரிந்துகொள்ளலாம். சட்டமன்றத் தேர்தலில், தே.மு.தி.க.வின் ஆதரவில்தான் அ.தி.மு.க. வெற்றி பெற்றது என்ற கருத்து ஆழமாக இருக்கிறது. இதை உடைக்கவேண்டும்; தம் சொந்த செல்வாக்காலும், அ.தி.மு.க.வின் தீவிர தொண்டர்களாலுமே வெற்றி கிடைத்தது என்பதை நிரூபிக்க இதை ஒரு சரியான வாய்ப்பாக ஜெ. கருதியிருக்கலாம்.

4. இதற்கு இன்னொரு கோணமும் உண்டு: ஜெ. மெல்ல மெல்ல பா.ஜ.க. பக்கம் நகர்ந்துகொண்டு இருக்கிறார் என்றே தெரிகிறது. 2014ல் நரேந்திர மோதி பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. கம்யூனிஸ்டுகளோ, தே.மு.தி.க.வோ அப்போது தேவையற்ற சுமை. இப்போதே மெல்ல அவர்களைக் கழட்டி விட்டுவிடுவது உத்தமம் என்று ஜெ. கணக்கு போட்டு இருக்கலாம்.

5. தி.மு.க.வோடு கூட்டணி சேர்ந்ததால்தான், தோற்றுப் போனோம் என்ற கருத்து பல இடங்களில் காங்கிரஸ்காரர்களால் முன்வைக்கப்படுகிறது. தம் கட்சி ஆதரவு இல்லையெனில், காங்கிரஸ் பெற்றிருக்கும் குறைந்தபட்ச சீட்களைக் கூட பெற்றிருக்க முடியாது என்பதை நிரூபிக்க இது சரியான வாய்ப்பு என்று கலைஞர் நினைத்து இருக்கலாம். வருங்காலத்தில் தி.மு.க. கூட்டணியில் தொடர வேண்டிய தேவையை, காங்கிரசுக்கு வலியுறுத்த இதைவிட சிறப்பான சந்தர்ப்பம் அமையாது என்றும் அவர் கணக்கு போட்டு இருக்கலாம்.

6. மற்ற கட்சிகள் அனைத்துக்கும் இத்தேர்தல் ஓர் ரியாலிட்டி செக். ஆசிட் டெஸ்ட். தாம் அடிமட்ட தொண்டர்கள் வரை உண்மையிலேயே செல்வாக்கு பெற்றிருக்கிறோம் என்பதை பெரிய கட்சிகளுக்கு நிரூபிக்க வேண்டிய தேவை இப்போது ஏற்பட்டுவிட்டது. தே.மு.தி.க.வின் 10 சதவிகித, கம்யூனிஸ்ட்டுகளின் 3-4 சதவிகித வாக்குவங்கிகள் பத்திரமாக இருக்கின்றனவா; செல்வாக்கில் உயர்வா, சரிவா என்பதை இத்தேர்தல் அவர்களுக்குக் காண்பித்துவிடும். வாக்குகள் சேதாரம் இல்லாமல் இருந்தால்தான் அடுத்து வரும் தேர்தல்களில் பெரிய கட்சிகளுடன் பேரம் பேச முடியும்; இல்லையெனில், கட்சி வளர்ச்சிப் பணிகளில் இனி முனைந்து செயல்பட முயலவேண்டும்.

7. பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் வேகமாக வளர்ந்த கட்சிகள்; கூட்டணி ஆதரவிலேயே செல்வாக்கு பெற்றவை. ஆரம்ப காலத்தில் அக்கட்சித் தலைவர்களுக்கு அடிமட்ட தொண்டர்களோடு இருந்த அணுக்கம், கால ஓட்டத்தில் மெல்லக் குறைந்துவிட்டது. இப்போது, உண்மையில் தம் செல்வாக்கை அவர்கள் புரிந்துகொள்வார்கள். தம் அடிப்படை பலம் கைநழுவிப் போய்விட்டதா? வலுப்பெற்றிருக்கிறதா என்று தெரிந்துவிடும்.

8. உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றி பெற்று வந்தவர்கள் என்ன செய்தார்கள் என்று மக்களுக்கு தெரியவே தெரியாது என்பதுதான் உண்மை. மக்களின் தேவைகளுக்காக அவர்கள் குரல் கொடுத்தார்களா? மாமன்றக் கூட்டங்களில் அவர்களுடைய செயல்பாடுகள் எப்படி இருந்தன? என்ன புதிய திட்டங்களை அவர்கள் தம் வார்டுகளில் செயல்படுத்தினார்கள்? எம்.எல்.ஏ.க்கள் என்ன செய்தார்கள் என்று தேடினால், தெரிந்துகொண்டுவிடலாம். ஆனால், மாமன்ற, நகராட்சி உறுப்பினர்கள்? தம் வார்டுகளில் உள்ள மக்கள் பிரச்னைகளுக்கு மிக அருகிலேயே இருக்கும் இந்த உறுப்பினர்கள்தான், மிகவும் விலகி இருக்கிறார்கள் (விதிவிலக்குகள் உண்டு). மக்கள் சம்பந்தமான வேலைகளை விட, இந்த உறுப்பினர்கள், அவர்கள் சார்ந்த கட்சி வேலைகளிலேயே அதிகம் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி அவர்கள் முன்னேற வேண்டுமல்லவா 🙂

9. இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் கட்சி சார்ந்த உறுப்பினர்களுக்கு வாக்களிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எம்.எல்.ஏ. தேர்தல் என்றால், மக்கள் தொகை அதிகம். அக்கவுண்டபிளிட்டி குறைவு (அங்கும் அக்கவுண்டபிளிட்டி வேண்டும்; ஆனால் வலியுறுத்தும் வழிகள் குறைவு!). வார்டு என்பதோ, நகராட்சி, பஞ்சாயத்து என்பதோ, இன்னும் அருகில் இருக்கும் அலகுகள். அங்கே மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்களை சுலபமாக அடையாளம் காண முடியும். அவர்கள் இத்தேர்தலில் நின்றால், அவர்களுக்கு வாக்களிக்க முன்வாருங்கள்.

10. உள்ளாட்சி அமைப்புகளுக்கு, மத்திய மாநில அரசுகள், உலக வங்கி, இன்னபிற நிதியங்கள் ஏராளமாக பணம் ஒதுக்குகின்றன. அங்கே நல்லவர்கள், நேர்மையாளர்கள் உறுப்பினர்களாக இருந்தால், பலன் நிச்சயம் மக்களைப் போய்ச் சேரும். இன்றைக்கு இருக்கும் மோசமான அரசியல் சூழலில், நல்லவர்களால் என்ன செய்ய முடியும்? நேர்மையாளர்கள் என்பதெல்லாம் பம்மாத்து என்றெல்லாம் குரல்கள் ஒலிக்கின்றன. இருக்கலாம். அவர்களால் ஒன்றுமே செய்ய முடியாமல் கூட போகலாம். பரவாயில்லை. குறைந்தபட்சம், நமக்குத் தெரிந்த நல்லவருக்கு, நேர்மையாளருக்கு, மக்கள்நலப் பணியாளருக்கு வாக்களித்தோம் என்ற திருப்தியாவது இருக்கட்டுமே. முதல் செங்கல் நம்முடையதாக இருக்கட்டுமே.

இதைக்கூடச் செய்யாமல் விலகி இருப்பதில் அர்த்தமில்லை. மறக்காமல், வாக்கு அளியுங்கள்.

அண்ணா ஹசாரேவை ஏன் ஆதரிக்கவேண்டும்?

அண்ணா ஹசாரே மீது காங்கிரஸ் கட்சி கடும் குற்றச்சாட்டுக்களை வீசத் தொடங்கிவிட்டது. இதுநாள் வரை கொஞ்சம் மிதமாக போனவர்கள், உண்ணாவிரதப் போரை நடத்த அவர் காட்டும் உறுதியைக் கண்டு, அவரைக் கீழ்த்தரமாக பேச ஆரம்பித்து இருக்கிறார்கள். காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி, ஒரு படி மேலே போய், அண்ணாவையும் அவரது குழுவினரையும்  “armchair fascists, over-ground Maoists, closet anarchists” என்று பேசியிருப்பது விஷமத்தனமானது. உள்நோக்கம் கொண்டது.

இந்த நிலையில், அண்ணாவை ஆதரிப்பது என் வரையில் முக்கியம் என்று கருதுகிறேன். அவநம்பிக்கைவாதிகளைப் போல் எல்லாவற்றையும் எல்லோரையும் இழித்தும் பழித்தும், குறை கண்டும் குற்றம் சொல்லிக்கொண்டும் இருப்பது சுலபம். அண்ணா, தமது டிரஸ்டுக்கு வந்த பணத்தில் பிறந்த நாள் விழா கொண்டாடினார், அது தவறு என்று நீதிபதி சாவந்த் கருத்து சொல்லியிருக்கிறார்.

ஆனால், இதையெல்லாம் மீறியது அண்ணாவின் இயக்கமும் அதன் தேவையும்.

1. இன்று அண்ணா மிடில் கிளாஸ் இளைஞர்களின் கோபத்தின் முகமாக உருவாகி இருக்கிறார். தம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லையே, நாட்டின் ஊழல் கேடுகளுக்கு வழி தேட முடியவில்லையே என்று குமுறும் மிடில் கிளாஸ், தம் குரலை, அண்ணாவிடம் இனம் காணுகிறது. அண்ணா இந்த நம்பிக்கையைத் தோளில் சுமப்பதற்கு முழுவதும் தகுதியானவர் என்று மத்தியமர்கள் நம்புகிறார்கள். எத்தனை குட்டையைக் குழப்பினால், அவரது செயல்களுக்கு உள்ளர்த்தம் கற்பித்தாலும், மேன்மேலும், அவரது புகழ் உயரவே செய்கிறது. செய்யும். அதுதான் நம்பிக்கையின் பலம்!

2. ஊழல் சீர்கேடுகளுக்கு, முகம் கொடுக்க மத்திய அரசு தயங்குகிறது என்பது வெளிப்படை. லோக்பால் வரைவு மசோதா பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டு, சட்டமாக்கப்படலாம். அதனால், எந்தப் பயனும் விளைந்துவிடாது என்பதில் அக்கறை உடைய மத்யமர்கள் கவலைகொள்ளுகிறார்கள். பல்லைப் பிடுங்கிவிட்டுப் பாம்பு என்றால், யாரேனும் அச்சப்படுவார்களா என்ன? மக்கள் எழுச்சியை ஓரளவுக்குத் திருப்தி செய்து, கவனத்தைத் திசை திருப்பவேண்டும் என்பதே காங்கிரஸின் எண்ணமாக இருக்கிறது.

3. அண்ணா, லஞ்ச ஊழலை, நவீன முழக்கமாக புதுப்பித்து இருக்கிறார். மக்கள் மனத்தின் தேவை அது. அவர் அதற்கு உடனடியாக தீர்வு கண்டுவிடுவார் என்று நான் நினைக்கவில்லை. ஆழப் புரையோடிய புண்ணை மருந்திட்டு குணமாக்கிவிட முடியுமா என்ன? ஆனால், லஞ்ச ஊழல் ஓர் நோய், அதைக் குணமாக்கவேண்டும் என்ற பதற்றத்தை, அண்ணா விதைத்து வருகிறார். ஏற்கெனவே விதை ஊன்றிய மனங்களில் அதை வளர்த்தெடுக்கிறார். இந்த அவேர்னஸ் பில்டிங், மிக முக்கியமான பணி. இதை நான் இப்படிப் பார்க்கிறேன் : காங்கிரஸ் கட்சியை காந்தி தலைமையேற்று நடத்த வருவதற்கு முன்பு, அவரை ஏற்பதற்கான பண்பட்ட மனங்கள் தயாராக இருந்தன. கோகலே உள்ளிட்டோர் அதற்கு முன்பு செய்தது இப்படிப்பட்ட பண்படுத்துதலைத்தான். இப்போதும் அப்படிப்பட்ட பண்படுத்துதல் அவசியம். அண்ணா ஹசாரே இயக்கத்தினரின் முயற்சி இத்தகையதே.

4. நண்பர் ஒருவரோடு பேசிக்கொண்டு இருந்தபோது, இந்தச் செய்தியைச் சொன்னார்: ஷீர்டி பாபாவிடம், கோபாலகிருஷ்ண கோகலே, தனக்குப் பின்னர் காங்கிரஸ் பேரியக்கம் என்னாகும், யார் தலைமை ஏற்பார்கள் என்று கவலையோடு கேட்டாராம். அதற்கு பாபா, “வந்துகொண்டே இருக்கிறார், நீ உன் வழியில் போ” என்றாராம்.  அண்ணா ஹசாரே வழிநடத்தும் இயக்கம் அதுபோல் ஒரு எதிர்காலத் தலைவரின் வரவுக்கானஆரம்பமோ என்னவோ?

5. அரசையும் ஆளுபவர்களையும் கொஞ்சமேனும் பயத்தோடும் கட்டுப்பாடுடனும் நடந்துகொள்ள வைக்க, அண்ணாவின் இயக்கம் நிச்சயம் துணை செய்யும். மக்கள் கண்கொத்திப் பாம்பாக இருக்கிறார்கள் என்று புரிய வைக்க இந்த இயக்கம் மிக முக்கியம்.

6. தகவல் அறியும் சட்டத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தும் ஓர் நண்பரிடம் பேசும்போது, அவர் சொன்ன செய்தி சுவாரஸ்யமானது. குஜராத்தில், திட்டங்கள் லஞ்சம் ஊழல் இல்லாமல் செயல்படுத்தப்படுவதற்கும், உரிய பலன்கள் ஏழை எளியவர்களிடம் போய் சேருவதற்கும் காரணமாக இருப்பது தகவல் அறியும் சட்டம்தானாம். நரேந்திர மோடி, அரசு நிர்வாகத்தை ஒழுங்காக செயல்பட வைக்க, இந்த வசதியை நன்கு பயன்படுத்துகிறாராம். எல்லாவற்றுக்கும் பதில் சொல்லவேண்டுமே, சொல்லவில்லை என்றால், மேலே இருக்கும் முதல்வர் கவனத்துக்கு தவறுகள் சென்றுவிடுமே என்ற அச்சம், அங்கே நிர்வாகத்துறையில் பரவி இருக்கிறது. இதுதான் அரசு நிர்வாகத்தின் அக்கவுண்டபிளிட்டிக்கும் பொறுப்புமிக்கத்தன்மைக்கும் உதாரணம். சட்டங்களை முறையாகப் பயன்படுத்துதல்.

காங்கிரஸ் அண்ணாவைக் கண்டு, அவரது இயக்கம் கண்டு பதற்றம் கொள்ளத் தொடங்கியுள்ளது. நாளை நடக்கவிருக்கும் போராட்டத்துக்கு அனுமதி அளிக்க 22 நிபந்தனைகள் போடுவது, அனுமதி மறுப்பு என்றெல்லாம் செய்திகள் வருகின்றன.  நல்ல ஆரம்பம்!  இப்படியே முன்னேறுவது நல்லதே செய்யும்!

காணாமல் போகும் தி.நகர்

இன்று காலை [14.08.08] வெளியான இந்து நாளிதழோடு தி.நகர் மேம்பாலத் திறப்பு விழாவை ஒட்டி ஒரு விளம்பரதாரர் சப்ளிமெண்ட் வந்திருக்கிறது. பார்த்திருப்பீர்கள். அதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, கீழே உள்ள வாக்கியம்தாம்:

T. Nagar plays pivotal role in the textiles and jewellery trade at an international level. It is the earnest request of our association to declare the area comprising Usman Road, North Usman Road, Nageswara Rao Road, Prakasam Road and Ranganthan Street as a ‘Special Retail Zone’ to enhance shopper’s delight.

இந்தக் கோரிக்கையை நீங்கள் வேறு பல விஷயங்களோடு இணைத்துப் பார்க்க வேண்டும்.

1. நகரின் கட்டட வரைமுறைகளை எல்லாம் மீறி, தம்முடைய இஷ்டத்துக்கு அடுக்குமாடிகளைக் கட்டிக்கொண்டே போனார்கள் வியாபாரிகள். உயர்நீதி மன்றம், அனுமதி பெறாமல் கட்டப்பட்ட பல மாடிகளை இடிக்க உத்தரவிட்டிருக்கிறது.

2. உச்ச நீதிமன்றம வரை போய் தம்முடைய கட்டடங்களைக் காப்பாற்ற முனைந்தார்கள் வியாபாரிகள். அதுவும் முடியாமல் போகவே, இப்போது முற்றிலும் வேறு ஒரு கோரிக்கையை கூட்டாக முன்வைக்கிறார்கள்.

3. மக்களுக்குச் சேவை செய்யவே இதுபோல் கட்டடங்களைக் கட்டியதாகவும், பேராசையினால் அல்ல என்று வியாபாரிகள் சங்கம் கூறியது இதே இந்து நாளிதழில் பிரசுரமாகி உள்ளது.

இதில் பிரச்னை என்ன? ஏன் அவர்களுடைய கோரிக்கையில் உள்ள குற்றம் என்ன என்று கேட்பவர்களுக்கு:

1. தி.நகர் என்பது பொதுமக்கள் வாழும் இடம். அது வணிகத் தலம் அல்ல. ஆனால், பணபலத்தாலும் ஆள் பலத்தாலும் ஆட்சி பலத்தாலும் பனகல் பூங்காவை ஒட்டி உள்ள அத்தனை இடங்களையும் வியாபாரிகள் ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கிறார்கள். அதனால் நேர்ந்தது என்ன? போக்குவரத்து நெரிசல், அசுத்தம், மாசு, நோய்கள். வியாபாரிகள் பணம் சம்பாதிக்க, பொதுமக்கள் திண்டாட வேண்டுமா என்ன?

2. யார் கொடுத்த தைரியத்தில் இவர்கள் மாடி மேல் மாடி கட்டி விண்ணை முட்டவிட்டார்கள்?  பொதுமக்கள் வாழும் நகரம் என்று தெரிந்தும் தைரியமாக கட்டட வரைமுறைகளை மீறி கட்டடம் எழுப்பத் தூண்டியது எது? பேராசைதானே? மக்கள் சேவை என்பது வெறும் பம்மாத்து அல்லாமல் வேறு என்ன?

3. செய்தது தவறு. அதற்கு நீதிமன்றம அனுமதிக்கவில்லை என்று தெரிந்தவுடன், தங்கள் கட்டடங்களைக் காத்துக்கொள்ள சட்டென அந்த முழு இடத்தையும் ஸ்பெஷல் எகனாமிக் சோன் மாதிரி ஸ்பெஷல் ரீடெயில் சோன் என்று அறிவிக்கக் கோருகிறார்கள். இப்படி ஒரு அந்தஸ்து அந்த ஏரியாவுக்குக் கிடைக்குமானால், அதில் அவர்கள் முற்றும்முழுவதும் குளிர்காய வசதியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புதானே?

4. அப்படியே ஒரு ஸ்பெஷல் ரீடெயில் சோன் வேண்டும் என்று விரும்புவார்களாயின், அதற்கான முன்னுதாரணங்களைப் பின்பற்றவேண்டியதுதானே? கொத்தவால்சாவடி, கோயம்பேடு போனதுபோல், பிராட்வே பஸ்நிலையம் கோயம்பேடு போனதுபோல், எல்லாரும் வந்துபோக ஏதுவாக, சரியான அனைத்து வசதிகளோடு கூடிய மாற்று இடத்துக்குச் செல்வதுதானே நியாயம்?ஆனால், அதைச் செய்ய மாட்டார்கள்.

5. ஒவ்வொரு துறையினரும் இதுபோல் தாம் இருக்கும் இடங்களையே ஸ்பெஷல் சோன் ஆக்க கேட்டால், அரசு ஏற்றுக்கொள்ளுமா? தி.நகரில் பதிப்பாளர்கள் நிறைந்திருக்கிறார்கள். ஸ்பெஷல் பப்ளிஷர்ஸ் சோன் கேக்கலாமா? என்.எஸ்.சி.போஸ் சாலையை என்னவென்று அழைக்கலாம்? தேவராஜ முதலி தெருவை ஸ்பெஷல் கண்ணாடி சோன் என்று அழைக்கலாமா? பந்தர் தெருவை ஸ்பெஷல் பேப்பர் சோன் ஆக்கலாமா?

6. ஒரு இடத்தில் ஒரு குறிப்பிட்ட தொழில் மையம் கொள்வது தவிர்க்கமுடியாத விஷயம். ஆனால், நகரின் மொத்த கட்டுமானத்துக்குள், அதன் வசதிகளுக்குள், அதனை ஒட்டி உள்ள மக்களின் வாழ்வுக்கு இணையவே தொழில் நடக்க முடியுமே தவிர, தி. நகர் மாதிரி ராட்சத்தனமாக, பேராசையின் பெருங்கனவாக வளர அனுமதித்ததே தவறு. ராட்சத்தனமாக வளர்ந்துவிட்டதால், அது தனக்கு இன்னும் வேணும் இன்னும் வேணும் என்று பகாசுரத் தீனியைக் கேட்கிறது.

இன்று மாலை, கலைஞர் தி.நகர் மேம்பாலத்தைத் திறந்துவைத்து பேசுகிறார். என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

ஏராளமான சிறுபத்திரிகைகள்

சமீத்திய சென்னை பயணத்தின் போது, தி.நகரில் உள்ள நியூ புக்லேண்ட்ஸ் சென்றிருந்தேன். புக்லேண்ட்ஸ் விரிவாக்கப்பட்டு நிறைய நூல்களுக்கு இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. எத்தனை நூல்கள்,  எத்தனை இதழ்கள்.. அப்பப்பா.. சட்டென தமிழ்ப் பதிப்புலகம் வீறுகொண்டு எழுந்துவிட்டதோ என்று ஆச்சரியப்படுத்தும் விதத்தில் கடை முழுக்க நூல்கள்.

நான் வாங்கிய சிறு பத்திரிகைகள்:

யுகமாயினி, உயிர் எழுத்து, மணல் வீடு, மணல் புத்தகம், நிழல், புதிய விசை, புத்தகம் பேசுது, விருட்சம், உயிர்மை, காலச்சுவடு, புதிய பெண்ணியம், புதிய பார்வை.

என்னை பெரும் மகிழ்ச்சிக்குள் ஆழ்த்திய விஷயம், இந்த இதழ்களில் நிறைய சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக யுகமாயினி, உயிர் எழுத்து இதழ்கள் நல்ல சிறுகதைகளுக்கு இடம் கொடுக்கின்றன.

இது ஒரு சக்கரம். இலக்கியத்தில் இருந்து தொடங்கி, வேறு பல அறிவுத் துறைகள் எல்லாம் போய்விட்டு, மொழிபெயர்ப்புகளுக்கும் போய்விட்டு, மீண்டும் படைப்பு இலக்கியத்துக்கு வந்து சேர்ந்திருக்கின்றன சிறு பத்திரிகைகள். பல புதிய பெயர்கள் தென்படுகின்றன. படித்துவிட்டுச் சொல்கிறேன்.

விற்பனை பெருகியிருக்கிறதா என்று தெரியவில்லை. சிறுபத்திரிகையிலேயே (அல்லது இடைநிலை இதழ்களில்) அதிகம் விற்பனை ஆவது காலச்சுவடு இதழ்தான் என்று நினைக்கிறேன். 8000 பிரதிகள் விற்பனை ஆவதாகக் கேள்விப்பட்டேன். மற்ற புதிய இதழ்கள் 1000 – 2000 பிரதிகள் விற்பனை ஆகுமோ என்னவோ? 300 -500 இதழ்கள் விற்ற நிலையில் இருந்து பார்க்கும்போது, இது நல்ல வளர்ச்சிதான்.  ஆனால், சஸ்ட்டெயின் பண்ண முடியுமா என்று தெரியவில்லை.

படைப்பு இலக்கியத்துக்கு மீண்டும் மவுசு வந்திருப்பது கண்டு எனக்கு பெரு மகிழ்ச்சியே.