சாகித்ய அகாதெமி மொழிபெயர்ப்பு விருது 2019 தேர்வுக் குழுவில் நானும் ஒரு உறுப்பினனாக இருந்தேன். டாக்டர் பிரேமா நந்தகுமார், சா. தேவதாஸ் ஆகியோருடன் அமர்ந்து, விருதுபெறும் படைப்பையும் மொழிபெயர்ப்பாளரையும் இறுதி செய்யும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. மிகவும் மகிழ்ச்சியான, ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெற்ற மூன்று மணிநேரங்கள் அவை.
அதற்கு முன்னர், இறுதிப் பட்டியலில் 11 புத்தகங்கள் இடம்பெற்றிருந்தன. கிட்டத்தட்ட 12 நாட்களில் அனைத்துப் புத்தகங்களையும் படித்து முடித்து, எனக்கான குறிப்புகளை எடுத்துக்கொண்டு, இறுதித் தேர்வுக் கூட்டத்துக்குப் போயிருந்தேன்.
என் பட்டியலை விதவிதமான வழிகளில் வடிவமைத்துக்கொண்டிருந்தேன். நல்ல தரமான மொழிபெயர்ப்பு, தரமான படைப்பின் தரமான மொழிபெயர்ப்பு, புதுமையான படைப்பின் தரமான மொழிபெயர்ப்பு, தமிழுக்கு நிச்சயம் வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்பு என்றெல்லாம் நானே எனக்குள் பல்வேறு வரையறைகளை வகுத்துக்கொண்டிருந்தேன்.
இவற்றையெல்லாம் எடுத்துப் பேசுவதற்கு அன்று வாய்ப்பு கிடைத்தது.
இறுதியில் மனோஜ் குரூர் மலையாளத்தில் எழுதிய, கே.வி. ஜெயஸ்ரீயால் மொழிபெயர்க்கப்பட்ட நாவலான ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ என்ற நாவல் பரிசுக்குரியதாக தேர்வு பெற்றது.
இதோடு என் மனத்தில் பாதிப்பை ஏற்படுத்திய சில புத்தகங்களையும் குறிப்பிட விரும்புகிறேன்.
முதலில், வாஸந்தி மொழிபெயர்த்த ‘துருவ நட்சத்திரங்கள்’ எனும் நாவல். பஞ்சாபி மொழியில் மிக முக்கியமான நாவலாக இது கருதப்படுகிறது. குல்ஜார் சிங் சிந்து என்ற எழுத்தாளரது படைப்பு.
நான் இதில் மிகவும் ரசித்தது இதன் மொழிபெயர்ப்பைத்தான். ‘பட்டுக் கத்தரித்தாற் போல்’ என்றொரு சொற்றொடர் உண்டு. ரொம்ப பழைய பாணியாகத் தோன்றினாலும் பரவாயில்லை. இந்தச் சொற்றொடர் தான், துருவ நட்சத்திரங்கள் நூலின் மொழிபெயர்ப்பைக் குறிக்கும் சரியான சொல்.
ஒவ்வொரு வரியையும் பத்தியையும் நேர்த்தியாக உருவாக்கியிருக்கிறார் வாஸந்தி. அந்த மொழிபெயர்ப்பைப் பார்க்கும்போதே, அதற்குப் பின்னே போயிருக்கும் உழைப்பை என்னால் யூகிக்க முடிந்தது. முதலில் ஒருமுறை மொழிபெயர்த்துவிட்டு, அதற்குப் பிறகு அந்தப் பிரதியைச் செம்மைப்படுத்தியுள்ளார். பெரும்பாலான மொழிபெயர்ப்புகளில், வாக்கியத்தை முடிக்கும்போது, ஒரே மாதிரியாக இருக்கும். ‘சென்றார்’, ‘சொன்னார்’, ‘என்றார்’… கட்டுரைகளாக இருந்தால், ‘குறிப்பிடத்தக்கது’ எல்லா இடங்களிலும் எட்டிப் பார்க்கும் (உபயம் : சன் டிவி!!).
இந்த நாவலில், மிகவும் கவனத்துடன், ஒவ்வொரு வரியையும் திருந்த நறுக்கியிருக்கிறார். தேவையற்ற உபரி சொற்களை நீக்கி, கச்சிதமாக்கியுள்ளார். தமிழில் படிக்கும்போது, எந்த இடறலும் இல்லை. வாசிப்பது ஒரு பஞ்சாபி நாவல் தானா என்றே சந்தேகம் எழுகிறது.
இந்தியா டுடே இதழில் பணியாற்றிய அனுபவம், எழுத்தாளராகவும் இருக்கும் வீச்சு ஆகியவை வாஸந்தியின் மொழிபெயர்ப்பை மேன்மைப்படுத்தியுள்ளது. எழுத்தாளரே மொழிபெயர்ப்பாளராகவும் இருப்பதால் கிடைக்கும் அனுகூலம் இது. குல்ஜார் சிங் சிந்துவுக்குத்தான் அதிர்ஷ்டம். நல்ல மொழிபெயர்ப்பாளர் அமைவது ஏழு ஜன்மத்துப் புண்ணியம்!