யூத்ஃபுல் விகடன்

ஆனந்த விகடனின் புதிய அவதாரம், ஆல் நியூ யூத்ஃபுல் விகடன். பெரிய சைஸில்
ஒன்றும், சின்ன சைஸில் ஒன்றுமாக இரண்டு விகடன்கள், இனி வாராவாரம். விலை
ரூ.15 ( ரூ. 10 இல் இருந்து ரூ.15 ஆகிவிட்டது).

புதன்கிழமை மாலை இதற்கான வெளியீட்டு விழா, சென்னை லீ ராயல் மெரிடியனில்
நடந்தது. அடியேனை விகடன் நிர்வாக இயக்குநர் அழைத்திருந்தார். மாலை
7.30க்கு நிகழ்ச்சி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டு, தொடங்குபோது மணி
8.15ஐ நெருங்கி இருந்தது. சோ ராமசாமி, நக்கீரன் கோபால், தயாநிதி மாறன்,
ஹிந்து ராம் போன்றோர் முன்வரிசையில் அமர்ந்திருந்தனர். சோவும் ராமும்
ரொம்பநேரம் நின்றுகொண்டே பேசிக்கொண்டு இருந்தார்கள்.

ஒளிவிளக்குகள் நிறைந்த மேடை. இரண்டு பக்க புரஜக்டர் ஸ்கிரீன்களிலும்,
ஆ.வி. எப்படி காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே வந்திருக்கிறது விளக்கும்
குறும்படம். ஆ.வி. அட்டைகளை வைத்தே, பின்னணியில் அவ்வக்காலப் பாடல்களை
ஓடவிட்டு, குறும்படம் தயாரிக்கப்பட்டிருந்தது.

நிகழ்ச்சி தொடங்கியது. நான்கு அழகிய பெண்களும் நான்கு ஆண்களும்
கண்ணாமூச்சி ஏனடா என்ற பாடலுக்கு மேடையில் நடனம் ஆடத் தொடங்கினார்கள்.
அடுத்து அடுத்து இன்னும் இரண்டு பாடல்களுக்கு ஆடி முடித்தார்கள்.

பின்னர் மீண்டும் ஸ்கிரீன்களில் எப்படி மாற்றம் தவிர்க்கமுடியாதது என்று
பல்வேறு துறைகளில் இருந்து விளக்கிக்கொண்டே வந்தவர்கள், இப்போது ஆ.வியும்
“ஆல் நியூ யூத்ஃபுல்” விகடனாக மாறியிருப்பதைத் தெரிவித்தார்கள். மேடையின்
நடுவே இருந்த ஒரு பலகை திரும்பி, சென்ற வார ரஜினி – பசுபதி கவரில்
இருந்து இந்த வார இரட்டை விகடனுக்கு மாறியது.

மீண்டும் ஒரு பாடல், நடனம்.

அப்புறம், விகடன் எம்.டி. பா.சீனிவாசன் மேடை ஏறினார். சிக்கனமான உரை.
இளமை என்பதூ ஒரு மனநிலை, அதை வயதை வைத்துக் கணக்கிட முடியாது. இந்த புதிய
விகடன், இளைஞர்களுக்கு, இளைஞர்களால் உருவாக்கப்படும் விகடன் என்றார்.
உடனே அரங்குக்கு வந்திருந்த அனைவருக்கும் ஒரு வெள்ளை பையில் விகடன் செட்
போட்டுத் தரப்பட்டது.

அதைத் தொடர்ந்து காக்டெயில், டின்னர். பின் வந்தவர்கள் கிளம்பி,
தங்கியவர்கள் தள்ளாடி முடிய விடிகாலை மணி இரண்டு.

******

மிகவும் தைரியமாக ரிஸ்க் எடுத்து இருக்கிறார் பா.சீனிவாசன்.

பொதுவாக பத்திரிகைகள் பற்றி நடத்தப்பட்ட பல்வேறு சர்வேக்கள் ஒரே ஒரு
விஷயத்தைத்தான் திரும்பத் திரும்பச் சொல்கின்றன: இளைஞர்கள் இதழ்களை
வாங்குவதில்லை. அவர்களது கனவுகளும் தேவைகளும் முற்றிலும் மாறிவிட்டன.
அவர்களுக்கு முன்பெல்லாம் அரசுமேல் கோபம் இருந்தது உண்டு. இன்று அரசைப்
பற்றியோ அரசியலாளர் பற்றியோ அக்கறையே இல்லை.

தான் உண்டு, படிப்பு உண்டு, வேலை வாய்ப்பு உண்டு, முன்னேற்றம் உண்டு,
காதல் உண்டு, இதையெல்லாம் தக்கவைத்துக்கொள்ள கடவுளின் மேல் பக்தியும்
உண்டு. இவர்களுடைய சைக்காலஜியைப் புரிந்துகொண்டு இதழ்களை உருவாக்கவே
முடியவில்லை. மேலும் ஆங்கிலத்திலும் இவர்களது தேவைகளை பகுதி
பகுதியாகத்தான் நிறைவேற்றுகிறார்களே அன்றி, முழுமையாக நிறைவேற்றக்கூடிய
ஒரே இதழ் என்பதும் இல்லை. விளையாட்டுக்குத் தனி இதழ், ஃபேஷனுக்கு தனி
இதழ், ஃபிட்நஸுக்கு தனி இதழ்.

இன்றைய இளைஞன் பயங்கர காப்ளிகேட்டானவன். இவனது முன்னுரிமைகள்
மாறிப்போய்விட்டன. தேசியமோ, கம்யூனிசமோ, லட்சியவாதமோ ஏதேனும் ஒன்றுகூட
இவர்களை இணைக்கும் கண்ணியாக இல்லை. பயங்கரமாகப் பிரிந்து இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட பின்னணி கொண்ட இளைஞர் குழுவுக்கு ஆ.வி.யின் தன்மையே மாற்றி
அமைத்து, அவர்களது ஆர்வங்களுக்கு இடம்கொண்டுக்க முடியும், அதன் மூலம்
ஆ.வி.யை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு போக முடியும் என்று நினைத்து,
இப்போது அதைச் செயல்படுத்தியும் காட்டி இருக்கும் சீனிவாசன் உண்மையில்
தொலைநோக்கு கொண்டவர்தான்.

இதில் வெற்றி கிடைத்தால், இன்னும் முப்பது ஆண்டுகளுக்கு ஆ.வி.
கொண்டாடப்படும், நினைக்கப்படும், எதிர்பார்க்கப்படும். வெற்றி தவறினாலோ,
என்னாகும் என்று சொல்வதற்கு இல்லை.

*****

எல்லா பெரிய தமிழ்ப் பத்திரிகைகளும் ஒரு குறுக்குச் சாலைக்கு வந்து
நிற்கின்றன. அவர்களோடு வளர்ந்த தலைமுறை இன்று வழுக்கைத் தலையர்களாகி,
மெல்ல மெல்ல இறைவனடி சேர்ந்தும் கொண்டு வருகிறார்கள். ஒவ்வொரு முறையும்,
இதுபோன்ற இதழ்கள் தங்கள் தோலை உரித்துப் போட்டுவிட்டு,
புத்துணர்ச்சியுடன் கிளம்ப வேண்டி இருக்கிறது.

எனக்குத் தெரிந்து 1997 அக்டோபரோ / நவம்பரோ மாதத்தில், ஆ.வி இதுப்போல்
ஒருமுறை புது உணர்வு பெற்றது. அதுவரை நவீன இலக்கியம் பக்கம் அதிகம்
தலைவைக்காத ஆ.வி. சட்டென அனைத்து நவீனர்களையும் அரவணைத்துக்கொண்டு புதிய
முகமும் பொலிவும் பெற்றது.

அதேபோல் மீண்டும் புதுப் பொலிவு பெற்ற மற்றொரு தருணம், 2006 ஏப்ரல்
புத்தாண்டு இதழ். எப்போதும் விற்கும் கவர்ச்சி, கும்மாளம் போன்றவற்றை
விட்டுவிட்டு, மிகவும் சீரியஸ்ஸான விஷயங்களைப் பேசத் தொடங்கியது.

சென்ற பல சமயங்களில் நடைபெற்ற மாற்றங்கள் அனைத்தும் பொதுவாக இதழ்கள்
வாங்கும் 30+ / 35+ வாசகர்களை மனத்தில் வைத்தே செய்யப்பட்டன.  ஆனால்,
இம்முறை இன்னும் தைரியமாக 20+ வாசகர்களை மனத்தில் கொண்டு
செய்யப்பட்டிருக்கிறது.

*****

இதழ்கள் இரண்டையும் படித்துவிட்டேன். இளைஞர்களுக்கான பெரிய விகடனில்
க.சீ.சிவகுமார், நாஞ்சில் நாடன், தமிழச்சி போன்ற இலக்கியவாதிகள் தலை
தென்படுகிறது. இதில் அதிகம் கை வைக்கவில்லை.

மற்ற எல்லா பக்கங்களிலும் பேசும் மொழி, விளி, நடை, உள்ளடக்கம் என்று
அனைத்தும் முற்றிலும் வேறோர் தொனியையும் கொண்டாட்டத்தையும் கொண்டு
இருக்கின்றன. லே-அவுட், டிசைன் அம்சங்களும் நிறைய மாற்றமடைந்திருக்கிறது.
வெகுஜன ஊடகமாக இளைஞர்களை சென்றுசேர அனைத்து அம்சங்களும் சேர்க்கப்பட்டு
இருக்கின்றன. காண்டன் மிக்ஸ் மிகச்சரியாக இருக்கிறது.

சின்ன இதழ் ரீப்ரிண்ட் விகடன் மாதிரி இருக்கிறது. பழைய விஷயங்களை நிறைய
மறு பதிப்பு செய்திருக்கிறார்கள். இணையத்தில் இருக்கும் பழைய
தலைமுறையினர் இதனை நிச்சயம் வரவேற்பார்கள். வெளியில் காசுகொடுத்து
வாங்கும் புதிய தலைமுறை இதனை எவ்வளவு தூரம் ரசிக்கும் என்று தெரியவில்லை.

விகடனைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் புதுப்படம் ரிலீஸ் செய்துவிட்டு,
ரிசல்டுக்குக் காத்திருக்கும் தயாரிப்பாளர் மூடில் இருக்கிறார்கள்.
வழக்கம்போல், வெகுஜன வாசகர்கள் எப்படி இதை எடுத்துக்கொள்ளப் போகிறார்கள்
என்பது இனிமேல்தான் தெரியும்.

3 thoughts on “யூத்ஃபுல் விகடன்

  1. தயவு செய்து http://www.cablesankar.blogspot.comக்கு சென்று, விகடனை பற்றிய மக்களின் கருத்து கணிப்பினை பாருங்கள். 60% பேர்களுக்கு மேல் விகடனை மாத்த சொல்லியிருக்காங்க.
    அதனால் உங்களூக்கு பா.சீனிவாசன் ரொம்ப தெரிஞ்சவரான, தயவு செஞ்சு மாத்த சொல்லுங்க. எனக்கு தெரிஞ்சு, விகடனுக்கு இருக்கிற வாசகர் கூட்டம் குறைஞ்சிகிட்டே வருதுன்னு நினைக்கிறேன். இல்லேன்னா. போக, போக, குறைஞ்சுடும். வெள்ளிக்கிழமை ஆனா முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரைக்கும் படிச்சுட்டு தான் கீழே வைக்கிற நான். கடந்த சில வாரங்களா.. சும்மா மேலாப்புல பார்த்துட்டு போறேன். பிளீஸ் கன்வே திஸ் மெசேஸ் -பா. சீனிவாசன்.

  2. என்னமான் யுத்தாக இருந்தநாலும் நெட்டிலேயே எல்லா பத்திரிகைக்கும் சந்தாதாரராக இருந்தாலும் அச்சுப்பிரதியை கையில் வைத்து வாசிக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

  3. youthful விகடன் என்ற பெயரில் ஒரு தமிழ்க் கொலை நடக்கத் துவங்கி இருக்கிறது. இதை யாரும் கண்டு கொண்டதாய்த் தெரியவில்லை. கண்டிப்பாக சந்தையில் ஆய்வுகள் எல்லாம் செய்து தான் இந்த மாற்றங்களைக் கொண்டு வந்திருப்பார்கள் என நினைக்கிறேன். ஆனால், எனக்கென்னவோ ஆங்கில அறிவுடைய படித்த நகர்ப்புற மேல் தட்டு இளைஞர்கள் என்பது ஒரு குறுகிய வட்டமாகவே தோன்றுகிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s