காணாமல் போகும் தி.நகர்
ஆகஸ்ட் 14, 2008
இன்று காலை [14.08.08] வெளியான இந்து நாளிதழோடு தி.நகர் மேம்பாலத் திறப்பு விழாவை ஒட்டி ஒரு விளம்பரதாரர் சப்ளிமெண்ட் வந்திருக்கிறது. பார்த்திருப்பீர்கள். அதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, கீழே உள்ள வாக்கியம்தாம்:
T. Nagar plays pivotal role in the textiles and jewellery trade at an international level. It is the earnest request of our association to declare the area comprising Usman Road, North Usman Road, Nageswara Rao Road, Prakasam Road and Ranganthan Street as a ‘Special Retail Zone’ to enhance shopper’s delight.
இந்தக் கோரிக்கையை நீங்கள் வேறு பல விஷயங்களோடு இணைத்துப் பார்க்க வேண்டும்.
1. நகரின் கட்டட வரைமுறைகளை எல்லாம் மீறி, தம்முடைய இஷ்டத்துக்கு அடுக்குமாடிகளைக் கட்டிக்கொண்டே போனார்கள் வியாபாரிகள். உயர்நீதி மன்றம், அனுமதி பெறாமல் கட்டப்பட்ட பல மாடிகளை இடிக்க உத்தரவிட்டிருக்கிறது.
2. உச்ச நீதிமன்றம வரை போய் தம்முடைய கட்டடங்களைக் காப்பாற்ற முனைந்தார்கள் வியாபாரிகள். அதுவும் முடியாமல் போகவே, இப்போது முற்றிலும் வேறு ஒரு கோரிக்கையை கூட்டாக முன்வைக்கிறார்கள்.
3. மக்களுக்குச் சேவை செய்யவே இதுபோல் கட்டடங்களைக் கட்டியதாகவும், பேராசையினால் அல்ல என்று வியாபாரிகள் சங்கம் கூறியது இதே இந்து நாளிதழில் பிரசுரமாகி உள்ளது.
இதில் பிரச்னை என்ன? ஏன் அவர்களுடைய கோரிக்கையில் உள்ள குற்றம் என்ன என்று கேட்பவர்களுக்கு:
1. தி.நகர் என்பது பொதுமக்கள் வாழும் இடம். அது வணிகத் தலம் அல்ல. ஆனால், பணபலத்தாலும் ஆள் பலத்தாலும் ஆட்சி பலத்தாலும் பனகல் பூங்காவை ஒட்டி உள்ள அத்தனை இடங்களையும் வியாபாரிகள் ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கிறார்கள். அதனால் நேர்ந்தது என்ன? போக்குவரத்து நெரிசல், அசுத்தம், மாசு, நோய்கள். வியாபாரிகள் பணம் சம்பாதிக்க, பொதுமக்கள் திண்டாட வேண்டுமா என்ன?
2. யார் கொடுத்த தைரியத்தில் இவர்கள் மாடி மேல் மாடி கட்டி விண்ணை முட்டவிட்டார்கள்? பொதுமக்கள் வாழும் நகரம் என்று தெரிந்தும் தைரியமாக கட்டட வரைமுறைகளை மீறி கட்டடம் எழுப்பத் தூண்டியது எது? பேராசைதானே? மக்கள் சேவை என்பது வெறும் பம்மாத்து அல்லாமல் வேறு என்ன?
3. செய்தது தவறு. அதற்கு நீதிமன்றம அனுமதிக்கவில்லை என்று தெரிந்தவுடன், தங்கள் கட்டடங்களைக் காத்துக்கொள்ள சட்டென அந்த முழு இடத்தையும் ஸ்பெஷல் எகனாமிக் சோன் மாதிரி ஸ்பெஷல் ரீடெயில் சோன் என்று அறிவிக்கக் கோருகிறார்கள். இப்படி ஒரு அந்தஸ்து அந்த ஏரியாவுக்குக் கிடைக்குமானால், அதில் அவர்கள் முற்றும்முழுவதும் குளிர்காய வசதியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புதானே?
4. அப்படியே ஒரு ஸ்பெஷல் ரீடெயில் சோன் வேண்டும் என்று விரும்புவார்களாயின், அதற்கான முன்னுதாரணங்களைப் பின்பற்றவேண்டியதுதானே? கொத்தவால்சாவடி, கோயம்பேடு போனதுபோல், பிராட்வே பஸ்நிலையம் கோயம்பேடு போனதுபோல், எல்லாரும் வந்துபோக ஏதுவாக, சரியான அனைத்து வசதிகளோடு கூடிய மாற்று இடத்துக்குச் செல்வதுதானே நியாயம்?ஆனால், அதைச் செய்ய மாட்டார்கள்.
5. ஒவ்வொரு துறையினரும் இதுபோல் தாம் இருக்கும் இடங்களையே ஸ்பெஷல் சோன் ஆக்க கேட்டால், அரசு ஏற்றுக்கொள்ளுமா? தி.நகரில் பதிப்பாளர்கள் நிறைந்திருக்கிறார்கள். ஸ்பெஷல் பப்ளிஷர்ஸ் சோன் கேக்கலாமா? என்.எஸ்.சி.போஸ் சாலையை என்னவென்று அழைக்கலாம்? தேவராஜ முதலி தெருவை ஸ்பெஷல் கண்ணாடி சோன் என்று அழைக்கலாமா? பந்தர் தெருவை ஸ்பெஷல் பேப்பர் சோன் ஆக்கலாமா?
6. ஒரு இடத்தில் ஒரு குறிப்பிட்ட தொழில் மையம் கொள்வது தவிர்க்கமுடியாத விஷயம். ஆனால், நகரின் மொத்த கட்டுமானத்துக்குள், அதன் வசதிகளுக்குள், அதனை ஒட்டி உள்ள மக்களின் வாழ்வுக்கு இணையவே தொழில் நடக்க முடியுமே தவிர, தி. நகர் மாதிரி ராட்சத்தனமாக, பேராசையின் பெருங்கனவாக வளர அனுமதித்ததே தவறு. ராட்சத்தனமாக வளர்ந்துவிட்டதால், அது தனக்கு இன்னும் வேணும் இன்னும் வேணும் என்று பகாசுரத் தீனியைக் கேட்கிறது.
இன்று மாலை, கலைஞர் தி.நகர் மேம்பாலத்தைத் திறந்துவைத்து பேசுகிறார். என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
ஏராளமான சிறுபத்திரிகைகள்
ஆகஸ்ட் 5, 2008
சமீத்திய சென்னை பயணத்தின் போது, தி.நகரில் உள்ள நியூ புக்லேண்ட்ஸ் சென்றிருந்தேன். புக்லேண்ட்ஸ் விரிவாக்கப்பட்டு நிறைய நூல்களுக்கு இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. எத்தனை நூல்கள், எத்தனை இதழ்கள்.. அப்பப்பா.. சட்டென தமிழ்ப் பதிப்புலகம் வீறுகொண்டு எழுந்துவிட்டதோ என்று ஆச்சரியப்படுத்தும் விதத்தில் கடை முழுக்க நூல்கள்.
நான் வாங்கிய சிறு பத்திரிகைகள்:
யுகமாயினி, உயிர் எழுத்து, மணல் வீடு, மணல் புத்தகம், நிழல், புதிய விசை, புத்தகம் பேசுது, விருட்சம், உயிர்மை, காலச்சுவடு, புதிய பெண்ணியம், புதிய பார்வை.
என்னை பெரும் மகிழ்ச்சிக்குள் ஆழ்த்திய விஷயம், இந்த இதழ்களில் நிறைய சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக யுகமாயினி, உயிர் எழுத்து இதழ்கள் நல்ல சிறுகதைகளுக்கு இடம் கொடுக்கின்றன.
இது ஒரு சக்கரம். இலக்கியத்தில் இருந்து தொடங்கி, வேறு பல அறிவுத் துறைகள் எல்லாம் போய்விட்டு, மொழிபெயர்ப்புகளுக்கும் போய்விட்டு, மீண்டும் படைப்பு இலக்கியத்துக்கு வந்து சேர்ந்திருக்கின்றன சிறு பத்திரிகைகள். பல புதிய பெயர்கள் தென்படுகின்றன. படித்துவிட்டுச் சொல்கிறேன்.
விற்பனை பெருகியிருக்கிறதா என்று தெரியவில்லை. சிறுபத்திரிகையிலேயே (அல்லது இடைநிலை இதழ்களில்) அதிகம் விற்பனை ஆவது காலச்சுவடு இதழ்தான் என்று நினைக்கிறேன். 8000 பிரதிகள் விற்பனை ஆவதாகக் கேள்விப்பட்டேன். மற்ற புதிய இதழ்கள் 1000 – 2000 பிரதிகள் விற்பனை ஆகுமோ என்னவோ? 300 -500 இதழ்கள் விற்ற நிலையில் இருந்து பார்க்கும்போது, இது நல்ல வளர்ச்சிதான். ஆனால், சஸ்ட்டெயின் பண்ண முடியுமா என்று தெரியவில்லை.
படைப்பு இலக்கியத்துக்கு மீண்டும் மவுசு வந்திருப்பது கண்டு எனக்கு பெரு மகிழ்ச்சியே.
பிரம்மராஜன் வலைப்பதிவு எழுதுகிறார்
ஜூன் 4, 2007
இன்று வலையில் என்னவோ தேடிக்கொண்டு இருந்தபோது, கவிஞர், மொழிபெயர்ப்பாளர் பிரம்மராஜனின் ஆங்கில வலைப்பதிவு தென்பட்டது.
எப்படி புத்தகம் எழுத வேண்டும்?
ஜூன் 2, 2007
என்னிடம் பேச வரும் பலரிடம் எழுதும் ஆர்வம் இருப்பதைப் பார்க்கிறேன். அது ஒரு பெரிய வேலையா என்ன என்ற ஒருவிதமான சுலபமாக எடுத்துக்கொள்ளும் தன்மையும் இருக்கிறது. அப்படி பேச வருகிறவர்கள், பத்திரிகைகளில் நிறைய கட்டுரைகளை எழுதி இருப்பார்கள். அதனால் புத்தகம் எழுதுவது மிகவும் லகுவான வேலை என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
பொறுமையாக நேரம் செலவிட்டுப் பேசத் தொடங்கும்போதுதான், புத்தகம் என்று எதைச் சொல்கிறோம், அதை எழுத எப்படி அணுக வேண்டும், சிந்திக்க வேண்டும், உழைக்க வேண்டும் என்றெல்லாம் புரியத் தொடங்குகிறது. இதனால் நான் கண்ட பலன்கள் இரண்டு: அடுத்த முறை என்னைப் பார்க்கவே வரமாட்டார்கள். பார்த்தாலும், எழுதணும்னு நினைச்சேன், டைமே இல்ல சார் என்பார்கள்.
புத்தகம் எழுதுவதைப் பற்றி பல தவறான அபிப்பிராயங்கள் இருக்கின்றன. அதில் இருந்துதான் இத்தகைய எதிரிவினைகள் ஏற்படுகின்றன. முக்கியமானவை:
1. ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை என்ன சொல்லப் போகிறோம் என்ற தெளிவு புத்தகம் எழுதத் தொடங்கும் முன்பே இருக்க வேண்டும். விரிவாக யோசிக்கத் தெரியவேண்டும். எழுத எடுத்துக்கொண்ட விஷயத்தின் பல்வேறு முகங்களை பார்க்கத் தெரியவேண்டும்.
2. தனக்கான நோக்குநிலை என்ன என்பதைப் பற்றியும் தெளிவு வேண்டும். எந்த ஒரு ஸ்டாண்ட்டும் எடுக்காமல், உள்ளது உள்ளபடி தெரிவிக்க விரும்பினாலும் அதுவும் ஒரு நோக்குநிலைதான். இந்த நோக்குநிலை தடுமாற்றமில்லாமல் இருந்தால்தான், எழுத்தின் பின்னணியில் இயக்கும் தொனி சீராக இருக்கும்.
3. அதிரடி வாக்கியங்கள், வெறும் அனுமானத்தின் பேரில் எழுதப்படும் வாக்கியங்கள் எல்லாம் எவை என்பதைப் பற்றிய தெளிவு வேண்டும். இப்படிப்பட்ட வாக்கியங்களைப் பயன்படுத்தும் முன்பு, அதற்கான உரிய ஆதாரமோ, ஆவணங்களோ இருக்கிறதா என்று உறுதி செய்துகொள்ள வேண்டும்.
4. மிகவும் பொறுமை வேண்டும். பத்திரிகை கட்டுரை எழுதுவதில் காட்டக்கூடிய வேகம் இதற்கு எடுபடாது. அத்தியாயம் அத்தியாயமாக, ஒரு செடி வளர்ந்து தழைப்பதைப் போல், ஒரு புத்தகம் வளர முடியும். திட்டமிடலும், தொடர்ந்த உழைப்பும் மிக மிக அவசியம். எழுத எழுத மாளவே மாள மாட்டேன் என்கிறதே என்று எரிச்சல் எரிச்சலாக வரும். புத்தகத்துக்கு இந்த எரிச்சல் எதிரி.
5. எழுதும்போதுதான், நாம் எடுத்துக்கொண்ட விஷயத்தில் நமக்கு இருக்கக்கூடிய தகவல் போதாமை, ஞானம் போதாமை எல்லாம் பளிச்சென்று தெரியவரும். அதுவரை ஒரு விஷயத்தைப் பற்றி எல்லாம் தெரிந்ததாக நினைத்துக்கொண்டு இருந்ததெல்லாம், 50 பக்கம் தாண்டும்போதே வற்றிப்போகும். திடீர் வெறுமை படர்ந்துவிடும். நமக்கு இவ்வளவுதான் தெரியுமா? என்று நம் மேலே நமக்குச் சந்தேகம் ஏற்பட்டு விடும். இதற்கு இருக்கும் ஒரே மருந்து, எடுத்துக்கொண்ட தலைப்பு பற்றி படிப்பதும், மேலும் மேலும் படிப்பதுதான்.
6. எழுதுவதைத் தவிர எழுதுவதற்கு வேறு குறுக்கு வழியே இல்லை. எழுத்தைப் பற்றிய பிரமிப்போ, அயர்வோ ஏற்பட்டுவிட்டால், எழுத்தைப் பற்றி பகல்கனவு கண்டுகொண்டு இருக்கலாம்.
7. எழுதும் செய்தியில் நிரம்ப காதல் வேண்டும். கடனுக்குப் பேனா பிடிக்கக் கூடாது. எழுதத் தொடங்கும்போது காதல் இல்லையென்றாலும் எழுதிக்கொண்டே போகும்போதாவது அந்த ஆர்வத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில், முடிக்கும்போது, மனத்தில் மகிழ்ச்சியோ உற்சாகமோ பூரிப்போ இருக்காது. வாங்கின கடனைத் திருப்பிச் செலுத்திய ஆசுவாசமும் நிம்மதியும்தான் இருக்கும்.
இயல்பாகவே சில பேருக்கு மேலே சொன்ன தகுதிகள் எல்லாம் இருக்கின்றன. அவர்களிடம் பிரச்னையே இல்லை. 15 நாள், 20 நாளில் ஒரு புத்தகத்தை எழுதிக் கொடுத்துவிடுவார்கள்.
மற்றவர்களுக்கு இப்போது நான் வைத்திருக்கும் ஒரே உபாயம் இதுதான்: மேலே உள்ள எதையும் அவர்களுக்குச் சொல்வதில்லை!
ஒரு செயதி பற்றி நீங்கள் எழுத விரும்பினால், அதில் என்னென்னவெல்லாம் எழுதப்படலாம் என்ற ஒரு டேபிள் ஆஃப் கண்டெண்ட் மட்டும் எழுதிக்கொண்டு வாருங்கள் என்று சொல்லி அனுப்புகிறேன். அப்புறம், அவர்களோடு ஒரு நீண்ட அமர்வு. பின்னர் ஒவ்வொரு அத்தியாயமாக எழுதிக்கொண்டு வரச்செய்தல். சின்னச் சின்ன கோல்களை உருவாக்கி அதை அடைய ஒத்துழைத்தல்.
ஒரு பதிப்பாளராக இப்படி நேரம் செலவிடுவது, என் பணியின் ஒரு பகுதியாகவே தோன்றுகிறது. எல்லாம் ரெடிமேடாக கிடைத்துவிட்டால் அப்புறம் அதில் சவாலே இல்லையே!
அட்டையின் கதை
மே 28, 2007
தமிழில் புத்தக அட்டைகளில் பெரும் மாறுதலைக் கொண்டு வந்தது ழ வெளியீடுதான் என்று நினைக்கிறேன். அல்லது அதற்கு முன்பே இது ஆரம்பித்துவிட்டதோ, தெரியவில்லை. அதுவரை, புத்தக அட்டையோ, அல்லது புத்தக வடிவமைப்போ, ஒரு தேர்ந்த ஓவியரைக் கொண்டு செய்யப்பட்டதில்லை.
லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி நடத்திய புக்வென்சர் நிறுவன நூல்களில், கலாசாகரம் ராஜகோபால் என்றொரு ஓவியரின் பங்களிப்பு பெரிய அளவில் இருந்திருக்கிறது. பின்னாளில் அவர் திருவண்ணாமலை சென்று ரமண மகரிஷியின் மார்பளவு சிலையைச் செய்துகொடுத்தார் என்று எஸ்.வைதீஸ்வரன் சொல்லியிருக்கிறார்.
ழ வெளியீடுகளில்தான் ஓவியர் ஆதிமூலத்தின் கைவண்ணம் அதிகம் மிளிர்ந்தது. அவர் ழ வெளியீடுகளின் நூல்களுக்கு அட்டை ஓவியம் வரைந்து தந்ததோடு, அவரே அதன் ஆர்ட் டைரக்டராகவும் இருந்திருக்கிறார். ஆத்மாநாம், ஞானக்கூத்தன், ஆர்.ராஜகோபாலன் போன்றவர்களுக்கு நவீன ஓவியத்தையும் நவீன இலக்கியத்தையும் ஏதோ ஒரு புள்ளியில் இணைக்கவேண்டும் என்ற அவா இருந்திருக்கிறது.
சொல்லப்போனால, கசடதபற பத்திரிகையில்தான் இதற்கான ஆரம்பம் ஏற்பட்டது. அதுநாள் வரை இருந்த புத்தக வெளியீடுகளில் ஒரு ஓவியம் அட்டைப் படத்தை அலங்கரிக்கும். அல்லது வெறும் எழுத்துகள் பளிச்சிடும். கட் கலர் அட்டைப் படங்கள்தான் பெரும்பாலும். அந்தக் காலத்தில் இன்று இருக்கும் வசதிகள் இல்லாததால், பிளாக் எடுத்து, ஒவ்வொரு கலராக ஓட்டி, புத்தக அட்டை தயார் செய்வார்கள்.
தொழில்நுட்பம் எல்லாவற்றையும் எளிமைப்படுத்தியிருப்பது உண்மை.
தொண்ணூறுகளில், ஆதிமூலத்தின் தொடர்ச்சியாக ஓவியர் மருது பெரிய அளவில் தமிழ் புத்தகங்களின், தலைப்பு எழுத்துகளின் தலையெழுத்தை நிர்ண்யித்தார். வித்தியாசம் என்ற பெயரில், எல்லா நூல்களும் இந்தக் கோணல்மாணலான எழுத்துகளைத் தாங்கி வெளிவந்தன. அன்னம், அகரம் ஆகிய பதிப்பகத்தின் நூல்கள் இத்தகைய அட்டைகளைக் கொண்டு இருந்தன. நர்மதா பதிப்பகமும் தமது நாவல் புத்தகங்களுக்கு இத்தகைய ஓவியங்களைப் பயன்படுத்தின.
ஆனால், இந்தப் புதுமையை ஏற்காதவர்களும் நிறையவே தமிழ்ப் பதிப்புலகில் இருந்திருக்கிறார்கள். தீபாவளி, பொங்கல் வாழ்த்து அட்டை ஓவியங்கள், புகைப்படங்களையே அட்டைப் படஙக்ளாக வைத்தவர்கள் நிறைய பேர்.
முகப்பு அட்டை என்பது புத்தக உள்ளடக்கத்தை வெளிப்படுத்தும் ஒரு சாதனம். அட்டை, உள்ளடகக்கத்தின் தன்மையை ஓரளவாவது எடுத்து இயம்ப வேண்டும். அது அலங்காரமல்ல. உடலுக்கு உள்ள் முகம் போன்றது அது.
என் நூலகளுக்கு இதுவரை எனக்குப் பிடித்தமான ஒரு அட்டை கிடைத்ததில்லை. ஒவ்வொரு முறையும் அந்த நேரத்து அவசரத்துக்கு ஏற்ப, மனநிலைக்கு ஏற்ப ஒரு அட்டையை தேர்வு செய்திருக்கிறேன். அட்டையில் உள்ள ஓவியம் அல்லது புகைப்படம் கொஞ்ச நாளிலேயே ரொம்ப அன்னியமாக ஆகிவிடுகின்றன. அல்லது குழந்தைத்தனமாக இருக்கின்றன. சாதாரண வண்ணத்தில் புத்தகத்தின் பெயரை மட்டும் வைத்துத் தந்தால் போதும் என்று தோன்றும்.
இது என் எண்ணம்.
ஆனால், புத்தகப் பதிப்பளர்கள், நல்ல அட்டையை உருவாக்க எப்படி முயற்சிக்கிறார்கள் என்பதை இங்கே படியுங்கள்.
வாடகை நூல் நிலையம்
மே 28, 2007
ப்ளாஹர் வலைதளத்தைப் படித்துக்கொண்டு இருந்தேன். புக்ஸ்விம் என்ற வலைதளத்தைப் பற்றி ஒரு வலைப்பதிவைப் படிக்க முடிந்தது. நான் ரொம்ப நாளாய் யோசித்துக்கொண்டு இருந்த விஷயம் இது. ஆன்லைனில் ஒரு வாடகை நூலகத்தை நடத்தினால் எப்படி இருக்கும் என்று யோசித்திருக்கிறேன்.
புக்ஸ்விம் அதைத்தான் அமெரிக்காவில் செய்திருக்கிறது. இதில் ஒரு விசேஷம் என்னவென்றால், புத்தகங்கள் அனுப்பவும் திரும்பப் பெறவும் ஆகும் அஞ்சல் செலவு இந்த நிறுவனத்துடையதே. மாதச் சந்தா 23.99 டாலரில் இருந்து 35.99 டாலர் வரை, வாடகை புத்தக எண்ணிக்கையைப் பொறுத்து அமைந்திருக்கிறது. ஒரு குறிப்பிட்ட புத்தகம் உங்களுக்குப் பிடித்துவிட்டால், அதை நீங்கள் அப்படியே வைத்துக்கொண்டு அதற்குரிய பணத்தை மட்டும் கட்டிவிட்டால் போதுமாம்.
அதேபோல், புத்தகத்தைப் படித்தவுடன் திருப்பித் தர வேண்டும் என்று அவசரப்பட வேண்டாமாம். லேட் ஃபீஸும் கிடையாது. இந்த பிசினஸ் மாடல் ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது. வாடகை நூல் நிலையங்களில் முதலில் கட்டும் பதிவுக் கட்டணம் அதிகமாக இருக்கும். இதுபோல் தாமதப்படுத்துவோர், புத்தகத்தைத் திருப்பித் தராமலேயே இருந்துவிடுவோர் ஏற்படுத்தும் நஷ்டத்தைத் தாங்கவே கூடுதலான பதிவுக் கட்டணம்.
எனக்குத் தெரிந்த தனியார் வாடகை நூல் நிலையங்களில், படாத பாடு படுகிறார்கள். புத்தகத்தைத் திருப்பித் தராதவர்களுக்கு போன் மேல் போன் போட்டு கூப்பிட்டு ஞாபகப்படுத்துவார்கள். அதையும் மீறி, வராமல் இருந்துவிடுவோர் அதிகம். அத்தகையவர்களின் வீடுகளுக்கு அலுவலக ஆள்களையே அனுப்பி வைத்து, புத்தகத்தைத் திரும்ப வாங்கி வரச் செய்வார்கள்.
எந்த ஒரு தலைப்பிலும் குறைந்தபட்சம் ஐந்து படிகளாவது இத்தகைய நூல் நிலையங்களில் வாங்கி வைக்கப்படுகின்றன. ஆனால், ஆண்டு இறுதிக்குள், சில படிகள் காணாமல் போய்விடும். சில கசங்கி, கிழிந்து பயனற்றுப் போய்விடும். அடுத்த ஆண்டு, மீண்டும் புதிய படிகள் வாங்கி வைக்க வேண்டும்.
வாடகை நூல் நிலையங்களில் அனுராதா ரமணன், ரமணி சந்திரன், வித்யா சுப்பிரமணியன் போன்ற பெண் எழுத்தாளர்களின் நாவல்களுக்கு நல்ல மெளசு இருக்கிறது. தேவிபாலா, இன்றும் பெண் வாசகிகளிடையே உள்ள ஃபேவரைட் ஆண் எழுத்தாளர்.
கதை படிக்கும் பழக்கமே குறைந்துவிட்டது என்று யாராவது சொன்னால், நான் அவ்வளவாய் நம்புவதில்லை. வாடகை நூல் நிலையங்களில் இன்றும் லக்ஷ்மியின் கதைகள் கிடுகிடுவென போய்க்கொண்டு இருக்கின்றன. அதுவும் அது ஓவியங்களோடு வந்த பத்திரிகை கட்டிங்குகளின் பைண்டட் வால்யூம் என்றால் இன்னும் புகழ் அதிகம்.
புக்ஸ்விம் ஆஃப்லைனில் இருப்பது போல் தெரியவில்லை. ஈஸ்வரி நூல் நிலையம் போன்ற கடை வைத்து வாடகை நூல் நிலையம் நடத்துபவர்கள், ஆன்லைனிலும் இந்தச் சேவையைத் தரலாம். ஆனால், ஓடிப்போகிறவர்களை எப்படி கட்டுப்படுத்துவது என்று மட்டும் கண்டுபிடித்துவிட்டால் போதும். புக்ஸ்விம் மாதிரி வாசகர்களின் நேர்மையில் அதீத நம்பிக்கை வைத்து ஒரு வாடகை நூலகம் நடத்துவது நம்ம ஊரில் சாத்தியமா என்று தெரியவில்லை.
ராயல்டி சமாச்சாரம்
மே 18, 2007
சமீபத்தில் நண்பர் ஒருவர் என்னிடம் பேசிக்கொண்டு இருந்தார். அவர் ஒரு ஆங்கில வலைப்பதிவாளர். நிறைய எழுதுகிறார். அவரது வலைப்பதிவுகளில் இருந்து தொகுத்து ஒரு நூலை வெளியிட ஒரு அமெரிக்கப் பதிப்பகம் முன்வந்துள்ளது. புத்தகம் வரும்போது, அதுவே இந்திய ஆங்கில வலைப்பதிவாளர் ஒருவரின் எழுத்துகள் முதலில் நூல் வடிவம் பெறுவதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
விஷயம் அதுமட்டுமல்ல. அவருக்கு அமெரிக்கப் பதிப்பகம் அனுப்பிய ராயல்டி அக்ரிமெண்ட்தான் என்னை ஆச்சரியத்துக்கு ஆளாக்கியது.
“என்ன ராயல்டி தராங்கப்பா?”
“50 சதவிகிதம்”
போனில் பேசிய நான் சட்டென சீட் நுனிக்கு வந்துவிட்டேன். என்னால் நம்பவே முடியவில்லை.
“ஒண்ணு ஐந்தா, ஐந்து பூஜ்ஜியமா?”
“ஃபிஃப்டி பர்சண்ட்”
என்னால் என் காதையே நம்ப முடியவில்லை. அதிகம் அவசரப்படவேண்டாம் என்று உள்மனது சொல்ல, முழு பத்தியையும் படிக்கச் சொன்னேன். புத்தகத் தயாரிப்புச் செலவுகள் மற்றும் எல்லாவிதமான கழிவுகள் போக கிடைக்கும் லாபத்தில் 50 சதவிகிதம் ராயல்டி என்பதே அந்தப் பத்தியின் முழு விவரம்.
ஆசிரியரையும் புத்தகத் தயாரிப்பு செலவுகளை ஏற்க வைக்கும் முறைகளில் இதுவும் ஒன்று. புத்தகத் தயாரிப்பு செலவுகள் என்பதில் என்னென்ன அம்சம் அடக்கம் என்பதற்கு எந்த ஒரு பட்டியலும் இல்லை. அதேபோல், கழிவுகள் என்பதில் என்னென்ன கழிவுகள் இதில் சேர்த்துக்கொள்ளப்படும் என்பதற்கும் தெளிவில்லை. ரொம்ப புத்திசாலித்தனமான ராயல்டி முறையாக எனக்குத் தோன்றியது.
பொதுவாக, புத்தக விலையில் – Cover Price – ராயல்டி தொகை வழங்குவதே இப்போது இருந்து வரும் பழக்கம். 5 % தொடங்கி 7.5% வரை இந்த ராயல்டி ஆசிரியருக்கு வழங்கப்படும். சில பதிப்பகங்களில், அட்வான்ஸ் ராயல்டி கொடுக்கப்படும் வழக்கம் இருக்கிறது.
இன்னொரு முறை, அடக்க விலையில் ராயல்டி (Royalty on Nett price) என்பது. அதாவது புத்தக விலையில், விற்பனையாளர்களுக்குக் கொடுக்கப்படும் கழிவு போக மீதமுள்ள தொகையே அடக்க விலை. இதில் 7.5% ராயல்டி என்பதும் புழக்கத்தில் இருக்கும் முறையே.
ராயல்டி என்பது எழுதுபவனுக்குக் கொடுக்கப்படும் மரியாதை. புத்தகம் வெளியிடுபவர்கள், ஆசிரியரின் உழைப்பு, அனுபவம், ஞானம் ஆகியவற்றுக்குக் கொடுக்கும் கெளரவம் அது. வேனிட்டி பப்ளிஷிங்க் எல்லாம் புழக்கத்துக்கு வந்தபின், எல்லாரையும் விற்பனைக்குக் கூட்டுச் சேர்ப்பது எந்த அளவுக்கு நியாயமோ தெரியவில்லை.
வணக்கம்
மே 17, 2007
Hi, I am planning to write about books, book publishing, book trade, book reviews, industry trends, exhibitions etc in this blog.
Keep reading. Hope you will find it interesting.
regards
Venkatesh