இந்தியாவில் செயல்படும் ஒவ்வொரு விமான சேவை நிறுவனமும், இன் ஃபிளைட் மேகசின் நடத்துகின்றன. மிக அழகிய அச்சு, நல்ல தாள், வண்ணம், உருவாக்கம் என்று திறமையான தயாரிப்பு. கையில் பிடிக்கவே அழகாக இருக்கிறது.

உள்ளடக்கம், உயர் மத்தியதர வர்க்கத்தை மையப்படுத்தியே கொடுக்கப்படுகின்றன. உடைகள், ஆபரணங்கள், ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், ஸ்பா, அல்லது பயண அனுபவங்கள். பல பக்கங்களைத் தள்ளிக்கொண்டே போய்விடலாம். கஷ்டப்படுத்தாத லைட் ரீடிங் உள்ளடக்கம்.

என் பக்கத்தில் உட்காருபவர்கள் பெரும்பாலும் இதழைத் தொட்டுக்கூட பார்க்க மாட்டேன் என்கிறார்கள். அப்படியே பிரித்துப் பார்ப்பவர்களும் மேய்கிறார்கள், புரட்டிக்கொண்டே போகிறார்கள்.

எவ்வளவு சுலபமான கேப்டிவ் ஆடியன்ஸ்? விமானத்தில் உட்காரும் ஒவ்வொருவரும் அவர் இறங்கும்வரை – அது அரை மணியாக இருக்கலாம், 3 மணி நேரமாகவும் இருக்கலாம் – வேறு ஒன்றையுமே செய்ய முடியாது. சட்டென புற உலகில் இருந்து துண்டிக்கப்பட்ட தருணம் இது. இதில் உருப்படியாக இதழைத் தயாரித்துக்கொடுத்தால், எவ்வளவு நன்றாக இருக்கும்?

சில விமானங்களில் தினசரிகள் உண்டு. லோ-காஸ்ட் ஏர்லைன்களில் அதுவும் இல்லை. இந்த இதழ்தான் உண்டு. ஏதோ ஒரு ஏர்லைனில், பிசினஸ் வேர்ல்டு இதழையும் இன்னொன்றில் வீக் இதழையும் பார்த்தேன்.

இதில் சிக்கல் எங்கே தெரியுமோ? இந்த விமான இதழ்களைத் தயாரிக்கும் பணியை விமான நிறுவனங்கள் அவுட்சோர்ஸ் செய்து இருக்கின்றன. எனக்குத் தெரிந்து மும்பையில் இருக்கும் மூன்று நிறுவனங்களே எல்லா இதழ்களையும் தயாரித்துக் கொடுக்கின்றன. இவையெல்லாம், காண்ட்ராக்ட் பப்ளிஷிங் நிறுவனங்கள். எடிட்டோரியல், விளம்பரத் துறை, அச்சு என்  எல்லாவற்றையும் செண்ட்ரலைஸ் செய்து வைத்து இருக்கின்றன.

முன்னணி இதழ்களோ, தினசரிகளோ இந்த காண்ட்ராக்ட் பப்ளிஷிங் தொழிலில் இறங்கத் தயாரில்லை போல் இருக்கிறது. விளைவு, இதுபோல் அரைகுறை இதழ்களே படிக்கக் கிடைக்கின்றன.

இதில் உள்ளடக்கத்தை விட விளம்பர வருவாயே முக்கியமாகக் கருதப்படுகிறது. மேலும், உள்ளடக்கம் பற்றி விவரம் தெரிந்தவர், எல்லா விமான சேவை நிறுவனத்திலும் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை இல்லையா?

வேறு எங்கோ இதைப் படித்தேன். கத்தார் ஏர்வேஸ் என்று ஞாபகம். விமானத்தின் உள்ளே வைக்கப்படும் பத்திரிகை, இதழ்கள், விவர அட்டைகளை எல்லாம் நீக்கினார்களாம்; விமானத்தின் எடையில் ஒரு டன் குறைந்துவிட்டதாம். இப்போ, எல்லாவற்றையும் சீட் முன்னே இருக்கும் டிஜிட்டல் திரையில் படிக்க ஏற்பாடு செய்துவிட்டார்கள்.

விமானத்துள் உள்ளடக்கம் மேம்பட, இதுவும் ஒருவழியாக உருவாகலாம்.

என்னிடம் பேச வரும் பலரிடம் எழுதும் ஆர்வம் இருப்பதைப் பார்க்கிறேன். அது ஒரு பெரிய வேலையா என்ன என்ற ஒருவிதமான சுலபமாக எடுத்துக்கொள்ளும் தன்மையும் இருக்கிறது.  அப்படி பேச வருகிறவர்கள், பத்திரிகைகளில் நிறைய கட்டுரைகளை எழுதி இருப்பார்கள்.  அதனால் புத்தகம் எழுதுவது மிகவும் லகுவான வேலை என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

பொறுமையாக நேரம் செலவிட்டுப் பேசத் தொடங்கும்போதுதான், புத்தகம் என்று எதைச் சொல்கிறோம், அதை எழுத எப்படி அணுக வேண்டும், சிந்திக்க வேண்டும், உழைக்க வேண்டும் என்றெல்லாம் புரியத் தொடங்குகிறது. இதனால் நான் கண்ட பலன்கள் இரண்டு: அடுத்த முறை என்னைப் பார்க்கவே வரமாட்டார்கள். பார்த்தாலும், எழுதணும்னு நினைச்சேன், டைமே இல்ல சார் என்பார்கள்.

புத்தகம் எழுதுவதைப் பற்றி பல தவறான அபிப்பிராயங்கள் இருக்கின்றன. அதில் இருந்துதான் இத்தகைய எதிரிவினைகள் ஏற்படுகின்றன. முக்கியமானவை:

1. ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை என்ன சொல்லப் போகிறோம் என்ற தெளிவு புத்தகம் எழுதத் தொடங்கும் முன்பே இருக்க வேண்டும். விரிவாக யோசிக்கத் தெரியவேண்டும். எழுத எடுத்துக்கொண்ட விஷயத்தின் பல்வேறு முகங்களை பார்க்கத் தெரியவேண்டும்.

2. தனக்கான நோக்குநிலை என்ன என்பதைப் பற்றியும் தெளிவு வேண்டும். எந்த ஒரு ஸ்டாண்ட்டும் எடுக்காமல், உள்ளது உள்ளபடி தெரிவிக்க விரும்பினாலும் அதுவும் ஒரு நோக்குநிலைதான். இந்த நோக்குநிலை தடுமாற்றமில்லாமல் இருந்தால்தான், எழுத்தின் பின்னணியில் இயக்கும் தொனி சீராக இருக்கும்.

3. அதிரடி வாக்கியங்கள், வெறும் அனுமானத்தின் பேரில் எழுதப்படும் வாக்கியங்கள் எல்லாம் எவை என்பதைப் பற்றிய தெளிவு வேண்டும். இப்படிப்பட்ட வாக்கியங்களைப் பயன்படுத்தும் முன்பு, அதற்கான உரிய ஆதாரமோ, ஆவணங்களோ இருக்கிறதா என்று உறுதி செய்துகொள்ள வேண்டும்.

4. மிகவும் பொறுமை வேண்டும். பத்திரிகை கட்டுரை எழுதுவதில் காட்டக்கூடிய வேகம் இதற்கு எடுபடாது. அத்தியாயம் அத்தியாயமாக, ஒரு செடி வளர்ந்து தழைப்பதைப் போல், ஒரு புத்தகம் வளர முடியும். திட்டமிடலும், தொடர்ந்த உழைப்பும் மிக மிக அவசியம். எழுத எழுத மாளவே மாள மாட்டேன் என்கிறதே என்று எரிச்சல் எரிச்சலாக வரும்.  புத்தகத்துக்கு இந்த எரிச்சல் எதிரி.

5. எழுதும்போதுதான், நாம் எடுத்துக்கொண்ட விஷயத்தில் நமக்கு இருக்கக்கூடிய தகவல் போதாமை, ஞானம் போதாமை எல்லாம் பளிச்சென்று தெரியவரும். அதுவரை ஒரு விஷயத்தைப் பற்றி எல்லாம் தெரிந்ததாக நினைத்துக்கொண்டு இருந்ததெல்லாம், 50 பக்கம் தாண்டும்போதே வற்றிப்போகும். திடீர் வெறுமை படர்ந்துவிடும். நமக்கு இவ்வளவுதான் தெரியுமா? என்று நம் மேலே நமக்குச் சந்தேகம் ஏற்பட்டு விடும்.  இதற்கு இருக்கும் ஒரே மருந்து, எடுத்துக்கொண்ட தலைப்பு பற்றி படிப்பதும், மேலும் மேலும் படிப்பதுதான்.

6. எழுதுவதைத் தவிர எழுதுவதற்கு வேறு குறுக்கு வழியே இல்லை. எழுத்தைப் பற்றிய பிரமிப்போ, அயர்வோ ஏற்பட்டுவிட்டால், எழுத்தைப் பற்றி பகல்கனவு கண்டுகொண்டு இருக்கலாம்.

7. எழுதும் செய்தியில் நிரம்ப காதல் வேண்டும். கடனுக்குப் பேனா பிடிக்கக் கூடாது. எழுதத் தொடங்கும்போது காதல் இல்லையென்றாலும் எழுதிக்கொண்டே போகும்போதாவது அந்த ஆர்வத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில், முடிக்கும்போது, மனத்தில் மகிழ்ச்சியோ உற்சாகமோ பூரிப்போ இருக்காது. வாங்கின கடனைத் திருப்பிச் செலுத்திய ஆசுவாசமும் நிம்மதியும்தான் இருக்கும்.

இயல்பாகவே சில பேருக்கு மேலே சொன்ன தகுதிகள் எல்லாம் இருக்கின்றன. அவர்களிடம் பிரச்னையே இல்லை. 15 நாள், 20 நாளில் ஒரு புத்தகத்தை எழுதிக் கொடுத்துவிடுவார்கள்.

மற்றவர்களுக்கு இப்போது நான் வைத்திருக்கும் ஒரே உபாயம் இதுதான்: மேலே உள்ள எதையும் அவர்களுக்குச் சொல்வதில்லை!

ஒரு செயதி பற்றி நீங்கள் எழுத விரும்பினால், அதில் என்னென்னவெல்லாம் எழுதப்படலாம் என்ற ஒரு டேபிள் ஆஃப் கண்டெண்ட் மட்டும் எழுதிக்கொண்டு வாருங்கள் என்று சொல்லி அனுப்புகிறேன். அப்புறம், அவர்களோடு ஒரு நீண்ட அமர்வு. பின்னர் ஒவ்வொரு அத்தியாயமாக எழுதிக்கொண்டு வரச்செய்தல்.  சின்னச் சின்ன கோல்களை உருவாக்கி அதை அடைய ஒத்துழைத்தல்.

ஒரு பதிப்பாளராக இப்படி நேரம் செலவிடுவது, என் பணியின் ஒரு பகுதியாகவே தோன்றுகிறது. எல்லாம் ரெடிமேடாக கிடைத்துவிட்டால் அப்புறம் அதில் சவாலே இல்லையே!

ஞாயிற்றுகிழமை எகானாமிக் டைம்ஸில் ஒரு கட்டுரை வந்திருக்கிறது. அதன் சுட்டி இது.

சமீப காலமாக விளையாட்டு சம்மந்தமான புத்தகங்களுக்கு நல்ல மார்க்கெட் ஏற்பட்டிருப்பதாக இந்தக் கட்டுரை சொல்கிறது. நான் புத்தகக் கடைகளில் பார்த்தவரை, கிரிக்கெட் சம்மந்தமான புத்தகங்களையே அதிகம் பார்த்திருக்கிறேன். வழக்கம்போல், அது நமது அறிவிக்கப்படாத தேசிய விளையாட்டு என்பதால், அந்தத் துறையில் நிறைய சரிதை நூல்களும் விமர்சன நூல்களும் வருவது இயற்கைதான்.

அப்புறம், கிரிசாலிஸ் என்றொரு வெளிநாட்டுப் பதிப்பகம் இருக்கிறது. அவர்களது விலைப்பட்டியலை வேறொரு நாள் பார்த்துக்கொண்டு இருந்தேன். எண்ணற்ற செஸ் சம்மந்தமான நூல்களில் இருப்பதைப் பார்த்தேன். அந்தப் பதிப்பகத்தில் இருந்து வந்தவர், அந்த செஸ் நூல்கள் எல்லாம் நல்ல விற்பனை ஆகும் நூல்கள் என்ற போது உண்மையிலேயே ஆச்சரியப்பட்டேன். அந்த நூல்களை தமிழில் மொழிபெயர்த்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன். தெரியவில்லை. நிச்சயம் நேட்டிவிட்டி இருக்காது என்று மட்டும் தோன்றியது. ஆனால், விற்பனைக்கான வாய்ப்பு மட்டும் அதிகம இருப்பது தெரிகிறது. அதுவும் இந்த கோடை விடுமுறை நாள்களில் மூலைக்கு மூலை செஸ் வகுப்புகள், நீச்சல் வகுப்புகள், கைவேலை சொல்லித் தரும் வகுப்புகள் என்று ஹிந்து பத்திரிகையைத் திறந்தால் ஒரே அறிவிப்புகள்தான்.

தமிழகத்தைச் சேர்ந்த நல்ல செஸ் விளையாட்டு வீரர்கள் இதை எழுதினால் படிக்க சுவாரசியமாக இருக்குமோ என்னவோ? அதே போல், டென்னிஸ், பூப்பந்து போன்ற விளையாட்டுக்களைப் பற்றி நூல்கள் வந்தாலும் நன்றாகவே இருக்கும்.

நடராஜ் செல்லையா என்றொருவர் எழுதிய புத்தகங்களை அரசு நூலகங்களில் பார்த்திருக்கிறேன். அவ்வப்போது படித்திருக்கிறேன். நிறைய விளையாட்டுக்களைப் பற்றி எழுதியிருக்கிறார். பெரும்பாலானவை மிகவும் அரிச்சுவடி பாணியில் இருக்கும். விளையாட்டில் உள்ள லைஃப் அந்த நூல்களில் இருந்ததில்லை.

விகடன் பிரசுரத்தில் இருந்து மைதான யுத்தம் என்றொரு நூல், இந்த கிரிக்கெட் உலகக் கோப்பை சமயத்தில் கொண்டு வந்தோம். நன்றாக எழுதப்பட்ட நூல். நமது அணி இவ்வளவு மோசமாகத் தோற்றுத் திரும்பியபின், அந்த நூல் அதிகம் கவனிக்கப்படாமல் போய்விட்டது.

சானியா மிர்ஸாவைப் பற்றி ஒரு நூலை ஒரு நண்பரிடம் எழுதச் சொன்னேன்.

“அவ குதிச்சு குதிச்சு ஆடறாங்கறதுக்காக ஒரு புக் எழுதிட முடியுமா சார்? மீடியாவுக்கு ஒரு கலர்ஃபுல் முகம் வேணும். அதுக்காக சானியாவைத் தூக்கிவெச்சுகிட்டு கொண்டாடறாங்க. உண்மையாவா அவ என்ன சாதிச்சு இருக்கான்னு சொல்லுங்க பார்க்கலாம்” என்று ரொம்ப உஷ்ணமாக சண்டைக்கு வந்துவிட்டார்.

இப்படி ஒரேயடியாக புறங்கையால் தள்ளிவிட முடியுமா என்று தெரியவில்லை.

அதே போல், தமிழகத்தில் ஃபார்முலா 1 ரேசிங் பற்றியும் பெரிய எதிர்பார்ப்பு இருப்பதாகச் சொல்லுகிறார்கள். இதற்கு ஒரு பெரிய கிரேஸ் இருப்பதாகத் தெரிகிறது. ஆனால், இது சம்மந்தமாக ஏதும் நூல்கள் தமிழில் வந்து நான் பார்க்கவில்லை.

விளையாட்டு நூல்களுக்கு எதிர்காலம் இருப்பதாக எ.டை. சொல்கிறது. தமிழில் அது வருகிறதா என்று பார்ப்போம்.