ஸ்ருதிஹாசன் – பேஜ் 3 தமிழ்!
நவம்பர் 28, 2011
ஏழாம் அறிவு நேற்று இரவு பார்த்தேன். பல விமர்சனங்களில், ஸ்ருதிஹாசனின் உச்சரிப்பு, நடிப்பு எல்லாவற்றையும் ஒரு மாதிரி கிண்டல் செய்தும் ஆலோசனை சொல்வது போலவும் எழுதப்பட்டதைப் படித்திருந்தேன். அதனாலேயே ஏழாம் அறிவு பார்க்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன்.
ஸ்ருதிஹாசனே டப்பிங் பேசியிருக்கிறார்; அவருக்குப் பதில் வேறு யாரேனும் நல்ல தெளிவான தமிழில் டப்பிங் பேசியிருக்கலாம் என்றெல்லாம் கருத்துக்கள் கேட்டு இருந்தேன். நேற்று படத்தை முழுமையாக நிதானமாக பார்த்தபோது, வேறு எண்ணங்களே ஏற்பட்டன.
ஸ்ருதி, இன்றைய தமிழ் இளைஞர்கள், பெண்களின் ஒரு வகை மாதிரி. இன்றைக்குப் பல குடும்பங்களில் வெளிநாடுகளில் போய் படித்து, அங்கேயே செட்டிலான இளைஞர்கள் உண்டு. திரும்பி வந்தவர்களும் உண்டு. நகர்ப்புறங்களில் ஆங்கிலப்பள்ளிகளில் மட்டுமே படித்து வளர்ந்தவர்களும் உண்டு. வீட்டில் மட்டுமே தமிழ் பேசும் வாய்ப்புள்ளவர்கள் அவர்கள். பல நிறுவன உயர்பதவிகளில் இருக்கும் தமிழ் இளைஞர்களுக்கு தமிழ் புரியும்; பேசுவது கொச்சையாக இருக்கும். சரளமாக தமிழ் பேச வரவில்லை என்பது குறித்து கவலை கொள்ளும் இளைஞர்கள் உண்டு.
இவர்கள் எல்லாம் தமிழ் பேசாததாலேயே, பழகாததாலேயே இவர்களுக்குத் தமிழ் மேல் காதல், ஆர்வம் இல்லை என்று அர்த்தமில்லை. தமிழைப் பேசிப் புழங்குவதற்கான தேவை, அவர்களைப் பொறுத்தவரை வெகுசில இடங்களிலேயே இருக்கிறது. இப்படிப்பட்டவர்களை, தமிழ் சினிமாவிலும் சரி, நேர்ப்பேச்சிலும் சரி ஒரு மாதிரி “பீட்டர்” என்று வகைப்படுத்தி, கிண்டல் அடிப்பதையே செய்திருக்கிறோம்.
அதேசமயம், மறைமுகமாக இந்தத் தன்மையை ரசிக்கவும், மேட்டிமையின் வெளிப்பாடாக உணர்ந்துகொள்ளவும் பின்பற்ற முடியுமா என்று முயன்றும் பார்த்தவர்கள் உண்டு. இன்றைய பல்சமூக, பல் இன வாழ்க்கைச் சூழலில், இத்தகைய ஓர் காஸ்மோபாலிடன் கலாசாரம் கவர்ச்சிகரமாக இருப்பதைப் பார்க்க முடிகிறது.
டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் பேஜ் 3 கேரக்டர்கள் இவர்கள். பேஜ் 3 பிரபலங்கள் ஆக, பலர் முயல்கின்றனர்.
ஏழாம் அறிவில், முருகதாஸ், இளைஞர்கள் மத்தியில் உள்ள ஆர்வத்தை நன்கு பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார். ஸ்ருதி, அந்தக் கேடரக்டருக்குப் பொருத்தமானவர். ஓர் அழகான முரணை உள்ளே வைத்து, கேரக்டரை இன்னும் மெருகேற்றி இருக்கிறார்.
அதாவது, வாழ்க்கை அவுட் லுக், நடை உடை பாவனை, பேச்சு எல்லாம் இன்றைய பேஜ் 3 மாடர்னிட்டி; உள்ளே உள்ளது, தீராத தமிழ் உணர்வு. இந்த முரண், இந்தக் கதைக்கு மிகவும் தேவை. ஒருபக்கம், சூர்யா நல்ல தமிழில், உணர்ச்சிப் பொங்க பேசவும் நடிக்கவும் வேண்டும்; அவருக்கு ஜோடியானவர் மாடர்னிட்டியோடு, தமிழ் உணர்வு கொண்டவராக இருக்கவேண்டும்.
இன்றைக்கு சினிமா பார்க்கப் போகும் இளம்பெண்கள், தம்மை, ஸ்ருதிஹாசனோடு இனங்கண்டு கொள்பவர்கள் ஏராளம். பயங்கரமாக கிண்டல் அடிக்கப்படும் அவரது “ஷ” மொழி, ஸ்டைல் மொழியானால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, அசினை, இன்றைய பெண்களின் பிரதிபலிப்பாக நினைத்திருந்தேன். ஸ்ருதி, அடுத்த கட்டம். இன்றைய 15 – 22 வயதுள்ள நகர்புறப் பெண்களின் பிரதிபலிப்பு. ஏழாம் அறிவின் அபரிமிதமான தமிழுணர்வுக்கு பின்புலமாக இருந்து வலிமை சேர்க்க, ஸ்ருதியின் நுனிநாக்கு, கடித்துத் துப்பும் தமிழை பயன்படுத்தியிருப்பது முருகதாஸின் புத்திசாலித்தனம்.
பிடிக்கறதோ இல்லையோ, ஸ்ருதி வகை தமிழுணர்வு, இன்றைய நிஜம். அதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்!
நவம்பர் 28, 2011 at 5:09 பிற்பகல்
muthall avanga natikkanum thamilaik katippathu appuram.
நவம்பர் 28, 2011 at 8:01 மு.பகல்
மிகச் சரியாக சொன்னீர்கள்..தென் தமிழ் நாட்டில் பெரும்பாலும் நாலா தமிழில் தான் பேசுகிறார்கள்.சென்னையில் தான் தமிழ் பேசப்படுவதில்லை..உச்சரிக்கப்படுகிறது..பல பேர் சென்னையில் இருந்து கொண்டு விமர்சனம் எழுதி உள்ளதால் அவர்களது தமிழ் புலமை அவர்களது பதிவிலே தெரிகிறது….
மீண்டும் அருமை நண்பரே..